புத்தி கூர்மை
“குழந்தைகள் எல்லாரும் வந்துட்டீங்களா? பரவாயில்லை.. எங்கிட்ட கதை கேட்க நிறைய பேர் வந்துட்டீங்க.. ரொம்ப சந்தோஷம்…என் கதை எல்லாருக்கும் பிடிச்சிருக்கா?”
“ஓ! பிடிச்சிருக்கு தாத்தா!.. நீங்க புதுசு புதுசா கதை சொல்றீங்க.. இன்ட்ரஸ்டா இருக்கு”
“ஓகே! தேங்க்ஸ் எவ்ரிபடி.. கதை சொல்லலாமா?”
“ஓ! சொல்லுங்க தாத்தா!”
“உங்க எல்லாருக்கும் பாண்டவர்களையும் கௌரவர்களின் பற்றியும் தெரியும் இல்லையா? அவங்க சின்ன வயசுல துரோணர் கிட்ட பாடம் கத்து கிட்டாங்க.. அவரோட குருகுலத்தில அதாவது ஸ்கூல்ல பாடம் படிச்சாங்க.. அப்பத்தான் ஒரு நாளு, துரோணர் காலங்காத்தால எந்திரிச்சு, எல்லாரையும் கூட்டிட்டு, ஆத்தங்கரைக்கு போனார்..போகும்போது, எல்லார்கிட்டயும், “நான் இன்னிக்கு ஒரு புது மந்திரம் சொல்லித் தரப் போறேன்!.. அதை தெரிஞ்சுக்கிட்டு நீங்க எல்லாரும் அந்த மந்திரத்தைச் சொல்லி,ஒரு அம்பை விட்டீங்களானா.. இந்த காடே அழிஞ்சு போகும்.. அப்படிப்பட்ட பவர்ஃபுல் மந்திரம்..” அப்படீன்னு சொன்னார்.. எல்லாரும் அத கத்துக்கறதுல ரொம்ப ஆர்வமா இருந்தாங்க.. அப்ப துரோணருக்கு ஞாபகம் வந்தது.. அவர் அர்ஜுனனை கூப்பிட்டு “அர்ஜுனா! நான் கமண்டலத்தை கொண்டு வர மறந்துவிட்டேன்..நீ ஆசிரமத்திற்கு சென்று அதை எடுத்து வா.” அப்படின்னு சொன்னார்.. அர்ஜுனனும் ஆசிரமத்துக்கு போனான். ஆனா அவனுக்கு ஒரு வருத்தம்..”தான் ஆசிரமத்திற்குப் போய் வருவதற்குள்ள, அந்த மந்திரத்தை குரு எல்லாருக்கும் சொல்லிடுவாரு.. நாம எப்ப கத்துக்கிறது..”அப்படின்னு நெனச்சுக்கிட்டு, ஆசிரமத்துக்குப் போய், கமண்டலத்தை எடுத்துகிட்டு வந்தான்..அதுக்குள்ள துரோணர் எல்லோரையும் அழைத்துக்கொண்டு ஆற்றின் கிட்ட போய் விட்டார்.. இவன் துரோணர் கிட்ட கமண்டலத்தை கொடுத்தான்.. துரோணர், தன்னுடைய சிஷ்யர்களான கௌரவர்களையும் பாண்டவர்களில் மற்ற 4 பேரையும் கூப்பிட்டு, அந்த மந்திரத்தை சொல்லி, அம்பு விடச் சொன்னார்.. ஆனா யாருக்கும் அந்த மந்திரம் சரியா வேலை செய்யலை.. காடெல்லாம் தீப்பற்றி எரியல.. அப்பதான் அர்ஜுனன் “குருவே! நான் வேண்டுமானால் செய்து பார்க்கவா?” அப்படின்னு கேட்டான்..
கௌரவர்களுக்கு, “நமக்கு குரு சொல்லிக் கொடுத்து, இந்த மந்திரம் வேலை செய்யலையே! இவன்தான் அந்த மந்திரத்தை கத்துக்கலையே! அப்புறம் எப்படி இந்த மந்திரம் அவனுக்கு வேலை செய்யும்..” என்று நினைத்து கேலியாக சிரித்தார்கள்..
அர்ஜுனன், வில்லும் அம்பும் எடுத்து, அந்த மந்திரத்தை சொல்லி காட்டினை பார்த்து அம்பு விட்டான்.. என்ன ஆச்சரியம்!!! காடு தீ பற்றி எரிந்தது!
துரோணர் கேட்டார்.. “அர்ஜுனா! நான் தான் உனக்கு இந்த மந்திரம் உபதேசம் செய்யலயே! அப்புறம் எப்படி? இந்த மந்திரம் உனக்கு தெரிஞ்சது?”
அர்ஜுனன் பதில் சொன்னான் “குருவே! வரும் வழியில, ஆற்று மணலில் நீங்க அந்த மந்திரத்தை எழுதி இருந்தீங்க.. நான் அதை படிச்சு மனசுல இருத்திண்டேன்”..

துரோணருக்கு ரொம்ப சந்தோஷம்.. அவனுடைய அறிவுத் திறனையும்,எதையும் தெரிஞ்சுக்கணும் அப்படிங்கற ஆசையும், அவன் மேலும் மேலும் வளர உதவி செய்தது..
“என்ன குழந்தைகளா!! கதை புரிஞ்சுதா?..நீங்களும் பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லிக் கொடுக்கிற பாடத்த கவனமா படிச்சு நல்லா புரிஞ்சுகிட்டு முன்னேறணும்..”
“இன்டர்நெட் எல்லாம் இல்லாத அந்த காலத்துல தந்தின்னு ஒரு கம்யூனிகேஷன் இருந்தது.. அதுக்காக கம்பம் நட்டு அந்த கம்பத்தில் கம்பி மூலமா தகவல் அனுப்புவாங்க.. அந்த கம்பி வழியாக தான் எல்லா மெசேஜும் ஒருத்தர் கிட்ட இருந்து ஒருத்தருக்கு போய் சேரும்.. அப்பப்போ அந்த கம்பி மேல குருவிங்க பறவைங்க வந்து உட்காரும்.. அதுங்களுக்கு தெரியுமா? கம்பியில் என்ன மெசேஜ் வருது போறது அப்படின்னு…அதுக்கு தந்தி குருவினு பேரு.. நீங்களெல்லாம் வகுப்பில அந்த தம்பி குருவி மாதிரி இல்லாம கிளாஸ்ல என்ன பாடம் நடக்கிறதுன்னு கவனிக்கணும்.. அப்பத்தான் நல்லா படிச்சு எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்க முடியும்.. புரிஞ்சுதா? செய்வீங்களா?
“ புரிஞ்சுது தாத்தா! அப்படியே செய்கிறோம்!”
“ஓகே! குட்! நீங்க இப்போ வீட்டுக்கு போய் தூங்குங்க.. குட் நைட்!”
“குட்நைட் தாத்தா!”