கடந்த மார்ச் மாதம் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் சில திருக்கோயில்களையும் நான் தரிசித்தேன்..அவர் தரிசிக்கும்போது நான் ஈரோடு மாவட்டத்தில் காஞ்சிக்கோவில் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ தேவி அம்மன் ஆலயத்தையும் தரிசித்து மகிழ்ந்தேன்..
கல்வெட்டுக்களின் படி காஞ்சிக்கோவில் என்ற பெயர் காஞ்சி கூவல் என்று உள்ளது.. இலக்கியங்கள்” இல்லறம் வளர உதவுமல்கு காஞ்சிகோயில்” என்றும்”கன்னி பங்காளர் திருநீலகண்டேஸ்வரர் கவரியுமை கருணை அதனால் சிறக்கும் காஞ்சி நகர்” என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.. (ஆதாரம்:இந்த தகவலை வேலூதரன் என்கிற அன்பர் தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்..)
மகாவிஷ்ணுவின் பத்தினியான ஸ்ரீதேவியை திருமகள் என்றும் அழைக்கின்றோம்.. ஆனால் இங்கே ஸ்ரீதேவியை அம்மன் என்று அழைக்கின்றார்கள்.சீதேவி அம்மன் என்ற பெயரில் இவ்வாறு உள்ள ஒரு கோயில் என்பதே இந்த தலத்திற்கு சிறப்பாக அமைகிறது..
வெள்ளாள கவுண்டர்களின் உட்பிரிவான, செம்பன்குலம், முளசி கன்னர் குலம்,கொங்கு வேளாளர் ஆகிய பிரிவினருக்கு இந்த கோயில் கொண்டுள்ள தெய்வம் குலதெய்வம் ஆகும்..சிவகிரி மடத்தைச் சார்ந்த சில சமயம் பண்டிதரின் வழிமுறைகளை இந்த கோயிலில் தர்மகர்த்தாக்கள் பின்பற்றுகின்றனர்..எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு முன்பாக கொங்கு வேளாளர்கள் இந்த அம்மன் சன்னதியில் வந்து கட்டிப் போட்டு அனுமதி பெற்றுஅதன் பின்னரே செய்கிறார்கள்..
இங்கே கோயில் முதலில் பெத்தம் பாளையத்திலிருந்து உள்ளது..அதன் பின்னர் கருக்கம்பாளையம் செட்டிபாளையம் ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தற்போது இந்த இடத்தில் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது..
இந்தக் கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு வடதிசை நோக்கி அமைந்துள்ளது..

ஒரு 60 அடி நீள குண்டம் உள்ளது..இதுதவிர கருடன் தூண் தீபஸ்தம்பம் ஆகியவை இராஜ கோபுரத்திற்கு முன்பாக அமைந்துள்ளது..

ராஜகோபுரத்திற்கு பின்பே சிம்மவாகனம், த்வஜஸ்தம்பம், மற்றும் பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன

.. அதற்கு வலப்புறமும் இடப்புறமும் உயர்ந்த 3 சுதையினால் ஆன குதிரைகள் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன..

கர்ப்பக் கிரகத்திற்கு முன்னால் அர்த்த மண்டபம் உள்ளது.. இந்த மண்டபம் விஜயநகர பேரரசர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது.. கர்ப்பகிரகத்தில் பத்மபந்த அதிஷ்டானமும் மூன்று நிலை விமானமும் உள்ளது.. அம்மன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்..
கர்ப்பக்கிரகத்தின் வெளிச் சன்னதிகளில் குப்பணசாமி வீரமதி அம்மன் அருள் மிகு கண்டிப்பு பெரியசுவாமி ஸ்ரீ கரிச்சி அப்பிச்சி ஸ்ரீ வேதாரண்யன் சின்னாரிஆகியவர்கள் கோவில் கொண்டுள்ளார்கள்..

மார்கழி மாதங்களில் இரு வேளை பூஜையும் மற்ற காலங்களில் ஒரு வேளை பூஜை மட்டும் செய்யப்படுகிறது.. ஒவ்வோர் ஆண்டும் ஆனி மாதத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.. அப்போது பக்தர்கள் பொங்கல் வைத்தும் தீ மிதித்தும் அம்மனை வழிபடுகின்றனர்..
இந்த திருக்கோயில் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இடைவெளியின்றி திறந்து தரிசனம் செய்து வைக்கப்படுகிறது..
இந்த திருக்கோயில் பெருந்துறையில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..ஈரோடு பெருந்துறை கோபிசெட்டிபாளையம் ஆகிய ஊர்களிலிருந்து பஸ் வசதிகள் உள்ளன..