கலைகளில் சிறந்து விளங்கும், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்த, காலஞ்சென்ற திரு.ஏ. சுந்தர ராமர் அவர்களுக்கும், திருமதி பிரகதாம்பாள் என்ற அம்மையாருக்கும், 9.12.1951ல் திரு ஜெயராமன் பிறந்தார்.. அவரது தாயார் சிறந்த பாடகி.. அவருடைய தந்தை, அந்தக் காலத்தில், சிறந்த மேடை நடிகர் மற்றும் பாகவத உத்தமர்..
கோவை.எஸ். ஜெயராமன் என்று பின்னாளில் புகழ்பெற்ற ஜெயராமன், தனது ஐந்தாவது வயதிலேயே, தன்னுடைய பெற்றோர்களின் கலை உணர்ச்சிகளின் காரணமாக பாடத் தொடங்கினார்.. அவர்கள் வீடு முழுவதும் பாடல் புத்தகங்களும், ஸ்தோத்ரப் புத்தகங்கள் நிரம்பி இருக்கும்.. அந்தக் கிராமமும், பல கலாச்சார நிகழ்வுகளையும், இசை நிகழ்ச்சிகளையும், அவ்வப்போது நடத்தி வரும்.. திருக்காட்டுப்பள்ளியில், இருந்த சர். பி.எஸ். சிவசாமி அய்யர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.. அந்தப் பள்ளி, அவரை தினமும் காலையில் பள்ளி துவங்கும் போது பாடப்படும், இறை வணக்கம் பாட வைத்தனர்.. அது தவிர, அந்த பள்ளிக்கு விருந்தினர்கள் யாரேனும் விழாவிற்கு வரும் போதும், இவர் மேடையில் ஏறி இறைவணக்கம் பாடுவார்.. இவர் பெற்ற சான்றிதழ்கள் பல உண்டு..
திருக்காட்டுப்பள்ளி கோவிந்தராஜ பிள்ளை என்ற நாதஸ்வர வித்வானிடம், இவர் ஆரம்ப கால இசைப் பயிற்சியை துவங்கினார்.. அதன் பின்னர்,சிறந்த பாடகரான தஞ்சாவூர் ஸ்ரீ. பி.எம் சுந்தரம் என்பவரிடம் இசை பயின்று, அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, அவரிடத்திலிருந்து இசை கடலில் சங்கமிக்கும் வழியை தெரிந்து கொண்டார்…பிற்காலத்தில்,பயமின்றி பாடுவதற்கு, அந்த குருவே இவருக்கு நல்ல பயிற்சி அளித்து இருந்தார்..
இவர், தனது கல்லூரிப் படிப்பை,காஞ்சிபுரத்தில் முடித்தார்.. அதே நேரத்தில் காஞ்சி காமகோடி பீடம், அவர்களிடம் தனது தெய்வீக பணியினையும் தொடர்ந்தார்.. பரமாச்சாரியாரின் பல தெய்வீக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.. பரமாச்சாரியாரை தரிசிப்பதற்காக, தினமும் ஒரு முறை காஞ்சி மடத்திற்கு சென்று வந்தார்…
பின்னர் கோவையில் இருந்த ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி இவருக்கு பணி கொடுத்தது..அதன் முதற் கொண்டு, தனக்கென்று ஒரு பஜனைக் குழுவை ஏற்படுத்தி கொண்டு, அதை நடத்தி வந்தார்.. அங்கேதான் இவர் திருக்கோவிலூர் சுவாமி ஞானாநந்தா அவர்களை சந்தித்து,அவரை தமது குல குருவாக ஏற்றுக்கொண்டார்.. இவரது குடும்பம் முழுவதுமே திருக்கோவிலூர் தபோவன மகராஜ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி மகராஜ் ஆகியோரைப் பின்பற்றியது..இவர்கள்தான் கோவை ஜெயராமனின் பக்தி மார்க்கத்திற்கு தூண்டுகோலாக இருந்தவர்கள்..

இவர் ஐயப்ப சுவாமி, பகவான் சத்யசாய்பாபா உள்ளிட்டோர் பற்றியும், மற்ற தெய்வங்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியும், பாடியும் 50 ஆண்டுகாலமாக “நாம சங்கீர்த்தனம்” என்கின்ற ஆன்மீக சேவையை ஆற்றி வந்தார்…. சென்னை மேற்கு மாம்பலம், மாணிக்கம் சாலையில், குடும்பத்துடன் வசித்து வந்த இவர், சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்…இவர் சிகிச்சை பலனின்றி நவம்பர் 23, 2020 அன்று இறைவனடி சேர்ந்தார்..

நுங்கம்பாக்கத்தில், அவரின் உருவப்படத்தை திறந்து வைத்து, அனைத்து பாகவதர்களும் இணைந்து ஸ்ரத்தாஞ்சலி நடத்தினர்..
பல துன்பங்களை இந்த ஆண்டு நாம் சந்தித்து விட்டோம்…அதில் பல இழப்புகளும் நமக்கு ஏற்பட்டுள்ளன.. அவ்வகை இழப்புகளில் ஆன்மீகச் செம்மல் இழப்பும் நம்மை மேலும் துன்பத்தில் ஆழ்த்தி உள்ளது..