“பஞ்ச சக்திகள்” என்று சொல்லப்படுகின்ற ஐந்து விதமான ப்ரக்னருதிகளில், துர்காதேவி, லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி ஆகியோர் களைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.. இந்த பதிவில், சாவித்திரி தேவி, ராதா தேவி ஆகியோர் பற்றி பார்ப்போம்..
சாவித்திரி தேவி

பிராமணர் முதலான நான்கு குணங்களில், வேதாங்கங்கள், சந்தஸஸு,சந்தியாவந்தன மந்திரம், தந்திர சாஸ்திரங்கள் இவற்றிற்கெல்லாம் தாயாக விளங்குபவள், சாவித்திரி தேவி ஆவாள்..இவள் பிராமண குல வடிவங்களாகவும், ஜெப வடிவமாகவும், தவஉருவமாகவும், அவற்றால் விளையும் பிரம்மதேஜஸின் வடிவமாகவும், அதனால் உண்டாகும் தூய திரு உருவமாகவும், நமஸ்கார ஸ்வரூபிணியாகவும், சாவித்ரி, காயத்ரி வடிவமாகவும் இருப்பாள்..
மேற்கண்டவற்றை அனுஷ்டிக்கும் அந்தண பிரியையாகவும், தீர்த்தத்தின் வடிவமாகவும் அந்த தீர்த்தத்தை தொட்டதுமே தூய்மைப்படுத்த விரும்புபவளாகவும்,சுத்த ஸ்படிகம் போல் ஒளிரும் நிர்மலமான சுத்த சத்துவ சொரூபிணியாக இருப்பாள்..அதனால் ஏற்படும் பரமானந்த வடிவமாகவும், அந்த வடிவில் அனாதியாய் உள்ளவளாகவும், பரப்பிரம்ம வடிவம் ஆகவும், அதை அடையும் பிரம்ம ஞானிகளின் பிரம்ம தேஜோ மயமாகவும்,அந்த சக்திக்கு அதிஷ்டான தேவதையாகவும் விளங்குகிறாள் அவளது பாத தூளிகளால் உலகமெல்லாம் தூய்மை அடைகிறது..
ராதா தேவி

ஐவகை பிராணன்களுக்கும் ஆதி தேவியாக விளங்குபவள் ராதா தேவியாவாள்.. அவள் பஞ்ச பிராணன்களின் வடிவமாகவும், பிராணனை விட மிகவும் பிரீதி பொருள் ஆகவும் எல்லா தேவி களிடம் உள்ள அழகு உருவமாகவும், எல்லாரிடத்தும் உள்ள சம்பத்தாகவும், எல்லார் உடல்களிலும் இடப்பக்க ஸ்வரூபமாகவும், குணத்தினாலும் தேஜஸினாலும் நிறைந்துள்ள பெருமை உருவமாகவும், பராபரங்களுக்கு சாராம்சம் ஆகவும்; அவற்றுக்கு ஆதி மூலமாகவும், அனாதியாயயும்; பூஜைக்கு உகந்தவளாகவும், அனைவராலும் பூஜிக்கப்படுபவளாகவும், ரராசக்கிரீடைக்கு அதி தேவதையாகவும் பரமாத்மாவின் ராச கிரீடை மண்டபத்தில் இருப்பவளாகவும், ராசக்கிரீடையால் அலங்காரமானவளாகவும், ராசக்கிரீடைக்கே இறைவி யாகவும், மகா ரகசியம் ஆனவளாகவும், ராஜ மாளிகையிலும், கோகுலத்திலும் வசிப்பவளாகவும், கோபிகா ஸ்திரீயின் வேடம் பூண்டவளாகவும், அளவற்ற ஆனந்த மயமாகவும், நிற்குணையாகவும், நிராகரையாகவும், பாவபுண்ணியம் அற்றவளாகவும், அமைதி, அகங்காரமின்மை, அவாவின்மை,பக்தர்களுக்கு அருள் புரிதல் முதலியன வாய்ந்தவளாகவும், வேத வழிகளால் தியானித்து அறியக்கூடியவளாகவும், தேவர்கள், முனிவர்கள் முதலியவர்களால் ஞான நோக்கால் பார்க்கப்படுபவளாகவும் திகழ்கிறாள்..
நெருப்பால் சுத்தமான ஆடையை அணிந்து கொண்டு, பலவித அலங்காரங்கள் புனைந்து கொண்டு, கோடி சந்திரன் ஒருங்கே உதயமானது போல அவளது திருமேனி ஒளி வீசும்.. சகல காந்தியோடும்,அவள் தேகம் நேர்த்தியாக விளங்கும்.. கிருஷ்ண பரமாத்மாவிடம், இவள் மிகவும் பற்றுதலும், பக்தியும் கொண்டவள்.. எல்லா சம்பத்துக்களையும் வழங்குபவள்.. வராக அவதார வடிவமாக இருக்கும், மகா தேவியின் திருவடித் தாமரை சம்பந்தப்பட்ட சிறப்பால், பூமாதேவியை தூய்மைப்படுத்துவாளாக பிரகாசிக்கிறாள்.. புதுமையான வேகத்தில் ஒளி வீசும் மின்னலைப் போல, பரமாத்மாவின் மார்பில் ரத்தினமாக திகழ்கிறாள்.. ஆதியில், பிரம்மா தம் ஆத்ம சக்தியின் பொருட்டு அறுபதினாயிரம் ஆண்டுகள் அருந்தவம் புரிந்தும், கனவிலும் காண்பதற்கு அருமையான திருவடித் தாமரைகள் உள்ளவள்.. பிறகு அந்த பிரம்மா பூமியில், அருந் தவம் புரியவே, அதனால் இரக்கம் கொண்டு பிருந்தாவனம் தோறும் தன்னை காணும்படி செய்தவள், இந்த ராதா தேவியாவாள்..
இதுவரையில், பரிபூரணமான ஐந்து தேவிகளின் சிறப்புகளை பார்த்தோம்.. முதன்மையான அம்ச ரூபங்களாகவும், கலை உருவங்களாகவும், அந்தக் கலைகள் பலவற்றில், ஒரு பாகமாகவும் விளங்கும், அந்த தேவிகளிடமிருந்துதான் உலகத்தில் உள்ள சாதாரண ஸ்த்ரீகளும் உற்பத்தியானார்கள்..இனி, அவர்களுக்கு உள்ள பிரதான அம்ச ரூபங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்….