“ஹரி” என்னும் திருநாமத்திற்கு உள்ள பல பெருமைகளை பற்றி நாம் இந்தத் தொடரில் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்..அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது “மாதவன்” என்ற திருநாமத்திற்கு உண்டான க்யாதிகளைப் பற்றி….
“மாதவன்” என்ற திருநாமம் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 73வது 167 வது மற்றும் 735வதுபெயராக மூன்று முறை வருகின்றது.. மகாவிஷ்ணுவின் முக்கியமான பன்னிரண்டு பெயர்களில் இது மூன்றாவது பெயராகும்..
“ மா” என்றால் அலை மகளான “லட்சுமி”.. அவளுடைய “தவ” அதாவது “கணவன்”.. அதுவே “மாதவன்” என்றாயிற்று.. ‘மா’ என்ற பெயர்ச் சொல்லாக கொண்டால்” தாய், லக்ஷ்மி, அளவு” என்ற மூன்று பொருட்கள் உள்ளன.. வினைச்சொல்லாக கொண்டால், தன்னுள் அடக்கிக் கொள்வது.. அளவிடுவது, பிரித்து பகிர்ந்து கொடுப்பது என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.. உலகத்தை கருவாக தன்னுள் அடக்கிக் கொள்வதனால், அவள் தான் எல்லோருக்கும் தாய்..’மா’ என்னும் பரமனின் பரம சக்தி..

“மா”வை அளவிடும் கருவி என்று கொள்ளும்போது அளவிடும் கருவியாக, அளவிடப்படும் பொருளின் முன்னும், பின்னும் என்று அளக்கப்பெறும் பொருளை விட மிகப் பெரியதாக இருப்பவள்.. உலகத்தை படைக்கும் முன்பாகவும், மறைந்தபின் உலகம் இருக்கும் அந்த நிலையிலும் தொடர்ந்து நின்று, அவற்றை அளவில் அடக்கி அடையாளம் காட்டுபவள்..
செல்வத்தின் தேவதையான ”மா” செல்வம் ஆகி நின்று, அதனை அதனிடத்தில் நிலைக்க வைத்து பகிர்ந்து கொடுப்பவள்..
“சாந்தோக்கிய உபநிடதத்தில்” மது வித்தை மூலமாக, சூரியனை தேனாக உபாசனை செய்து பிரம்மஞானம் பெறுகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று ஸ்ரீ ஆதிசங்கரர் தனது உரையில் கூறியுள்ளார்..அப்படி மதுவித்தையின் மூலம் உணரப் பெறும் பரம்பொருள் “மாதவன்” ஆவார்..
“மா” என்றால் மௌனம் “த” என்றால் தியானம் “வ” என்றால் யோகம்…இவை மூன்றாலும் அரியத் தக்கவர் மாதவன் என்று பராசரபட்டர் தனது உரையில் கூறியுள்ளார் மகாபாரதம் உத்யோக பர்வம் 71-4 இல் இதற்கு சான்று உள்ளது.. ஆதிசங்கரரும் இந்த சான்றினை எடுத்து ஆள்கின்றார்..
மேற்சொன்ன அந்த இரு உரையிலும் “மா” எனப்படும் பரமாத்மா ஞானத்தை அளிப்பவர் மாதவன் ஆவார்.. இதற்கு மேற்கோளாக ஹரி வம்சத்தில் இருந்து எல்லா உரையாளர்களும் எடுத்து ஆள்கின்றனர்..
“ மா” என்பது சித்தத்தின் போக்கு..கண்ணால் கண்டு, உணர்ந்த பொருள் மனத்தை கட்டுப்படுத்த மனம் அப்பொருளின் வடிவை அடைகிறது.. இன்னும் மற்ற பொறிகளினாலும் மனம் இப்படித்தான் கட்டுப்படுத்தப்படுகிறது..ஆக, பல பொருள்களின் வடிவை பெறுவதால் மனம் ஒருநிலை படுவதில்லை… மௌனம், தியானம், யோகம் இந்த மூன்றும் மனத்தை கட்டுப்படுத்த பயன்படும் பொறிகளை வெளி உணர்விற்கு செல்லாதபடி அடக்குதல் “மௌனம்”.. அப்பொழுது நூல் அறிவால் ஏற்பட்ட ஆன்மீக சிந்தனையில் மனம் ஈடுபடும் கருத்தால் உணர்ந்த இந்த தத்துவங்களில் மனம் பதிந்திருப்பது “தியானம்”.. இந்த மனப்பதிவு நிலைத்திருப்பது யோகம்.. சித்தத்தின் போக்கை நிலை நிறுத்துவதுதான் யோகம் என்பார்.. யோக சூத்திரத்தை உலகத்திற்கு அருளிய “பதஞ்சலி முனிவர்”.. ஆகவே, மௌனம், தியானம், யோகம் இவற்றால் சித்தம் போன போக்கில் போகாதபடி நிலைநிறுத்துபவர் “மாதவன்” ஆவார்..
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 73வது பேராக சொல்லப்படுகின்ற மாதவன் என்ற பெயருக்கு பராசர பட்டர் அருளிய” பகவத் குண தர்ப்பணம்” என்னும் நூலின் உரையில் சொல்லப்பட்டுள்ளது யாதெனில்:-
புருஷ சூக்தம்—”அஸ்ய ஈசாநா ஜகதீ விஷ்ணுபத்நீ” – இந்த உலகின் ஈஸ்வரியாகவும் மகாவிஷ்ணுவின் பட்டினியாகவும் உள்ளவள்..
விஷ்ணு புராணம் (1-18-17)-“ ஹ்ரீச்சதே லக்ஷ்மீம் ச பதந்யை”- மகாவிஷ்ணுவே! உனக்கு பூமாதேவியும் மகாலட்சுமியும் பத்தினிகள்..
ஹரியின் திருநாமம் ஆன மாதவன் என்ற சொல்லுக்கு பொருளாக விளக்கப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்பதால் அவற்றைப் பற்றி அடுத்த பதிவில் தொடர்ந்து தெரிவிக்கின்றேன்..
மீண்டும் சந்திப்போம்…