சோழவளநாட்டு மேன் மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது..அதுவே, மங்கலம் ஆகியது.. திருமங்கலம் என்ற மூதூர்..திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருமங்கலம் என்ற திருத்தலம்.. பசுமைச் சூழலில், அமைதியே உருவாக அமைந்துள்ள இந்த ஊரில் உள்ளது அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயம்..

இந்த ஊரில் வாழ்ந்த பெரும் குடிகளுள் ஆயர் குலத்தின் குல விளக்கு போல “ஆனாயர்” என்ற பெரியார் அவதரித்தார்.. அவர், தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்..மனம், மொழி, என்ற முக்கரணங்காலும், சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் அறியாதவர்..அவரது குலத்தொழில், பசுக்களைக் காத்தல்.. பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியின் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அதனை அணுகாமல் காத்து, அதற்கு விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பருகுமாறு தருவார்.. “ஆ” என்றால் “பசு” என்று பொருள்..இவருக்கு அதனால் “ஆனாயர்” என்ற காரணப் பெயர் ஏற்பட்டது என்று கூடச் சொல்லலாம்.. இளம் கன்றுகள், பால் மறைத் தாயிளம் பசு, கறவைப் பசு, சினைப்பசு,புனிற்றுப் பசு(சமீபத்தில் கன்று ஈன்ற பசு).. விடை குலம் (நாம்பன் மாடு) என்பனவாக, அவற்றைப் பிரித்து, காவல் புரிவார்.. ஏவலாளர்கள், அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்வார்கள்.. தாம் பசுக்களை மேயவிட்டு,புல்லாங்குழலில், சிவபெருமானது ஐந்தெழுத்து மந்திரத்தை பொருளாகக் கொண்ட கீதம் இசைத்து இன்பம் அடைவார்..
இப்படி நியதியாக வாழ்ந்தவர், ஒருநாள் தனது தலையில் விரியாத மொட்டு ஒன்றினை சொருகி, இலை சுருளில் செங்காந்தள் பூவினை வைத்து, காதில் அணிந்து கொண்டு, கண்டவர் மனம் கவர, தனது நெற்றியில் திருநீற்றை ஒளிபெற சாத்தி, அதனை திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை, அணிந்து இடையில் மரவுரி உடுத்து அதன்மேல் தழைப்பூம் பட்டு மேலாடையினைஅசையக் கட்டி திருவடியில் செருப்பு போட்டுக்கொண்டு, கையினில் மென் கோலும் புல்லாங்குழலும் விளங்க கொண்டு, தனது பணியாளர்களுடன் பசுக்களை வைக்க சென்றார் சென்றபோது அங்கே அவர் பூங்கொத்து கண்களும் புரிசடை போல் தொங்கும் கனிகளும், நிறைந்த ஒரு கொன்றை மரத்தினைக் கண்டார்.. அது மனதிற்குள்ளேயே அவர் எப்போதும் கண்டு கொண்டிருந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றியது.. அவ்வாறு தோன்றவே, அதன் முன் நின்று உருகினார்.. ஒன்றுபட்ட சிந்தையில் ஒன்றிய அன்பு உடையவர் பால் மடைதிறந்த நீர்போல் பெருகிற்று.. அன்பு உள்ளூறி பொங்கிய அவருடைய இசை குழலோசையாக, சிவபெருமானது திரு ஐந்தெழுத்தினையும் உள்ளுறையாக அமைத்து, எல்லா வீடுகளும் எலும்பும் கரையும் படியாக வாசிக்கத் தொடங்கினார்..
நூல் விதிப்படி அமைந்த “வங்கியம்” என்னும் புல்லாங்குழல் தனித்துறையில் ஆனாயர் தனது வாய்தனைப் பொருந்த வைத்து ஏழிசை முறைப்படி இசை இலக்கணம் எல்லாம் அமையச் செய்து, இசை ஒலியை எல்லாத் திக்கிலும் பரப்பினார்.. அது தேவாமிர்தம் போல எல்லா உயிர்களுக்கும் புகுந்து, உருக்கிற்று.. மடி முட்டி பால் குடித்து நின்ற பசும் கன்றுகள், பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின..எருதுக் கூட்டங்களும், காட்டு விலங்குகளும், இசை வயப்பட்டு தம் உணவு மறந்து, மயிர் சிலிர்த்து வந்து சேர்ந்தன.. ஆடும் மயிலினமும் மற்ற பறவையினமும் தம்மை மறந்து, நிறைந்த உள்ளமொடு பறந்து வந்து சேர்ந்தன.. ஏவல் செய்த அவரது பணியாளர்களும் தமது தொழில் செய்வதை நிறுத்திவிட்டு, மறந்து நின்றனர்.. பாதாளத்தின் நாகர்கள், மலையில் வாழ்ந்த அரச மகளிர், விஞ்சையர், கின்னரர் முதலிய தேவகணங்கள், தேவமாதர்கள் என்று எல்லா வகைப்பட்டவரும் அந்த குழலோசைக்கு மயங்கி, தத்தம் உலகில் இருந்து வந்து அங்கு சேர்ந்தனர்.. இந்த இசை உணர்வில் கட்டுப்பட்ட விலங்குகள், பாம்பும் மயிலும், சிங்கமும், யானையும், புலியும், மானும் தமது பகைமையை மறந்து ஒன்று சேர்ந்து கூடின..காற்று, மரம், அருவி காட்டாறு, வான்முகில், ஆழ்கடல் அனைத்தும் அந்த இசைக்கு மயங்கி நின்றன.. அவரது இசை, இடப வாகனத்தில் இருந்த சிவபெருமான் காதுக்கு எட்டியது.. அவர் பார்வதி தேவியுடன் எதிர்நின்று காட்சி அளித்தார்..

அந்தக் குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு”இன் நின்றநிலையே பூமழை பொழிய முனிவர்கள் துதிக்க குழல் வாசித்துக்கொண்டே நின்ற நிலையோடு ஆனாயர் அரனாருடன் ஐக்கியமானார்”
அது முதற்கொண்டு, இவர் “ஆனாய நாயனார்” என்ற பெயருடன், 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்ந்தார்..

“அலைமலிந்த புனல் ஆனாயற்கடியேன்”—என்கிறது திருத்தொண்டத்தொகை..
இவர் அவதரித்ததும், முக்தி அடைந்ததும் திருச்சி லால்குடி அருகே உள்ள “திருமங்கலம்” என்னும் தலம் ஆகும்..இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானின் பெயர் “சாமவேதீஸ்வரர்”..அம்பாளின் பெயர் “உலக நாயகி”..63 நாயன்மார்களில் கார்த்திகை மாதம், அஸ்தம் நட்சத்திரத்தில், இறைவனுடன் இரண்டறக் கலந்த 14வது நாயன்மார் “ஆனாய நாயனார்” அவதரித்தது இந்த தலத்தில் தான்.. அவர் முக்தி அடைந்த நாளை,அவரது குருபூஜை நாளாக இந்த ஆலயத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றனர்.. ஆலயத்தின் தலவிருட்சம் “பலா மரம்.. “
சாம வேதம் இசை வடிவமானது.. ஆகவேதான் ஆனாயரின் இசைக்கு மயங்கி, அவரை ஆட்கொண்டு விட்டார் ஈசன்.. இந்த திருக்கோயில் கொண்டுள்ள பெருமானின் பெயரும்” சாமவேதீஸ்வரர்” என்பதாகும்.. என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்!
மகம் நட்சத்திரத்தினன்றும் சனிக்கிழமை அன்றும் இக்கோயிலை 11 முறை வலம் வந்து, தேனில் ஊறிய பலாச்சுளைகளை தானம் செய்தால், நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது இந்த ஊர் மக்களின் நம்பிக்கையாகும்..