கடவுளின் கருணை
“வாங்க குழந்தைகளே எல்லாரும் நல்லா இருக்கீங்களா?”
“நல்லா இருக்கோம் தாத்தா!”
“இரண்டு வாரமா எனக்கு வேலை இருந்தது.. அதனால உங்களுக்கு புதுசா எதுவும் கதை சொல்ல முடியல.. அதனால, இன்னிக்கு ஒரு புது கதை சொல்ல போறேன்.. என்ன? சொல்லலாமா?”
“ஓ சொல்லலாமே தாத்தா!”
“மகாபாரதத்தில், குருச்சேத்திரப் போர்.. அது வந்து, பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடந்த போர்..அந்தப் போருக்கு, இடத்தைத் தயார் பண்ணிட்டு இருந்தாங்க..அதாவது, ஒரு பெரிய கிரவுண்டா பார்த்து, அங்க இருக்கற செடி, மரம், கல்லு, எல்லாத்தையும் அப்புறப்படுத்தி, அதை சம தளமா மாத்துவாங்க.. அப்பதான் அவங்க சண்டை போட சௌகரியமா இருக்கும்.. அதுக்காக, அங்கே இருந்த மரங்கள் எல்லாத்தையும் அப்புறம் படுத்திகிட்டு இருந்தாங்க.. அப்ப, அங்க ஒரு மரத்துல ஒரு சின்ன குருவி, தன் குஞ்சுகளோடு, கூடுகட்டி இருந்தது.. அது மரத்தை வெட்டினதும், கீழே விழுந்தது.
.
அங்கே அர்ஜுனனும், கிருஷ்ணரும், தேரில் வந்தாங்க.. அதை பார்த்த அந்த குருவி கிருஷ்ணர் கிட்ட போயி,”சாமி! போருக்காக மரத்தை வெட்டி, இப்படிக் கூட்ட கலச்சி போட்டுட்டாங்க.. நானும்,என் குஞ்சுகளும் இனிமேல் எங்க போயிருப்போம்? எங்கள நீங்கதான் காப்பாத்தணும்” அப்படின்னு வேண்டிக்கிச்சு..
அதுக்கு கிருஷ்ணர்,” குருவி! நான் என்ன செய்யமுடியும்? போர்னு வந்தா, இதெல்லாம் சகஜம்..அதனால நான் ஒன்றும் செய்ய முடியாது..” அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு..
கொஞ்சதூரம் போய், தேரை நிறுத்தி, அர்ஜுனன் கேட்ட “உன்னோட வில்லையும் அம்பையும் கொடு..” அப்படின்னு கேட்டார்..

அர்ஜுனன்” மாதவா! நீங்கதான் போரில் எந்த ஆயுதமும் எடுக்க மாட்டேன்.. அப்படின்னு, சபதம் பண்ணி இருக்கீங்களே.. இப்ப வில்லும் அம்பும் கேட்கிறீர்களே” அப்படின்னு கேட்டான்..
கிருஷ்ணர்,அதுக்கு பதில் சொல்லாம அந்த வில்லு, அம்பையும் வாங்கி, அங்கிருந்த ஒரு யானையைப் பார்த்து அம்பு விட்டார்.. அந்த அம்பு, யானையின் கழுத்திலிருந்த மணிய அறுத்து எறிந்தது..
அர்ஜுனன் சிரிச்சுகிட்டே, “மாதவா! யானையை அடிக்கனும்னு சொன்னா, நானே அம்பு விட்டு கொன்று இருப்பேனே.. இப்ப பாருங்க.. உங்க அம்பு யானையை விட்டுவிட்டு, அந்த மணியை அறுத்து எறிஞ்சிருக்கு” அப்படின்னு சொன்னான்..
கிருஷ்ணர் அதுக்கும் பதில் ஏதும் சொல்லல..
போர் முடிந்தது.. அப்போ, கிருஷ்ணரும், அர்ஜுனனும், போர் நடந்த இடத்தில நடந்து வந்து கொண்டிருந்தாங்க.. கிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து,”அர்ஜுனா! அதோ.. அங்கே கிடக்கிற மணியை எடுத்து ஓரமா போடு” என்று சொன்னார்..
அர்ஜுனனுக்கு ஒன்றும் புரியல.. இருக்கறத எல்லாம் விட்டுவிட்டு கண்ணன் எதுக்கு அந்த மணியை எடுத்து ஓரமாக போடச் சொன்னார்? என்று நினைத்துக்கொண்டே, அந்த மணியை எடுத்தான்.. அந்த மணி கிருஷ்ணரால் யானையின் கழுத்தில் இருந்து அறுபட்டு விழுந்த மணி.. அந்த மணியை தூக்கி பார்த்ததும், அதுக்குள்ள இருந்த அந்த குருவியும் அதனோட குஞ்சுகளும் பறந்து போச்சு..
அப்போதுதான் அர்ஜுனனுக்கு புரிந்தது, அந்தக் குருவியையும், குஞ்சுகளையும் காப்பாற்ற மாதவன், யானையின் மணியை அறுத்து, அதற்கு இடம் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார் என்று..
குழந்தைகளே! இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வது என்ன? அப்படீன்னு பார்த்தா, நாம, நம்முடைய வேண்டுதல்களை எல்லாம், சாமிகிட்ட விட்டுட்டா, அவர் நமக்கு தேவையான நன்மையெல்லாம் செய்வார்..
இனிமே, நீங்க தினமும் காலையிலும் மாலையிலும் கைகால்கள் எல்லாம் கழுவிக்கிட்டு, சாமி சன்னதி முன்னாடி நின்னு, “உங்களுக்கு நல்ல படிப்பு வரணும், உங்களுக்கு உடம்பு ஆரோக்கியமா இருக்கணும், அப்பா ,அம்மா, தாத்தா, பாட்டி அண்ணா,அக்கா எல்லாரும் நல்லா இருக்கணும்.. இந்த உலகத்தில இருக்கற எல்லாரும் நல்லா இருக்கணும்.. சாமி! நீதான் எல்லாரையும் பாத்துக்கணும்” அப்படின்னு வேண்டிக்கோங்க.. அப்படி செஞ்சீங்கன்னா, சாமி எல்லாத்தையும் பார்த்துப்பார்..
“என்ன? செய்றீங்களா? சரி! இதோட இந்த கதை முடிஞ்சுது.. நீங்க எல்லாரும் வீட்டுக்கு போயி, நல்லா தூங்கி, நாளைக்கு பிரஷ்ஷா எழுந்து ,குளிச்சு முடிச்சு, சாமிகிட்ட வேண்டிக்கோங்க..” ஓகே! குட் நைட்!”
“குட்நைட் தாத்தா”