ஈரோடு -கோயம்புத்தூர் சாலையில், பெருந்துறைக்கு அருகே “விஜயமங்கலம்“என்ற ஒரு தலம் உள்ளது..இங்கே, அருள்மிகு “கரிவரதராஜப் பெருமாள்” ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோயில் கொண்டுள்ளார்.. இந்த கோயிலை, நான் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி தரிசனம் செய்தேன்..

“விஜயமங்கலம்”பண்டைக் காலத்தில், கொங்கு நாட்டின் தலைநகரமாகவும், மற்றும் குறுப்ப நாட்டின் தலைநகரமாகவும் இருந்துள்ளது.. இந்த குரூப்ப நாடு, கொங்கு மண்டலத்தின் 24 பிரிவுகளில் ஒன்றாக இருந்தது.. அந்த காலத்தில் இந்த குரூப்ப நாடு, ஜெயின கலாச்சாரங்களில் சிறந்து விளங்கியுள்ளது..இந்த குரூப்ப நாட்டில் விஜயமங்கலம், திங்களூர், சீனாபுரம், செங்கப்பள்ளி, நிரம்பையூர், ஆகியவை ஜெயின கலாசாரத்தின் ஆதாரங்களாக விளங்கியவை.. அதில், தற்போது நிரம்பையூர், வரலாற்று வரைபடத்திலிருந்து காணாமல் போய்விட்டது..தமிழ் இலக்கணமான “நன்னூலை” எழுதிய “பவணந்தி” சீனா புரத்தைச் சேர்ந்தவர்.. “சிலப்பதிகார உரை” எழுதிய “அடியார்க்கு நல்லார்” உரை சேர்ந்தவர்..இதுதவிர, கொங்குவேளிர், பெருந்தகை, கொங்கு சதகம் ஆகியவை எழுதிய “கார்மேக புலவர்” கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்.. இந்த விஜயமங்கலம், ஆதிகாலத்தில் தமிழ் புலவர்கள் நிரம்பியிருந்த காலமாக இருந்திருக்கக் கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள்..
இங்கே “1008 சந்திரப்ரபு தீர்த்தங்கரர் ஜெயின் ஆலயம்” உள்ளது…
ஆனால் நான் தரசித்தது, அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் ஆலயம் மட்டுமே..இந்த கோயிலை “சித்திரமேழி விண்ணகரம்” என்றும் கூறுவார்கள்.. இத்திருக்கோயில், கிழக்கு பார்த்த வண்ணமாக அமைந்துள்ளது.. கோயிலின் முன்பாக கொங்கு நாட்டுக்கு சிறப்பான கருடத்தூண் அமைந்துள்ளது..கோயிலுக்கு முகப்பில் ராஜகோபுரம் எதுவுமில்லை.. ஆனால், ஒரு சிறிய மண்டபம் மட்டும் உள்ளது.. அந்த மண்டபத்தின் மேல் ஒரு வளைவு உள்ளது..
இத்திருக்கோயில், மற்ற பகுதிகளை விட சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது.. ஒரு சிறிய மண்டபத்தில், கருடாழ்வார் உள்ளார்.. இன்னொரு மண்டபத்தில்,கணபதி உள்ளார்.. ஒரு மகா மண்டபத்தில், வீர ஆஞ்சநேயர், திருமங்கை ஆழ்வார், ஸ்ரீ விஷ்வக் சேனர், ஸ்ரீ நம்மாழ்வார் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் ஆகியோர்கள் கோவில் கொண்டுள்ளார்கள்.. அர்த்த மண்டபத்தில் துவார பாலகர்கள் உள்ளனர்.. அந்த துவாரபாலர்களாக இருப்பவர்கள் மிகப்பெரிய வடிவான நாகர்கள் ஆவர்.. கொங்கு மண்டலத்தை பொருத்தமட்டில் நாகர்களை இவர்கள் வழிபாடு செய்வார்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது..
கர்ப்பகிரகத்தில் கரிவரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காட்சி அளிக்கின்றார்.

.இந்த திருக்கோயில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது.. இந்த மூலவர் சன்னதிக்கு வலப்புறத்தில் அமைந்துள்ள கற்களில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன..

மூலவரை புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் புகைப்படம் எடுக்க இயலவில்லை
இந்தத் திருக்கோயில் ஈரோட்டிலிருந்து பெருந்துறை வழியாக கோயமுத்தூர் செல்லும் சாலையில் விஜய மங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.. பெருந்துறையில் இருந்து நகரப் பேருந்துகள் உள்ளன..