ஹரி கதை சொல்லும் திறமை உள்ளவர்கள் பலர் இருந்தனர் அந்த நாளில்., அவர்களின் வரிசையில் சென்ற பதிவுகளில், திருமிகு.சி.பணி பாய் மற்றும் திரு. டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்த்திரி கொள் ஆகியோர் பற்றி பார்த்தோம்..
தமிழ்நாட்டில் சிதம்பரம் எனும் தலத்தில் எம்பார் “ஸ்ரீரங்கா சாரியார் மற்றும் புண்டரீக அம்மாள்” ஆகியோருக்கு “ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார்” நவம்பர் 11, 1909 ஆம் ஆண்டு பிறந்தார்..

இவருடைய பாட்டனார் எம்பார் வரதாச்சாரியார், சாத்திரங்கள் பல பெற்றவர்… அவர் தமது மாமா “மகாமகோபாத்யாய ஸ்ரீமான் நடாதூர் சடகோபா ஆச்சாரியார்” இடமிருந்து கற்றார்.. ஸ்ரீ வரதாச்சாரியாருக்கு நல்ல குரல் வளம் மற்றும் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாடும் திறன் மிக்கவர் ஆவார்.. அவருக்கு “ராமாயண ஐயங்கார்” என்ற பட்டப்பெயரும் உண்டு..திருமங்கை ஆழ்வார் அவதார தலமான திருநகரியில் பிறந்து, கும்பகோணத்தில் படித்து, பின் சிதம்பரத்தில் தனது வாழ்க்கையை துவங்கினார்.. புகழ்பெற்ற நந்தனார் சரித்திரம் மூலம் புகழ் அடைந்த “கோபாலகிருஷ்ண பாரதியார்” சிறந்த நண்பர் ஆவார்..
எம்பார் விஜயராகவாச்சாரியார், தனது 21 வயது வரை, தாத்தா வரதாச்சாரியார் அரவணைப்பிலேயே வளர்ந்தார்.. இவரது தந்தை “எம்பார் ஸ்ரீரங்காச்சாரியார்” ஹரி கதையில் மிகவும் பிரசித்தி பெற்று, தமிழ், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், அதை செய்யக்கூடிய வல்லமை பெற்றவர்.. அவருக்கு உடனாக பாடுபவர்கள், சற்குரு ஸ்ரீ தியாகராஜரின் பரம்பரையில் வந்த, ராமச்சந்திர ஐயர் மற்றும் சுப்ரமணிய ஐயர் ஆகிய வித்வான்கள் ஆவர்..
எம்பார் மெட்ரிகுலேஷன் வரை படித்து, அதன் பின்னர் சிதம்பரத்தில் இருந்த “காலேஜ் ஆப் ஓரியண்டல்” என்கின்ற கல்லூரியில் படித்தார்..அது “மீனாட்சி காலேஜ்” நிறுவனத்தின் தொடர்புடையது.. அந்த மீனாட்சி காலேஜ், பிற்காலத்தில் “அண்ணாமலைப் பல்கலைக் கழகமாக” மாறியது.. அவர் படித்த காலத்தில் “ஸ்ரீ தண்டபாணி தீக்ஷிதர்” என்பவரின் அன்புக்கு உகந்த மாணவனாக இருந்தார்.. இவர் வேதாந்தம் மற்றும் சாகித்யா ஆகிய இரண்டிலும், புலமை பெற்று “சிரோன்மணி” என்கிற இரட்டைப்பட்டத்தைப் பெற்றார்..இது தவிர, இவர் தமிழ், இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றிலும் பட்டம் பெற்றார்.. மேலும், தனது தந்தையிடம், தெலுங்கு, மராத்தி ஆகியவைகளோடு சங்கீதம், மற்றும் ஹரி கதையையும் கற்றுக்கொண்டார்.. அவர் இந்தியிலும் புலமை பெற்றார்.. இவ்வாறு சுமார் 25 ஆண்டுகள் பயின்ற பின்னர், தனது ஹரிகதை புலமையை வெளிப்படுத்தினார்.. அவரது நிகழ்ச்சியை கடைசி வரிசையில் இருந்து, அவரது தந்தையார் ஸ்ரீரங்க ஆச்சாரியார், அவரது மகன் அறிக்கையில் நன்கு பயிற்சி பெற்று விட்டதாக கூறினார்..
எம்பார், ஏறக்குறைய அறுபது ஆண்டு காலங்கள், தனது ஹரிகதா காலட்சேபம் மூலம், பல லட்சம் ரசிகர்களை இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பெற்றார்…இவர் சிங்கப்பூருக்குச் சென்று, நிகழ்ச்சிக்காக பெற்ற அனைத்து பணத்தையும், திருவாரூர் தேர் மற்றும் கமலாலயம் குளத்தினை செப்பனிட அளித்தார்.. மலேசியாவில் உள்ள பேட்டலிங் ஜெயா முருகன் கோவிலுக்கு அதிக அளவு பணம் அளித்துள்ளார்..
அந்தக் காலங்களில், சத்குரு தியாகராஜரின் ஆராதனையின்போது 5 நாட்களுக்கு ஹரி கதை நடைபெறும்…இவர்தான் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளின் முன்னோடியாக இருந்துள்ளார்..இவர் வைணவராக இருந்தபோதிலும், சைவம், சாக்தம், கௌமாரம் ஆகியவற்றினை அறிந்து, அந்த சமயத்தின் கருத்துகளின் அடிப்படையிலும் ஹரிகதை செய்து வந்தார்.. இவர், வேதாந்த தேசிகர் மற்றும் ராமானுஜர் பற்றியும் சிறப்பான சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.. தனது இளமைக்காலத்தில், முத்துசாமி தீட்சிதர் மற்றும் ராமா சாஸ்திரிகள் ஆகியோர் பற்றிய இசை உபன்யாசங்களையும் செய்துள்ளார்..பகவான் ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாமணி தேவி மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரை பற்றி இவர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்..” நந்தனார் சரித்திரம்” பற்றிய இவரது ஹரி கதை, இவரது தந்தையிடமிருந்து இவர் பெற்ற புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்…
இவருக்கு 1982ஆம் ஆண்டு மியூசிக் அகாடமி “சங்கீத கலாநிதி விருது” வழங்கியது.. 1977இல் தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி” சங்கீத கலாசிகாமணி” விருது வழங்கியது.. அவருக்கு தமிழக அரசின் “கலைமாமணி” விருதும் வழங்கப்பட்டுள்ளது..
“எம்பார்” என்னும் இவரது அடைமொழி இவரது முன்னோர்கள் ஸ்ரீராமானுஜரின் உறவினர்கள் என்பதைக் குறிக்கிறது.. இத்தனை திறமை பெற்ற எம்பார் விஜயராகவாச்சாரியார்,1991 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி ஆசாரியன் திருவடிகளை அடைந்தார்..