சோழ வளநாட்டில் கணமங்கலம் என்னும் ஊரில் தாயனார் என்ற ஒரு செல்வந்தர் இருந்தார். இவர் தை திருவாதிரையில் வேளாளர் குலத்தில் பிறந்தவர். “கணமங்கலம்”தற்போது “கண்ணத்தங்குடி” என்ற பெயரில் திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில், சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில்,” தண்டலை நீணெறி” அல்லது “தண்டலைச்சேரி” தளத்திற்கு எதிர் பாதையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது “தாயனார்” வாழ்ந்த ஊரான கணமங்கலம், நீர்வளம், நிலவளம் முதலியவற்றாற் சிறந்து விளங்கியது.. அவர் சிவத்தொண்டு செய்வதில் மிகுந்த அக்கறை கொண்டவர்..மனையறம் பூண்டு வாழ்ந்தவர்.. சிவபெருமானுக்கு ஏற்றன, என்று செந்நெல் அரிசியும், செங்கீரையும், பசிய மாவடுவும், நாள்தோறும் கொண்டு வந்து, திருவமுது செய்விப்பார்.. அவர், தனது ஊரிலிருந்து வயல்களுக்கு நடுவில் நடந்து அருகிலிருந்த தண்டலை நீணெறி என்ற ஊரில் குடி கொண்டிருந்த “அக்னீஸ்வரர் “என்ற திருநாமம் கொண்ட சிவபெருமானுக்கு கொண்டுவந்து படைப்பார்.? இந்த திருத்தொண்டினை, அவர் வறுமை வந்த காலத்திலும் விடாது செய்து வருவார் என, உலகுக்குக் காட்டி அது கொண்டு உலகை உய்விக்கும் பொருட்டு, இறைவர் அவரது வழிவழி வந்த செல்வத்தை சென்ற வழி தெரியாது மாற்றினார்.. அதனால் அவரது செல்வம் யாவும் மறைந்து போயிற்று.. அப்போதும் தாயனார் உமையொருபாகருக்கு தாம் செய்து வந்த திருப்பணிகளை விடாமல் செய்து வருவாராயினர்.. கூலிக்கு நெல்லறுத்து வாழ்பவராக கிடைத்த செந் நெல்லை கொண்டு இறைவனுக்கு திருவமுது செய்தார்.. கார்நெல் அரிந்து கார் நெல்கூலி கொண்டு தாம் வாழ்ந்து வந்தார்.. இந்த நிலையை மாற்ற இறைவன் திருவுள்ளம் கொண்டார்.. இறைவர் அதனை நீண்ட செந்நெல் ஆக்கி விளைத்தார்.. “இது அடியேன் செய்த புண்ணியம் ஆகும்” என்று சிந்தை மகிழ்ந்து கூறி, எல்லாம் திருவமுது ஆக்கினார் தம் வீட்டுக் கொல்லையில் வளர்த்த கீரை வகைகளைக் கொய்து மனைவியார் சமைத்து தர, அதனை உணவாகக் கொண்டார்.. வீட்டு தோட்டத்தில் இருந்த அந்த கீரையும் ஒருநாள் தீர்ந்தது.. அவரது மனைவியார் அவருக்கு தண்ணீரை மட்டுமே தர இயன்றது.. அதனையும் அவரது அமுது செய்ததுபோல உண்டு தனது இறை பணி செய்து வந்தார்.. ஒரு நாள் அவர் இறைவனுக்கு ஊட்ட, அவரது அன்பு போன்ற தூய செந்நெல் அரிசியும், பசிய மாவடுவும், மென் கீரையும் கூடையில் சுமந்து செல்ல, மனைவியார் அவர் பின்னாலே மண் கலத்தில் அணைந்து ஏந்திச் சென்றார்…இவ்வாறு செல்லும் போது அவரது உடல் பசியினால் வாடி கால் தளர்ந்து, தப்பித் தாயனார் வீழ்ந்தார்.. மண்கலத்தை அவரது மனைவியார் கையினால் மூடினார்.. இருந்தாலும் அவையெல்லாம் நிலத்தில் விழுந்து சிதறின.. அதை கண்டு மிகவும் வருந்திய நாயனார் “இனி எதற்காக நான் கோவிலுக்கு செல்ல வேண்டும்” என வருந்தினார்… “ அளவில்லாத தீமை செய்துள்ளேன்.. இறைவன் அமுது செய்யும் பேற்றினை நான் பெறவில்லை” என்று தன்னையே மாய்த்துக் கொள்ள தன் கையில் இருந்த அரிவாளால் கழுத்தை அரிந்து கொள்ள முற்பட்டார்..அப்போது இறைவன் அங்கே காட்சி அளித்து தனது திருக்கையால் அவரது கையைப் பற்றி பிடித்துக் கொண்டு அவரது அந்த செயலினை தவிர்த்தார்.. இறைவனின் இந்த செயலைக் கண்ட நாயனார் கைகூப்பி நின்று “அடியேனது அறியாமையைக் கண்டு என் அடிமை வேண்டி இடத்தில் வந்து இங்கு அமுது செய்தருளும் பரனே போற்றி!” என்று பலவாறு துதி செய்தார் இறைவன் தோன்றி “நீ புரிந்த செய்கை நன்று உன் மனைவி உடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக” என்று அருளிச் செய்து அவர் உடனே அடி சேர திரு அம்பலத்தில் எழுந்தருளினார். நாயனார் தம் கழுத்தை அரிவாள் கொண்டு அறுத்த காரணத்தால் “அரிவாட்டாய நாயனார்” என்ற திருநாமத்தைப் பெற்றார்..
அரிவாட்டாய நாயனார் தொண்டு செய்த தண்டலை நீணெறி என்கின்ற தண்டலைச்சேரி தலத்தில் திருக் கோயில் கொண்டுள்ள இறைவன் நீள்நெறிநாதர்; அம்பாள் ஞானாம்பிகை; தலவிருட்சம் குருந்தை; தீர்த்தம் ஓமக தீர்த்தம்..இந்த திருத்தலம் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற தலமாகும் இந்த கோவிலை கட்டியவர் கோச்செங்கட் சோழன்… “எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத்தொகையில் அரிவாட்டாய நாயனார் பற்றி பாடப்பட்டுள்ளது..