சென்ற பதிவில் ஹரி என்ற திருநாமத்திற்கு பல பெயர்கள் உண்டு, என்று சொல்லி அவற்றில் கோவிந்தன்,கேசவன்,வாசுதேவன், தாமோதரன் ஆகிய பெயர்களின் பெருமைகளைப் பற்றி கூறியிருந்தேன்.. இன்றைய பதிவில், அவரது மற்றொரு திருநாமமான” மதுசூதனன்” என்ற திருப்பெயரைப் பற்றியும் பதிவிடுகின்றேன்..
பகவான் மகாவிஷ்ணுவின் பன்னிரண்டு திருநாமங்களில்”மதுசூதனன்”என்கிற திருப்பெயர் ஆறாவதாக உள்ளது.. இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில், 73 ஆக வரும் பெயராகும்.. “மதுசூதனன்” என்ற பொருளில் ஒரு படைப்பு வரலாறு பொதிந்து இருப்பதாக “வியாசரின் மகாபாரதம் சபாபர்வம்” முப்பத்தியெட்டாவது அத்யாயம் கூறுகிறது..
படைப்பு என்பது, இந்து சமயத்தில் பிரம்மாவின் ஒவ்வொரு பகலிலும் அவரால் ஆற்றப்படும் தொழிலாகும்.. பிரம்மாவின் பகல் முடிந்ததும் ஊழிக் காலம் தொடங்கி எல்லா படைப்புகளையும் ஆண்டவனிடத்தில் ஒடுங்கிவிடும்.. ஊழிக் காலம் முடிந்ததும், பிரம்மாவின் அடுத்த பகல் தொடங்கி அவருடைய படைப்புத் தொழிலும் மறுபடியும் இயங்கும்.. இப்படி ஒரு ஊழிக்காலத்தில் ஆண்டவன் தன் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த போது, பிரம்மாவும் தாமரையினுள் செயலற்று இருந்தார்.. ஊழிக்காலம் முடியும் தருணத்தில், தாமரை அடியில் இருந்த தாமரை இலையின் மேல் பகவான் தன் காதுகளில் இருந்த நீர் துளிகளை தெளித்தார்.. விழித்துக் கொண்ட பிரம்மா, சுற்றி பிராணவாயுவை தூண்டினார்..காது அசுத்தத்துடன் கலந்த நீர் துளிகள் இறுகி வடிவம் பெற்றன..தமோ குணம் தான் முதலில் படைக்கப்பட்டது.. தமோ குணமும், நீர் துளிகளும் சேர்ந்து இரு வடிவங்களாயின. ஒன்று மிருதுவாகவும், மற்றொன்று கடினமாகவும் உருப்பெற்றன.. அவ்வாறு உருவானவை, மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள்.. குதிரை முக உருவம் பெற்று, தாமரை இலையில் இருந்து குதித்து வளர்ச்சி பெற்றனர்.. பிரம்மா படைக்கத் தொடங்கினார்.. முதலில் ஒலியும் ஒளியும் உண்டாயிற்று.. ஒலி வடிவில் இருந்த வேதங்கள், முந்திய பகலில் இருந்தபடியே அப்படியே வெளியாகின..அவற்றை மதுவும், கைடபனும் திருடி சென்று விட்டனர்… மகாவிஷ்ணு ஹயக்ரீவர் என்ற குதிரை முக கடவுளாக அவதரித்து, வேதங்களை திரும்பக் கொண்டு வந்தார்…

மதுவும், கைடபனும் கோபம் கொண்டு பிரம்மாவின் இருக்கையான தாமரை கொடியை ஆட்டினர்.. பிரம்மா பயந்தார்..
யோகநித்திரையில் இருந்த ஆண்டவன் எழுந்து வந்து, இரு அரக்கர்களையும் அழிக்க வழி வகுத்தார்.. அவர்களிடத்தில் “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று அவர்களை கேட்டார்.. அந்த இருவரும் திமிர் பிடித்து, அதே கேள்வியை திருப்பி ஆண்டவனிடம் கேட்டனர்.. பகவான் “உங்கள் அழிவே நான் வேண்டுவது” என்றார்.. அவர்கள் அதற்கு “ஆடையால் மூடப் பெறாத விண்வெளியில் எங்களை கொள்ளலாம்” என்றனர்.. இது நடவாது என்று அவர்கள் நினைத்தார்கள்..
பகவான் மகாவிஷ்ணு, தனது விஸ்வரூபத்தை மனதில் கொண்டு,அதன்படி அவருடைய கால்களிலிருந்து இடுப்பு வரையில், பூமியும் ஆகாயமும் அடங்கிவிட்டன.. கால்களுக்கு மேல் இடுப்பு வரையில், விண்வெளி பகுதி, அவருடைய தொடை மீது இருந்த ஆடையை விலக்கி, அதன் மேல் வைத்து அவர்களை அழித்தார்..தொடை மீது இருந்த ஆடையை விலக்கி, அது ஆடையால் மூடப்படாத விண்வெளி ஆகிவிட்டது.. இதுவே மது, கைடபர்களை அழிக்க செய்யப்பட்ட தெய்வ லீலை என்பதாகும்.

. மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழித்த பின்னும் ஹயக்ரீவருக்கு உக்கிரம் தணியாத தேவியை அவர் மடியில் அமர்த்தி இந்த திரு உருவத்திற்கு லட்சுமி ஹயக்ரீவர் என்று பெயர்..

ஹயக்ரீவர் கல்விக்கு தெய்வமாகவும் லட்சுமி செல்வத்திற்கு தெய்வமாகவும் வணங்கப்படுகின்றனர்..
மது என்னும் இந்த அரக்கனை அழித்ததால் அவருக்கு மதுசூதனன் என்று பெயர் வந்தது.”.சூதன” என்ற வடமொழிச் சொல்லுக்குஅழிப்பது என்ற வினைச் சொல்லிலிருந்து உண்டான பெயர்ச்சொல் ஆகும்..
இந்த லீலைக்குமற்றொரு பொருளும் உண்டு அதாவது நமது பொறிகளே ஆண்டவனின் சேவையில் ஈடுபடாவிட்டால் அரக்கர்களுக்கு ஈடாக பேசப்படுகின்றன எந்தப் பொறி விஷய சுகத்தைபின்பற்றி செல்கிறதோ அதுவே மது என்னும் அரக்கன் தனது தெய்வ பண்புகளால் அடியார்களின் பொறிகளை வசப்படுத்தி அவற்றின் ஈர்ப்பு சக்தி வெளி பொருட்களில் போகாமல் மாய்க்கும் ஆண்டவனுக்கு மதுசூதனன் என்ற பெயர் சாலச் சிறந்ததாகும்…
“ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே”
இந்த ஹயகிரிவர் ஸ்தோத்திரத்தின் பொருள் என்னவென்றால் “தூய மெய்ஞ்ஞான வடிவமும் ஸ்படிகம் போன்று தூய்மையான வரும் அறிவு யாவற்றுக்கும் ஆதாரமான வரும் ஆகிய ஹயக்ரீவரை வணங்குகின்றேன்”
“ஓம் தத் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தந்நோ ஹஸௌ ப்ரசோதயாத்”—
இது ஹயக்ரீவர் காயத்ரி
“உத்கீத ப்ரணவோத்கீத ஸர்வ வாகீச்வரேச்வர ஸர்வ வேதமயா சிந்தியா ஸர்வம் போதய போதய”
ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே நம: அது தேவ தேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே: வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே ஸர்வாஸ்த்வ மஹா மோஹ பேதினே ப்ரஸ்மணே நம்:
இது ஹயக்ரீவரின் மூல மந்திரம்
கிபி 1480 ம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த மத்வ குருவானமகான் ஸ்ரீவாதிராஜர் ஹயக்ரீவரை உபாசனை தெய்வமாகக் கொண்டவர் அவர் தினமும் பெயர் இவருக்கு படைக்கும் பிரசாதத்தை ஹயக்ரீவரை வந்து உண்பாராம்..வேக வைத்த கடலைப்பருப்பு துருவிய தேங்காய் வெல்லம் மற்றும் நெய் சேர்த்து செய்யப்பட்ட ஹயகிரிவபண்டிஎன்பதே இந்தப் பிரசாதம் தினமும் வழிபாடு முடிந்தவுடன் இந்த பிரசாதத்தை ஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்வதற்காக தனது தலை மேல் இவர் வைத்துக் கொள்வாராம் ஹயக்ரீவரும் வெள்ளை குதிரை வடிவத்தில் வந்து இவரது தோள்கள் மீது தனது முன்னங்கால்களை வைத்துக்கொண்டு இந்த பிரசாதத்தை உண்டு செல்வாராம்..

ஹரியின் திருநாமங்களில் அடுத்து வரும் பதிவில் அச்சுதன் என்ற திருநாமத்தை பற்றி பதிவு செய்கிறேன்
மீண்டும் சந்திப்போம்