திருக்கோயிலை சென்ற மார்ச் மாதம் ரசித்தேன்..
இந்த திருக்கோயில், சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வடசென்னிமலை என்கின்ற ஒரு திருத்தலத்தில், ஒரு குன்றின்மீது, பாலசுப்பிரமணியப் பெருமான் கோயில் கொண்டுள்ளார்..பல்லாண்டுகளுக்கு முன்பு, இக்குன்றின் அடிவாரத்தில், சில சிறுவர்கள் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர்.. அப்போது அங்கு வந்த ஒரு சிறுவன், அந்த சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.. சிறிது நேரம் விளையாடி, அவன், திடீரென ஒன்றும் சொல்லாமல், குன்றின் மீது வேகமாக ஏறினான்.. சிறுவர்களும்,விளையாட்டு எண்ணத்தில் அவனை பின்தொடர்ந்தனர்..ஓரிடத்தில் நின்ற அந்த சிறுவன்,பேரொளி தோன்ற அதன் மத்தியில் மறைந்து விட்டான்.. உடன் சென்ற சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்து, ஊர் மக்களிடம் நடந்ததைக் கூறினர்.. மக்கள் வந்து பார்த்த போது, சிறுவன் மறைந்த இடத்தில், மூன்று சுயம்பு சிலைகளும்,அவ்விடத்தில் பூஜை செய்ததற்கான அடையாளங்களும் இருந்தன..சிறுவனாக வந்து, அருள் புரிந்தது முருகன் தான், என்று அறிந்த மக்கள் இந்த இடத்தில் கோயில் கட்டினர்..
கர்ப்பக்கிரகத்தில் காட்சி தரும் பாலசுப்ரமணியர், குழந்தை வடிவத்தில் மேற்கு நோக்கியபடி நின்ற கோலத்தில் உள்ளார்.. அருகில் உள்ள தண்டாயுதபாணி துறவறக் கோலத்தில் காட்சி தருகின்றார்.. அதற்கு அடுத்தாற்போல் வள்ளி தெய்வயானையுடன் கிரஹஸ்த நிலையிலும் முருகன் காட்சி தருகின்றார்… இவ்வாறு முருகன், ஒரே தலத்தில் மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வமான ஒன்றாகும்.. ஒரே சமயத்தில், இந்த மூன்று கோலங்களையும் வணங்கினால், சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.. பவுர்ணமியில் கிரிவலம் செய்து வணங்க, தீமைகள் விலகும்..

இந்தக் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம், பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.. பங்குனி உத்திரத் தேர் திருவிழா நடைபெற்ற இரண்டாம் நாள், சத்தாபரம் விழா நடைபெறும் அப்போது ,முருகப்பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக வலம் வரும்போது, பலவகையான வாணவேடிக்கைகள் செய்யப்படும் ..இந்த வாண வேடிக்கையை காண, சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து பெருவாரியான மக்கள் வருவார்கள்..

மேலும், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி,ஆடி 18 ,ஆவணி அவிட்டம், ஆடி வெள்ளிகள், விநாயகர் சதுர்த்தி,நவராத்திரி,சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம்,கல்யாண உற்சவம் ,கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை ,ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம் ,சிவராத்திரி ,கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது..ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன..

இந்தத் திருக்கோயிலில், வேண்டுதல் செய்வோர்கள், அது நிறைவேறியதும், திருமஞ்சனம் செய்து,புது வஸ்திரம் சாத்தியும், நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்..
இந்தக் கோயிலின் ராஜகோபுரம்,ஐந்து நிலைகளை கொண்டுள்ளது.. பண்டைய காலத்தில் சுயம்பு மூர்த்திக்கும், தண்டாயுதபாணிக்கு மட்டும், சன்னதிகளில் இருந்து உள்ளன.. அதன் பிறகு முருகப் பெருமான் ஒரு பக்தரின் கனவில் வந்து, தனக்கு குழந்தை வடிவத்தில் ஒரு விக்ரகம் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறியதாக வேறு ஒரு கதை சொல்லப்படுகின்றது.. அதன்படி, பாலசுப்பிரமணியர் விக்ரகத்தை சுயம்பு மூர்த்திக்கு பின்புறம் அமைத்துள்ளனர்.. இங்குள்ள விநாயகர் அடிவார வினாயகர் என்று அழைக்கப்படுகின்றார்..
பக்தர்கள் கிரிவலம் செய்வதனால், தங்களுக்கு மன நிம்மதி ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.? இங்குள்ள மக்கள், புதியதாக நிலம் வாங்குவதற்கு முன்பாக அல்லது கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்பாக, கையில் ஒரு கல்லுடன் கிரிவலம் செய்து இங்குள்ள அவ்வையார் சிலைக்கு முன்பாக அதனை வைத்து விட்டு பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.. அதன்படி செய்தால் அவர்களது வேண்டுதல் நிறைவேறுவதாகக் கூறப்படுகிறது..
இங்குள்ள மூன்று மூர்த்திகளின் தத்துவம் என்னவென்றால், குழந்தையாக எந்தவித கவலையும் இல்லாத ஒரு நிலை; குடும்பத்தில் சந்தோஷம் மற்றும் கவலைகளுடன் உள்ள ஒரு நிலை; அடுத்து எல்லாவற்றையும் துறந்து ஒரு துறவறநிலை..
முருகப்பெருமான் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு, ருத்ராட்ச மாலை அணிந்து காட்சி அளிக்கின்றார்..ஓரிடத்தில் ஔவையார், முருகப்பெருமானுக்கு நாவல்பழம் கொடுப்பது போல ஒரு சிலை உள்ளது.. அதன் அருகில் பக்தர்கள் வேண்டிக் கொண்டு வைத்த கற்கள், ஒரு சிறு குன்று போல காட்சி அளிக்கின்றது..
மலை மீது ஏறுவதற்கு உள்ள படிக்கட்டுகள் மொத்தம் 60.. அதன் தத்துவம் 60 தமிழ் ஆண்டுகள் கடந்து மேலே செல்வோம் என்பதாகும்.. இதுதவிர, மலைமீது செல்ல சாலை வசதியும் உள்ளது..
இந்தத் திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் திறந்து இருக்கும்..
வாசக அன்பர்கள்,இந்தப் பகுதிக்குச் செல்லும்பொழுது தவறாது முருகனை தரிசித்து அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்..