தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட பார்த்தசாரதி நாயுடுவிற்கும், துரைசாணி அம்மாளுக்கும், சென்னையில் 1912 ஆம் ஆண்டு, ஒரு பெண் குழந்தை பிறந்தது.. அந்தப் பெண் குழந்தைக்கு ,”அலமேலு அம்மாள்” என்ற திருநாமம் சூட்டி மகிழ்ந்தனர்.. இளமையிலேயே சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளில் மிகுந்த நாட்டம் உள்ளவராக அந்த குழந்தை திகழ்ந்தது.. வேதாந்தாச்சாரியார், சுவாமிநாதையர் போன்ற அறிஞர்களிடம் பாடம் கேட்டு, முறையே சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றார் அந்தப் பெண்மணி.. தனது ஏழாவது வயதில், இசைப் பயிற்சியை துவங்கினார்.. தஞ்சாவூர் பாலுபிள்ளை, வீணை தனம்மாள், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், களக்காடு ராமநாராயண ஐயர், போன்ற பிரபல வித்வான்களிடம் சங்கீதம் பயின்றார்..புரந்தரதாசர் கிருதிகளை பாடம் சொல்லிக் கொடுத்தவர் வெங்கடகிரி ஆச்சாரியா.. இவரது இசை,நாட்டிய ஆர்வத்தைக் கண்ட சங்கீத பரம்பரையில் வந்த இவரது தாய்,ஒன்பதாவது வயதில் காஞ்சிபுரம், திருவேங்கடம் பிள்ளை என்பவரிடம் நாட்டியம் கற்க ஏற்பாடு செய்தார்.. இயற்கையிலேயே இவரது உள்ளத்தில் உருக்கொண்டிருந்த இறைபக்தி,” ஹரிகதா காலட்சேபம்” செய்யத் இவரைத் தூண்டியது..அதற்கு ஊக்கம் அளித்தவர், இவரது குடும்பத்தில் ஒருவராகவே ஒன்றி வாழ்ந்த திருவல்லிக்கேணி துரைசாமி நாயுடு என்பவர் தான்..
12 வயதில் மேடை ஏறி, 60 வருடங்களுக்கு மேலாக இந்தியாவெங்கும் ஆயிரக்கணக்கான இடங்களில், புராண இதிகாச கதைகளை ஹரிகதா காலட்சேபம் செய்து “லேடி பாகவதர்”என்ற புகழ் பெற்றவர் இந்த அலமேலு மங்கா என்கிற இயற் பெயர் கொண்ட திருமதி சி பனிபாய்..
குப்பையா பாகவதர் என்ற பிரபல ஹரிகதா விற்பன்னரிடம்,முதன்முதலில் ஹரி கதையை பாடம் கேட்டு பின்னர் “சித்திர விசித்திர கவி” என்ற பெயர் பெற்ற சிவராவ் பாகவதர், விஜய பாகவதர், மிருதங்கம் வேணு நாயக்கர் போன்றவர்களிடம் பயிற்சி பெற்றார்..
மகராஷ்டிரா பாணியான “லாவணி, திண்டி, சகி” போன்றவற்றை,மார்கண்டேய பிரம்மச்சாரி கற்றுக் கொடுத்தார்..தனது பன்னிரண்டாவது வயதில், பெரம்பூரில் இருந்த உறவினர் வீட்டில்,” சீதா கல்யாணம்” என்கின்ற காலக்ஷேபத்தைத் துவக்கினார். காலக்ஷேபம் நடக்கும்போதே, சுவரில் மாட்டப்பட்டிருந்த ராமர் படத்திற்கு போடப்பட்டிருந்த மலர்மாலை, நழுவி இவர் முன் விழுந்ததை மறக்க முடியாது என்று கூறியிருக்கின்றார்.. பிற்பாடு பேரும்,புகழும்,பெருஞ்செல்வமும் பெற அது அவருக்கு சுபசகுனமாக அமைந்திருக்கிறது..
பத்ரிநாத், கேதார்நாத் புனித யாத்திரையின் போது ரிஷிகேஷில் “சுவாமி சிவானந்த சரஸ்வதியை” தரிசிக்கச் சென்றார்.. அங்கேயே அவர், இவரை காலக்ஷேபம் செய்ய பணித்து, இவருக்கு “காலக்ஷேபம் கலாபூஷணம்” என்ற பட்டத்தையும் அளித்தார்..” ஆனந்த குடீர்” என்ற ஆசிரமத்தில் அன்று நடந்த நிகழ்ச்சிக்கு, பக்கவாத்தியம் வாசித்தவர்கள் அனைவரும் அந்த ஆசிரமத்தின் சந்நியாசிகள் தானாம்..
கொச்சி ராஜா, திருவனந்தபுரம் ராணி, கும்பகோணம் உடையார் போன்றோர் தங்கத்தோடாவையும், நேஷனல் பேங்க், சுந்தரராமானுஜலுராஜூ என்பவர் கண்ணன் திரு உருவம் பதித்த தங்க மெடலையும் இவருக்கு பரிசு அளித்து கௌரவித்தனர்..தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1966 ஆம் ஆண்டு இவருக்கு கலைமாமணி பட்டம் அளித்து கௌரவித்தது..
சுமார் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக, திருவையாறு தியாகராஜர் ஆராதனை தினத்தன்று, இரவு முழுவதும் காலக்ஷேபம் செய்யும் பாக்கியத்தை பெற்றுத் தந்தவரும், அந்த சமாதி கோயிலை கட்டி பராமரித்து திருப்பணி செய்தவருமான ,பிரபல சங்கீத விதூஷி “பெங்களூர் நாகரத்தினம்மாளும்,” இவரை தனது குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து ஆசி கூறிய “பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் சுவாமிகளும்” தம்மால் மறக்க முடியாத பெரியோர்கள் என்று எப்போதும் இவர் குறிப்பிடுவார்..
பல முறைகள்,வானொலி மூலமும் தனது வித்வத்தை வெளி உலகுக்கு அளித்த இவர்,நிர்பந்தத்தின் பேரில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் 1938 ஆம் ஆண்டு “சாந்த சக்குபாய்” என்ற படத்தில் சக்குபாயின் மாமியார் வேடம் தரித்து நடித்துள்ளார்..
ஹரி கதையில் சிறந்து விளங்கியவர் திருமதி சி பனிபாய் அவர்கள்..