ஹரி என்னும் பரந்தாமனின் திவ்ய திருநாமங்களைப் பற்றி, சென்ற பதிவுகளில் பதிவு செய்து வருகின்றேன்.. அவற்றில், இன்று தாமோதரன் என்ற திருநாமத்தின் பெருமைகளை பகிர்ந்து கொள்கின்றேன்..
பரந்தாமனின் திவ்ய நாமத்தில், தாமோதரன் என்ற பெயர் காத்தல் கடவுளான ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் 12 திருநாமங்களில் பன்னிரண்டாவது பெயராக வழங்கி வரும் சொல்..பாரதப் போருக்குப் பின், பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்து கொண்டு, அரசன் யுதிஷ்டிரனுக்காக பற்பல நீதிகளையும், சாஸ்திரங்களையும் சொல்லி முடித்து, முடிந்த முடிவாக மகா விஷ்ணுவின் 1000 பெயர்களைபட்டியலிலிடும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உபதேசித்தார்.. இந்த ஸ்தோத்திரத்தில் தாமோதரன் என்ற பெயர் 377-வது பெயராக உள்ளது..
பெருமாளின் எளிமையையும், பெருமையையும், ஒரே பெயரில் ஒன்று சேர்த்து, பறை சாற்றும் பெயர் தாமோதரன் ஆகும்.. பாலகனாக, தாய் யசோதையினால் வயிற்றைச் சுற்றிக் கயிற்றால் கட்டப்பட்ட எளிமை..
“வெண்ணெய் திருடுகிறாயா?உன்னை கட்டி போடுகிறேன் பார்” என்று யசோதை பாலகிருஷ்ணனை பிடித்துக் கட்டிப் போட பார்த்தாள்.. அவள் எத்தனை கயிறுகளை சேர்த்து, ஓட்டுப் போட்டுக் கொண்டே போன போதிலும், தன்னுடைய சின்ன வயிற்றை சுற்றி கட்டுவதற்கு போதாதபடி மாயை செய்தான் பகவான் கண்ணன்.. அப்புறம் அவள், வேர்த்து விறுவிறுத்து போனதைப் பார்த்து, பரிதாபப்பட்டு, தாமாகவே கயிற்றில் கட்டுண்ட அந்த காலத்திலேயே தான்,தாமோதரன் என்ற பெயர் ஏற்பட்டது..

“உரலோடு சேர்த்து, யசோதை கட்டிப்போட, மிருதுவான உன் வயிற்றை கயிறும் உறுத்தும்படி எளிமையாக கட்டுப்பட்டாயே” என்று ஆழ்வார்கள் இதை உருகி உருகி பாடி அனுபவித்திருக்கிறார்கள்.. தான் பக்தர்களின், அன்புக்கு கட்டுப்படும், பராதீனன் ஆனாலும், அவர்கள் தன்னை “என்னால் கட்டி விட முடியுமாக்கும்” என்ற அகம்பாவத்தோடு நினைக்கிற வரையில், தன்னை கட்ட முடியாது.. தானே கருணை கொண்டு கட்டுப்பட, மனம் வைத்தால் தான் முடியும் என்பதை காட்டுபவன் தாமோதரன்.. பின்னர்,குருக்ஷேத்திர யுத்தம் ஏற்படுவதற்கு முன், சகாதேவன் கண்ணன் இடத்தில் சினேக பாவத்தில் “உன்னை கட்டி போடுகிறேன் பார்” என்று சவால் விட்ட போது, கண்ணன் நிஜமாகவே கட்டிப்போடும் படியாக நின்றிருக்கிறார்.. தாமோதரன் இருக்கும்போது, இந்த “ஷட்பதி ஸ்தோத்திரம்” ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வந்துள்ள வினயத்தோடு கூடிய பக்தியை எடுத்துக் காட்டியிருக்கின்றான்..
கண்ணனின் எளிமை, உலகனைத்தையும் காப்பாற்றும் தெய்வ வலிமை..இந்த இரண்டும் சேர்ந்து தாமோதரன் என்ற பெயரால் வழங்கப்படுகிறது என்றால், ‘கயிறு’ என்று பொருள் ‘உதர’ என்றால் ‘வயிறு’ என்று பொருள்..
‘தாம’ என்றால் ‘இருப்பிடம்’ என்றும் ஒரு பொருளுண்டு.. உலகம் அனைத்திற்கும், அவருடைய வயிறு தான் சொந்த இருப்பிடம்.. எல்லாவற்றையும், தன்னுள் அடக்கிக் கொண்டு இருப்பவன் அவன்..
இன்னும் ஒரு பொருளில் ‘உதார’ என்பது ‘அறிவு உணர்ச்சி’ யைக் குறிக்கும்..’தம’ என்பது தன்னடக்கத்தை குறிக்கும்.. அதனால் ‘தாமோதரன்’ என்ற சொல் “குன்றாத தன்னடக்கத்துடன், ஏழை எளிய மக்களிடம்,மிகுந்த பரிவுடன் இருப்பவர்” என்றும் சொல்லலாம்..
“தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை” என்று ஆண்டாள் திருப்பாவை பாசுரத்தில் பாடியிருக்கின்றார்.. “தன்னைக் கருத்தரித்த தாயாரான, தேவகியின் குடலை, தன்னுடைய கர்ப்ப வாசத்தால் பரிசுத்தம் பண்ணி விட்டார்” என்பது அந்த பாசுரத்தின் பொருளாகும்..”எவனது குடலுக்கு வெளியிலே மேல்பக்கம், தாம்பு கயிற்றைப் போட்டு, வளர்ப்புத் தாய், யசோதை புண்ணாக அழுக்காக ஆகும்படி செய்தாலும், அவன் பெற்ற தாயின் குடலை தன்னுடைய வாசத்தாலாயே தூய்மை செய்தவன்” என்று காட்டியிருக்கின்றார்..
பெரியாழ்வார் திருமொழி சென்னியோங்கு (5.4) என்ற பாசுரத்தில்” தாமோதரா!சதிரா!” என்று இவர் புகழ் பாடி உள்ளார்..
தாமோதர பெருமாள் கோயில், கொண்டுள்ள ஒரு மூன்று திருத்தலங்கள் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்..
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில், தாமல் என்ற ஊரில், தாமோதர பெருமாள், கோயில் கொண்டுள்ளார்..இங்கே, மகரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க தாமல் திருத்தலத்தில் காட்சி அளிக்கின்றார்..பழமைக்கு சான்றாக தாமல் பெருமானின் திருவயிற்றில் கயிறு பதிந்த தழும்பு கொண்ட அரிய அமைப்பாக உள்ளது..
மத்வ சம்பிரதாயத்தினரால் நிர்வகிக்கப்பட்டு, பின்னர் வைணவ சம்பிரதாயத்திற்கு, அளிக்கப்பட்ட திருக்கோயில் என்பதால் “தான மல்லபுரம்” என்ற பெயர் ஏற்பட்டு, பின்னர் அது மருவி “தாமல்”என்றானது என தல வரலாறு கூறுகின்றது..
300 ஆண்டுகளுக்கு முன்னர், மத்வ சம்பிரதாயத்தினர், இந்த கோவிலை காத்து, நிர்வகித்ததன் பொருட்டு, இன்னமும் தாமல் பெருமாளுக்கு ‘கோபி சந்தனம்’ இடும் முறை வழக்கமாக உள்ளது..
அடுத்ததாக, தமிழ்நாட்டில் சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள “அமிர்தவல்லித் தாயார் உடனுறை சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில்..” இங்கே பெருமாள், அழகாக புன்னகை ததும்ப காட்சி தருவதால், “சௌமிய தாமோதரப் பெருமாள்” என்று அழைக்கப்படுகின்றார்..

இதன் தல வரலாறு என்ன சொல்கிறது என்றால்,’ ‘வில்வலன், வாதாபி’ என்ற இரு அரக்கர்கள், சிவ பக்தர்களை போல வேடம் பூண்டு, முனிவர்களை உணவு உண்ண அழைத்து வருவார்கள்..வில்வலன் மாய சக்தியால், தன் தம்பியை உணவாக சமைத்து, முனிவர்களுக்கு விருந்து அளிப்பான்.. அவர்கள் சாப்பிட்டு முடிந்ததும், வாதாபியை வெளியே வரச்சொல்லி அழைப்பான்.. அப்போது உணவு அருந்திய முனிவர்களின் வயிற்றை கிழித்துக் கொண்டு, வெளியே வருவான்.. இதனால் முனிவர்கள் இறந்துவிடுவார்கள்.. ஒருமுறை, அகத்தியர் வந்தபோது, வில்வலனும் வாதாபியும், வழக்கம்போல், அவரை விருந்துக்கு அழைத்து விருந்து படைத்தனர்.. அவர் தன் ஞானக்கண்ணால் விவரம் அறிந்து, விரைந்து உண்டவுடன் வயிற்றை தடவி “வாதாபி ஜீரணோபவ“என்று சொல்லி, உணவை செரிக்கச் செய்து விட்டார்.. பின்னர் வில்வலனும் அவரால் அழிக்கப்பட்டான்.. இதனால், அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.. அதனைப் போக்க ஸ்படிக லிங்கத்தை வழிபட்டு பரிகாரம் அடைந்ததாக இந்த தலவரலாறு கூறுகிறது.. இக்கோயிலின் அருகில், அந்த அந்தத் திருக்கோயில் “அகஸ்தீஸ்வரர் கோயில்” என்று அமைந்துள்ளது..
அடுத்து நாம் பார்க்க இருப்பது, திருக்கண்ணங்குடி தாமோதரன் நாராயண பெருமாள் கோயில்..
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே,உள்ள “திருக்கண்ணங்குடி தாமோதரப் பெருமாள் ஸ்ரீ அரவிந்த நாயகி சமேதரராக” காட்சி அளிக்கின்றார்.. பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் முதன்மையானது.. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில், ஒன்றாக விளங்குகிறது.. திருமங்கை ஆழ்வார் பாசுரங்களில் பாடப்பட்ட கோயில்.. ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது..

அடுத்த திருநாமத்தின் பெருமைகளை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்..
மீண்டும் சந்திப்போம்..