இந்த திருத்தலத்திற்கு நான் கடந்த பிப்ரவரி 2019 சென்றிருந்தேன்..
சிதம்பரம் அருகில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில், பராந்தக சோழனால் கட்டப்பட்ட மிகப் பரந்து விரிந்து காணப்படும் வீராணம் ஏரியின் அருகில், காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த ஊரின் சுற்றுப்புறங்களில்,மிகவும் பழமையான சிவ ஆலயங்கள் மற்றும் பாடல் பெற்ற ஸ்தலங்கள் உள்ளன.. இவை, இப்போது மிகவும் நலிந்து இருப்பதால், கோவிலுக்கு செல்பவர்கள் தங்களால் முடிந்த அளவு உதவிகளை செய்யலாம்..
12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற 4000 பாசுரங்களை ஒன்று திரட்டி, இசையோடு ஸ்ரீமந் நாதமுனிகள் அவர்கள் பாடினார்.. இவருடைய இந்த சீரிய முயற்சியிலாலேயே, நம்மால் 108 திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் தளங்களை காண முடிகிறது.

இந்த ஊரின் அருகில், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் குப்பன் குழி என்ற ஊரில் நாதமுனிகள் மற்றும் ஆளவந்தார் சுவாமிகள் அவதரித்தார்கள்..
நாம் அனைவரும், வாழ்வில் ஒரு முறையாவது சென்று வர வேண்டிய திருத்தலம் இதுவேயாகும்.. 108 வைணவத் தலங்களை, எப்படியாவது தங்கள் வாழ்வில் தரிசிக்க வேண்டும் என்கிற விருப்பம் உள்ளவர்கள், திவ்ய தேசங்களுக்கு சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் ஒருமுறை, இருமுறை என செல்பவர்கள், இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் உண்டு.. ஆனால், இந்த உடலில் உயிர் உள்ளபோதே எத்தனை தலங்களை தரிசிக்க முடியுமோ,அத்தனை தலங்களை தரிசித்து விட வேண்டும் என எண்ணி, வைணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முடிவு செய்து கிளம்புபவர்கள்,முதலில் இந்த கோவிலைத்தான் ரசிக்க வேண்டும்.. ஏனெனில்,இந்த ஒரு தலத்தினை தரிசித்தாலே 108 திவ்ய தேசங்களை தரிசித்த பலன் கிடைக்கும்.. 108 வைணவ தலங்களில் இது ஒன்று அல்ல, ஆனால் அதனைவிட இதற்கு பெருமை அதிகம்..

மனிதப் பிறவிக்கு உள்ள பல்வேறு தனித்தன்மைகளில், ஒன்றான இறைபக்தி, பகவத்நாம சங்கீர்த்தனம் மற்றும் திவ்ய கைங்கரியம்,நித்ய திருவாராதனம்,ஆலய தரிசனம் செய்யும் பாக்கியங்கள், அதனால் கிட்டும் பலன்கள் என மனிதர்களாக பிறந்தவர்கள்,அனைவரும் தங்களது வாழ்நாளில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களை அவசியம் தரிசிக்க வேண்டும் என எண்ணுவது நல்லது..
மனதால், உடலால்,நேரத்தால் அனைத்துத் தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும், தங்களால் எத்தனை முடியுமோ அத்தனை தலங்களையும் தரிசிக்கலாம்..
“நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் “என்று வள்ளுவர் கூறியுள்ளார்.. அறச்செயல்களுக்கு மட்டுமல்ல,நாம் வசிக்கும் ஊரின்,அருகிலுள்ள திருத்தலங்களை ரசிப்பதற்கும் தான், நல்வினை என்று அவர் கூறியிருக்கின்றார்..
நாதமுனிகள் ,ஒரு நாள் தான் கேட்ட” ஓராயிரத்துள் இப்பத்தும்”என்ற வரிகளை, பாகவதர்கள் வாயால் கேட்டு, அதை உணர்ந்து,தேடி,இந்த “நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை” அனைத்தையும், திருக்குருகூர் சென்று தன் ஆழ்ந்த பக்தியால், நம்மாழ்வாரின் திருவருளால், பெற்று அடியவர்களாகிய நமக்கு வழங்கினார்.. அதன் பிறகு தான், நமக்கு 108 திவ்ய தேசங்களின் மகிமை தெரிந்தது.. நாமும், விருப்பத்துடன் அவைகளை தரிசிக்கச் சென்று சேவித்து வருகிறோம்..
ஸ்ரீமந் நாதமுனிகள் முதன்மையாகக் கொண்டே, ஸ்ரீ வைணவ ஆச்சாரியர்கள் குருபரம்பரை துவங்குகிறது.. எனவே, முதல்வரை தரிசனம் செய்தால், பரம்பரையைச் சேவித்த பலனும்,அவரால் நமக்கு காட்டி அருளப் பெற்ற திவ்ய தேசங்களை தரிசனம் செய்த பலனும் கிடைக்கும்..
இந்த ஊரின் பெயர் “வீர நாராயணபுர சதுர்வேதி மங்கலம்” என்று கல்வெட்டுகளில் உள்ளது.. “வீரநாராயணன்” என்ற பெயர் பெற்ற “முதலாம் பராந்தகன்”இவ்வுரை அமைத்தான்.. இதில் அவர் அமைத்த ஒரு பெரும் ஏரி “வீரநாராயண ஏரி”என்று பெயரிட்டு நாளடைவில் “வீராணம் ஏரி” என்று மருவிவிட்டது.. பெருமாளுக்கும், தாயாருக்கும்,திருக்கல்யாண நடைபெற்ற போது, இது வீர நாராயணப் பெருமாளுக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்டதாம்..
இங்கே,மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள், நின்ற திருக்கோலத்தில், சங்கு சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக காட்சி அளிக்கின்றார்.. மரத்திலான நெடிய வீர நாராயணப் பெருமாளின் சிலை கிபி 13ம் நூற்றாண்டில் “முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டிய மன்னனால்” உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது..

மூலவரின் சன்னதிக்கு இடப்புறம் நம்மாழ்வார்,மதுரகவி ஆழ்வார் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன..
உற்சவர்: ஸ்ரீ ராஜகோபாலன், சந்தனகோபலன், ஸ்ரீனிவாசன்..
தாயார்: மகாலட்சுமி, மரகதவல்லி..
தீர்த்தம்: வேத புஷ்கரணி, காவேரி நதி..
தலவிருட்சம்: நந்தியாவட்டை..
இந்த திருக்கோவிலில், ஸ்ரீ யோக நரசிம்மரையும், ஸ்ரீ வராகரையும், நாம் தரிசிக்கலாம்.. பிரகாரத்தில் ஆளவந்தார் சன்னதியும் உள்ளது.. உற்சவர் தாயார், ஸ்ரீ “செங்கமல வல்லி” என்று அழைக்கப்படுகின்றார்..அடுத்து, ஆண்டாள் சன்னதி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் ஆகியோர் தனிச் சன்னதி கொண்டுள்ளனர்.. இதுதவிர, அனுகிரக ஆஞ்சநேயர் சன்னதியும் உண்டு.. கோவில் பற்றிய கல்வெட்டும், அதனருகில் ராமன், சீதையும், அனுமனும் உள்ளனர்.. இதன் எதிரில் ராமர் சன்னதி உள்ளது..
நான் சென்றிருந்த நேரம்,பெருமாள்”பார்வேட்டை” செய்வதற்காக கடற்கரைக்குச் சென்று திரும்பி வந்திருந்தார்..அந்த பல்லக்கில் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்தேன்..
வைணவத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீமந் நாதமுனிகள், அவரது பேரர் “யமுனைத் துறைவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஆளவந்தார்”ஆகிய இருவரும் அவதரித்த திருத்தலமாகும் இது..
“லட்சுமி நாத சமாரம்பாம்” என்ற தனியன் ஏற்படுத்திய ஸ்தலம் என்பார்கள்..
இந்த திருக்கோவில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடைதிறப்பு உண்டு..

வாசக அன்பர்களே! தங்களுக்கு நேரம் கிட்டும்போது இந்த திருத்தலத்தை சேவித்து, பெருமாளின் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..