
ஸ்ரீ மகா துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில், இதுவரை சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி ஆகிய ஆறு வடிவங்களின் பெருமைகளைப் பார்த்தோம்.. இந்த பதிவில், காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்ரி ஆகிய மூன்று வடிவங்களின் பெருமைகளை பார்க்கலாம்..
காளராத்திரி
நவராத்திரியில், துர்கா பூஜையின் ஏழாம் நாளில், தேவி காளராத்ரியை பக்தர்கள் வழிபடுகின்றனர்.. துர்கா தேவியின், ஒன்பது வடிவங்களில், இந்த வடிவம் மிகவும் பயங்கரமானது ஆகும், காள என்றால் நேரம், மரணம் என்றும், ராத்திரி என்றால் இரவு என்றும் பொருள்படும்.. ஆகவே காளராத்திரி என்றால்” காலத்தின் முடிவு” என்று பொருள்படும்..

துர்க்கையின் வடிவம், எதிரிக்கு அச்சத்தைக் ஏற்படுத்தக்கூடியது ..இவரின் உடல் மழை மேகம் போல் கருமை நிறம் கொண்டது.. இவள் 4 கரம் கொண்டவள்.. ஒரு கரத்தில் வஜ்ராயுதமும், மறு கரத்தில் வாளும் இருக்கும்..மற்ற இரு கரங்கள், பக்தர்களுக்கு அபயம் தரும்.. அன்னை கழுதை வாகனத்தில் அமர்ந்திருப்பாள்.. இவளின் பார்வை பட்டாலே ,பேய் பிசாசுகள் பயந்து ஓடும் என்று நம்புகின்றனர்.. ஆனால், பக்தர்களுக்கு இவளின் உருவம் பயம்தராது..பக்தர்களுக்கு நன்மை செய்வதால் சுபங்கரி என்றும் இவளை அழைப்பார்கள்..
யோகிகள், இவளின் அருள் கொண்டு ஏழாம் சக்கரமான சகஸ்ராகாரத்தை அடைவர்.. கருணை உடையவளான இவளின் தியான மந்திரம்:
“வாம படொள்ள சல்லோ ஹலட கந்தக பூஷணா
வர்தான முர்தா திவ்ய கிருஷ்ண காளராத்திரி பயங்கரி”
” நீளமான நாக்கு கொண்டு ,கழுதை மீது ஏறி வருபவளும் , ஆக்ரோஷமாக இருப்பவளும், பல வண்ணங்களில் ஆபரணங்கள் அணிந்து இருப்பவளுமாகிய பயங்கரியாம் அன்னை காலராத்திரி, என்னுடைய அஞ்ஞானம் என்னும் இருளை போக்கி அருள வேண்டும்”
இந்த தேவியின் கோயில் உள்ள இடம்;
காளராத்திரி துர்க்காதேவி ஆலயம் வாரணாசி உத்தர பிரதேசம்
மகாகௌரி
நவராத்திரியின் எட்டாம் நாளான துர்காஷ்டமி நாளன்று, இந்த தேவி துர்க்கையை மகாகௌரி என்று வழிபடுகின்றனர்.. மகா என்றால் “பெரிய” என்று பொருள்.. “கௌரி” என்றால் தூய்மையான என்று பொருள்..இவள் மிகுந்த வெண்மையாக இருப்பதால் “மகாகௌரி” என்று போற்றப்படுகிறாள்.. முன்னொரு காலத்தில், பார்வதி சிவனை நோக்கி தவம் செய்த போது, அவள்உடல் மண் சூழ்ந்து கருமையானது.. அவளின் தவத்தால் மகிழ்ந்த ஈசன் ,அவளை மணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.. அதற்கு முன் தேவியை அவர் கங்கை நீரால் நீராட்டினார்..அதனால் தேவியின் உடல் பால் போல வெண்மையானது.. இவளே மகா கவுரி..

இவள் 4 கரம் கொண்டவள். ஒரு கரம், சூலத்தையும்,மறுகரம் மணியையும் தாங்கி நிற்கும்.. மற்ற இரு கரங்கள்,பக்தர்களுக்கு அபயம் தரும் வகையில் உள்ளன.. இவளின் வாகனம் வெண்மையான காளை ஆகும்.. இவளின் அருள் கிட்டினால் நம் வாழ்வு வசந்தம் அடையும்.. இவள் பக்தர்களின் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றுவார் என நம்புகின்றனர்..
இவள் உடல் சக்கரங்களில் ஸ்வாதிஷ்டானமாய் இருப்பவள்.. யோகிகள் இவளின் ஆசி கொண்டு இந்த சக்கரத்தை அடைவர்.. துர்க்கையின் வாகனம், ஆபரணம் என அனைத்தும் வெண்மையாகவே இருக்கும். இவளின் தியான மந்திரம்:
“ஸ்வேத விருஷாப சமாருத ஷ்வேதாம்பர தாரா ஷுச்சின்
மகாகௌரி சுபம் தத்யான் மஹாதேவ பிரமோததா”
” வெண்மையான காளையின் மீது ஏறி வருபவளும் தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்தவளும் தூய்மையானவளும்மகாதேவரின் நாயகியாம் அன்னை மகா கவுரி எனக்கு அனைத்து நலங்களையும் வளங்களையும் தர பிரார்த்தனை செய்கிறேன்”
மகாகௌரி கோயில்உள்ள இடம்:
கண்க்ஹல் ,ஹரிதுவார், உத்தராகண்ட் மாநிலம்
சித்திதாத்ரி
நவராத்திரி விழாவின் இறுதிநாளான மகா நவமி அன்று, சித்திதாத்ரி ஆராதனை செய்வர்..” சித்தி” என்றால் “சக்தி” என்றும் “தாத்திரி” என்றால் “தருபவள் “என்றும் பொருள்..சித்திதாத்ரி என்றால், பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவள் என்று பொருள்.. மார்க்கண்டேய புராணத்தின்படி எட்டுவித சித்திகள் உள்ளன.. அவை, அணிமா,மகிமா, கரிமா, லஹிமா, பிராத்தி, பிரகாமியம், வாசித்வம், ஈசத்வம் ஆகியன.. இவை அனைத்தையும், பக்தர்களுக்கு தரக்கூடியவர் இந்த தேவியாகும்…

சித்திதாத்ரி தாமரை மலரில் அமர்ந்திருப்பவள்.. 4 கரம் கொண்டு இருப்பாள்.? இவளது இடக் கரத்தில் கதை மற்றும் சக்கரம் கொண்டு,வலக் கரத்தில் தாமரை மற்றும் சங்கு ஆகியவற்றை ஏந்திய வண்ணம் காட்சி அளிப்பாள்.. சித்திதாத்ரியின் வாகனம் சிங்கம் ஆகும்..தேவி புராணம், சிவன் இவளை வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று “அர்த்தநாரீஸ்வரர் “ஆனார் என கூறுகின்றது..
இவளின் அருள், யோகிகளுக்கு அனைத்து சித்திகளையும் தரும்..நவராத்திரி நாட்களில் மற்ற அனைத்து சித்திகளையும் அடைந்தவர்கள், இவள் அருளால் “பேரானந்தம் “என்னும் பேற்றினை எய்துவர்..
நவராத்திரியின் மற்ற எட்டு நாட்களில், துர்க்கைகளை முறைப்படி பூஜை செய்யும் பக்தர்கள், இறுதி நாளில் சித்திதாத்ரி பூஜை செய்வார்கள்.. இவளை வழிபட்டால், மனதில் உள்ள ஐயம் நீங்கும்.. எல்லாமும் ஒரு மகா சக்தியில் இருந்து தோன்றியதே என்ற தத்துவத்தை உணர வைப்பது இவளின் பெருமை ஆகும்.. அவர்களுக்கு தேவை என்ற ஒன்று இருக்காது.. அவர்கள் அம்பிகையின் கருணை மழையில் நனைவார்கள்.. அவர்களுக்கு வேறு ஏதும் தேவைப்படாது..
சித்திதாத்ரி தேவியை, எந்நேரமும் மனிதர், தேவர், முனிவர், யட்சர்,கிங்கரர் ஆகியோர் வழிபடுவர் ..இவளின் அருள்,மோட்சத்தின் பாதையை நமக்கு காட்டும்.. இவளுக்கான தியான மந்திரம்:
“சித்த, கந்தர்வ் யக்யாதிர் சூர் ஆர் மரைரபி
சேவையாமண சதா போயாத் சித்திதா சித்தி தாயினி”
“சித்தர்,கந்தருவர்,தேவர், முனிவர், மனிதர், யட்சர் ஆகிய அனைவராலும் வணங்கப்படுபவளும், என்றும் வெற்றி ஒன்றையே பெறும் தேவி சித்திதாத்ரி, என்னுடைய அனைத்து செயல்களிலும் ஜெயத்தை தரவேண்டும்”..
இந்த மகா நவராத்திரி நாட்களில், நாம் நவதுர்க்கைகள் ஆன தேவிகளின் பெருமைகளை, இதுவரை நாம் பார்த்தோம்..ஜெகத்தாரணி என்ற சக்தியானவள் பல ரூபங்கள் எடுத்து நம்மையெல்லாம் காக்கின்றாள்.. அன்னை எனப்படுபவள், தனது பிள்ளைகளை பரிவுடன், பாசத்துடன் அணைத்து, காத்து நல்வழிப்படுத்துபவள்.. அந்த உயர்ந்த பண்புடைய மகாசக்தியின் பெருமைகளை நாம் மனதில் கொண்டு அவளை வழிபட்டு உய்வு பெறவேண்டும்..
பராசக்தியின் மற்ற ரூபங்களையும், வழிபாடுகளையும் அவள் கோயில் கொண்டுள்ள தலங்களைப் பற்றியும், அவளது மேன்மைகளைப் பற்றியும் தொடர்ந்து இனி பதிவு செய்து வருகிறேன்..
இந்த தொடரின், அடுத்த பகுதி 5 -11- 2020 அன்று துவங்கி, ஒவ்வொரு புதன்கிழமையும் பதிவு செய்கிறேன்..
நன்றி, மீண்டும் சந்திப்போம்….