
சென்ற பதிவில், ஸ்ரீமாதா துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில், முதல் மூன்றான சைலபுத்ரி, பிரம்மசாரிணி மற்றும் சந்திர காண்டா ஆகிய தேவிகளின் பெருமைகளை பார்த்தோம்.. இந்தப் பதிவில், அடுத்த மூன்று வடிவங்களான, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா மற்றும் கார்த்தியாயனி ஆகியோரின் பெருமைகளைப் பற்றி பார்ப்போம்..
கூஷ்மாண்டா
நவராத்திரி விழாவின் நான்காம் நாளாம் சதுர்த்தி அன்று, அன்னை கூஷ்மாண்டா என்ற வடிவத்தை கொள்கிறாள்.. இந்தப் பெயர் 3 பகுதிகளை கொண்டது..”கு, உஷ்மா, ஆண்டா” என்ற இந்த மூன்றும், சிறிய வெப்பமான உருண்டை என்ற பொருளைக் கொண்டது.. அதாவது, இதைச் சேர்த்தால்” சிறிய வெப்பமான உருண்டையான உலகம்” என்று பொருள் கொள்ளலாம்.. இதனால் “கூஷ்மாண்டா” என்றால் “உலகைப் படைத்தவர்” என்று பொருள் வரும்.. அன்னை ஆதிபராசக்தியின், துர்கா தேவியின் உருவம்” கூஷ்மாண்டா” ஆகும்..
முன்னொரு காலம், பிரளயம் ஏற்பட்டு, உலகம் எல்லாம் அழிந்து போயிற்று.. எங்கும் இருள் சூழ்ந்தது..”தேவி கூஷ்மாண்டா” அப்போது சிரித்தாள்.. அதனால் இருள் விலகி, ஒளி பிறந்தது என புராணங்கள் கூறுகின்றன.. அதனால், இவளே படைப்பின் சக்தி எனக் கூறுவர்.. இவள் சூரிய மண்டலத்தை இயக்குபவர் என்றும் கூறுவர்..
இவள் 8 கரங்களைக் கொண்டவள்.. இவளின் வாகனம், சிம்மம் ஆகும்.. இந்த சிம்மம், தர்மத்தின் வடிவம் ஆகும்.. எட்டு கரங்களில் முறையே பாசம், அங்குசம், சூலம் இருக்கும்.. இவரின் எட்டாவது கரத்தில் கலசம் உண்டு.. இந்தக் கலசம் அட்ட சித்தியையும், நவ நிதியையும் பக்தர்களுக்கு தரவல்லது.. வடமொழியில் “கூஷ்மாண்டம்”என்றால் “பூசணிக்காய்”என்ற பொருளும் உண்டு.. பூசணிக்காய் போன்ற தியாகத்தால் அன்னை மகிழ்வதால், அவளுக்கு இந்த பெயர் வந்ததாகவும் கூறுவர்..

உடல் சக்கரங்களில் இவர் “அனாஹத” சக்கரத்தில் இருப்பவள்.. இந்நாளில் யோக சாதனை செய்வோர், இவரின் அருளைக் கொண்டு இந்த சக்கரத்தை அடைவர்.. இதை அடைந்து உடல் மற்றும் மன வலிமை பெறுவர்..
“கூஷ்மாண்டா தேவியின்” அருள், பாவத்தை அழித்து, இன்பத்தை தரவல்லது..
இவளுக்காக தியான மந்திரம்:
“சூரா சம்பூர்ண கலசம் ருத்ரபலு தவமேவச்சா ததான ஹஸ்த
பத்மப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து மே”
” தன் தாமரை போன்ற கரங்களில், இரு கலசம் ஏந்தியவளும், தன் சிரிப்பால் உலகை சிருஷ்டித்து, அதை பரிபாலனம் செய்பவளாகிய கூஷ்மாண்டா என் மீது கருணை பொழிவாளாக”என்பது இதன் பொருள்.
கூஷ்மாண்டா தேவியின் கோயில்கள் உள்ள இடம்: கதம்பூர் கான்பூர் நகரம் உத்தரப் பிரதேசம்..
ஸ்கந்த மாதா
நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளாம் பஞ்சமி அன்று, “ஸ்கந்த மாதா” என்று துர்க்கை தேவியை வழிபடுகின்றனர்..” ஸ்கந்த “என்ற சொல்லுக்கு “முருகன்” என்று பொருள். மாதா என்றால் அன்னை.. ஆகவே,முருகனின் தாய் ஆக இருப்பதால் “ஸ்கந்தமாதா” என்று இவளை கூறுவர்.. தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பகையாக விளங்கிய தாரகாசுரனை, கொன்றவர் தேவசேனாபதி ஆகிய முருகன்.. அத்தகைய முருகனின் தாயான இவர் மிகவும் மதிக்கப்படுகிறார்..
இவள் நான்கு கரங்களைக் கொண்டவர்.. இரண்டு கரங்களில் தாமரை மலரை கொண்டவள்.. ஒரு கரம் பக்தருக்கு ஆசி வழங்கும்.. இவள் மடியில் “ஸ்கந்தன்” குழந்தை வடிவமாக 6 முகத்தோடு காட்சியளிக்கிறார்.. அன்னையை, சிங்கம் தாங்கி நிற்கின்றது..இவள் சில நேரங்களில், தாமரை மலர் மீது அமர்ந்து, தவம் செய்பவளாக காட்சி தருவாள்.. அதனால் இவளை பத்மாசினி என்றும் கூறுவர்..

இவளின் வடிவம், பக்தர்களை மெய்மறக்கச் செய்யும்.. இவள் தூய்மை வடிவானவள்.. இவளை வணங்குவோர் மனமும், ஆத்மாவும், அமைதி பெறும்.. அவர்கள் தன்னுடைய துக்கங்களை மறப்பர்.. வாழ்வில் இறை இன்பத்தை அனுபவிப்பர்.. இவளின் ஆசிகள் உண்மையான வேண்டுதல்களை நிறைவேற்றும் தன்னை நம்புவார்களை என்றும் கை விடமாட்டாள்.. இவளின் அருள்,மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகின்றனர்..
இந்நாளில், யோகிகள் “விசுத்தி” சக்கரத்தை அடைவர்.. “விசுக்தி” என்றால் கலப்படம் இல்லாதது.. தூய்மையானது என்று பொருள்.. இவள் அருள் கொண்டு, இந்த சக்கரத்தை அடைவோரின் மனம் தூய்மையான கருத்துக்களால் நிறையும்.. இவளை சரணடைந்தவரின் மனதில் இருந்து, தூய்மை இல்லாத கருத்துக்கள் வெளியேறிவிடும்..
மற்ற எந்த தேவிகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பு,இவளுக்கு உண்டு.. அது எதுவென்றால்? இவளை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வழிபடுகின்றோம்..
இவளின் தியான மந்திரம்:
” சின்ஹாஸன் தட் நித்யம் பத்மஸ்ரித் கர்தவ்ய
சுபதஸ்து ஸதா தேவி ஸ்கந்த மாதா யஷஷ்வினி”
“தன் இரு கரங்களில் தாமரை மலர் ஏந்தி, அவளும் சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவரும், ஸ்கந்தனின் தாயாகவும் இருக்கும், தேவி துர்க்கையை நான் வணங்குகின்றேன்”
கார்த்தியாயனி
நவராத்திரி விழாவின் ஆறாம் நாளில், துர்க்கையை கார்த்தியாயினி என்று ஆராதனை செய்வர்.. முன்னொரு காலத்தில் “காதா” என்ற முனிவருக்கு “காதயா “என்ற மகன் இருந்தான்.. காதா முனிவர் கடுந்தவம் செய்து ஒரு துர்க்கையை மகளாகப் பெற்றார்.. இதனால் இவருக்கு “கார்த்தியாயனி”என்ற பெயர் வந்தது.. இவளை “மகிஷாசுரமர்த்தினி” என்றும் கூறுவார்கள்..
கார்த்தியாயினியை மக்கள் மகள் வடிவாக வணங்குகின்றனர்..இவளுக்கு அன்பு அதிகம்.. ஆனால், இவள் தீய சக்திகளை வேரோடு அழிப்பவள்.. இவள் பாவம் செய்பவரையும் அரக்க சக்திகளையும் கொல்பவள்..இவளின் கருணை, மக்களின் துயர்களை தீர்க்கும்.. இவள் நான்கு கரங்களைக் கொண்டவர்.. ஒரு கரம், தாமரை மலர் ஏந்தியும், மறு கரம் ஒளி வீசும் வாளினை ஏந்தி காணப்படும்.. இரண்டு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தரும் விதத்தில் உள்ளன..

யோகிகள், இவள் அருளின் துணைஸகொண்டு ஆறாவது சக்கரமான ஆக்ன்யா சக்கரத்தை அடைவர்.. இந்த சக்கரத்தை முக்கண் சக்கரம் என்று கூறுவார்கள்..
இவளின் தியான மந்திரம்:
” சந்திர ஹசூஜ் வந்தார் லவர் வாஹன் காத்யாயனி
சுப்தத்யா தேவி தவன் வாதினி”
“ஒளிவீசும் ஹசூஜ் என்ற வாளினை கொண்டவளும்கம்பீரமான சிம்மத்தில் ஏறி தீய சக்திகளை அழிக்கும் அன்னை கார்த்தியாயனி எனக்கு அருள் செய்ய வேண்டும்”என்பது இதன் பொருள்..
கார்த்தியாயனி தேவிக்கு உள்ள கோயில்கள்:
சட்டர்பூர் டெல்லி மற்றும் காத்யாயனி அம்மன் கோவில் தஞ்சை..
இறுதி மூன்று தெய்வங்கள் ஆன துர்க்கையின் வடிவங்கள் காளராத்திரி, மகாகௌரி மற்றும் சித்திதாத்ரி ஆகிய தேவிகளைப் பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்..
மீண்டும் நாளை சந்திப்போம்…