ஜகத்காரணி(பதிவு அத்தியாயம் 4)

அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே

வாசக அன்பர்களே!!மேற்காணும்,மகிசாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தை, கண்ணை மூடிக்கொண்டு கேளுங்கள்.. “மாதா ஸ்ரீ துர்க்காதேவிமகிஷாசுரமர்த்தினியாக மகிஷனை மர்தனம் செய்து, நர்த்தனம் ஆடும் காட்சியை, மனக்கண் முன்னே கொண்டு வரக் கூடிய அற்புதமான ஸ்லோகமாகும் இது.. இந்த ஸ்லோகத்தின் சொற்கட்டுகள், பரதநாட்டியத்தின் ஜதியை போன்ற ஒரு ஒலியை எழுப்புகின்றது…நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மாதா ஸ்ரீ துர்கா தேவியின் திருவிழாக்கள் ஆகும்..தென்னிந்தியாவில் நவராத்திரி என்று கொண்டாடப்படும் ,இந்த திருவிழா வட இந்தியாவில் “துர்கா பூஜை” திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.. அந்த துர்க்கையானவள் யார் என்று பார்ப்போம்..

துர்க்கை என்பவள் கொற்றவை என்ற பெயரால் புகழ்பெற்ற தமிழ் தெய்வமாக போற்றப் படுகின்றாள்.. துர்க்கை என்றால் வடமொழியில் “வெல்ல முடியாதவள்” என்று பொருள் தமிழில் “வெற்றிக்கு உரியவள்” மாதா ஸ்ரீ துர்க்கை தொடர்புடைய பல்வேறுபட்ட புராண கதைகள் இருக்கின்றன.. இருந்தபோதிலும் அன்னை மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்கவே, அவர் தோன்றியதாகக் சொல்லப்படுகின்றது.. அதனால்தான் மகிஷாசுரமர்த்தினி என்று வடமொழியிலும் மேதியவுணன் கொல்பாவை என்று தமிழிலும் வழங்கப்படுவதுண்டு..

துர்க்கை என்ற சொல் துர்+கை என்ற பிரிக்கலாம்.. இதில் “துர்”என்றால் தீயவை என்று அர்த்தம்.. தீய செயல்களையும், தீயவைகளையும், தனது கரங்களால் அதாவது கைகளால் அழிப்பவள்..அதனால், துர்க்கை என்று பெயர் காரணமாகியது..இந்த அன்னைக்கு,” துர்கா தேவி, ஆரத்தி தேவி ,ஜோதி தேவி” என்றும் வேறு பெயர்கள் உண்டு..

“துர்க்காதேவி “தீய செயல்களை அழிப்பவள் என்பதாகும்..

“ஆர்த்தி தேவி அல்லது ஆராத்தி தேவி” என்பது துர்க்கை, தனது உக்கிர நிலையில், நெருப்பு வடிவில், ஒளி தருபவளாக, மற்ற கடவுளுக்கு ஆரத்தி ரூபமாக, அருள் வடிவில் ஒளி தருவாள் என்று வட மாநிலங்களில், துர்க்கையை “ஆர்த்திதேவி “என்று வழிபடுகின்றனர்..

“ஜோதி தேவி” என்பது துர்க்கை நாம் ஏற்றும் திரி விளக்கில் தீபம் ஆக ஒளிர்கிறார் என்பதனால்,” ஜோதி தேவி “என்றும் வட மாநிலங்களில் கூறுகின்றனர்..

மேலும், இந்த துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் ஆர்த்தி தேவியும், ஜோதி தேவியும் உடன்பிறந்த சகோதரிகள் என்றும்,நெருப்பும் துர்க்கையும் ஒன்று என வட மாநிலங்களில் கருதப்படுகிறது…

படைப்பின் ஆரம்பத்தில் உலகங்களையும் ஏனைய தேவர்களையும் அன்னை பராசக்தி படைத்ததாக சொல்லப்படுகின்றது.. அந்த நூல் “தேவி மகாத்மியம்” என்பதாகும்..இன்னொரு நூலில், அந்த துர்க்கை ஆனவள் இரம்பன் என்னும் அசுரனின் மகனான மகிஷாசுரனை அழிப்பதற்காக 3 தேவர்களின் உடலிலிருந்தும், ஏனைய தேவர்களின் ஒளிவடிவில் தோன்றியதாகவும் சொல்லப் படுகிறது..துர்தரன், துன்முகன், தூம்ர லோசனன் ஆகிய மகிஷாசுரனின் படைத் தளபதிகளை கொன்று,இறுதியில் அவனையும் வதைத்தாக தேவி மகாத்மியம் கூறுகின்றது..

விந்திய மலைத் தொடர் மற்றும் இமயமலைப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிகளின் தெய்வம் ஒன்றே, பிற்காலத்தில் துர்க்கையாக வளர்ச்சி பெற்று இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது..

தமிழ் இலக்கியங்களில்,” பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம்” முதலான பழந்தமிழ் இலக்கியங்களில் “கொற்றவை “என்ற பெயரில் துர்க்கை அன்னையை தெய்வமாக வழிபட பட்டுள்ளன.. காலில் மகிஷாசுரனின் எருமைத்தலை கிடக்க ,இன்றைய துர்க்கை ஆகவே காட்சி அளிக்கும் கொற்றவையை சிலப்பதிகாரத்தில் காணலாம்..

துர்க்கை தேவியின் தோற்றம் சில்ப ரத்தினம் எனும் நூலின்படி, அவள் முக்கண்ணி, எண்கரத்தி, சந்திரன் அலங்கரிக்கும் ஜடாமகுடம் கொண்டவள், வலக்கரங்களில் திரிசூலம், வாள், சக்கரம்,வில் என்பவைகளையும், இடக் கரங்களில்,பாசம், கோடரி, கேடயம், அங்குசம் என்பவைகளையும் தரித்து இருக்கிறாள்..குருதி வடியும் எருமைத்தலை காலடியில் கிடக்க, சிங்கம் மீது ஒரு காலை ஊன்றி,கம்பீரமாக நிற்பாள்.. தலை துண்டான எருமை உடலிலிருந்து கையில் வாளும், கேடயமும் ஏந்தி அந்த அரக்கன் வெளிவந்து, தன்னை பாசத்தால் கட்டும் தேவியை எதிர்ப்பான்.. அன்னையின் மறுகால் அந்த அரக்க எருமை மீது நிற்கும்..

துர்க்கையின் மிகப் பழமையான வடிவங்களை, கிறிஸ்து காலத்தைய வடமொழி இலக்கியங்களிலும்,அதே கால தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது..குஷாணர் காலத்திலேயே (பொ.மு 30-பொ.பி 375) அன்னையின் சிற்பங்கள் முதன் முதலாக கிடைக்க பெற்று இருகின்றன.. மகிஷாசுரனை அழிக்கும் கோலத்திலேயே அவள் பெரும்பான்மையாக சித்தரிக்கப்படுவது உண்டு..

மத்திய பிரதேசத்தில் உள்ள குகை ஒன்றில், அவள் 12 கரத்தினளாக சித்தரிக்கப்படுகிறாள்.. குஷாணர் சிற்பங்களில் காட்டப்படும் சிங்கம், பிற்காலத்திய குப்த பேரரசு (கி.பி.240-கி.பி 600) சிற்பங்களில் காட்டப்படவில்லை.. எனினும், பிற்காலத்தில் சிங்கம் மீண்டும் துர்க்கையின் வாகனமாக ஏற்கப்பட்டு இருக்கிறது..சில இடங்களில் புலியும், அவள் வாகனமாக சொல்லப்படுவது உண்டு.. குஜராத்தில் “குரபுரை”என்று அழைக்கப்படும் பழங்குடியினரின் தெய்வமும், சில மத்திய பிரதேசத்தில் உள்ளோரின் நம்பிக்கைகளும் துர்க்கையாக வளர்ந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது..

தென்னகத்தில், மிகப்பழைய துர்க்கையின் சிற்பம் கர்நாடகாவின் “சன்னடி“ப்பகுதியில் கிடைத்த பொ.பி.3 ஆம் நூற்றாண்டின் சுடுமண் சிற்பம் ஆகும்.. அதிலும், மகிஷாசுரனை கொல்பவளைப் போலவே அன்னை காட்சியளிக்கிறாள்..இன்னும் மாமல்லபுரத்தில் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்றான தேவிக்கும் ,அவுணனுக்கும் இடையிலான போர் காட்சி, வேறெங்கும் காணற்க்கு அரிய சிற்பங்களில் ஒன்றானதாகும்..அதே இடத்தில், சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு கைகளுடன் காட்சி தரும் “கொற்றவை* முன்பு “நவகண்டம் பலி” நிகழும் சிற்பமும், அக்கால வழக்கங்களில் ஒன்றைத் தெளிவாகச் சுட்டிக் காட்டும் சிற்பமாகும்..

“நவகண்ட பலி “என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது உடல் பாகங்களை, அறுத்து தன்னையே பலிகொடுத்து கொள்வதாகும்.. தமிழகத்தில் 11 ஆம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த பலிகொடுத்துக் கொள்ளும் முறை இருந்துள்ளது.. இந்த பலியைப் பற்றி சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, தக்கயாகப்பரணி போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன..

துர்க்கையின் முக்கியமான வழிபாடு காலம்” நவராத்திரி” காலம் ஆகும் ..இந்த விழா காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தி என்று துர்க்கையின் ஒன்பது வடிவங்களை வழிபடுவது வழக்கம்..தமிழகத்தில் அண்மைக்காலமாக ராகு கால துர்க்கை வழிபாடு மிகவும் புகழ் பெற்று வருகின்றது

நவராத்திரியின் இறுதி நான்கு நாட்களும் “துர்கா பூஜை” செய்வது வங்கம், அசாம் ,ஒடிசா, நேபாளம் போன்ற இடங்களில் ஒரு பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.. இந்த நாட்களில் அன்னை துர்க்கையை, அவளது குழந்தைகளான கார்த்திகேயன் கணேசன் ஆகியோர் உடன் லட்சுமி, சரஸ்வதி ஆகியவர்களுடன் புடைசூழ வழிபடுவது வங்கத்தில் வழக்கம்.. தெலுங்கானா பகுதியில் நவராத்திரி நாட்களில் “பாதுகாம்மா” என்ற பெயரில் அவளை போற்றுவது உண்டு.. காஷ்மீரில்“சாரிகை” என்ற பெயரில் துர்க்கை வழிபடப்படுகிறாள்..

துர்க்கைக்கான கோயில்களில் “பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலும் விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா ஆலயமும் மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயமும் தென்னகத்தில் மிக பிரபலமாக விளங்குகின்றன…

இந்த நவராத்திரியில் துர்க்கையின் ஸ்தோத்திரங்களான “மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் ,துர்கா சப்தசதி” முதலான துர்க்கையின் புகழ்பெற்ற துதிப்பாடல்கள் பாடி, அன்னையை வழிபடுவது மிகவும் சிறந்தது என்று கருதப்படுகிறது..இந்த ஒன்பது நாட்களிலும் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் வழிபடுவது தொன்றுதொட்டு நிகழும் ஒரு வழக்கம்.. இந்த ஒன்பது துர்க்கையின் வடிவங்களைப் பற்றி அடுத்த பதிவுகளில் தெரிவிக்கின்றேன்..

மீண்டும் சந்திப்போம்..!

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: