
விதையே பழுதானால் விதைத்தவன் தான் நோகின்றான்
எதைச் செய்தால் இந்நிலை மாறும் என மனதாலே வேகின்றான்
பதை பதைக்கும் நெஞ்சுடனே பயிரினையே பார்க்கின்றான்
விதைத்த நெல் மணிகள் யாவும் வீணாய் தான் போனதுவே!!
எழுவாய் உயர்வாய் என் நெல் மக்களே
புழுவாய் துடிக்கின்றான் அவர் புண் தீர வழி செய்வாய்
நழுவாதே நாரணனே அவரது நன்மை கூட
தொழுதேன் கரம் கூப்பி அவரைக் காத்திடுவாய்!!
பொழுது புலர்ந்தது புள்ளினம் ஆர்த்தது
பொழிந்த மித மழை முன்னிரவு முழுமையும்
உழுது பிழைப்பவன் உற்சாகம் பொங்கினான்
கழனியில் கால்வைத்து கனிவுடன் நோக்கினான்!!
அழுத கண்களுக்கு இன்று ஆனந்தம் வந்தது
பழுதடைந்த கண்கள் இன்று பளிச்சிட்டு கண்டது
தழுதழுத்த நாவினால் நாரணன் பேர் கூறினான்
தொழுத கைகள் சிரம் மேல் தூக்கியே!!