சென்ற பதிவில் சிறப்பான நவராத்திரிகள் ஆன சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரி ஆகியவை பற்றி பார்த்தோம்..இன்றைய பதிவில்,ஆஷாட நவராத்திரி மற்றும் சியாமளா நவராத்திரி ஆகியவைகளைப் பற்றி பதிவு செய்கின்றேன்..
ஆஷாட நவராத்திரி
“ஆஷாட மாதம்” என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் மாதங்களில் ஒன்று.. இந்த மாதம்,ஆனி மாத அமாவாசையை ஒட்டி தொடங்கி, ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும்.. ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் தொடங்கி, அடுத்த ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும்.. இந்த நவராத்திரிக்கு உரிய தேவி,” வராஹி அம்மன்” ஆகும்.. வராஹி அம்மன், சப்தமாதர்கள் ஒருவராக கருதப்படுகிறார்…

ஆனி- ஆடி மாதங்களில்,எல்லா ஆறுகளிலும் தண்ணீர் புதுப்புனல் ஆக பெருக்கெடுக்கின்ற காலமாகும்..வளமையும், செழுமையும், மகிழ்ச்சியும் தரவல்ல காலம் என்பது, விவசாயத்தின் ஆரம்ப காலம் நிறைவு காலமும் ஆகும்..பூமித்தாயே கர்ப்பம் தரித்து, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலமாகும்.. விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும்.. விவசாயம் செழிக்க, வளம் பெருக, அம்பிகையை வழிபடக்கூடிய காலம்.. ஆனி,ஆடி மாத காலத்தில் அம்பிகையை வழிபட்டால், விவசாயம் பெருகி உலகம் சுபிட்சமாக விளங்கும்… மனமுருக பிரார்த்தனை செய்வதற்காகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கிறது..
“பிரம்மாண்ட புராணம்” வராஹி தேவியின் மகிமைகளை விளக்குகிறது..பண்டாசுர வதத்திற்கு, தேவி லலிதாம்பிகை புறப்படும்போது, தேவி வராஹியும் தனது கிரி சக்கரத் தேரில் எழுந்தருளினார்.. அப்போது, சுற்றியிருந்த தேவதைகள், வராஹியை துவாதச நாமங்கள் சொல்லிவழிபட்டனர்.. இந்த பன்னிரண்டு நாமாக்களை சொல்லி துதித்து அன்னையை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தி அடையும் என்கிறது பிரம்மாண்ட புராணம்..
1)பஞ்சமி 2)தண்டநாதா 3)சங்கேதா 4)சமயேஸ்வரி 5)சமய சங்கேதா 6)வாராஹி 7)போத்ரினி 8)சிவா 9)வார்த்தாளி 10)மகாசேனா 11)ஆக்ஞா சர்க்கரேஸ்வரி 12) அரிக்ஞை என்பன அந்த 12 திருநாமங்கள் ஆகும்.. இந்த திருநாமங்களை, ஒவ்வொரு பஞ்சமியன்றும், அன்னையின் சந்நிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்திற்கு முன் நின்று சொல்லி, வணங்க, தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும்.. பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருந்தால்,கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வாராஹி என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன..
நவராத்திரியில், “பஞ்சமி திதி” நடுநாயகமான தினமாகும்.. அதனாலேயே, இந்த தேவிக்கு பஞ்சமி வழிபாடும்ஏற்பட்டது.. பஞ்சமி திதி உரியவள் என்பதனால் இந்த தேவிக்கு “பஞ்சமி “என்று ஒரு திருநாமமும் உண்டு.. பஞ்சம் போக்குபவள் என்றும் இந்த தேவியை கூறலாம்..

ஸ்ரீ வாராஹி தேவிக்கு, சில நிவேதனங்கள் விசேஷம்.. அவை தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த தயிர் சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம்,மிளகு தோசை, குங்குமப்பூ ,சர்க்கரை, ஏலம், இலவங்கம்,பச்சைக்கர்ப்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன் ஆகியவை அனைத்தும் அன்னைக்கு பிரியமானவை.. இவற்றில், எதையாவது ஒன்றை,நிவேதனம் செய்தும், வழிபட்டு மற்ற வர்களுக்கு விநியோகித்தால் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்..

இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி 21.6.2020 அன்று தொடங்கி 29.6.2020 நிறைவு பெற்றுள்ளது..
சியாமளா நவராத்திரி
தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து, நவமி வரை, அம்பிகையை பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து பூஜிப்பது வழக்கம் ஆகும்.. “சியாமளா நவராத்திரி” ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி அவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே தென்னாட்டில் “விஜயதசமி” கொண்டாடுவது போல், வடநாட்டில், “வசந்த பஞ்சமி” அன்று “வித்யாரம்பம்” செய்வது வழக்கம்..அன்றைய தினம் அம்பிகையை வழிபடுவோருக்கு, கலைகள் அனைத்தும் நிறைந்து கிடைக்கும் என்பது நம்பிக்கை..

சரஸ்வதி தேவியின் தாந்திரீக ரூபமே, “ஸ்ரீ ராஜசியாமளா தேவி.. “ தாந்த்ரீக முறையில் வழிபடும், தசமகா வித்யைகளுள், மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யா ரூபமாக போற்றப்படுகிறாள்.. கல்வியறிவை தந்து, நம்மை வாழ வைக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி.. கலைவாணியான சரஸ்வதி தேவியின் சொரூபமான சியாமளா தேவியை, பிரதானமாகக் கருதி ஆராதனை செய்து வணங்கும் நாட்கள்தான் சியாமளா நவராத்திரியாகும்..
சரஸ்வதி தேவியின் கையில் உள்ள வீணை தான் நம் சங்கீதத்திற்கு ஜீவ நாடியாக இருக்கிறது.. அதனால்தான், ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கு என்று ஒரு பெயர் உண்டு..கச்சபி என்பது சரஸ்வதியின் வீணை…”விபஞ்ச்யா காயந்தி” என்ற சௌந்தர்ய லஹரியின் ஸ்லோகத்தில், சரஸ்வதியானவள், அம்பிகையின் சன்னதியிலேயே சிவ லீலைகளை வாயால் பாடிக்கொண்டே “விபஞ்சி” வாசிக்கிறார் என்று ஆச்சாரியாள் வர்ணித்திருக்கிறார்.. “விபஞ்சி” என்பது வீணைக்கு ஒரு பொதுப்பெயர்..

சங்கீத தேவதையாக சொல்லும்போது,” ராஜமாதங்கி, ராஜசியாமளா “என்றும் கூறுவார்கள்..இவளும் சரஸ்வதியை போலவே கையில் வீணையை வைத்துக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.. “வீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாம்”.. நிறத்தில் மட்டும் சரஸ்வதிக்கும் இவருக்கும் நேர் வித்தியாசமுண்டு.! சரஸ்வதி நல்ல வெண்மை நிறமாக இருப்பார்.. இவரோ சாம்பல் கறுப்பு நிறமாக இருப்பார்.. அதனால் தான் இவருக்கு சியாமளா என்று பெயர்..இவருக்கு” மகா மந்திரிணி” என்றும் பெயருண்டு..இந்த அம்பிகை, மதங்க முனிவரின் தவ புதல்வியாக அவதரித்தவர்..வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை..ஆதலால் “மந்திரிணி” என்று அறியப்படுபவர்.? ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மஹா மந்திரியாக இவ்வுலகத்தை ஆட்சி செய்து அருள்பவள்.. இந்த அம்பிகையைப் போற்றும் விதமாக சியாமளா நவராத்திரியை கொண்டாடி வருகின்றோம்..
ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள்.. அம்பிகையின் முத்ரேஸ்வரியாக(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள்..

கவி காளிதாசர் அருளிய “சியாமளா தண்டகம்“என்கிற ஸ்தோத்திரத்தில், தியான ஸ்லோகத்தில், அம்பிகை மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பம் உடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவராக,மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச் சாந்து தரித்தவளாக, தன் திரு நெற்றியில் சந்திர கலையை அணிந்தவளாக, கரங்களில் கரும்பு வில், மலர் அம்பு, பாச அங்குசம் கொண்டவளாக, சித்தரிக்கப்படுகிறாள்..அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது..
இதுவரை செயத பதிவுகளிலும், நவராத்திரி விழாவின் 4 திருவிழாக்களை பற்றி பகிர்ந்து உள்ளேன்.. இனி அடுத்து நவராத்திரியின் முக்கிய தெய்வமான ஸ்ரீ துர்க்கையின் நவதுர்க்கா வடிவங்களைப் பற்றி அடுத்த பதிவில் பதிவு செய்கின்றேன்..
மீண்டும் நாளை சந்திப்போம்…