ஜகத்காரணி (பதிவு அத்தியாயம் 2)

பராசக்தியான அந்த தேவியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் நவராத்திரியாகும்.. மனிதனுக்கு, அவசியமான ஆற்றலை தரக்கூடிய அதிதேவதை சக்தியே ஆகும்..அந்த சக்தியைப் போற்றும் விதமாக நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது..

சாரதா நவராத்திரி

சிருங்கேரி சாரதா தேவி

இந்த நவராத்திரி நோன்பு, புரட்டாசி மாதம், சூரியன், கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில், சக்தியை குறித்து நோற்கப்படும் நோன்பாகும்.. இது தட்சணாயண காலம்.. இந்த காலம், தேவர்களுக்கு இரவு காலமாகும்.. உத்தராயணத்தில், வசந்த நவராத்திரியும், தட்சிணாயனத்தில் சாரதா நவராத்திரியும், தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.. இவை இரண்டிலும்,புரட்டாசி மாதத்தில் நோற்கப்படும்.. சாரதா நவராத்திரியே, நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது.. புரட்டாசி மாதத்தில், அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து, நவமி முடியச் செய்ய வேண்டும் என்று “காரணகமம்” கூறுகின்றது.. ஆகவே, புரட்டாசி மாதத்தில், வளர்பிறை, பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுஷ்டிக்கப்படும் நோன்பு “சாரதா நவராத்திரி” ஆகும்.. ஆயினும், சில ஜோதிட சாஸ்திர குறிப்புகளை காரணமாக, இந்த ஆண்டு, ஐப்பசி மாதம், அமாவாசை தொடர்ந்த பிரதமை முதல் நவராத்திரி துவங்கியுள்ளது..

ஆலயங்களிலும், வீடுகளிலும், பிம்பம் (அதாவது உருவம்) கும்பம் இவைகளால், ஒன்பது நாட்களும் தேவியை வழிபடுவார்கள்.. நறுமணமுள்ள சந்தனம், மலர் இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா ஆகியவற்றின் கனிகளையும், மிகுதியாக வைத்து, நெய் சேர்த்த அன்னம், வடை, பாயசம் முதலியவைகளை நிவேதனம் செய்தல் வேண்டும்..புனுகு, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகில் கட்டை, பன்னீர் இவைகளுடன் கூடிய “அஷ்ட கந்தகம்” சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்வார்கள்..

இவற்றில், குமாரி பூஜை என்று சொல்லப்படும் “கன்யா பூஜை” என்பது நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும்..இரண்டு வயதிற்கு மேற்பட்ட, 10 வயதிற்கு உட்பட்ட குமாரிகள், பூஜைக்கு உகந்தவர்கள்.. முதல் நாள் தொடங்கி,ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குமாரியாக, முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூஜிக்கப்பட வேண்டும்.. அந்த குமாரிகளுக்கு ஆடை,அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு,கண்ணாடி முதலிய பல மங்கள பொருட்கள் மற்றும் மஞ்சள், குங்குமம், தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்..

நவராத்திரியில்,துர்க்காதேவி, மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து, ஒன்பதாம் நாள் போரின் போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும், இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள், தசமியில் தேவர்கள் வெற்றியை, ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால் “விஜயதசமி” என்று பெயர் வழங்கலாயிற்று என்று சொல்லப்படுவது உண்டு.. இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்..

ஆலயங்களில், விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழக்கம்.. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்க முடியாமல், சிவபிரானை வழிபட்டு, விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான் என்றும், தேவி வன்னி மரத்தை வெட்டி அவனை சம்ஹாரம் செய்தாள் என்றும் கூறுவர்.. இதுவே நாளடைவில் “கன்னிவாழை வெட்டு” என்று மருவி வழங்கலாயிற்று.. அசுரனை சம்ஹரித்த நேரம், மாலை வேளை செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்..

இந்த நவராத்திரியில், ஸ்ரீதேவியை துதிசெய்து வழிபடுபவர்களுக்கு, தேவியானவள் சகல சவுபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டும் அல்லாமல் வீடுபேறாகிய முக்தியையும் நல்குவாள் என்றும் காரணாகமம் கூறுவதாக சொல்லப்படுகிறது..

வசந்த நவராத்திரி

திருமீயச்சூர் லலிதாம்பிகை

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி  “சாரதா நவராத்திரி” என்றும், மாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி “சியாமளா நவராத்திரி”என்றும், ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி “ஆஷாட நவராத்திரி” என்றும், வசந்த காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி, “வசந்த நவராத்திரி” என்றும் வழங்கப்படுகிறது..

இவற்றில், புரட்டாசி நவராத்திரி, பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியும் வழக்கத்தில் உள்ளது.. அதிகமாக மக்களால் கடைப்பிடிக்கப்படும் நவராத்திரி, சாரதா நவராத்திரி.. அதேநேரம், வசந்த நவராத்திரியும் தவிர்க்க முடியாத நவராத்திரி என்பதில் ஐயமில்லை.. வசந்த காலத்தில், பகல் பொழுது அதிகமாக இருப்பதால், வசந்த நவராத்திரி பூஜைகள், பகலிலேயே நடைபெறுகின்றன.. வசந்த நவராத்திரியை “லலிதா நவராத்திரி” என்று அழைப்பார்கள்..

வசந்த நவராத்திரி என்பது, கானகத்தில் வாசனை நிரம்பிய மூலிகைகளுடன் கொண்டு செய்வதால், இதை ராமபிரான், காட்டில் இருந்தபோது நாரத முனிவர் நடத்தி வைத்ததாக ராம சரிதம் சொல்கிறது..  புராணத்தில்,பங்குனியும், புரட்டாசியும்’ எமதர்மனின்’ கோரைப்பற்கள் என்று குறிப்பிடப்படுகிறது.. இந்த இரண்டு மாத காலங்களில், நோய்க் கிருமிகள் அதிகம் பரவும் காலமாக இருப்பதாகவும், தெய்வத்தின் அருள் மனிதனுக்கு கிடைப்பதில் தடை ஏற்படும் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. எனவேதான், இந்த காலகட்டத்தில் சக்தி தேவியை வழிபடும் நவராத்திரி விரதத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.. இந்த வசந்த நவராத்திரியை கொண்டாடுவதற்கு ஒரு குட்டி கதை சொல்லப்படுகிறது..

முன்னொரு காலத்தில், அயோத்தி நாட்டினை ‘துருவ சிந்து’ என்ற மன்னன் ஆட்சி செய்தான்.. அந்த மன்னனுக்கு மனோரமா மற்றும் லீலாவதி என்று இரண்டு மனைவிகள்..ஒரு முறை,வேட்டைக்காக காட்டுக்குச் சென்ற மன்னர் சிங்கத்தால் மரணமடைந்தார்.. இதையடுத்து மன்னனின் மனைவி இருவரில், யாருடைய மகனுக்கு முடி சூட்டுவது என்ற பிரச்சினை ஏற்பட்டது..  முறைப்படி மனோரமாவின் மகன் ‘சுதர்சனனுக்கு’ முடி சூட்ட முடிவு செய்யப்பட்டது.. ஆனால், லீலாவதியின் தந்தை சத்ருஜித், தன்னுடைய பேரனும், லீலாவதியின்ன மகனுமான ‘யுதஜித்தை’ அரசனாக்க விரும்பினார்.. இதை அறிந்த மனோரமாவின் தந்தை வீரசேனன், சத்ருஜித்தை எதிர்த்தான்..இதனால், இருவருக்கும் போர் மூண்டது.? இதில் வீரசேனன் கொல்லப்பட்டார்..இதையடுத்து, மனோரமாவும் சுதர்சனனும் உயிர்தப்பி காட்டுக்குச் சென்றனர்.. அவர்கள் இருவரும் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்தார்கள்..

இந்த நிலையில் அயோத்தியின் ஆட்சிப் பொறுப்பை அடைந்த யுதஜித், தன்னுடைய படையினரை அனுப்பி, சுதர்சனனை கண்டுபிடிக்க உத்தரவிட்டான்.. அந்த படையினரரும் சுதர்சனனையும், அவனது தாயார் மனோரமாவும் பரத்வாஜர் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.. இதனை அடுத்து, சுதர்சனனை தன்னுடைய கைதியாக அனுப்பி வைக்கும்படி பரத்வாஜ முனிவருக்கு தூது அனுப்பினான்.. ஆனால், தன்னை நாடி வந்தவர்களை காப்பது, தன்னுடைய கடமை என்று கூறி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் முனிவர்.. இதனால் கோபமடைந்த யுதஜித் போர் தொடுக்க முடிவு செய்தான்.. ஆனால், அவனுடன் இருந்த அமைச்சர்கள் முனிவர்களை எதிர்ப்பது நமக்கு நல்லதல்ல என்று அறிவுரை வழங்க, தன்னுடைய முடிவை கைவிட்டான்..

பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் தங்கியிருந்த சுதர்சனனுக்கு “க்லீம்” என்ற அம்பாளின் பீஜ மந்திரத்தை உபதேசித்தார்.. இதை விடாது உச்சரிக்க, சுதர்சனன் ஒரு நிலையில் தவ நிலைக்குச் சென்றான்.. அந்த மந்திரத்தின் வீரியம்,அன்னை பராசக்தியை, அவன் முன்பு தோன்றும் படியாக செய்தது.. அவன் முன்பு தோன்றிய தேவி அவனுக்கு சக்தி வாய்ந்த அழிவில்லாத ஆயுதங்களை பரிசாக வழங்கினார்..

சில காலங்களுக்கு பிறகு, காசி நாட்டின் ஒற்றர்கள் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் வழியாக சென்றபோது, ஆயுதங்களை லாவகமாக கையாளும் என்ற சுதர்சனனைக் கண்டனர்.. அவர்கள் காசி அரசனின் மகளான சசிகலாவிற்கு, சுதர்சனன் ஏற்ற துணையாக இருப்பான் என்று தகவல் தெரிவித்தனர்..இதனையடுத்து, காசி மன்னன், சுதர்சனனை அழைத்து முறைப்படியாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்..

இதை அறிந்த ‘யுதஜித்’ காசி நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.. அப்போது, சுதர்சனன் தன்னிடமிருந்த சக்தி வாய்ந்த ஆயுதங்களை கொண்டு, யுதஜித்தைத் தோற்கடித்து தன் மாமனாரை காப்பாற்றினார்.. சுதர்சனம் இருந்த ஆயுதங்கள் யுதஜித்தின் படைகளை துவம்சம் செய்து அழித்தது.. போர் முடிந்ததும்,சுதர்சனன், சசிகலா ஆகியோர் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.. அனைவரும் தேவியின் மந்திரத்தை உச்சரித்து அவரை வணங்கினர்..

இதனால் மனம் மகிழ்ந்த அன்னை பராசக்தி, அவர்களின் முன்பாக தோன்றி “என்னை வருடம் தோறும் இதே வசந்த காலத்தில் வழிபாடு செய்யுங்கள்.. உங்கள் துன்பங்கள் யாவும் மறைந்து நன்மைகள் விளையும்” என்று கூறி மறைந்தாள்.. திருமணத்திற்கு பிறகு சுதர்சனன், பரத்வாஜ முனிவரின் ஆசியோடு அயோத்தியின் அரசனாக முடிசூட்டிக் கொண்டு, நாட்டு மக்களுடன் ஆண்டுதோறும் வசந்த காலத்தில், வசந்த நவராத்திரியை கொண்டாடி மகிழ்ந்தார்..

இந்த புண்ணிய தினங்களில், அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று, அம்மனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி, வழிபட வேண்டும்.. வசந்த நவராத்திரி நாட்களில், அனுதினமும், அம்பாளுக்கு நிகழும் ஆராதனைகளை தரிசிப்பதால், விசேஷ பலன்கள் கைகூடும்.. வீட்டிலும், அனுதினமும், சித்திரான்னங்கள் செய்து, படைத்து, லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலான தேவியின் துதி பாடல்களை பாராயணம் செய்து, வழிபடுதல் நலம்.. இதனால், அனைத்து நோய்களும் விலகி, சகல நன்மைகளும் அந்த இல்லத்தில் பொங்கிப் பெருகும்..

ஆஷாட நவராத்திரி, சியாமளா நவராத்திரி ஆகியவை பற்றி, அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்..

மீண்டும் நாளை சந்திப்போம்…

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: