
ஶிவஃ ஶக்த்யா யுக்தோ யதி பவதி ஶக்தஃ ப்ரபவிதும்
ன சேதேவம் தேவோ ன கலு குஶலஃ ஸ்பன்திதுமபி|
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி
ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி|| 1 ||
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய “சௌந்தரிய லகரி “என்ற ஸ்லோகத்துடன் இந்தத் தொடரை துவங்குகின்றேன்.. “சௌந்தரியம்” என்றால் அழகு என்று பொருள் ..அந்த தேவி பராசக்தியின் அழகை வருணிக்கக் கூடிய ஸ்லோகங்களைஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரி என்று அருளியுள்ளார்.. இந்த தொடர், “தேவி பாகவதம் மற்றும் தேவி மகாத்மியம்” ஆகியவற்றின் அடிப்படையில், நான் படித்த அறிந்துகொண்ட விவரங்களின் அடிப்படையில் ,வாசகர்களுக்கு பகிர்ந்துகொள்ள விருப்பப்படுகிறேன்..
ஸ்ரீ கந்த புராணத்தில் மானச காண்டத்தில் அமைந்திருக்கும்” ஸ்ரீ தேவி பாகவதம் மகாத்மியம்” ஒரு சிறப்பான சாரமாகும்..
உலகம், உயிர், இறைவன், அவற்றின் உள்ளே ஊடுருவி இருக்கக் கூடிய ஆற்றலே பராசக்தி ஆகும்..அந்த சக்தி தேவியே எல்லாம் வல்லவள்.. எங்கும் எதிலும் நிறைந்தவள்.. உலகத்தை பிரம்மன் உருவாக்கி படைக்கும் போதும், மகாவிஷ்ணு உலகத்தை காக்கும் போதும், காலாக்னியாக ருத்ரர் உலகங்களை எல்லாம் அழிக்கும் போதும், அந்த சக்தி தேவியே ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களிலும் மூல தேவதையாக விளங்குகின்றாள்.. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும், அவளுக்கு விளையாடக் கூடிய பொருள்களே ஆகும்..

படைப்புக் கடவுளான பிரம்ம தேவனுக்கு, சரஸ்வதி என்ற நாயகி வடிவமாகவும், காத்தல் கடவுளான மகாவிஷ்ணுவிற்கு மகாலஷ்மி என்ற நாயகி வடிவமாகவும், அழித்தல் கடவுளான ருத்ரனுக்கு பார்வதி என்ற நாயகி வடிவமாகவும் அந்த சக்தி தேவியின் அம்சங்களே இருந்து கடவுள்களின் தொழில்களை எல்லாம் இயங்கச் செய்கின்றன..மனிதன், மிருகம், பறவை,ஊர்வன, நீந்துவன ஆகிய எல்லா உயிர்களிலும், உயிரின் ஆற்றலாகவும், இயக்கமாகவும், ஊக்கமாகவும், ஊட்டமாகவும், பெண்மை சக்தியே இயங்கி வருகிறது.. பெண்மை இல்லை என்றால் பிறவிகளே இல்லை. வாழ்க்கை இல்லை;உலகம் இல்லை;சந்ததிகள் இல்லை; எதுவுமே இல்லை.. அந்தப் பெண்மையின் ஆற்றல்தான் சக்திதேவி.. அவளே ஆண்மையின் ஆற்றலாகவும் இயங்கி, இயக்கவும் செய்கிறாள்..
இந்த ஏற்றமிகு சிந்தனையின் அடிப்படையில் தான் “ஸ்ரீ தேவி பாகவதம்” என்ற மாபெரும் காவியத்தை மகா முனிவர் ஸ்ரீ வேத வியாசர் இயற்றிய இருக்கின்றார்..ஸ்ரீ வேத வியாசர், இயற்றிய பகவத் கீதை, ஆத்ம ஞானத்தைப் போதித்து, ஜீவன்முக்தி தரக்கூடியது.. அறம், பொருள், இன்பம் ,வீடு என்ற இந்த நான்கு வகை பேறுகளில் ‘வீடு’என்பது தான் ஜீவன் முக்தி ஆகும்.. அந்த பரம உன்னத நிலையை அடைவதற்கு சாதனமாக ‘அகண்டாகார விருத்தி’ என்பது “நாதம், விந்து, கலை, வைகரீ, என்ற நான்கு வகைப்படும் என்று அறிஞர்கள் கூறியுள்ளார்கள்..
இவற்றில்” நாதம்”என்பதின் தன்மை வடிவமாக விளங்குபவர் “பரை”என்கின்ற சக்தியாவாள்.. அந்த சக்தி மூலாதார சக்கரத்தில், எந்தவிதமான தர்க்கங்களுக்கும், ஞான விசாரங்களுக்கும், புத்தி யுக்தி ஆகியவைகளுக்கும் புலப்படாமல் ஜோதி மயமாக விளங்குகின்றாள்..”பிந்து” என்பதில் தன்மை வடிவமே “பஸ்யந்தி” என்ற சக்தியாவாள்.. இவள், நமது நெஞ்சத்தில் “த்ருவ்ரத் “என்ற ஓங்கார வடிவமாக இருக்கிறாள்.. கலை என்பதில் தன்மை வடிவம் “மத்தியமா” என்கிற சக்தியாவாள்.. இவள் விசுத்தி சக்கரத்தில் “அகாரம்_முதலிய ஸ்வரங்கள் ஆகவும்,” ககாரம்” முதலிய ஸ்பரிசங்ங்கள் ஆகவும் தூய வர்ணமாக, விளங்குகின்றாள்.. “வைகரீ” என்பவள் வாக்கு ரூபமாக ஒவ்வொன்றையும் விளங்கச் செய்யக்கூடிய ஒளிமயமான சக்தியாவாள்.. மூலாதாரத்தில் நாத வடிவம் கொண்டவளாக இருக்கும் பராசக்தியானவள், தன்னை வழிபடுவோருக்கும், மற்ற யாருக்கும் புலப்படாமல் சூட்சுமமாக இருப்பாள்.. பஸ்யந்தி சக்தியாக அவள் நமது நெஞ்சத்தில் இருக்கும்போது வழிபடுபவர்களுக்கு மட்டும் நிலையற்ற மின்னல் போல ஒரு நொடி நேரம் தோன்றுவாள்.. மத்தியமா சக்தியானவள் விசுத்தி சக்கரத்தில் இருந்து கொண்டு நிலையான அக்னி ஜ்வாலை போல வழிபடுவோருக்கு தெளிவாக தோன்றி வருவாள்.. வைகரி சக்தியான தேவி, சப்த ரூபமாக இருந்து தன்னை வழிபடுபவர்களுக்கு தோற்றமளிப்பார்..
மகா சக்தியான அந்த தேவியிடம் “அவேத்யம் ஸவஸம்வேத்யம் ஸ்வபரவேத்யம்“என்ற மூன்று வகை நிலைகள் உண்டு.. “ஸ்வஸம்வேத்ய நிலை”என்பதை நிலையான நிலை, நிலையற்ற நிலை என்ற இரண்டு வகைகளாக பிரித்து கொள்ள வேண்டும்.. அதில் நான்காவது நிலையில், வைகரீ வடிவமாக விளங்கும் சக்தி தேவியே, சகல உலகங்களையும் விளங்க வைக்கும் சப்த வடிவமாகவிளங்குகின்றாள்.. ஆகையினால், அந்த நிலையில்தான் மனிதர்கள் அவளை தங்கள் வாக்கினால் விளக்கிச் சொல்ல முடியும்..” இந்த விதமாக விளங்கும் தேவியை என்னுடைய வாக்கை எல்லோருக்கும் தெளிவாக விளங்க செய்து அலங்கரிக்க வேண்டும்” என்று துதித்துக் கொண்டு தான் வேதவியாசர் தேவி பாகவதத்தை துவங்குகிறார்..
இந்த தேவி பாகவதத்தை, சொல்லியும், கேட்டும் வரும் மக்களுக்கு நான்கு வகை பேறுகளும் கிடைக்கும்..குடும்பத்தில் ஒரு நாள் அல்லது அரை நாள் அல்லது ஒரு கண நேரமாவது இந்த தேவி பாகவதத்தை தானாக படித்தோ, அல்லது பிறரை கொண்டு படிக்கச் செய்து கேட்டுக் கொண்டாலும், அந்த குடும்பத்தில் துன்பங்கள் ஏதும் இருக்காது.. அதர்மத்திற்கும்,ஆசைகளுக்கும் இடமாக உள்ள இந்த கலியுகத்தில் அற்ப ஆயுளுடன் கூடிய மக்களுக்கு, பெரும் தர்மங்கள் செய்ய நேரம் கிடைப்பதில்லை..இந்த நிலையை கருத்தில் கொண்டு வேதவியாசர் ஸ்ரீ தேவி பாகவதத்தை இயற்றியுள்ளார்..அதிலும் குறிப்பாக ஐப்பசி, சித்திரை ,மாசி ஆடி ஆகிய இந்த நான்கு மாதங்களை முக்கியமாக குறிப்பிடுகின்றார்..
அதனால்தான் “சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, மகா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி“என்ற நான்கு விதமான நவராத்திரி புண்ணிய காலங்களில், ஒன்பது நாட்களுக்கு, நவ யக்ஞ விதிகளை கடைபிடித்து இந்த புராணத்தை பாராயணம் செய்ய வேண்டும்.. அதனால், எல்லாவிதமான புண்ணிய நற்பயன்கள் கிடைத்து, விருப்பங்களும் நிறைவேறும்.. இது படிக்கப்படும் வீடு, தூய்மையாகவும், குடும்பம் ஆனந்தமாகவும் இருக்கும்.. புத்திரப்பேறு உண்டாகும்…

உலகத்தின் மிகப் பேரழிவு காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தை உண்டாக்க விரும்பிய போது இச்சை என்ற சக்தியும்,அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞான சக்தியும், தோன்றின பின் கிரியா சக்தியினால், இறைவன் உலகத்தை படைத்தார் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது..
நவராத்திரியில் முதல் மூன்று நாளும்” இச்சா சக்தியின்” தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம்.. இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்..
நடுவில் உள்ள மூன்று நாட்கள் “ஞான சக்தியின்” தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம்.. இதில், இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன, போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்..
இறுதி மூன்று நாட்களும் “கிரியா சக்தியின்” தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம்.. இதில், இறைவன் முன் அறிந்தவாறு, அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தில் உள்ள உரையாகும்..
இந்த தொடரை, இன்று முதல் துவங்கி, நவராத்திரி முடியும் வரை தினம்தோறும் பதிவு செய்து, அதன் பின்னர் ஒவ்வொரு புதன்கிழமையும் தேவியின் சக்தி மகிமைகளைப் பற்றி தொடராக பதிவு செய்ய விரும்புகின்றேன்..
மீண்டும் நாளை சந்திப்போம்…..