திருமாலின் திருநாமங்கள் பல உள்ளன. அந்த திவ்ய திருநாமங்களில் வரிசையில், சென்ற இரு வாரங்களாக “கோவிந்தன்” மற்றும் “கேசவன்” ஆகிய திருநாமங்ஙகளின் பெருமைகளை பற்றி அறிந்தோம்.. இன்றைய பதிவில் அவரது மற்றொரு திருநாமமான “வாசுதேவன் “என்கிற திருநாமத்தின் பெருமைகளை அறிந்து கொள்வோம்..
பொதுவாக,” வாசுதேவன்” என்கிற திருநாமம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், வசுதேவரின் புதல்வர் என்பதனால் ஏற்பட்டது என்று நாம் அறிவோம்.. ஆனால், “வாசுதேவன்” என்கிற திருநாமத்திற்கு வேறு சில பொருள்களும் உள்ளன..அவை என்ன என்ன என்பதனைப் பற்றி, இந்த பதிவில் வாசகர்களுக்கு தெரியப் படுத்த விரும்புகின்றேன்.

“வாசுதேவன்”என்பது, ஸ்ரீமகாவிஷ்ணுவின் முக்கியமான பெயர்களில் ஒன்று.. பகவத் கீதை, ஏழாவது அத்தியாயம்,19 ஆவது ஸ்லோகத்தில், “வாசுதேவன்” தான் எல்லாம் என்று எவன் அறிகிறானோ,அவன் “மகாத்மா” என்றும், கிடைத்ததற்கு அரியவன், என்றும் சொல்லப்படுகிறது.. விஷ்ணு சகஸ்ரநாமத்தில், “வாசுதேவன்” என்ற பெயரில் மூன்று முறை வருகிறது.. உரையாசிரியர்கள், இந்த மூன்றும்,மூன்று விதமான பொருள்களை கூறுகின்றனர்.. நமக்கு தெரியும், மூன்று என்ன? பல பொருள்களைகொண்டது “வாசுதேவன்”என்ற சொல்.. அதில்” வாசு, தேவ”என்ற இரண்டு பகுதிகள் உள்ளன.. இவற்றில், ‘வாசு’ என்ற பகுதிக்கு என்ன பொருள் என்பதை பார்ப்போம்..
இப்பகுதி “வஸ்” என்ற வடமொழி, வேர்ச்சொல்லில் இருந்து உதிக்கிறது.. அதற்கு,”இருக்க, வசிக்க, குடியிருக்க, தங்க, நேரத்தை கழிக்க அல்லது செலவிட, “என்றெல்லாம் பொருள் சொல்லலாம்.. இந்த வேர்ச் சொல், “வஸதி” என்று செயப்படுபொருள் குன்றிய வினை, விகற்பமாகவும் “வாஸயதி“என்று செயப்படுபொருள், குன்றா வினை விகற்பமாகவும் மாறுபடுகிறது..
எல்லாப் பொருள்களிலும்,தான் நிலை பெற்றிருக்கிறார்..எங்கும் இருக்கிறார்; எல்லாவற்றிலும் உள்ளுரைபவராக இருக்கிறார்.. இவையெல்லாம், ‘வஸதி’ என்ற வினை விகற்பத்திலிருந்து வரும்.. பொருள்கள் எல்லாவற்றையும் மறைக்கிறார் ( ஈஸாவாஸ்யமிதம் ஸர்வம்)..எல்லாமாய் இருக்கும் தன்னை,ஒருவரும் உணராதபடி, தான் மறைந்திருந்து, பல பல பொருள்களை பார்க்கும்படி செய்கிறார்.. தன், தன் வினைப் பயனுக்கு ஏற்றவாறு அமைந்த உடல்களில், குடியிருக்க செய்கிறார்.. நிலைத்த இருக்கையற்ற வான்,மண் முதலிய பஞ்ச பூதங்களிடத்தில், தன் இருக்கையை பரவச் செய்து, அவைகளுக்கு நிலைத்த தோற்றத்தை அளிக்கிறார்..தன்னை, தாயாக ஆக்கிக்கொண்டு, தன் மடி மேல் உலகம் அனைத்தையும் வைத்து, பரிவுடன் அணைத்துப் பாதுகாக்கிறார்.. ஆதவன், தன் கதிர்களால் பூமி அனைத்தையும் சூழ்வதைப் போல், தன் பெருமையால் உலகம் முழுமையும் மூடி நிற்கின்றார்.. இவையெல்லாம் “வாஸயதி” என்ற விகற்பத்திலிருந்து வரும் பொருள்கள்.. அடுத்து “தேவ” என்ற பகுதியின் பொருளினைப் பார்ப்போம்..
இந்தப் பகுதி “திவ்“என்ற வடமொழி வேர்ச்சொல்லில் இருந்து வருகிறது..அதற்கு, “விளங்க, பளபளக்க, எறிய, சூதாட, சொக்கட்டான் ஆட,விளையாட, பந்தயம் போட, வியாபாரம் செய்ய, விற்க, புகழ, விரும்ப” என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்…
“படைப்பு”முதலியவற்றில்,”எல்லை இல்லாத படி விளையாடுபவர், எதனையும் வெல்லும் எண்ணம் கொண்டவர், ஒளிமிக்கவராக விளங்குபவர், ஆனந்த படுபவர், பெருமிதத்துடன் இருப்பவர்,அழகுடன் துலங்குபவர்,எங்கும் செல்லும் திறமை உள்ளவர்,புகழப்படுபவர், விரும்பப் படுபவர், செயலாற்றுபவர், ஜீவனாக ஒவ்வொரு உடலிலும் இருந்து கொண்டு உலக விவகாரங்களில் ஈடுபடுபவர்,” இவையெல்லாம் “திவ்” என்ற வடமொழி சொல்லின் வினை மூலத்தினின்று உண்டான” தேவ” என்ற சொல்லினால் ஏற்படும் பொருள்கள்..
சிறுமையையே பெருமையாக மனிதனை நினைக்கும்படி செய்வதே அவரது பெரும் விளையாட்டு.. விளையாடுவதனால் “தேவன்” என்று அழைக்கப்படுகிறார்..
“வாசு மற்றும் தேவ” ஆகிய இரு பகுதிகளும் சேர்ந்து “வாசுதேவர்” என்று திரண்ட பொருளாக ஆவதனால், எங்கும் உறைபவராக இருந்து, எல்லோரையும், எப்பொழுதும்,”விளையாட்டாகவே காப்பவர்” என்றும் சொல்லலாம்..
“சாதயாமி ஜெகத் விஸ்வம் பூத்யா ஸூர்ய இவாம் ஸுபிஹி…” சூரியன் உலகத்தை, தன் கிரணங்களால் வியாபித்து, மூடுகின்றான்..அவ்வாறு மூடுகின்ற ஒளிக்கதிர்களை அறியாமல், ஒளிக்கதிர்களால் விளக்கம் பெறும் உலகத்தை மட்டும், நாம் காண்கின்றோம்.. “ஆண்டவன்” தன் பெரும் சக்தியான மாயையாகிய பெருமையால் இந்த பூவுலகத்தை கூறுகின்றார்..
சங்கர்ஷணர்(அழித்தல்) அனிருத்தன் (காத்தல்) ப்ரத்யு மனன்(படைத்தல்)என்ற வியூக நிலையில் உள்ள மூவருக்கும், மேற்பட்ட வரையும், தலைவராகவும் உள்ள “வாசுதேவர்” என்பவர் “பரம்பொருளே” என்கிறார் ஆதிசங்கரர்..வைணவ மரபில், வாசுதேவரை, “பரவாசுதேவர்” என்றும் வழங்குவார்கள்.. பரவாசுதேவர், சங்கர்ஷணர், அனிருத்தன், பிரத்யும்னர் என்ற பெயர்களில், நாராயணனாகிய பரம்பொருள், தன்னையே இந்த நால்வர் ஆக ஆக்கிக்கொண்டு, படைப்பு முதலிய தொழில்களில் ஈடுபடுகிறார்.. பரவாசுதேவர் மற்ற மூவருடைய பணிகளுக்கும் தலைவராக இருக்கிறார்.. ஆகமத்தை ஓட்டி நடக்கும் வைணவ ஆலய வழிபாட்டில், இந்த வியூக நிலைக்கும் பெயர்களுக்கும் அதிக இடம் உள்ளது..

மேலும் சொல்லப்போனால், இந்த வியூகமே பன்னிரண்டாக விரிந்து, “கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்கிரம,வாமன,ஸ்ரீதர, ஹ்ருஷிகேச, பத்மநாப, தாமோதர” என்ற பெயர்களுடன் விளங்குகிறது..
தர்மபுரியில்,பரவாசுதேவர் பெருமாள் கோவில் உள்ளது.. அங்கு உள்ள “கோட்டைக் கோயில்கள்” என்று அழைக்கப்படும் 3 கோயில்களில் இதுவும் ஒன்று.. இந்த கோயில் அமைந்துள்ள பெருமாளின் திருவடிகளை, பிரம்மா பிரதிஷ்டை செய்ததாகவும் தேவர்கள், முனிவர்கள், அர்ஜுனன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தாகவும் வழிவழியாக சொல்லப்படுகிறது.. மேலும் 18 சித்தர்களில் தன்வந்திரி, திரிமூலி ஆகியோரால் அருள்கொடை பெற்ற தலமாகவும் உள்ளது என நம்பப்படுகிறது..
“நுளம்பர்” என்ற மரபினர் கி.பி எட்டாம் நூற்றாண்டுக்கும் கி.பி. 11 ஆம் நூற்றாண்டுக்கும், இடைப்பட்ட காலத்தில் தென்னிந்தியாவில் “நுளம்பபாடி” என்னும் பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள்..இந்தத் திருக்கோயிலில், இவர்களது காலத்திலோ அல்லது அதற்கு சற்று பிற்பட்ட காலத்திலோ, கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.. இக்கோவிலில், ஆண்டாள், அனுமான் ஆகியோருக்குச் கோயில்கள் பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளன..
கோயில் உண்ணாழியில், ஆதிசேஷன் 7 தலைகளுடன், பரவாசுதேவர் பெருமாளின் தலைக்குமேல் குடைபிடிக்க, அவரின் இடது தொடையின் மேல், கையில் சக்கரமும், கீழ் கையில் கதாயுதமும், இடது மேல் கையில் சங்கும், கீழ் கை ஆதிசேஷன்மேல் சாய்வாக ஊன்றியும், பாம்பணையின் மேல் இடது காலைத் தொங்கவிட்டபடி, அமர்ந்திருக்கிறார்..கருடன், அனுமார் ஆகியோர் திருவடிகளை வணங்கி நிற்பது போல காட்சி அளிக்கிறார்கள்..
இந்த வாசுதேவ கிருஷ்ணரின் லீலைகள், பாகவதத்திலும், மகாபாரதத்திலும் பலவாறு அனுபவிக்கப்பட்டுள்ளது..பெருமாளின் திவ்ய நாமங்களில், அடுத்தடுத்து வரக்கூடிய ஒவ்வொரு திருநாமத்திற்கும், பின்புலத்தில் பல்வேறு அறிய இயலா பொருள்கள் உள்ளன.. அவைகளைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்..
மீண்டும் சந்திப்போம்…