இந்த திருக்கோயிலுக்கு நான் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்றிருந்தேன்.. 1300 வருடங்களுக்கு முற்பட்ட கோயில்.. சுமார், கிபி 847 ஆம் ஆண்டு கர்ப்பகிரகம் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.. திருக்கோயில் வரலாற்றில் இரண்டு விதமாகக் கூறப்படுகிறது..1) விஜயநகர அரசர் இன் தம்பி அச்சுத பல்லவ மகாராஜன் தன் ஊனத்தை போக்ககனவில் தோன்றிய ராமர், “இக்கோயிலுக்கு வந்து புஷ்கரணியில் நீராடி ,தன்னை வணங்கினால் ஊனத்தில் இருந்து விடுபடலாம்” என்று கூறி மறைந்தார்.. அதன்படி, அவர் இக்கோயிலுக்கு வந்து கைங்கரியம் செய்தார்.. அவர் கட்டியதே இப்போது உள்ள அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் கருட மண்டபம் ஆகியவைகள் ஆகும் அதனால்” ஊனம் மாய்க்கும் சோலை” என்ற பெயர் வந்தது..2) ஒரு ஊனமுள்ள பக்தருக்கு ராமர் அருள் பாலித்ததால் இந்த ஊர் “ஊனமாஞ்சேரி” என்று பெயர் வந்தது..

இந்த ஊரின் மேற்குப் பகுதியில், திருக்கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில்தான்.. ஆனால், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது.. கோயிலின் முன்னால் திருக்குளம் அமைந்துள்ளது.. கிழக்கு நோக்கிய திருக்கோயில்.. ஆலய முகப்பில் பலிபீடம், அடுத்த தீபஸ்தம்பம் ஆகியன உள்ளன.. கம்பத்தின் உச்சி பகுதியில் விசேஷ நாட்களில் தீபம் ஏற்றுவார்கள்.. கம்பத்தின் அடிப்பகுதியில், சங்கு, சக்கரம் பெரிய திருவடியான கருடன், சிறிய திருவடியான அனுமன்ஆகியோரது வடிவங்களை காணமுடிகிறது.. பெரிய திருவடி, ராமபிரானை நோக்கி தனிச் சன்னதி கொண்டுள்ளார்..
மண்டபச் சுவர்களில், வராக உருவம், சூரியன்,சந்திரன் ஆகியவை புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.. மண்டபத் தூண்களில்,திருமாலின் பல்வேறு அவதாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன..
இந்தக் கோயிலில், ஸ்ரீ ராமர், சீதாதேவி, லட்சுமணன், பரதன், சத்ருக்னன் மற்றும் முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட ஆஞ்சநேயர் ஆகியோர் கர்ப்பகிரகத்தில் உள்ளனர்.. பட்டாபிஷேக திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.. ராமனைப் பார்த்துக்கொண்டு பின்னாடியே ஆஞ்சநேயர் நடந்ததால், ராமர் அவரிடம் “பக்தர்கள் உன் முகத்தை பார்க்க விரும்புகிறார்கள்” என்று கூற அவர் பின்புறத்திலும் முகத்தை கொண்டுள்ளார் என்று சொல்ல படுகிறது..

எல்லா கோயில்களிலும், கர்ப்பக்கிரகத்தின் உள்ளே, நுழையும் நுழைவாயில் மேலே கஜலட்சுமி சிற்பமே தான் பொறிக்கப்பட்டிருக்கும்.. ஆனால், இங்கு நுழைவாயிலில், ரங்கநாதர் பஞ்ச மகரிஷிகளுடன் உள்ள அரிதான சிற்பம் உள்ளது..

கருவறையில்,” அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று கம்பர் பெருமான் போற்றும், ராமபிரான் கோதண்டம் என்னும் வில்லை ஏந்தி, கம்பீரமாக காட்சியளிக்கிறார்..கருவறையின் மீது ஏகதள விமானம் உள்ளது.. இதில், யோக நரசிம்மர்,வராக மூர்த்தி, காளிங்க நர்தனர் கண்ணன்,பரமபதநாதன் ஆகியோரின் அழகிய சுதை வடிவங்கள் அமைந்துள்ளன.. மகாமண்டபத்தில், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், உடையவர்,தேசிகன், குலசேகர ஆழ்வார் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர்..
கோயிலின் சுவற்றில், விஜயநகரப் பேரரசின் முத்திரையான வராகன், கட்டாரி மற்றும் சந்திரன், சூரியன் ஆகிய முத்திரைகள் செதுக்கப்பட்டுள்ளன..ஊனமுற்றவர்கள் மற்றும் குழந்தை இல்லாதவர்கள், இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து, பரிகார நிவர்த்தி செய்து கொள்ளலாம்..
இக்கோயிலில் நிர்வாகிகளால் ஒரு செப்பேடு பாதுகாக்கப்பட்டு வருகிறது.. இந்தச் செப்பேடு, விஜயநகர மன்னரின் சகோதரர் அச்சுதராயர் (1530-1542) காலத்தை சேர்ந்ததாகும்.. செப்பேட்டில் இவ்வூர் “உகினை” என்றும் “அச்சுதேந்திரமகாராஜபுரம்” எனவும் வழங்கப்படுகிறது.. இந்தச் செப்பேட்டில் இணைக்கும் வளையத்தில், வராகம், கட்டாரி, சூரியன், சந்திரன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன..
இந்த ஊர் “திம்மசமுத்திரம்” எனவும் அழைக்கப்படுகிறது.. விஜயநகர மன்னர்கள் காலத்தில், பல ஊர்கள் “சமுத்திரம்” என்ற பெயரோடு வழங்கப்பட்டு வந்தன.. திருப்பதி திருக்கோயிலில் இருந்து, இக்கோயிலுக்கு கொடை, பெருமாளுக்கு வஸ்திரங்கள் ஆகியவை வந்து கொண்டிருந்தன எனவும், பின்னர் அவை நின்று போய்விட்டதாகவும் ஊரார் கூறுகின்றனர்..

இந்த கோயிலில் ஒரு வேளை பூஜை மட்டும் நடைபெறுகிறது..காலை 8 முதல் 9 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.. ஏனைய நேரத்தில் தகவல் தெரிவித்து சேவிக்கலாம்.. தகவல் தொடர்புக்கு சுரேஷ் பட்டாச்சாரியார் தொலைபேசி எண் 9445299105 மற்றும் 044- 2747 90 92..
வண்டலூர் வனவிலங்கு பூங்காவுக்கு அருகில், கேளம்பாக்கம் போகும் சாலையில், நாலரை கிலோ மீட்டர் தொலைவில், வலது புறத்தில் சென்றால் இந்த கோயிலை அடையலாம்..
வாசக அன்பர்கள், அவசியம் இந்த திருக்கோயிலில் தரிசனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
“நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவார்க்கே
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்!!!”