இந்து தொன்மவியலின் மூலங்கள் என்று சொல்லப்படுவன, வேதங்கள், உபநிஷத்துகள் ,பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் ஆகும்..
இவற்றில், வேததொன்மவியலின் நான்கு வேதங்களாக, ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் ஆகியவற்றைப் பற்றி சில குறிப்புகள் பார்த்து, அதன் தொடர்ச்சியாக உபநிஷத்துக்களில் சில முக்கியமானவற்றை பற்றி பார்த்தோம்.. தற்போது நாம் பார்க்க இருப்பது பிரம்ம சூத்திரம் பற்றி…
பிரம்ம சூத்திரம்
“சூத்திரம்” என்றாலே சுருங்கக் கூறுவது என்று பொருள்.. மிகப் பெரிய உண்மைகளை, மிகச் சிறிய சிறிய சில சொற்களால் சொல்வது பிரம்ம சூத்திரம்.. உபநிஷத்துக்களில் எவை எவை சொல்லப்பட்டதோ, கீதையில் எவையெவை பேசப்பட்டதோ, அவையெல்லாம் இந்த பிரம்ம சூத்திரத்தில் அடங்கும்..இந்த பிரபஞ்சத்தில் உள்ளதை, மிகச்சிறிய வடிவில் அணுவாக்கி தந்திருக்கிறார் வியாசமுனிவர்.. உபநிஷத்துக்களில் சொல்லப்படும், அவற்றை ஒழுங்காக்கி, அமைத்து, சுருக்கி விளங்க வைக்கும் வகையில், முயற்சி செய்யப்பட்டு இயற்றப்பட்டது, இந்த நூல்..இந்த நூலின் ஆசிரியர் வியாச முனிவர் ஆவார்.. கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் “பாதராயணர்” என்பவரால் தொகுக்கப்பட்டது.. பகவத் கீதையில், பிரம்ம சூத்திரம் தொடர்பான குறிப்புகள் வருவதால்,இது கீதைக்கும் முற்பட்டது என தெளிவாகிறது.. இந்து சமயத்தின் மூன்று பெரும் முந்நூல் என்று கருதப்படுகின்ற உபநிஷத்,பகவத் கீதை மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகியவைகள் ஆகும்.. இந்த நூல்களில் சுருதி பிரஸ்தானம், ஸ்ம்ருதி பிரஸ்தானம் மற்றும் தர்க்க பிரஸ்தானம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது..
ஸ்ருதி பிரசாரம்/உபதேச பிரஸ்தானம்
வேதங்களின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ள, ஞானகாண்டம், உத்தர மீமாம்சை என்பர்..இந்த உத்தர மீமாம்சை அல்லது உபநிஷத்துக்கள் ஸ்ருதியை அடிப்படையாகக் கொண்டது.. உபநிஷத்துக்கள், பிரம்மத்தை உபதேசித்ததால் “உபதேசம்” பிரஸ்தானம் என்று அழைப்பர்.. (this is called starting point of revelation that is injuctive texts.). வேதங்கள், மனிதரால் எழுதப்பட்டதல்ல.. ரிஷிகள், தியான நிலைகளில் ஆழ்ந்திருந்த போது, அவர்களுக்குவெளிப்படுத்தப்பட்டஆன்மீக உண்மைகளின் தொகுப்பே வேதங்கள் ஆகும்.. எனவே, இதிலுள்ள செய்யுள்களை “மந்திரங்கள்” என்று உயர்வாக அழைக்கப்படும்..
ஸ்ம்ருதி பிரஸ்தானம்/சாதனை பிரஸ்தானம்
ஸ்ம்ருதியை அடிப்படையாகக் கொண்டது பகவத்கீதை.. இதில் உள்ள செய்யுட்களை “சுலோகங்கள்” எனப்படும்.. ஒரு ஆன்மீக சாதகன், இறை ஞானம் பெற தேவையான சாதனங்களை கூறுவதாலும், இதனை சாதனை பிரஸ்தானம்(practical text) என்றும் அழைப்பர்.. ஸ்ம்ருதி பிரஸ்தானம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துக் காட்டும் நூல்களாகும்.. இவை காலத்திற்கும், இடத்திற்கும் இடம் மாறுபடுகிறது.. வாழ்க்கை நீதிகளைப் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவை.. புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சாஸ்திரங்கள் போன்ற நூல்கள் ஸ்ம்ருதி பிரஸ்தான நூல்களாகும்.. ஐந்தாம் வேதம் என்று அழைக்கப்படும் ஸ்ம்ருதி நூலான மகாபாரதம் இந்து சமயத்தின் இரண்டாவது அடிப்படை நூலாக திகழ்கிறது..
தர்க்க பிரஸ்தானம் அல்லது யுக்தி பிரஸ்தானம்
பிரம்ம சூத்திரம், தர்கப் பிரஸ்தானம் அல்லது நியாயப் பிரஸ்தானத்தின் அடிப்படையில் அமைந்த நூல்..இதனை யுக்தி பிரஸ்தானம்(logical text) என்றும் அழைப்பர்.. இது உபநிஷத்துக்களிடையே வேறுபாடுகள் போல் இருப்பதாக தோன்றும் கருத்துக்களை, யுக்தி பூர்வமாக சமன் படுத்தியும், இறைவன், உலகம், மனிதன் போன்ற தத்துவங்களில் உபநிஷத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ள சாங்கியம், வைசேடிகம்,நியாயா, யோகா, பூர்வ மீமாம்சை தத்துவங்களை யுக்திபூர்வமான தர்க்கத்துடன் நீக்கி வேதாந்த கருத்துகளை நிலைநாட்டுவதே பிரம்ம சூத்திரத்தின் நோக்கம்.. பிரம்ம சூத்திரத்தில் உள்ள செய்யுட்களை சுலோகங்கள் என்பர்..
இந்து தத்துவங்களின்படி பரம்பொருளை விளக்குவதற்கான சூத்திரங்கள் எனப்படும் நூற்பாக்களால் ஆனதால் இந்த நூலுக்கு பிரம்மசூத்திரம் என்ற பெயர் வந்தது.. வேதத்தின் இறுதிப் பகுதியாக, அதாவது வேதத்தின் அங்கமாகக் கருதப்படும் உபநிஷத்துக்களின் சாரமாக அமைந்திருப்பதன் காரணமாக இது “வேதாந்த சூத்திரம்” எனவும் பிரம்ம மீமாம்சை “வேதாந்த தரிசனம்” என்கிற பெயர்களாலும் இது அறியப்படுகிறது.. மீமாம்சம் என்றால் ஆழமாக சிந்திப்பது, ஆராய்வது,விவாதிப்பது என்று பொருள்.. வேதாந்தம் என்றால் வேதத்தின் முடிவு பகுதியான “உத்தர மீமாம்சை” என்று அழைக்கப்படும்.. உபநிஷத்துக்கள் வேதாந்த தரிசனம் என்பதனால் தரிசனம் என்ற சொல்லுக்கு” பார்த்து அறிதல்” என்று பொருள்.. பார்த்தததை மட்டும் அறிவதல்ல பார்த்ததின் ஒரு பொருளையும் அறிவதாகும்..
555 சூத்திரங்களைக் கொண்ட பிரம்ம சூத்திரம், நான்கு அத்தியாயங்கள் ஆக பிரிக்கப் பட்டுள்ளது.. ஒவ்வொரு அத்தியாயத்திலும் 4 பாதங்கள்.. ஒவ்வொரு பாதத்திலும் அதி கரணங்கள்(தலைப்புகள்) என்ற சூத்திரங்கள் வகுக்கப்பட்டுள்ளன.. உதாரணமாக, 1.1.1 என்றால் முதல் அத்தியாயம், முதல் பாதம், முதல் சூத்திரம் ஆகும்.. முதலாவது” சமன்வய அத்தியாயம்” இது சமன்படுத்துகிறது.. இரண்டாவதாக “அவிரோதா அத்தியாயம்” முரண்பாடுகளை களைகிறது.. மூன்றாவதான “சாதனா அத்தியாயம்” வீடு பேறுக்கான வழிகளை பயில்வது.. நான்காவது” பலன் அத்தியாயம்” வீடுபேற்றை விவரிப்பது..
“வேதங்கள் என்கிற மரத்தில், பூத்திருக்கிற உபநிஷத்தில், பூக்களைத் தொடுத்து தருகிற ஞான மாலையே பிரம்ம சூத்திரம்” என்கிறார் ஆதிசங்கரர்.. நாம்,இந்த உலகம், இதற்கு காரணமான மூலப்பொருளான பரம்பொருள் ஆகிய மூன்று தத்துவங்களை விவாதிக்கிறது.. தொடர்பை அறிய பிரம்மத்தை அறிய ஆத்ம ஞானம், பிரம்ம சிந்தனை, பிரம்ம தியானம் தேவை என்கிறார் ஆதிசங்கரர்..
இது பிரபஞ்சத்தின் தோற்றம், பிரம்மம், மனிதப்பிறவி, மரணம், வீடுபேறு ஆகிய வற்றை விவரிக்கிறது.. இந்த நூல் தருக்க நூல் வகையை சார்ந்தது..இது ஒரு ஆராய்ச்சி பூர்வமான சிந்தனையைத் தூண்டுவது.. வேத உபநிடதங்களை ஆராய்கிறது.. விஷயங்களை விவாதிக்கிறது.. முரண்பாடானவைகளை மறுத்து, தகுதியான அவற்றை உறுதிப்படுத்துகிறது..
பணம், புகழ், பதவி, உலகியல், இன்பம் ஆகியவை தாண்டி ஆராய்பவர்களுக்கு, பிரம்ம சூத்திரம் ஒரு வழிகாட்டி.. பிரம்ம சூத்திரம் மதச் சார்பற்றது.. எந்தக் கடவுளைப் பற்றியும் குறிப்பிட்டு பேச வில்லை என்பதுதான் இதனுடைய சிறப்பம்சம்.. மிகப் பெரிய உண்மைகள் சூத்திரங்களாக வடிக்கப்பட்டுள்ளன.. சூத்திரம் என்றாலே விதி, ரகசியம், தீர்ப்பு, உபாயம் என்ற பல பொருள்களும் பிரம்ம சூத்திரத்திற்கு பொருந்தும்..
இந்த பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரைகளாக ஸ்ரீ ஆதிசங்கரர், பகவத் ராமானுஜர், மத்வாச்சாரியார், ஸ்ரீகண்டர் ஆகியோர் தாங்கள் உணர்ந்து கொண்டபடி, வெவ்வேறு விதமான விளக்கங்களை அளித்துள்ளனர்.. அதன் மூலம், இந்த வேதாந்தம்,அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற மூன்று பிரபல பிரிவுகளாக அடைந்தன..

இனி, அடுத்த பதிவில், இந்த மூன்று பிரிவுகளை பற்றியும், இந்து தொன்மவியலில் புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மாந்தர்களைப் பற்றிய சில குறிப்புகள் தருகிறேன்.. இந்த தொடர் அடுத்து இரண்டு அல்லது மூன்று பகுதிகளுடன் நிறைவடையும்..
மீண்டும் சந்திப்போம்…