எழுத்தாளர் திரு விக்ரமன் அவர்களின் நந்திபுரத்து நாயகி என்ற புதினத்தை படித்துக்கொண்டிருந்தேன்.. அதில், ஓரிடத்தில், தஞ்சையில் “வஜ்ர தாராகோயில்”என்று குறிப்பிடப்பட்டிருந்தது..அந்தக் கோயில்,எந்த அம்மன் கோயில் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு, அது குறித்து தேடினேன்.. எனக்கு கிடைத்த தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த பதிவு..
இந்து தொன்மவியலின் படி, இந்த தேவி, பார்வதி,மகா வித்யா சிவசக்தி,என்ற சக்திகளின் அம்சமாக கருதப்படுகிறது.. இந்த தேவி, சுடுகாட்டில் இருப்பாள் என்று சொல்லப்படுகிறது.. இவளது கையில் கட்கமும், சுழலும் கத்தியும், வைத்திருப்பதாகவும் ஆட்சி செய்யும் இடம், தாரகேஸ்வரர் என்னும் சிவபெருமான் ஆலயம் என்றும் கருதப்படுகிறது..
ஒருமுறை, தேவலோகத்தில் தேவர்களின் பொருட்களையெல்லாம் கொள்ளையடித்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய “ஹயகிரிவா” என்கின்ற ஒரு அரக்கனை சம்ஹாரம் செய்ய, இந்த தேவி தோன்றினாள் என்று ஒரு புராணம் கூறுகின்றது.. ஹயக்ரீவரினின் தொல்லைகள் தாங்காமல் தேவர்கள் பிரம்மனை நோக்கி வேண்டிக் கொண்டதாகவும், அவர் காளியிடம் முறையிடுமாறு அறிவுறுத்த, தேவர்கள் காளி தேவதை முன் சென்று வேண்டிக்கொள்ள காளி தேவியும், தனது மூன்றாவது கண்ணிலிருந்து “தாரா” என்கின்ற தேவியை தோற்றுவித்து, ஹயக்ரீவரை சம்ஹாரம் செய்தாள் என்று சொல்லப்படுகிறது..

கல்கி புராணத்தில்” தாரா தேவியை” மாதங்கி என்ற தேவியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.. இதன்படி சும்பன் மற்றும் நிசும்பன் என்ற அரக்கர்கள், தேவர்களை தொல்லை கொடுத்ததாகவும், அவர்கள் மேருமலையில் தஞ்சம் புகுந்ததாகவும் சொல்லப்படுகிறது.. அப்போது சிவனின் பத்தினியாகிய சக்தி “மாதங்கி “என்கின்ற கரிய உருவமாக தோன்றி, அவர்களுக்கு அருளினார்.. தேவர்கள் தாம் வந்த நோக்கத்தை எடுத்துக் கூற, மாதங்கி என்ற ஒரு சக்தியிடம் இருந்து, ஒரு வெளுத்தசக்தி தோன்றி” மகா சரஸ்வதி” என்ற பெயருடன் வெளியே வந்தார்.. அந்த சக்தி மாதங்கியின் உடம்பில் இருந்து எட்டு கைகளுடன் வெளியே தோன்றியது.. அவளுக்கு”கௌஷிகி” என்று பெயரிடப்பட்டது.. அதேபோன்று மாதங்கி, கருப்பு நிறத்தில் இருந்ததால் அவளுக்கு “காளி என்றும் உக்ரதாரா” என்றும் அழைக்கப்பட்டாள்..
இன்னொரு கதையில், அதிகம் அறியப்படாத ஒரு கூற்று உள்ளது.. அதாவது மது மற்றும் கைடபர் என்ற அரக்கர்களுடைய உடலில் இருந்து இந்த பூமி உருவானதாகவும், அதில் நீரும் நிலமும் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.. இதனால் படைப்பு முழுமை அடையவில்லை. நீர் மற்றும் நிலம் ஆகியவற்றை தவிர சூரிய ஒளி சக்தி கிடைக்க தேவைப்பட்டது.. அதன் காரணமாக மகாசக்தி,” தாரா” என்கின்ற உருவத்தினை எடுத்ததாகவும்,மகாதேவர் “தக்ஷினேஷ்வர்” என்கின்ற உருவத்தை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.. இவர்கள் இருவரும்தான் சூரியனை படைத்ததாக கூறப்படுகிறது.. சூரிய ஒளி இல்லாததால் பூமி பனிப் பிரதேசமாக இருந்து, வாழ்க்கையை வாழ இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.. அதன் காரணமாக பூமிக்கு சக்தி தர “தாராதேவி” அவதரித்ததாக சொல்லப்படுகிறது.. தாரா தேவிக்கு ஒளி சக்தி மற்றும் வெப்பம் தரக்கூடிய சக்தி இருந்தது.. இந்த சக்தி “அக்ஷோப்யா” என்ற சக்தியுடன் இணைந்து, சூரியன் உதயமாக காரணம் ஆயிற்று. இவை இரண்டும் கடலுடன் இணைந்து பல சக்தி வடிவங்களை நமக்கு அளித்தது.. தாராதேவி நமது மூச்சின் மூலம் வாயுவை உற்பத்தி செய்து நமக்கெல்லாம் காற்றினை அளித்தார்..பஞ்ச பூதங்களான நிலம், நீர், இவைகளுடன் வாயு, அக்னி, ஆகாயம் ஆகியவற்றை தாராதேவி, மகாதேவன் ஆகியோர் படைத்தனர் என்று ஒரு கதை உண்டு..
அடுத்து தாராதேவி “சோடசி” என்கின்ற சக்தி வடிவத்தை எடுத்து, பசுமை தாவரங்கள் யாவற்றையும் உற்பத்தி செய்தாள்.. தேவி ஷோடசி ஒரு மூங்கிலை எடுத்து, பூமிக்குள் செலுத்தி அதற்கு தன்னுடைய கலையத்திலிருந்து ஒரு துளி நீர் செலுத்தி,அதன் மூலம் காடுகள், மரங்கள், தாவரங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்தார் என்று சொல்லப்படுகிறது..
இன்னொரு தாராதேவி மிதக்கும் பொருள்/ஆண்டும் சாதனம் என்று பொருள் என்று கூறப்படுகிறது.. இவள், கடல்கடந்த பயணங்களில் பாதுகாப்பாக இருப்பவள்.. அமாவாசையில், சந்திரன் இல்லாததால் வானில் நட்சத்திரங்கள் மக்களுக்கு ஒளி தருவது போல, பாவம் என்னும் கடலில் மூழ்காமல் நடக்க உதவும் இடமாக இருந்து வாழ்வில் பயணிப்பதற்கு உதவுபவள்.. வாழ்வின் துன்பங்களை எதிர்கொண்டு சம்சார சாகரத்தை கடக்க உதவுபவர்..
கபாலம், ஞானவாள், நீலத்தாமரை,கத்தரிக்கோல் ஆகியவை தன் நான்கு கரங்களில் ஏந்தி, அவள் இடையில் புலித்தோலை ஆடையாக அணிந்தவள்.. தலையில் “அக்ஷேப்யர்” என்ற நாகத்தினை அணிந்தவர்.. விஷ்ணுவின் ராம அவதாரத்துக்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவர் தாரா.. எனவேதான் ராமருடைய மந்திரம் “தாரக மந்திரம்” எனப்பட்டது..

இவள், வானம், ஆகாயம் திசையில் தோன்றியவள்.. அக்காலத்தில் “மகா சீனம்” என்று அழைக்கப்பட்ட தீபெத்தில் தாரா தேவியின் மகத்துவத்தை முறையாக அப்யாசித்து காம பீடத்தில் (தற்கால கவுகாத்தியில்) “உக்கிர தாரா” என்ற பேதத்தை நிறுவியுள்ளார்.. ஆபத்துக்களில் இருந்து, பக்தர்களை காப்பதால் “உக்ரதாரா”.. வாக்கு வல்லமை அளிப்பதால் “நீல சரஸ்வதி” ஆராதிப்பவர்கள் அருளையும் ஆனந்தத்தையும் அளித்து மாற்றம் அடையச் செய்வதால் “ஏகஜடா”.. தாராவின் அருள் பெற்றவர்கள் கற்பனை வளங்கள் பெருகி, கவிதை இயற்றும் திறன் பெற்று, எல்லா சாஸ்திரங்களிலும் அறிய ஆற்றல் பெற்று, இறுதியில் சகல சித்திகளை பெற்று ஜீவன் முக்தி அடைவான். தாரா மந்திரம் முதலில் புத்தியை தெளிவாக்கி, பின் உச்ச நிலைக்கு கொண்டு செல்லும்..
இந்தியாவில் “தாராதேவி” ஆலயங்கள் இருக்கும் இடங்கள் இமாச்சலப் பிரதேசம், “வஜ்ரேஸ்வரி ஆலயம்” 2) “காமாக்யா கோவில்” இருக்கும் நீலாச்சல மலையில் உக்கிர தாரா சன்னதி..
மேலே கூறப்பட்ட வகைகள் அனைத்தும் இந்து சமய வழிபாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்த தாராதேவி, பௌத்த சமயத்திலும் கடவுளாக பார்க்கப்படுகிறார்.. இவர் போதிசத்துவரின் பெண் வடிவமாக “மகாயான பௌத்தம்” கோட்பாட்டில் வழிபடப்படுகிறார்.. “வஜ்ராயன” பௌத்த கோட்பாட்டில் இவர் புத்தரின் பெண் வடிவமாக வழிபடப்படுகிறார்.. இவர் ஆசைகளின் துறவுக்கு தாயாராக கருதப்படுகிறார்..
தீபெத்தில் “ஆரிய தாரா” “ஷ்யாமதாரா” “ஜெட்சன்”டோல்மா” என்று அழைக்கப்படுகிறார்.. ஜப்பானில் “ஷிங்கோன்” பௌத்தத்தில் தாரா “பொசாட்ஸூ “என்றும் சீனாவில் “டவுலௌ புஸா” என்றும் அழைக்கப்படுகிறார்..

காரா அல்லது ஆர்ய தாரா திபெத்திய பௌத்தத்தில் வழங்கப்படும் ஒரு பெண் போதிசத்துவர் ஆவார்.. இவர், திபெத்திய தந்திர பௌத்தத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்..வஜ்ராயன பௌத்தத்தில் இந்த தேவி, தியானத்தின் தேவியாக கருதப்படுகிறார்..ஒரு தந்திர தேவதையாக ‘தாரா’ வஜ்ரயான பௌத்தத்தின் திபெத்திய பிரிவினரால் வணங்கப்படுகிறார்.. இவர் நமது நற்செயல்களின் வெற்றியினால் கிடைக்கும் நன்மையை அதிபதியாக கருதப்படுகிறார்.. கருணை மற்றும் சூனிய தன்மையில் சில அந்தரங்க மற்றும் ரகசிய குணங்களை புரிந்துகொள்ள, திபெத்திய பௌத்தர்கள் தாராவை வணங்குகின்றனர்..
உண்மையில் தாராதேவி என்பது பொது இயல்புகளைக் உடைய பல போதி சத்துவர்கள், ஒரு பொதுப்பெயர் என்பது பக்தர்களின் கருத்து.. பௌத்தத்தில் போதிசத்துவர்கள், பல்வேறு நற்குணங்களின் உருவகங்களாகவே கருதப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில், ஒரே குணத்தில் பல்வேறு காரணிகள் வெளிப்படுவதாக புரிந்து கொள்ளலாம்..

தாரா தேவியின் புகழ் பெற்ற வடிவங்கள்
1) பச்சை தாரா உயர்ந்த செயல்களின் அதிபதி..
2) வெள்ளை தாரா கருணை நீண்ட ஆயுள் மற்றும் அமைதியுடன் தொடர்புள்ளவர்..
3) கருப்பு தாரா ஆற்றலுடன் தொடர்புடையவர்..
4) மஞ்சள் தாரா செல்வச் செழிப்புடன் தொடர்புடையவர்..
5) நீல தாரா கோபத்துடன் தொடர்புடையவர்..
6) சித்தாமனி தாரா, யோக சாஸ்திரத்தில் வணங்கப்படும் ஒரு தாரா..
7) கதிரவனி தாரா, தேக்கு வனத்தின் தாரா..
இத்துடன் சேர்த்து 22 தாராக்கள் திபெத்திய பௌத்தர்களால் வணங்கப்படுகின்றனர்..
தாராவின் தோற்றம், இந்து மதத்திலேயே நிகழ்ந்தது..லட்சுமி, சரஸ்வதி, பார்வதி போல தாரா தேவியும் இன்றளவும் இந்து மதத்திலும் வணங்கப்படுகிறார்.. ஆறாம் நூற்றாண்டில் “தாரா” பௌத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கலாம் என கருத்து நிலவுகிறது.. பிறகு தாரா தந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்று பிரசித்தி உடன் விளங்க ஆரம்பித்தாள்.. தாராவின் வழிபாடு திபெத் மற்றும் மங்கோலியாவில் மிகவும் பரவலாக உள்ளது..
தமிழ்நாட்டில் 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில், பௌத்த மதம் மிகவும் செல்வாக்குடன் இருந்தது.. அதன் பின்னர், பௌத்தம் செல்வாக்கை இழந்து மறைந்த நிலையில், பல பௌத்த கோயில்கள், இந்துக் கோயில்களாக மாற்றப் பெற்றன.. அவ்வாறு தாராதேவி கோயில் கள் இன்று அம்மன் கோயில்களாக உருமாற்றம் பெற்றது நம்பப்படுகிறது..
இந்து சமயத்தை பொருத்தமட்டில் 10 மகா வித்யா தேவிகளின் யார் என்பது விண்மீனை குறிக்கும் தெய்வம் ஆவார்..தாராவின் உருவம் காளியை ஒத்திருக்கும்.. இருவருமே சிவன் மீது நின்ற நிலையிலேயே காட்சி தருவார்.. எனினும், தாரா காளி போல கருப்பாக இல்லாமல் நீல நிறமாக காட்சி அளிப்பாள்..இருவரும் ஒன்று போல காட்சியளித்தாலும், தாரா தாய்மை நிறைந்தவள் என்றும் கூறுகின்றனர்.. வங்கத்தில் உள்ள “தாராசுரம்” ஆலயம், தாரா வழிபடப்படும் புகழ் வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும்.. பௌத்தத் தாராவோ, இந்தியா தாண்டி தென்கிழக்கு ஆசியா, திபெத் என பல இடங்களிலும் போற்றப்படுகின்றாள்..
எழுத்தாளர் திரு விக்ரமன் அவர்களது “நந்திபுரத்து நாயகி” புதினத்தில் குறிப்பிடுவது பௌத்தத் தாராவாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு.. ஏனெனில் ராஜராஜ சோழன் கி.பி 9-10 நூற்றாண்டுகளில் வாழ்ந்தார்.. அவரது ஆட்சியில் பௌத்த விகாரங்கள் இருந்தது, அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” புதினத்தில் பரவலாக சொல்லப்பட்டுள்ளது..எனவே, இந்த கோயில் பௌத்த சமய சார்ந்த “வஜ்ரதாரா தேவி” கோயிலாக இருக்கும் என்பதனை ஏற்றுக் கொள்ளலாம்..