துன்புறுத்தலின் விளைவு

“குழந்தைகள் எல்லாரும் வந்தாச்சா? கதை சொல்ல ஆரம்பிக்கலாமா?”
“வந்தாச்சு தாத்தா!”
“எல்லாரும் கையை நல்லா சுத்தமா சனிடைசர்ல்ல தொடச்சிகிட்டீங்க இல்லையா?’
“ஆமாம் தாத்தா!”
“சரி! நாம இப்ப கதைக்கு வருவோம்..ஒரு ஊர்ல ஊருக்கு வெளியில ஒரு ஆசிரமம், அதாவது குடிசை.. அதுல ஒரு முனிவர் தவம் பண்ணிட்டு இருந்தார்..அவர் பேரு “மாண்டவ்யர்”.. அப்போ, திடீர்னு தப தபன்னு, மூணு நாலு பேரு ஓடி வந்தாங்க.. அவங்க யாருன்னா? ராஜாவோட அரண்மனையிலிருந்து நகை எல்லாம் திருடிக்கொண்டு வந்த திருடனுங்க..அவங்க என்ன செஞ்சாங்க தெரியுமா? கொண்டுவந்த நகையெல்லாம் முனிவருக்கு முன்னாடி போட்டுட்டு, போய், குடிசைக்குள்ள உள்ள ஓழிஞ்சிகிட்டாங்க..”
அவங்கள துரத்திக்கொண்டு வந்த ராஜாவோட சிப்பாய்ங்க, குடிசைக்குள்ள முனிவருக்கு முன்னாடி, ராஜாவின் நகை எல்லாம் இருந்தது.. அப்படீங்கறத பார்த்துட்டு, “இதெல்லாம் எப்படி இங்க வந்தது?” அப்படின்னு முனிவர் கிட்ட கேட்டாங்க..
“முனிவர் தவம் பண்ணிட்டு இருந்ததுனால, மௌன விரதம்.. அதாவது,யாரோடும் பேசமாட்டார்.. அது அந்த சிப்பாய்ங்களுக்கு தெரியாது.. அவங்க இரண்டு மூன்று தரம் கேட்டுட்டு, அங்க ஒளிஞ்சிகிட்டிருந்த திருடன்கள ‘அரெஸ்ட்’ பண்ணி,அதோட அந்த முனிவரையும் புடிச்சு கிட்டு போயிட்டாங்க.. நேரா, ராஜா முன்னாடி கொண்டு போய் எல்லாரையும் நிறுத்தினாங்க..”
“ராஜா எல்லாருக்கும் மரண தண்டனை கொடுத்தார்.. அது எப்படின்னா? தப்பு செஞ்சவங்கள, ஊருக்கு நடுவுல ஒரு உயரமான மரம் இருக்கும், அந்த மரத்தின் நுனி கூரா பென்சில் சீவர மாதிரி சீவி வெச்சிருப்பாங்க.. அதுமேல அந்த தண்டனை பெத்தவங்கள, உக்கார வைப்பாங்க.. என்ன ஆகும்?அந்த கூரான மரம் அவங்களுடைய பின்புறத்தின் வழியா உடம்புகுள்ள குத்தி, அவங்க செத்துப் போயிடுவாங்க.”

“நம்ம முனிவருக்கும் அதே தண்டனைதான்.. ஆனால், நம்ம முனிவர் சாகல.. அத பாத்துட்டு ராஜா, இவர் எந்த தப்பும் செய்யல அப்படின்னு புரிஞ்சுகிட்டு, அவரை இறக்கினார்கள்.. ஆனா மரத்தோட ஒரு சின்ன பகுதி, அவர் உடம்பிலேயே தங்கிடுச்சு.. அதனால அவருக்கு “ஆணி மாண்டவியர் ரிஷி” அப்படின்னு பெயர் வந்தது..
பிற்காலத்தில், ஒரு நாள் எமனப் பாத்து,” நான் எந்த தப்பும் பண்ணலையே? எனக்கு ஏன் இந்த தண்டனை?’ அப்படின்னு கேட்டார்..
“அதுக்கு எமன் சொன்னான் “முனிவரே! போன பிறவியில் நீங்க சின்ன பையனா இருந்தபோது, தோட்டத்தில் எல்லாம் இருந்த தும்பி பூச்சிய…”
“தும்பி பூச்சிய பார்த்திருக்கீங்களா? டிராகன் ஃப்ளை.. அந்தப் பூச்சியை பிடிச்சு, அதுக்கு பின்னாடி குச்சிய செருகி நீங்க அதை பறக்கவிட்டு விளையாடினீங்க.. அதுக்குதான் இந்த தண்டனை’அப்படின்னு சொன்னார்..
“குழந்தைகளே! இந்த கதை மூலமா உங்களுக்கு என்ன தெரிந்தது? நீங்க எல்லாரும் நல்லா தெரிஞ்சுக்கணும்.. எந்த ஒரு சின்ன உயிரினத்துக்கும் துன்பம் கொடுக்க கூடாது”
“நீங்க பார்த்திருப்பீங்க, ஜெயின் சாமியாருங்கள.. அவங்க இப்ப, நாம முக கவசம் போட்டுக்குற மாதிரி, அவங்க எப்பவுமே போட்டு இருப்பாங்க.. அதோட கையில மயிலிறகுல செஞ்ச ஒரு தொடப்பம் மாதிரி வெச்சிக்கிட்டு, அவங்க நடந்து போற வழியில் எல்லாம் பூச்சி இல்லாம தள்ளிட்டு போவாங்க”..
“நீங்களும், இனிமே எந்த ஒரு பூச்சிக்கோ, பறவைக்கோ, மிருகங்களுக்கோ தொந்தரவு கொடுக்காமல் எடுக்கணும்..”
“என்ன புரிஞ்சுதா?”
“புரிஞ்சது தாத்தா! நாங்கள் இனிமே நீங்க சொன்ன மாதிரி நடத்துகிறோம்”
“ஓகே! எல்லாரும் போய்ட்டு வாங்க.. அடுத்த வாரம் மீட் பண்ணலாம்.. குட் நைட்”
“குட்நைட் தாத்தா”