சென்ற பதிவில் ஹரியின் மற்ற திருநாமங்களில் ஒன்றான “கோவிந்தன்” எனும் திருநாமத்தின் மகிமைகளை எடுத்து உரைத்திருந்தேன்.. இந்தப் பதிவில் அவரது மற்றொரு திருநாமமான ,”கேசவன்” என்ற திவ்ய நாமத்தின் பெருமைகளை பதிவு செய்கிறேன்..

“கேசவன் “என்ற பெயர் விஷ்ணு சகஸ்ரநாமத்தில், இரண்டு முறை வரும் பெயர்.. இருபத்தி மூன்றாவது பெயராகவும், 648 பெயராகவும் வருகின்றது.. விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் முதற் பெயர் இதுவாகும்.. இந்த பெயருக்கு பல பொருள்கள் உள்ளன..
மகாபாரத காப்பியத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரின் வேறு பெயர்களைக் கூறுமாறு சஞ்சயனிடத்தில் கேட்கும்போது, கிருஷ்ணருக்கு “கேசவன்” என்ற பெயரும் உள்ளதாக சஞ்சயன் தெரிவித்தார்..
“குழல்அழகர் அல்லது அழகிய கூந்தலை உடையவர்” என்பது ஒரு பொருள்..ஸ்ரீ ஆதி சங்கரருடைய உரையில், இதை “கறுத்து, சுருண்டு, சேர்ந்து, இணங்கி இருக்கும் அழகிய குழல்களை உடையவர் என்கிறார்..நரசிங்க வடிவத்தில் விஷ்ணுவின் பிடரி முடி, மிக அழகானது.. வால்மீகி ராமாயணத்தில், ராமனின் கேசங்களின் அழகை மாரீசனும், விசுவாமித்திரரும் புகழ்கின்றனர்.. ஸ்ரீமத் பாகவதத்தில், கோபிகைகளும், கண்ணனின் கேசங்களை வருணிக்கின்றனர்..
கண்ணனுடைய பால பருவத்தில், அவனுடைய மாமன்’ கம்சன்’ கண்ணனை கொல்வதற்காக பல அரக்கர்களை அனுப்பி வைக்கிறான்.. அப்படி அனுப்பி வைத்த பல அரக்கர்களில்”கேசி” என்பவன் ஒருவன்..அவன், குதிரை வடிவம் கொண்டு கண்ணனைத் தாக்கினான்.. அந்த கேசி என்ற அரக்கனைக் கொன்றதால் கண்ணன், “கேசவன்” என்ற பெயர் பெற்றான் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது..

இதனை ஆமோதித்து விட்டு நாம் பார்க்கும் போது, சகஸ்ரநாமம்.? அதிலேயே “கேசிஹா”, அதாவது கேசியை கொன்றவர் என்ற பெயரும் வருகிறது..
க :- பிரம்மா அ:-விஷ்ணு ஈச:-பரமசிவன் ஆகிய இந்த மூன்று வடிவங்களில் சமபங்கு
கொண்டவர் என்றும், இன்னொரு பொருள் கூறுகிறார் ஆதிசங்கரர்.. ஆதலால், கேசவன் என்ற சொல் பெயரும் உருவமும் இல்லாத பரம்பொருளை குறிப்பதாகும் என்பது அத்வைத வேதாந்தத்தின் கூற்றாகும்..
சூரியன், முதலானவர்களிடம் உள்ள கிரணங்களுக்கு உரியவர் என்பது இன்னொரு பொருள்.. இதுவே, வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.. சூரியன் முதலிய ஒளி மண்டலங்களில் தன் நுண்ணிய ரோமம் போன்ற ஒளிக்கதிர்களை பரவச் செய்தும், அந்த மண்டலங்களில் உள்ளுறைபவராகவும் அவர் ஒளிவிடுபவர்..
பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் இந்த மூவரின் சக்திகள் கொண்ட பரம்பொருள் கேசவன்.. அக்னி, சூரியன், வாயு என்ற மூன்று சக்திகளின் கொண்டவர்..
அசுரர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்குவதற்காக, தேவர்கள் வேண்ட, விஷ்ணு, தனது முடிவிலிருந்து கரு நிறம், வெண்ணிறம் கொண்ட இரு கேசங்களை பிடுங்கி, அவை கண்ணனாகவும் பலராமன் ஆகவும் தோன்றி உதவுவார்கள் என வரம் தந்தார் என விஷ்ணுபுராணம் கூறுகிறது..
பராசர பட்டரும் ஹரி வம்சத்தில் கேசவனை பற்றி உயர்வாக குறிப்பிடுகிறார்..
நம்மாழ்வார், திருவாய்மொழியில் (10-2-1) கேசவன் என்னும் பெயரைச் சொல்லவே, துன்பம் என்று பெயர் பெற்றன எல்லாம் கெடும். ஞானம் பிறக்கும். முன் செய்த பாவங்களும், பிறந்தபின் மறந்து செய்யும் பாவங்களும் தாமே அழியும்.. நாள்தோறும் கொடிய செயலை செய்யும் யமனுடைய தூதர்களும் வந்து கிட்ட மாட்டார்கள் என்கிறார்..
“கெடுமிடராய வெல்லாம்
கேசவா வென்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின்
தமர்களும் குறுககில்லார்..”
ஆண்டாள் தனது திருப்பாவையில் ஏழாவது பாசுரத்தில்,
“கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ” என்று பாடியுள்ளார்..
அதே போன்று, தனது முப்பதாவது பாசுரத்தில் “வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை “என்று கேசவனைப் புகழ்ந்து பாடியுள்ளார்..
ஸ்ரீஹரியின் திருநாமங்கள் ஒவ்வொன்றும் ஒரு தேனமுதம்.. ஒவ்வொரு திருநாமத்திற்கும் பல அர்த்தங்கள் உள்ளன.. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யும் போது, அந்த பரந்தாமனின் திவ்ய மங்கள ஸ்வரூபத்தை அனுபவித்து, அவரது திவ்ய நாமங்களை வாயார மனதார நினைந்து அனுபவித்துள்ளார்கள்.. அப்படிப்பட்ட திருநாமங்களில் பெருமைகளை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பதிவில் நாம் பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்…….