அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில் குரோம்பேட்டை பல நாட்களாக வீட்டினுள்ளே முடங்கியிருந்த நான், இன்று ஏதேனும் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யலாம் என்று எண்ணி இருந்தேன்.. அப்போது தான், எனது முகநூல் நண்பர் திரு ராம்பிரகாஷ் வாசுதேவன், குரோம்பேட்டையில், புருஷோத்தமன் நகர், மூன்றாவது க்ராஸ் தெருவில் உள்ள விஜய கணபதி ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் திருக்கோயில் பற்றி சொல்லியிருந்தார்..மேற்படி திருக்கோயிலுக்கு, புஷ்ப கைங்கரியங்கள் பலர் செய்து வருகின்றனர்..அதில் அடியேனும் ஒருவன்.. இன்று காலை ,அந்த கோவிலில் பெருமாளை தரிசிக்க சென்றேன்.. திவ்யமாக சேவை ஆயிற்று.ஆலயத்தினுள் நுழையும்போது, ஸ்ரீவிஜயகணபதி நம்மை வரவேற்கின்றார்.. அவரது இடது பக்கத்தில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியன் அருள்பாலிக்கின்றார்..இந்த திருக்கோயிலின் முதன்மை தெய்வமான ஸ்ரீ விஜய கணபதி, 1965ஆம் ஆண்டு ஜெகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.. அதன் பிறகு பல சன்னதிகள் இங்கே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.. 1989இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது..பிறகு 2015இல் ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.. கணபதி சன்னதிக்கு வலப்புறம் ஸ்ரீலட்சுமி நாராயணர் தனிச் சன்னதி கொண்டுள்ளார்.. மூலவர் லட்சுமி நாராயணர் தனது இடது மடியில் லக்ஷ்மியை அமரவைத்து, ஆலிங்கனம் செய்தபடி நமக்கு அருள்பாலிக்கின்றார்..இந்த மூலவர் சுயம்பு மூர்த்தி.. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அக்னியிலிருந்து சுயம்புவாக தோன்றியவர்.. திருமலை திருவேங்கடவன் சுயம்பு மூர்த்தி.. அதுபோல இந்தக் கோயில் மூலவரும் சுயம்பு மூர்த்தி.. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கழுப் பெரும்பாக்கம் என்ற ஊரில் ஒரு புளியமரத்தடியில் கிடைக்கப்பெற்ற இந்த மூர்த்தியை, இங்கே பிரதிஷ்டை செய்துள்ளனர்.. சன்னதியில் சிறிய வடிவில் உற்சவர் பூமிதேவி நீளாதேவி சமேதராக புருஷோத்தம பெருமாள் அருள்பாலிக்கின்றார்.. சன்னதிக்கு வெளியே, சற்று பெரிய அளவில், உற்சவர் பூமிதேவி நீளாதேவி சமேதராக புருஷோத்தம பெருமாள் காட்சி தருகிறார்.. மூலவர் சன்னதிக்கு எதிரே கருடாழ்வார் சன்னதி உள்ளது.. இந்தப் பெருமாள் வரப்பிரசாதி என்று சொல்லப்படுகிறது.. வேண்டுபவர்களுக்கு வேண்டிய வண்ணம் வேண்டுதலை நிறைவேற்றும் பெருமாள் என்று சொல்லப்படுகிறது.. பிரகாரத்தில் வட மூலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகள் தனிச் சன்னதி கொண்டுள்ளார்.. அதனைத் தாண்டி பிரகாரத்தில் செல்வோம் என்றால் 11 ஆழ்வார்களும் ஸ்ரீ பகவத் ராமானுஜர், ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆகியோர்கள் எழுந்தருளி உள்ளார்கள்.. அதனைத் தொடர்ந்து, சீதா லட்சுமணன் அனுமன் சமேதராக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கோவில் கொண்டுள்ளார்.. அதனை அடுத்து, லிங்க வடிவில் சிவன் சன்னதியும், பார்வதியும் கோயில் கொண்டு உள்ளனர்.. ஐயப்பன், சண்டிகேஸ்வரர் மற்றும் நவகிரகங்களுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன..இந்த திருக்கோயிலில் மூலவர், ஸ்ரீலட்சுமி நாராயணர் பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்யப்படுகிறது.. அதேபோன்று ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் ஆகியோருக்கும் அவரவர் திரு நட்சத்திரத்தின் போது, புஷ்ப மாலை விசேஷமாக சாற்றப்படுகிறது.. புஷ்ப கைங்கர்யம் வரவேற்கப்படுகிறது.. விருப்பமுள்ளவர்கள் திரு ராம்பிரகாஷ் வாசுதேவன்தொடர்பு கைபேசி எண் 919840109846 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..பல நாட்களாக வீட்டினுள்ளேயே முடங்கியிருந்த எனக்கு என்று பெருமாள் சேவை மிகவும் ஆத்ம திருப்தியை அளித்தது..கோயிலின் முகவரிநம்பர் 5 மூணாவது கிராஸ் தெரு புருஷோத்தமன் நகர் குரோம்பேட்டை சென்னை 44