புல்லட் தனசேகர்

காலையிலேயே ஆர்7 ஸ்டேஷன் சற்று மந்தமாக இருந்தது.. எல்லோர் முகத்திலும் ஒரு இறுக்கம்.. அங்கங்கு கூடி கூடி பேசிக்கொண்டு இருந்தார்கள்..வாசலில், ஜீப் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.. இன்ஸ்பெக்டர் குணசீலன் ஜீப்பை விட்டு இறங்கி வந்தார்.. இதுவரை பேசிக் கொண்டிருந்தவர்கள், அவசர அவசரமாக தங்கள் இருக்கைக்கு சென்று நின்றுகொண்டு, அவர் வரும்போது சல்யூட் அடித்தார்கள்.. அவரும் ஒரு சல்யூட் அடித்துவிட்டு தன்னுடைய அறைக்கு இன்ஸ்பெக்டர் சென்றார். சிறிது நேரத்திலேயே அழைப்பு மணி ஒலித்தது.. பி.சி சுகுமார் உள்ளே சென்றார்..

“என்னய்யா? ஏதாவது விசேஷமா? எல்லோரும் கூடி கூடி பேசிட்டு இருக்கீங்க? நான் வந்ததும் நிறுத்தீடறீங்க? இது நாலு நாளா நடக்குது.. எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லுங்க ஐயா.. அப்புறம் பெரிய பிரச்சனை ஆயிடப் போகுது”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க ஐயா!”

“என்னவோ போங்க!எதையோ மறைக்கிறீங்க..பிரச்சனை வந்த பிறகுதான் எல்லோருக்கும் தெரிய போகுது.. சரி சரி!! எல்லாரையும் கூப்பிடுங்க” என்று இன்ஸ்பெக்டர் சொன்னார்..

பி.சி சுகுமார் போய் சொன்னதும் எல்லோரும் உள்ளே வந்தனர்..

“ஏங்க ஏட்டு?அந்த இம்சை எப்போ வரேன்னு சொல்லி இருக்காரு?”

அவர் இம்சை என்று குறிப்பிட்டது டிஎஸ்பி ஜேம்ஸ்.. ரொம்ப கறார் பேர்வழி.. எல்லோரும் குடச்சல் கொடுப்பார்.. அவர் ஸ்டேஷனுக்கு வருகிறார் என்றாலே எல்லோருக்கும் ஜுரம் கண்டுவிடும்.. அப்படிப்பட்ட குணவான்..

“ஐயா! அவர்கள் இரண்டு மணிக்கு வரேன் என்று சொல்லி இருக்காரு”

“எல்லாம் சரியா இருக்கு இல்ல? எஃப். ஐ. ஆர் புக் சரியா இருக்கா? எல்லா ரெக்கார்ட்ஸும் சரியா இருக்குதா? ஸ்டாக் ரிஜிஸ்டர் சரியா இருக்குதா? அந்தாளு சும்மா இருக்கமாட்டார்யா.. எல்லாத்தையும் நோண்டி நொங்கு எடுப்பாரு.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க” என்று எச்சரிக்கை வழங்கினார் இன்ஸ்பெக்டர் குணசீலன்..

அப்போதுதான் ஏட்டு” ஐயா….” என்று தலையை சொறிந்தார்

“என்ன ஏட்டு? தலையை சொறியறீங்க..எதனாச்சும் பிரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்லுங்க.. அப்புறம் டிஎஸ்பி வந்த பிறகு பெரும் பிரச்சனை ஆயிடப் போகுது”

“இல்லைங்க ஐயா நம்ம ஸ்டாக் ரிஜிஸ்டர்ல, ஒரு புல்லட் ஸ்டாக்ல ஒரு குண்டு கொறையுதங்க அய்யா!”

“என்னய்யா குண்டு போடுறீங்க?”

“குண்டு போடலிங்க அய்யா ஆனால் குறையுது…”

“இதல காமெடி வேற.. எப்படி குறையுது,நல்லா தேடிப் பார்த்தீர்களா…? எங்கேயாவது தவறி கீழே விழுந்து இருக்க போகுது”

“இல்லிங்கையா… அதைத் தேட முடியாது”

“அப்புறம்?”

“நம்ம பி.சி தம்பி தனசேகர் அந்த குண்டை முழுங்கிட்டாரு.!”

“என்னையா சின்ன புள்ள தனமா பேசுறீங்க? எப்படியா முழங்கினான்? ஏ தனசேகரூ… என்ன சொல்ல வர்ற நீ? வாயில் ஏதோ சொல்ல வர”

“இல்லிங்கையா.”.. வாயில் சிக்லெட்..

“அத முதல் வெளியில துப்பு… எப்ப பாரு சிக்கலேட்டை மென்னுகிட்டு… ஆபீஸர் ரூம் உள்ளே வரும்போது அதனையெல்லாம் வெளியில துப்பீட்டு வரணும்னு தெரியாதா? எங்க இருந்துயா… இந்த பழக்கம் எல்லாம்?”

“அது வந்துங்க ஐயா! அதிகமாக சிகரெட் பிடிச்சு கிட்டு இருந்தேன்.. அதை விடுவதற்கு…. சிக்லேட்டை மெல்ல சொன்னாங்க… இப்ப இது தொத்தி கிச்சு…”

“ஆமா! வெப்பன்ஸ் எல்லாம் நீ தானே தொடச்சி வெக்கர? அப்ப அந்த புல்லெட் எப்படி போச்சு?”

“ஐயா!! நான் எல்லாத்தையும் தொடச்சிகிட்டு இருந்தேன்… உள்ளே, புல்லட் கேஸை எடுத்து தொடச்சேன்.. ஒவ்வொரு புல்லாட்டா எடுத்து தொடச்சேன்..அப்போ டேபிளில் இருந்த ஒரு புல்லட் கீழே விழுந்தது.. அதை எடுக்க கையிலிருந்த புல்லட்டை, வாயில் பல்லில் கடித்து கொண்டு, கீழே குனிந்து எடுக்க முயன்றேன்.. அதை எடுக்கும் போது ஐயாவோட ஜீப் சத்தம் கேட்டுச்சு.. அவசரமாக வாசலுக்கு வந்தேன் அந்த அவசரத்தில் வாயிலிருந்த புல்லட்டை விழுங்கி விட்டேன் போலிருக்கிறது.. அதை காணலை…”.

“சரி ஆஸ்பத்திரிக்கு போனியா? ஸ்கேன் எடுத்து பார்த்தியா?”

“எடுத்து பார்த்தேனுங்கய்யா… அதிலேயும் காணல…”

“அப்ப வெளில போயிடுச்சா? உங்க வீட்டில டாய்லட் எப்படி?”

“ஐயா! அதை தேட முடியாது.. ஐயா நான் இருக்கிறது ஃப்ளாட்… காமன் செப்டிக் டேங்க்…”

“கிழிஞ்சுது போ.. இப்ப என்ன செய்யறது? அவ்வளவுதான்… டிஎஸ்பி வந்ததும், எல்லாருக்கும் சீட் கிழிச்சிடப் போறாரு… உனக்கு சஸ்பென்ஷன் தான்.. எனக்கு எப்படியும் மெமோ குடுப்பாங்க… எனக்கு புரமோஷன் வர்ற நேரத்துல இப்படி செய்யறேய்யா?”

“ஐயா! நீங்கதான் காப்பாத்தணும்.. வீட்ல வேற” மாசமா இருக்காங்க!”

“எத்தனாவது மாதம் தனசேகர்?” இது ஏட்டு..

“ஏட்டையா! அது ரொம்ப முக்கியம் இப்ப!”

“இல்லைங்க ஐயா… நெறை மாசமா இருந்து.. இவன் போய் விஷயத்தைச் சொல்ல.. ஏதாவது ஏடா கூடமாகிட போகுது அப்படின்னு பயத்துல கேட்டேன்”

“அது சரி ஐயா! அந்த பொறுப்பு அவனுக்கு இருக்கணும் இல்ல? இப்ப என்ன செய்யறது?நேரம் வேற குறைஞ்சிகிட்டே போவுது!”

“எல்லாரும் போங்க…போயி என்ன செய்யலாம்னு யோசிங்க.. சுகுமார்! ஒரே தலைவலியா இருக்கு.. ஒரு டீ சொல்லு”

எல்லோரும் வெளியே வந்து அவரவர் சீட்டுக்கு சென்றனர்.. அப்போது, டீ கடை பையன் ஒருகையில் டீ கிளாஸ்களை வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் கல்லைத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டு வந்தான்.. ஒரு கிழிந்த சட்டை, கிழிந்த டிரவுசர்.. ஒரு பத்து பன்னிரெண்டு வயது இருக்கும்.. விளையாட்டுத்தனமான வயது..

வந்து, ஒவ்வொரு டேபிளிலும் டீ க்ளாஸை வைத்தான்.. கையில் இருந்த கல்லைத் தூக்கி போடும் விளையாட்டு மட்டும் நிற்கவில்லை..

“டேய்! என்ன கல்ல தூக்கி போட்டு விளையாட்டு? டீ உள்ளார விழுந்தா, டீ வேஸ்டாதானே போவம்…! “என்றார் ஏட்டு…

“சார்! இது கல் இல்ல…. இங்க பாருங்க..”என்று கையை விரித்து காண்பித்தான்.. அவன் கையில் தொலைந்து போயிருந்த புல்லட் இருந்தது..

“டேய்! இது எப்படிடா உன் கையில் வந்தது?”

“இப்பதான் சார் வாசப்படி இடுக்கில, பளபளன்னு தெரிஞ்சது.. ஏதாச்சும் காசா இருக்கும், அப்படின்னு குச்சியை வைத்து எடுத்தேன் சார்.. இது என்னாது?”

“டேய்! என்னோட வாடா” என்று அவன் கையை பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் ரூமுக்குள் ஏட்டு நுழைந்தார்..

“சார்!கடவுள் நம்மளை கைவிடல.. இத பாருங்க.. இவன் கையில் தொலைஞ்சு போன புல்லட்டு” என்று காண்பித்தார்..

“இவங்கையில் எப்படி கிடைச்சது?”

“வாசப்படியில் இருந்து தான் சார்”

“அந்த தனசேகர கூப்பிடுங்க.. என்னவோ முழுங்கிட்டேன்னு சொன்னான்.! இப்ப வாசப்படியில் கிடைச்சதுங்கறீங்க? என்ன என்ன பைத்தியம்னு நெனச்சீங்களா?”

தனசேகர் வந்தான்..

“ஏ! தனசேகர்! என்னையா இது புல்லட்டை விழுங்கிவிட்டேன் என்று சொன்ன? இப்ப இவன் கையில இருக்குது?”

“சார் ஞாபகம் வந்துடுச்சு சார் அன்னைக்கு இதை வாயில வச்சு கிட்டு ரிவால்வரை தொடச்சிட்டு இருக்கும்போது நீங்க வர்ற சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தேன்… வாயிலிருந்த புல்லட்டை சிக்லெட் என நினைச்சு, எங்கே நீங்க திட்டுவீங்களோன்னு பயந்து, சிக்லெட்னு புல்லட்டை துப்பி இருக்கேன் போல இருக்கு ஐயா”

“நல்லா வந்து வாய்ச்சிங்களேய்யா!! கொஞ்ச நேரத்துல எவ்வளவு டென்ஷன்!”

“ஐயா! இது மூணு நாளா நடந்துட்டு இருக்கு.. எங்களுக்கும் ஒரே பிரச்சனை.. எல்லாம் இந்த தனசேகரால…”

“சரி சரி! பிரச்சனை முடிஞ்சு போச்சு.. டி.எஸ்.பி வர்ரதுக்குள்ள, அவங்க அவங்க சீட்டுக்கு போய் வேலையை பாருங்க.. டேய் தம்பி! இங்க வாடா.. இந்தா, இந்த ரூபாய் வச்சுக்கோ, நல்ல சட்டையும் டிரௌஸரும் வாங்கி போட்டுகிட்டு வா…உன்ன, உங்க முதலாளி கிட்ட சொல்லி, பள்ளிக்கூடத்துல சேக்கரன் “என்று இன்ஸ்பெக்டர் குணசீலன் அந்த டீக்கடை பையனிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்..

காலம் சென்றது.. இப்போது அந்த பி.சி தனசேகர் டிஎஸ்பி ஆகிவிட்டார், புல்லட் தனசேகர் என்ற பட்டப் பெயருடன்..

சில பேர், அந்த ‘புல்லட்’ என்ற பட்டம் அவர் வைத்திருந்த பைக் என்பதனால் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.. ஒரு சாராரோ, அவர் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்..அதனால் அந்த பட்டம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.. எது எப்படியோ உண்மை நிலவரம், அவருடன் பணிபுரிந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.. அவர்கள் எல்லோரும் தற்போது ரிடயர் ஆகி வீட்டில் இருக்கிறார்கள்.. என்றாகிலும் பேப்பரில்,தனசேகர் பெயரைப் பார்த்ததும் அவர்களுக்கு பழைய நினைவுகள் வரும்.. தங்களுக்குள்ளேயே சிரித்துக் கொள்வார்கள்…

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: