“மானிடராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்பது ஆன்றோர் வாக்கு.. அப்படி மானிடராய் பிறந்த நாம் ஐம்புலன்கள் மூலமாக நல்லவைகளையே கேட்டு, அதன்படி நடக்க முயற்சிக்கின்றோம்.. கண்கள் மூலமாக சிறந்த காட்சிகளை காண்கின்றோம..நாசியின் மூலமாக சிறந்த மணத்தினை நுகர்கின்றோம்.. நாக்கின் மூலமாக அறுசுவை உணவை அனுபவிக்கின்றோம்.. தொடுதல் மூலமாக உணர்ச்சிகளை அனுபவிக்கின்றோம்..
“தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா!” என்று பாரதியார் பாடியுள்ளார்.. அவர் அந்த தொடு உணர்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளார்..
ஐம்புலன்களில் ஒன்றான செவிக்கு, நாம் பல வகைகளில் உணவு அளிக்கின்றோம்.. “செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியுள்ளார்.. அப்படிப்பட்ட நல்ல நிகழ்வுகளை, இசைகளை பாடல்களை, நாம் செவி மூலமாக அனுபவித்து மெய் மறக்கின்றோம்.. முகநூலில், பலர் இசை நிகழ்ச்சிகளையும், உபன்யாசஙகளையும், பதிவு செய்து நம்மை மகிழ்விக்கின்றனர்..
திருவள்ளுவர், செவிக்கு உணவு பற்றி ,ஒரு அதிகாரத்தையே “கேள்வி” என்ற பெயரில் இயற்றியுள்ளார்.. அதில் சொல்லப்பட்டுள்ள ஒரு குறள்,
“எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்”.
இதனுடைய பொருள், ஒருவன் எத்தனை சிறியது ஆயினும், நல்லவற்றைக் கேட்பானாக; ஏனென்றால், அஃது அத்துணை சிறியதாயினும் அவனுக்குச் சிறந்த பெருமையை கொடுக்கும்.. ஆகவே, நாம் கேட்க கூடிய விஷயம், சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், அதனில் உள்ள சாராம்சத்தை நாம் அனுபவித்து, அதன் படி நம் வாழ்க்கையைச் செவ்வனே கொண்டு செல்ல வேண்டும்.. அந்த வகையில், நமக்கு சிறந்ததொரு நற்பணியை செய்பவர்கள், உபன்யாசகர்கள் மற்றும் சமய சொற்பொழிவாளர்கள்..அவர்களைப் பற்றி, தெரிந்த சில விஷயங்களை நான் வாசகர்களிடையே பகிர்ந்து கொள்ள, இந்தத் தொடரை துவக்கி உள்ளேன்..
“அழகென்ற சொல்லுக்கு முருகன்” என்று பெயர்.. அந்த முருகன் புகழ்பாடும், அருணகிரிநாதரின், “திருப்புகழ்”..அந்த திருப்புகழின் பெயரிலேயே “திருப்புகழ் அமிர்தம்” என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி, “கைத்தல நிறைகனி” என்று தொடங்கும் திருப்புகழுக்கு உரை எழுதிய, அருளாளர் “திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்..”

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில், உள்ள காட்பாடிக்கு அருகில், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் “மல்லைய தாசருக்கும் மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும்”பிறந்த பதினொரு பிள்ளைகளில், நான்காவது பிள்ளையாக அவதரித்தவர் “கிருபானந்த வாரியார் சுவாமிகள்”?? இவரது இயற்பெயர் “கிருபானந்த வாரி” இவர் செங்குந்த வீர சைவ மரபினர்.. ஐந்தாவது வயதில், திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி,” பாணி பாத்திர தேவர்” மடத்தில் “சிவலிங்க தாரணம்” செய்விக்க பெற்றார்.. சுவாமிகள், தனது பத்தொன்பதாவது வயதில் “அமிர்த லட்சுமி” என்ற பெண்மணியை திருமணம் புரிந்தார்..
இவரது தந்தையார், இசையிலும், இயலிலும், வல்லவர்..மாபெரும் புராண வல்லுநர்..தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தந்தார்.. எட்டு வயதிலேயே, கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்.. 12 வயதில் பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர்.. பதினெட்டு வயதிலேயே, சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் திறமை படைத்தவராக விளங்கினார்.. இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள், ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.. வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை யானைகவுனி தென் மடம் “பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரிடம்” ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்..
தனது சங்கீத ஞானத்தால், அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது, திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப் பாக்களைப் இன்னிசையுடன் பாடினார்.. தன் தந்தையின் வழியில், வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார்..19 வயதில் தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார்.. அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்ததால், பாமர மக்களது மனதினை மிகவும் கவர்ந்தவர்.. ஆனால், அவரது ஆன்மிக மொழி பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும், சித்தாந்த கருத்துகளையும், கூறியது.. சுவாமிகள், தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்..
அவருடைய சொற்பொழிவுகள், அநேகமாக நாடக பாணியில் இருக்கும்..இடையிடையே, ‘குட்டிக் கதைகள்’ வரும்.. அப்படி சொல்லப்பட்ட ஒரு குட்டிக் கதையை இங்கே நான் தருகிறேன்..
ஒரு ஊரில், ஒரு மனிதன், தன் நண்பர்களுடன் அவனது வீட்டு திண்ணையில் சீட்டாடிக் கொண்டு வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்..தினமும், சாப்பிடும் வேளையில், அவனது மனைவி, வாயில் புறம் வந்து, “வாருங்கள்! உள்ளே வந்து பழையது சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்” என்று அழைப்பாள்.. இவரும் உள்ளே சென்று சாப்பிட்டு வருவார்.. ஆனால், அவரது மனைவி தினம் தினம் புதியதாக சமைத்து, அவருக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்..ஆனால், சொல்லும்போது,பழையது என்று சொல்லித்தான், அவருக்கு பரிமாறினாள்.. ஒரு நாள் அந்த ஆண்மகனுக்கு கோபம் வந்தது.. “என்ன நீ ?எனக்கு சுடச்சுட புதிதாக சமைத்த உணவு பரிமாறிவிட்டு, பழையதை சாப்பிடு, என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாயே..ஏன் இப்படி செய்கிறாய்?”என்று கேட்டான்.. அதற்கு அவள் “இப்போது, நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவு எல்லாம் உங்களுடைய அப்பாவும், அவருடைய அப்பாவும், சம்பாதித்து வைத்தவை,அந்த சொத்தை அழித்து தான், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள், அதனால் அவை பழையது தானே” என்று சொன்னாள்.. அவனுக்கு, அப்போதுதான் தான் செய்யும் தவறு புரிந்தது.. மறுநாளிலிருந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்..
இது வாரியார் சொன்ன ஒரு குட்டி கதை.. இது போல, பல கதைகள் அவருடைய உபன்யாசத்தில் கேட்கலாம்.. மிகவும் சுவை மிகுந்ததாகவும், அறிவுரைகளையும், மருந்தாக, தேன் கலந்து, நமக்கு புரியும் வண்ணம்,அவர் சொல்லுவார்.. அவரது சொற்பொழிவு, நமக்கு தேனாகும், நோய் தீர்க்கும் மருந்தாகவும், பயன்படும்.. நகைச்சுவையும், நடைமுறைச் செய்திகளையும், நயம்பட சொல்வது, இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்..
சுவாமிகள், 1936-ஆம் ஆண்டு, தைப்பூச விழாவுக்கு, வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில், அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்” என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி “கைத்தல நிறைகனி” என்று தொடங்கும், திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார்.. அது முதல், திருப்புகழ் அமிர்தம், திங்கள் இதழாகப் பிரசுரமாகத் துவங்கியது..
சுவாமிகள், அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார்.. அந்தப் பத்திரிகையில், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு, விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறி கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில், வெளிவந்த கட்டுரைகள், பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின..
வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த, பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.. அவர் இயற்றியுள்ள நூல்கள், ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும்.. அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை ஆகும்.. கேட்கும் செவிக்கும், கற்கும் சிந்தைக்கும், இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகள்.? 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன..
குழந்தைகளுக்கு என்று “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்”என்ற நூலை அவர் எழுதினார்..பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.. இவருக்கு தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில் 1967இல் “இசைப் பேரறிஞர்” இந்த விருது வழங்கப்பட்டது..

1993 ஆம் ஆண்டு, அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார்.. அங்கிருந்து திரும்ப 1993 நவம்பரில், இந்தியா வந்து கொண்டிருந்தபோது, விமானத்திலேயே காலமானார்.. வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே, கிருபானந்த வாரியார் சுவாமிகளை சிறப்பிக்கும் வண்ணமாக, கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது..இவரது சிறப்பினை வெளிப்படுத்தும் விதமாக,” இந்திய அஞ்சல் துறை” இவர் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டு உள்ளது..
“கைத்தல நிறைகனி” என்று தொடங்கும் இந்த திருப்புகழின் பாடல் கேட்கும் போதெல்லாம், அருளாளர் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின் நினைவு, நம்மை விட்டு நீங்காது.. கேட்போரின் செவிகளுக்கு, அவர் அறுசுவை உணவு படைத்தவர்.. அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்..
அடுத்த பதிவில், மற்றொரு சொற்பொழிவாளர் பற்றி, பதிவு செய்கிறேன்..
மீண்டும் சந்திப்போம்…