
எம்பெருமானுடைய திருநாமங்கள் எந்த அளவுக்கு நமக்கு உயர்வு தரும், என்பதனை பன்னிரு ஆழ்வார்கள்,நமக்கு உணர்த்தியுள்ளார்கள்..” ஹரி” என்ற நாமத்திற்கு உள்ள, மகிமையை சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.. அந்த எம்பெருமான் திருநாமங்கள், உயர்த்தும் விதங்களை கீழே காணலாம்.

கோதை நாச்சியார் ஆண்டாள், தனது திருப்பாவை பாசுரத்தில்:-
“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி…. நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்”
என்று,எம்பெருமானின் நாமத்தை முழுமையாக சொல்வதனால் ஏற்படும் பலன் பற்றி கூறுகிறாள்.

பொய்கை ஆழ்வார், திருமாலின் திரு நாமங்களை, கீர்த்தனங்களாகச் செய்து, பெருமானை துதித்ததனால் நன்மை பெறுவர் என்று பொருள்பட:-
“செல்ல தளையும் திருமாலை–நல்லிதழ்த்
தாமத்தால், வேள்வியால், தந்திரத்தால்,மந்திரத்தால்
நாமத்தால், ஏத்துதிரேல் நன்று.” என்று கூறுகிறார்..
பூதத்தாழ்வாரோ,” வேதத்தை அறியாதவர்கள் வேதத்தை சொல்லிய பக்தி மார்கத்தில் நின்று, எம் பெருமானை வழிபட முடியாதவர்கள்,
“ஒத்தின் பொருள் முடிவு மித்தனையே உத்தமன் பேர்
ஏத்துந் திறமறியின் ஏழைகாள்! ஒத்ததனை
வல்லீரேல்! நன்றதனை மாட்டீரேல்! மாதவன் பெயர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு.” என்று கூறுகிறார்..
“தேகம் திறலும், திருவும், உருவமும்,
மாசில் குடிப்பிறப்பும், மற்றவையும், பேசில்
வலம் புரிந்த வான் சங்கக் கொண்டான் பேரோத,
நலம் புரிந்து சென்றடையும் நன்கு”.
என்று பேயாழ்வார், தனது பாசுரத்தில்” வலது கரத்தில் குறித்து வைத்துள்ள பெருமானுடைய நாமங்களை ஓத, நல்ல குலத்தில் பிறப்பும், மற்ற நன்மைகளும், தாமே நம்மிடத்தில் வந்து விடும்” என்கிறார்..
நம்மாழ்வார் கூறும்போது,
“நாடீர்! நாள்தோறும் வாடா மலர்கொண்டு,
பாடீர்! அவன் நாமம், வீடே பெறலாமே!” என்று பெருமானின் திருநாமத்தை புகழ் பாடுகிறார்..
திருமங்கை ஆழ்வாரும் தனது பாசுரத்தில்,
“குலம்தரும், செல்வம் தந்திடும்,
அடியார் படுதுயராயின வெல்லாம்,
நிலந்தரஞ் செய்யும் நீள் விசும்பு அருளும்,
அருளொடு பெருநில மளிக்கும்,
வலம் தரும், மற்றும் தந்திடும்,
பெற்ற தாயினும் ஆயின செய்யும்,
நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன்,
நாராயணா என்னும் நாமம்”.
என்று பாடியுள்ளார்.. இதன் பொருளாவது, குலம், நலம், வளம் எல்லாம்” நாராயணா” என்ற சொல்லின் அடங்கியுள்ளது.. பெற்ற தாயைவிட, நம்மை மேலாக காக்கும், இந்தத் திருநாமம் ,என்று பெருமானின் திரு நாமத்தை மிகவும் உயர்த்தி சொல்கிறார்..
பெரும் பாவியாக “முத்கலன்” என்பவன் தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக வெள்ளியிலான பசுவை தானம் செய்யும்போது “கிருஷ்ணார்ப்பணம்” என்று சொல்லி கொடுத்தானாம்..அவன் மரணமடைந்தவுடன், எமதூதர்கள் பாசக் கயிற்றினால் அவனை இழுத்துச் சென்று, பிறகு அவனை உபசரித்து, அவனுக்கு மோட்சமும் கொடுத்து உள்ளார், என்ற வரலாற்றை தொண்டரடிப்பொடி ஆழ்வார், தனது பாசுரத்தில்,
“நமனும் முத்கலனும் பேச, நரகில் நின்றார்கள் கேட்க,
நரகமே சொர்க்கமாகும், நாமங்கள் உடைய நம்பி” என்று பெருமாளின் திருநாமத்தை உயர்த்தி சொல்கின்றார்..
மேற்கூறியவைகளை பார்க்கும் போது ,எம்பெருமானின் திருநாமம், நவீல்பவர் உள்ளன்புடன் நம்பிக்கையுடனும், உச்சரித்தால், நமது பாவங்கள் கரையும் என்பது உண்மை என்பது தெரியவருகிறது.. “நாமார்ச்சனை “ஆற்றல் வாய்ந்தது..பெருமாளின் “நாம சங்கீர்த்தனம்” நமது செவிகளில் விழுந்தவுடன், ஒரு மாய சக்தி உண்டாகின்றது.. அது பெருமாளையும் நம்மையும் இணைத்துவிடுகிறது..
இந்த தொடரின் ஆரம்பத்தில் “ஹரி” என்ற திருநாமத்திற்கு பல பெயர்கள் உண்டு; அவற்றை பற்றி தெரிந்தவற்றை கூறுவதாக தெரிவித்திருந்தேன்.. நான் முதலில் எடுத்துக் கொள்வது “கோவிந்தன்” என்கின்ற திருநாமம்.. “கோவிந்தன்” என்கின்ற நாமத்தின் மகிமையைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..
ஸ்ரீஆதிசங்கரர் அருளிய, “பஜகோவிந்தம்” என்கின்ற ஸ்லோகத்தில் கோவிந்த நாம மகிமையை பலவாறு விவரித்துள்ளார்..
“பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே!
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ரஞ்கரணே!!”
“ஏ மூட மனிதனே! விவேகமற்றவனே! கோவிந்தனை வழிபடு,கோவிந்தனை வழிபடு, கோவிந்தனை வழிபடு, கோவிந்தனை வழிபடு, மரண காலம் நெருங்கியபோது ‘டுக்ருஞ்கரணே’ போன்ற வியாகரண தாது பாடம், உன்னை ஒருகாலும் காப்பாற்றாது ..எனவே “கோவிந்த நாமம்” ஒன்றே உன்னை நற்கதிக்கு அழைத்துச் செல்லும்” என்று முதல் ஸ்லோகத்திலேயே கோவிந்த நாமத்தின் மகிமையை தெளிவாக தெரிவித்துள்ளார் ..
இனி “கோவிந்த நாமம்”என்றால் என்ன? அதன் பொருள் என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்..
“கோவிந்தன்” என்ற பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 187 மற்றும் 539 ஆகிய பெயர்களாக வருகின்றது.. விஷ்ணுவின் முக்கியமான பன்னிரண்டு பெயர்களில், இது நான்காவது பெயர்.. இந்து சமயத்தில் கடவுளின் பெயர்களுக்குள்,ஆன்மீகச் சிறப்பு மிக்க பெயர்களில் முக்கியமான ஒன்று.. இந்த திருநாமத்தை, பிறப்பு, இறப்பு என்ற கோரமான விஷத் தீண்டலைப் போக்க வல்ல பெயர் என்பன புராணங்கள்..
‘கோ’ என்றால் ‘பூமி’ என்று பொருள்.. படைப்பின் தொடக்கத்தில், சென்ற இடம் அறியாதபடி, கடலில் மூழ்கி மறைந்து விட்ட பூமியை, வராஹமாகச் சென்று தேடி பெற்றவர் மஹாவிஷ்ணு..’ விந்த’ என்றால், ஒன்றை தேடி, நாடி போய் அடைவது.
‘கோ ‘என்றால் ‘பசு’.. ‘விந்த’ என்றால் காப்பாற்றுபவர்.. பசுக்களுக்கு தலைவர், முல்லை நிலத்தைச் சேர்ந்த ஆயர், அதாவது மாடு மேய்ப்பவர்..

‘கோ’ என்றால் “துதிக்கும் சொற்கள்”.. தேவர்களால் துதிக்கப்பட்டவர்..
‘கோ’ என்றால் புலன்கள்.. “புலன்களை அடக்கி ஆள்பவர்” கோவிந்தன் “பார்ப்பார் அகத்துப் பாற்பசு ஐந்து” என்று திருமூலர் கூறிய இந்திரிய பசு தான் ‘கோ’
வேதம் ஓதுவதால், அடையக் கூடியவர்.. மந்திரங்களால் உணரத்தக்கவர்.. உபநிடத வாக்கியங்களால் அறியப்படுபவர்.., அல்லது அடையப்படுபவர்..
கூப்பிடும் தூரத்தில் உள்ளவர்..
இந்தத் திருநாமத்தின் பெருமைகள் பல உண்டு.. திருப்பாற்கடலில் வாசம் செய்யும் ஸ்ரீமகாவிஷ்ணுவும், கண்ணனாக அவதரித்த கதை, ஸ்ரீமத் பாகவதத்திலும் ,விஷ்ணு புராணத்திலும் விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது..கண்ணன் சிறுவனாக இருந்தபோதே தேவலோக அரசனான, இந்திரனுடைய கர்வத்தை அடக்குவதற்காக, கோபர்களிடம்(ஆயர்பாடி மக்கள்), அவர்கள் வழக்கமாக செய்யும் இந்திர பூஜையை நிறுத்திவிட்டு, “கோவர்த்தன மலைக்கு” பூஜை செய்யுமாறு சொன்னார்.. அப்படி அவர்கள் செய்தவுடன், இந்திரனுக்கு கோபம் வந்து கோகுலத்தையே அடித்துக் கொண்டு போகும் அளவுக்கு மழையை உண்டு பண்ணி விட்டான்.. அப்போது,கண்ணன் கோவர்த்தன மலையை தூக்கி, மக்களையும், பசு முதலிய பிராணிகளையும் காப்பாற்றினார்.. பிறகு தேவேந்திரன்,கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, “எல்லா உயிர்களையும் காப்பாற்றுபவர்” என்று பொருள்படும் “கோவிந்தன்” என்ற பெயரை கண்ணனுக்கு பட்டம் சூட்டி, அபிஷேகம் பண்ணி வைத்தான்.. அதற்கு “கோவிந்த பட்டாபிஷேகம்” என்று பெயர்..
திருமலையில் எழுந்தருளியுள்ள திரு வேங்கட நாதபா பெருமாளை, தரிசனம் செய்ய, திருப்பதி மலையில் ஏறும் பக்தர்கள், கோஷம் போட்டுக் கொண்டே செல்வது “கோவிந்தா, கோவிந்தா” என்ற திருநாமம் தான்.. திருப்பதியில் உள்ள” ஸ்ரீ கோவிந்தராஜன் பெருமாள்” சன்னதியில் இருந்து துவங்கும் அந்த கோவிந்த நாமம் திருமலையில் உள்ள எம்பெருமானின் செவி வரை கேட்கும்.. அந்த திருநாமம் கருடாத்ரி, சேஷாத்ரி, நாராயணாத்ரி போன்ற ஏழு மலைகளிலும் மோதி, எதிரொலியாக நமக்கு திரும்ப தெவிட்டாத தேன் அமுதமாக நம் செவிகளில் ரீங்காரமிடும்..அந்த திருநாமம், நம் செவிகளில் பாயும் போது நம்மை அறியாமல், நம் உடலில் உள்ளே ஒரு மின்சாரம் பாய்ந்த உணர்வு ஏற்படுகிறது..
நாம், வைதீகச் சடங்கு செய்யும் போது “ஆசமனம் “என்ற ஒரு அரை நிமிட வைதீகச் சடங்கு, எல்லா வைதீகக் கருமங்களும் பல முறை திருப்பி திருப்பி செய்யப்படும் ஒன்று.. அதில் விஷ்ணுவின் “பன்னிரு நாமங்கள்” ஒரு முறையும் ‘அச்சுதா, அனந்தா கோவிந்தா’ என்று ஒருமுறையும் சொல்லவேண்டி வருகிறது.. இதில் விசேஷம் என்னவென்றால், பன்னிரு திருநாமங்களிலும், ‘கோவிந்தா’ என்ற ஒரு சொல் ஒரு முறை வருவதால், இங்கு எல்லா நாவல்களிலும்,கோவிந்த நாமம் இரண்டு முறை வரும் நாமம் என்று ஆகின்றது..
ஆன்மீகச் சொற்பொழிவாளர் களில், பலரும் தெய்வ பஜனை சடங்குகளின் தொடக்கத்திலும், முடிவிலும்” சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் “என்று எடுத்துக் கொடுப்பதும் சபையில் அமர்ந்துள்ள ஆத்திக பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, “கோவிந்தா கோவிந்தா” என்று முழங்குவதும், நாட்டின் தென் பிராந்தியங்களில் தொன்றுதொட்டு நடைபெற்று கொண்டிருக்கும் வழக்கம் ஆகும்..
கண்ணனின் புகழ்பாடும் ஆண்டாள், தனது திருப்பாவையில் 27,28 மற்றும் 29 ஆகிய பாசுரங்களில் மூன்று முறை ‘கோவிந்தன்’ திருநாமத்தை அழைக்கின்றாள்..
“கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா”
“குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா”
“இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா”
கோவிந்தராஜ பெருமாள் எழுந்தருளியுள்ள சில ஸ்தலங்கள் என்னென்ன என்று பார்ப்போம்..

முதலில் நமக்கு நினைவுக்கு வருவது “திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் “..
அடுத்தது, சிதம்பரத்தில் “திருச்சித்திரக்கூடம்” என்ற திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ள கோவிந்தராஜ பெருமாள்..
மூன்றாவதாக, தேரழுந்தூர் என்ற திவ்யதேசத்தில் ஆமருவியப்பன் கோவிலில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் கோவிந்தராஜர் பெருமாளுக்கு திருக்கோயில் உள்ளது..
நான்காவதாக, திருநெல்வேலி காந்திமதியம்மன் கோவிலில் “நெல்லை கோவிந்தராஜர்” என்கிற பெயரில் எழுந்தருளியுள்ளார்..
அடுத்த திருநாமம் பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்
மீண்டும் சந்திப்போம்..