தமிழ்நாட்டின் தென்கோடியில் மேற்குதொடர்ச்சி ஒட்டிய பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு பசுமையான கிராமம்.. அந்த கிராமத்தின் பெருமாள் கோவில்.
. அதன் வாசலில் மாரியம்மாள் நீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள..அப்போது அங்கே வந்த கோவில் பட்டர் கோவிலை திறப்பதற்கு முன், மாரியம்மாளைப் பார்த்து ” ஏன்? மாரி! இன்னைக்கு இவ்வளவு லேட்டு?”என்று கேட்டார்..
மாரியும் குனிந்து கோலம் போட்டுக் கொண்டபடியே”இல்ல சாமி! இன்னிக்கு கொஞ்சம் அசந்துட்டேன்.. லேட்டாயிடுச்சு! நீங்க உள்ளே போய், சன்னதியை திறங்க.. அதுக்குள்ள நான் வந்து சுத்தம் பண்ணி, அங்கேயும் கோலம் போட்டுடறேன்”என்றாள்..
“அதுசரி! மாரி !நீ நம்ம தாத்தாவை பார்த்தியா? காலையிலிருந்து தேடறேன்.. காணலையே? வழக்கம் போல நம்ம வீட்டுல திண்ணையில் படுத்து இருந்தாரு.. ஆனா எங்க போனார்னு தெரியலை”
“இல்ல சாமி! நான் பாக்கலையே!” என்று குனிந்த, அவள் நிமிர்ந்த போது, சற்று தூரத்தில் “தாத்தா” என்று சொல்கின்ற “வரது” வந்துகொண்டிருந்தார்..
“இதோ! வர்றாரே” என்றாள் மாரி..
அவர் வந்ததும் பட்டர், ” ஏன் அண்ணா? எங்கே காலங்காத்தால போயிட்டு வரீர்? சூடா,கைல காபி வைச்சுண்டு உங்களை வந்து தேடினாள்..” என்றார் பட்டர்.. அவர் “சூடா” என்று சொன்னது அவாத்து மாமி.. சூடாமணி.
“அது இல்ல சுவாமி! நம்ம ரெட்டியார் அம்மா, நம்ம நந்தவனத்தில், மல்லி சரியா பூக்கல, அப்படின்னு சொல்லி இருந்தேன்.. அதற்கு, உரம் வாங்கி கொடுத்து இரண்டு நாளாக மறந்து போய்விட்டது.. இன்னிக்கு தான், ஞாபகம் வந்தது.. சரி, காலையில போயி, அதை வைத்து விட்டு, அப்படியே குளத்துல குளிச்சிட்டு, சந்தி பண்ணிட்டு வந்துட்டே இருக்கேன்.. நீங்க உள்ள போங்க.. நான் வந்து எல்லாத்தையும், செஞ்சுட்டு, நந்தவனம் போய், பூவ பறிச்சிட்டு, மாலை கட்டி, பெருமாளுக்கு கொண்டுவரேன்” என்றபடியே, அவரும் பட்டர் பின்னாடியே சென்றார்..
அவர் பெயர் “வரதராஜன்”.. சுருக்கமாக ‘வரது ‘என்று சொல்லலாம்..இப்போது தனிக்கட்டை.. குடும்பம் ஒரு காலத்தில் இருந்தது.. அகமுடையாள், காலம் ஆகி, பல வருடங்கள் ஆகிவிட்டது..இருந்த இரண்டு பிள்ளைகளும், இவரை விட்டு விட்டுவெளியூரிலும், வெளிநாட்டிலும், சென்று செட்டில் ஆகிவிட்டார்கள்.. இவர் பிறந்த ஒரு வீட்டையும் விற்று காசாக்கி, அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள்.. இவருக்கு தங்குவதற்கு கூட ஒரு இடமும் இல்லை.. நம்ம பட்டர் தான், அவர் வீட்டு திண்ணையில இடம் கொடுத்திருக்கிறார்.. அதில் ஒரு மறைப்பு உண்டு.. அதுதான் நம்முடைய வரதுவின் வீடு.. அவருக்கு என்ன சொத்தா?பத்தா? இருப்பது 3 வேட்டி; இரண்டு சிட்டம் போட்ட மலையாள துண்டு; அதுவும் வருஷத்துக்கு ரெண்டு தரம் ரெட்டியார் அம்மா வாங்கி கொடுப்பார்..
“ரெட்டியார் அம்மா” என்று இங்கே இரண்டு முறை சொல்லி விட்டேன்.. அவர் யாரென்று சொல்ல வேண்டாமா? அவர்தான், இந்த ஊரில் பாலகிருஷ்ண ரெட்டியாரின் தர்மபத்தினி.. இந்த கோயிலின் பரம்பரை தர்மகர்த்தா.. ரெட்டியாரும் நல்ல வசதி படைத்தவர்.. இந்த ஊரில், ரோட்டோரம் காம்பவுண்டு வைத்து உள்ளே ஒரு பங்களா போன்ற வீடு உண்டு..அம்பாசிடர் கார், வயலுக்கு டிராக்டர், மாடுகள் போன்றவை அங்கே புழக்கம்.. ரெட்டியாருக்கு, ஊருக்கு சற்று வெளியே ரைஸ்மில் உண்டு.. அது தவிர, பக்கத்து டவுனில், நாலைந்து கடைகள்,ஒரு சினிமா தியேட்டர் ஆகியன இருக்கிறது.. வசதி வாய்ப்புக்கு, எந்த குறையும் இல்லை.. ஒரே ஒரு பெண்.. அவளை மணம் செய்து சென்னைக்கு அனுப்பி விட்டார்கள்.. ரெட்டியார் அம்மா, இந்த கோயில் நிர்வாகத்தை பார்த்துக்கொள்கிறார்.. அந்த நந்தவனம் இருக்கும் பகுதியும், அவருக்கு சொந்தமானது.. அதனையும் கோவில் பெயருக்கு தர்மம் எழுதி,அதை பார்த்துக் கொள்ள வரதுவிடம் சொல்லிவிட்டார்..
வரதன் என்கிற வரதராஜனுக்கு ஏறக்குறைய 70 வயதுக்குமேல் ஆகிவிட்டது..முதலில் வரதன் என்ற பெயர் வரது என்று சுருங்கியது ..அவரைப் பொறுத்த மட்டில்,அவர் ஒரு ஆண்டாள் பைத்தியம்..எப்போதும் பாசுரங்கள்.. அதிலும், ஆண்டாளின் பாசுரங்களில் அவ்வளவு பைத்தியம்.. பாசுரங்களை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்.. அவரைப் பொறுத்த மட்டில், அந்த ஊர் ஆண் பிள்ளைகள் எல்லாம் கண்ணன்! பெண் பிள்ளைகள் எல்லாம் ஆண்டாள்.. எல்லாப் பெண்பிள்ளைகளையும் “ஆண்டாள்! ஆண்டாள்” என்றுதான் கூப்பிடுவார்.. இப்போது கூட கோவிலுக்கு உள்ளே நுழையும்போது “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்” என்று திருப்பல்லாண்டு பாசுரம் சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார்..
கோயில் வேலையை சுருக்க முடித்துவிட்டு, நந்தவனம் போய், அங்கே பூக்களை எல்லாம் பறித்து, அங்கிருக்கும் ஒரு மண்டபத்தில் உட்கார்ந்து தொடுப்பார்.. அவர் மாலை கட்டும் அழகே தனி.. அது அவருக்கு எப்படி பழக்கமானது என்று தெரியவில்லை.. ஆனால் பல காலங்களாக இந்த புஷ்ப கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார்.. அந்த மண்டபத்தின் ஒரு பகுதியில், கீழே ஒரு சிலை செய்யப்பட்டு கொண்டிருந்தது. ரெட்டியார் அம்மாவின் ரொம்ப நாளான விருப்பம்..ஒரு ஆண்டாள் சிலை செய்து, அந்த மண்டபத்திற்குள் ஸ்தாபிதம் செய்ய வேண்டும் என்று.. இரண்டு,மூன்று நாட்களுக்கு முன்பு கூட ஆண்டாள் சிலை செய்யும் கணபதி ஸ்தபதியைக் கூப்பிட்டு,” என்ன கணபதி? முடிஞ்சிடுச்சா வேலை? வருகின்ற பிரம்மோற்சவத்தில் ஸ்தாபிதம்பண்ணிடலாமா?” என்று கேட்டாள்.. அதற்கு கணபதி “அம்மா! வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சி.. இன்னும் கண்ணு மட்டும் தான் திறக்கணும்” என்று சொன்னார்..
வரதன் என்கிற ஆண்டாள் தாத்தா காலையில் ஒரு கப் காப்பி, பட்டரு டைய மாமி கொடுத்துவிடுவாள்.. மதியத்திற்கு கோயில் பிரசாதம்.. மட பள்ளியின் கோவிந்தாசாரி, இவருக்காக ஒருபிடி அதிகம் போட்டு பிரசாதம் செய்வார்.. முக்கால்வாசி நேரம் புளியோதரை, பொங்கல், தயிர்சாதம் போன்றவைகள்தான்.. இவைதான் நம்ம வரதுவிற்கு லஞ்ச்.. ராத்திரிக்கு பட்டர் ஆத்து மாமி ஏதேனும் டிபன் செய்து பட்டருக்கு கொடுப்பதோடு இவருக்கும் கொடுத்துவிடுவார்.. இது பல காலமாக நடக்கிறது.. பட்டருடைய அப்பா, அந்த கோயிலில்தான் கைங்கரியம் செய்து கொண்டிருந்தார்.. அது முதலே, வரது அவர்களது குடும்பத்தில் ஒரு நபராக இருந்தார்..இப்போதைய பட்டர் வரதுவை விட இளையவர்..
நம்ம ஆண்டாள் தாத்தா என்கிற வரது, எப்போதும் பெண் குழந்தைகளைக் கண்டால் “ஆண்டாள்” என்று கூப்பிட்டு, அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பார்.. குழந்தைகளை மாலை நேரத்தில் கூப்பிட்டு, கதைகள் சொல்வது, பாசுரம் சொல்வது என்று பழக்கப் படுத்திக் கொண்டிருந்தார்.. அந்த குழந்தைகளும் இவருடன் “ஆண்டாள் தாத்தா” என்று பாசத்துடன் பழகி வந்தனர்.. சில காலத்தில், குழந்தைகள் கூப்பிட்ட ஆண்டாள் தாத்தா என்கிற பெயர் பெரியோர்களிடம் ஒட்டிக்கொண்டது.. அவர்களும் இவரை ஆண்டாள் தாத்தா என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்.. குழந்தைகள் யாரும் இல்லை என்றாலும், ஆண்டாள் தனது எதிரில் இருப்பது போல ஒரு கற்பனை செய்துகொண்டு, அவராகவே கற்பனை ஆண்டாளிடம் பேசிக்கொண்டிருப்பார்.. இது முக்கியமாக பூ கட்டும் போது நடக்கும்..
“ஏன் ஆண்டாள்? எனக்கு வயசு ஆகுது அதனால தூக்கம் வரல நீ ஏன் தூங்க மாட்டேங்குற?”
“இல்ல தாத்தா! கண்ணனை போய் பார்க்கணும்.. கண்ணனோட விளையாடனும்.. வயசான அப்புறம், கண்ணன கல்யாணம் பண்ணிக்கணும்; என் நினைப்பெல்லாம் அதுதான்.. அப்புறம் எப்படி தூக்கம் வரும்?”
“அது சரி! நீ தூங்கல? மத்தவாளையும் ஏன் தூங்கவிடாமல் பண்ற? எல்லார் வீட்டிலேயும் போயி பாசுரம் பாடற”..
“தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய…
தூபம் கமழ துயிலணை மேல் கண் வளராய்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்”
“இப்படி ,ஒரு ஒரு ஆத்திலயும் போயி, அவாள எழுப்புவது, இல்லாம, யசோதையை எழுப்புற.. நந்தகோபர எழுப்பற, நப்பின்னையை எழுப்புற, ஏன் இப்படி பண்ற?”
“நான் என்ன தாத்தா? வருடம் பூராவுமா எழுப்பினேன்? இந்த மார்கழி ஒரு மாசம் தானே? அதுக்கு இப்படி சொல்றீங்க? இந்த ஒரு மாத காலம் வரை எழுந்து வாசல் தெளித்து, கோலம் போட்டு கண்ணனோட பேரை சொல்லி, பாட்டு பாடிண்டு இருந்தா, மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”
“சரி ஆண்டாளு பூ கட்டிமுடிச்சிட்டேன்.. நான் கோயிலுக்கு போறேன்”. இதுவரை கற்பனையில் அவர் பேசிக்கொண்டிருந்த ஆண்டாள் மறைந்தாள்.. இது நித்தம் நித்தம் நடக்கும் ஒரு வாடிக்கையான வேடிக்கை..
மறுநாள் வழக்கம்போல, கோயில் வேலையை முடித்துவிட்டு, நந்தவனம் போய், பூ பறித்து, மாலைகட்டி, பட்டரிடம் கொண்டு வந்தார் ஆண்டாள் தாத்தா.
“அண்ணா! இன்னும் 10 நாட்களில் பிரம்மோற்ஸவம் வருது.. அது இல்லாம, இன்னும் இரண்டு, மூன்று நாளில் ரெட்டியாரோட பொண்ணும், மாப்பிளையும் ,குழந்தைகளோட வராளாம். அதனால, ரெட்டியாரம்மா, எல்லாம் பொழுதுக்கும் ,இங்கதான் கோவிலை ,சுத்தி சுத்தி வருவா.. கோயில் சுத்தமா வச்சுக்கும்.. பூ கட்டும் மாலைகளை கொஞ்சம் அதிகப்படியாக கட்டுங்க.. பிரம்மோற்சவம்… அதற்கு இந்த மாலை போறாது.. நான் டவுன்ல, சொல்லி இன்னும் மாலைக்கு ஏற்பாடு பண்றேன்”
“அதுக்கு என்னப்பா? பேஷா பண்ணிட்டா போறது”
அன்று பிற்பகலுக்கு பின்னர், வானம் இருட்டிக் கொண்டு வந்தது.. மழை ஆரம்பித்து, சிறிது சிறிதாக தூரல்கள் பெரிதாக ஆயிற்று.. அப்பொழுதுதான், வரதுவிற்கு, நந்தவனத்தில் உரம் மூட்டையை மண்டபத்திற்கு வெளியே வைத்தது, நினைவிற்கு வந்தது.. வேகவேகமாக நந்தவனம் நோக்கி ஓடினார்.. அதற்குள் மழை சற்று வலுத்தது..நனைந்து கொண்டே அந்த மூட்டையை மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்து, திரும்பி பார்க்கும்போது செடிகளுக்கு பக்கத்தில் மண் சரியாக இல்லாததினால், பெய்யும் மழைத் தண்ணீர் வீணாக வேறு எங்கோ ஓடி கொண்டு இருந்தது தெரியவந்தது.. இவர், உடனே மண்வெட்டியை எடுத்து,எல்லாச் செடிகளுக்கும் நீர் நிற்கும் படியாக வரப்பு கட்டினார்.. இந்த அடை மழையிலும்,அவர் நனைந்து கொண்டு செய்தார்..
வீட்டிற்கு வந்த பிறகுதான், அவர் கவனித்தார்.. அவர் துவைத்து உலர்த்தி இருந்த, எல்லா துணிகளும், மழையில் நனைந்து விட்டிருந்தன
வேறு துணிகளும் இல்லை..அந்த ஈர வேட்டியை பிழிந்து விட்டு, இடுப்பில் ,அந்த ஈர மலையாள துண்டை சுற்றி கொண்டு இருந்தார்.. அன்று இரவு சாப்பிட்டு விட்டு படுத்தார்.. மறுநாள் காலை, பட்டரின் மனைவி, வழக்கம்போல் காப்பி எடுத்துக்கொண்டு வந்து, இவரை பார்க்கும்போது ,இவர் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்.. உடனே பட்டரைக் கூப்பிட்டு பார்க்கச் சொன்னாள்.. அவர் தொட்டுப்பார்த்து, உடல் அனலாய் கொதித்தது..”ஜுரம் வந்துவிட்டது போலிருக்கிறது” என்று சொல்லி, ரெட்டியார் அம்மாவிற்குசொல்லி அனுப்பினார்.. அந்த அம்மா, பக்கத்தில் டவுனில் இருந்த ப்ரைமரி ஹெல்த் சென்டரில் இருந்து ஒரு டாக்டரை வரவழைத்து, வரதுவை பார்க்கச் சொன்னாள்.. வரதுவிற்கு நல்ல ஜுரம்.. விஷக் காய்ச்சல் போல இருந்தது..டாக்டரும் ஊசி போட்டுவிட்டு, மருந்து, மாத்திரைகள் கொடுத்து,” ஒரு வாரம் போல ரெஸ்ட் எடுக்க வேண்டும்” என்று சொல்லி விட்டு போய்விட்டார்..
நாட்கள் நகர்ந்தன.. கொஞ்சம் கொஞ்சமாக, அவரது உடல்நிலை தேறியது..ஆனால் பழைய பலம் உடம்பில் இல்லை.. வயதாகிக் கொண்டிருக்கிறது.. அப்போதுதான், அது ஒரு வார காலமாக படுக்கையில் இருந்தார், என்பதே அவருக்கு நினைவுக்கு வந்தது..
“அடடா! பெருமாளுக்கு மாலை கட்டலயே!! ஆண்டாள் என்ன தேடி இருப்பாள்!” என்று ஆதங்கத்தோடு, மெல்ல நடந்து நந்தவனம் பக்கம் சென்றார்.. அங்கே பூக்கள் பறிக்க படாமல் செடியிலேயே வாடி கிடந்தன.. இவரை விட்டால் அத பறிச்சி தொடுப்பதற்கு யாரும் இல்லை..ரெட்டியாரம்மா, இந்த ஒரு வார காலத்திற்கு, டவுனிலிருந்து பூக்களை மாலை கட்டி தர ஏற்பாடு செய்து விட்டிருந்தாள்..இவர், ஒவ்வொரு செடியாக பார்த்து கட்டிக்கொண்டு, “அடடா! உங்கள எல்லாம் பறிச்சு பெருமாளுக்கு சாத்த முடியாம போயிடுச்சு, என்னோட நேரம், இப்படி படுத்துட்டேன், இனிமே சரியா உங்களை பரிச்சு, தொடுத்து, பெருமாளுக்கு சாத்திடலாம்” என்றபடியே மண்டபத்தை நோக்கி போனார்..
“ஆண்டாளு! ஆண்டாளு! இவ எங்க போனா?” அவர் கூப்பிட்டதும் சில நிமிடங்களில் அவரது கற்பனை ஆண்டாள் அங்கே தோன்றினாள் வழக்கம் போல..
“என்ன ஆண்டாளு?எப்படி இருக்க? ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு நான் உன்னை பார்த்து, சரி, சரி! பூ கட்ட நான்தான் இல்ல.. நீயாச்சும், பூக்கட்டி பெருமாளுக்கு சாத்தி இருக்கலாம் இல்ல?”
“அட போங்க தாத்தா! எனக்கு பூ கட்ட எல்லாம் தெரியாது.. கட்டி வச்சதை வேணும்னா, நான் போட்டு பார்த்து கொடுப்பேன்”
“பூ கட்ட கூட தெரியாத ஒரு பொண்ணா? நாளைக்கு கண்ணனை எப்படி கல்யாணம் பண்ணிப்பே?”
“தாத்தா! இப்படியெல்லாம் பேசாதிங்க.. எனக்கு கோபம் வரும்.. அப்புறம், நான் உங்களோட பேசமாட்டேன்” என்றபடியே அந்த ஆண்டாள் மெல்ல நகர்ந்தாள்..
நம்ம வரது,” ஆண்டாளு! கோவப்படாத! நில்லு! நான் சும்மா தமாசுக்கு சொன்னேன்!” என்றபடியே,தட்டுத்தடுமாறி நடந்தார்.. ஜுரம் வந்த உடம்பு.. ரொம்பவும் பலவீனமாக இருந்தது.. கால்கள் பின்னின.. தலை சுற்றியது.. அப்படியே “மடேர்” என்று கீழே விழுந்தார்.. தலை அங்கு வைத்திருந்த ஆண்டாள் சிலையின் மீது பட்டது.. மயங்கி விட்டார்..
சிறிது நேரத்தில், அவரைத் தேடிக்கொண்டு வந்த கோவில் காவலாளி குப்பன் இவருடைய நிலையை பார்த்துவிட்டு,” சாமி! சாமி” என்று அலறிக்கொண்டே பட்டரை பார்க்க ஓடினான்.. பட்டரும் வந்து பார்த்தார்.. ஆனால் அவர் வந்து பார்த்தபோது “வரது” என்கின்ற “ஆண்டாள் தாத்தா” ஆண்டாளோடு ஐக்கியமாகிவிட்டார்.. அவரது ஒரு கை ஆண்டாளை தழுவிய படியே இருந்தது…