சென்ற பதிவில், முக்தி அடைய கூடிய மார்கங்களை சொல்லும் போது சைவ நெறியின்படி, என்னென்ன மார்க்கங்கள் உள்ளன என்பது பற்றி சொல்லி, அவற்றில் சில நியதிகள் உள்ளன; அவை பற்றி அடுத்த பதிவில் தெரிவிப்பதாக சொல்லியிருந்தேன்.. அவை என்னென்ன என்பது பற்றி தற்போது பார்ப்போம். .
வேதம் ஓதுவதற்கும், வைதிக ஒழுக்கம் மேற்கொண்டு நடத்துவதற்கும், தகுதியை உண்டு பண்ணுவது “பூணூல் அணிவிப்பது “ஆகிய “உபநயன சடங்கு”..

அவ்வாறு சைவத் திருமுறைகள் ஓதுவதற்கு, சைவ ஒழுக்கம் மேற்கொண்டு, ஒழுகுவதற்கு, தகுதியை உண்டு பண்ணும் சடங்கு “சிவதீக்ஷை”யாகும்.. இந்த “தீக்ஷை £ஏழு வகைப்படும்.. அவை திருநோக்கு, ஸ்பரிசம், உரை பாவனை,சாஸ்திரம்,யோகம், ஔத்தரி என்பவையாகும்..
இவற்றுள்,” திருநோக்கு” என்பது, ஆசிரியர், தன் அருள் நோக்கத்தால், மாணாக்கனை பாச பந்தத்தில் இருந்து விடுவித்தல்..
“ஸ்பரிசம்” ஆவது ஆசிரியர், தன் திருக்கையை மாணவன் தலையில் வைத்து, அவனை பாசப்பணியிலிருந்து விடுவித்தல், அல்லது அவரது திருவடியை மாணவன் தலையில் வைத்து,பாச பணியிலிருந்து விடுவித்தல்..
“உரை” என்பது “நமசிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை பொருளுடன் உபதேசித்தல்.. இது “வாசக தீட்சை “எனப்படும்..
“பாவனை” என்பது ஆசிரியர், மாணவனை சிவமாக நினைத்து அருளுவது.. ‘பாவனை’ என்றால் ‘நினைவு ‘என்றும் கொள்ளலாம்..
“சாஸ்திர தீக்ஷை” என்பது சித்தாந்த சாஸ்திரங்கள், வாயிலாக முப்பொருள் இயல்பை உள்ளம் கொள்ள செய்து அதன் மூலமாக அகத்தின் இருள் நீக்கப் பெறல்..
“யோகம்” என்பது மாணவனின் ஆன்மாவை, யோக நெறியால் உயிர்ப்போடு சேர்த்துக் கொண்டு போய், தன் முடியின் மேல் விளங்கும் “பரம் ஜோதியுடன்” ஒன்றுவித்து தூய தாக்கி மீண்டும் மாணவனின் இதயத்தில் நிறுவுதல்..
“ஔத்திரி” எனப்படுவது குண்ட மண்டலங்களோடு கூடிய ஹோமத்தை செய்யப்படுவது.
சமய அனுஷ்டானத்தில், முதலில் செய்யப்படும் அஸ்திர சந்திகள், ‘மமல நீக்கம்’ குறித்தும், பின் இயற்றப்படும் ஆசமனம், மாயா மலத் தூய்மை குறித்தும், அதன்பின் செய்யப்படும் திருநீரணிந்தல்,கர ந்யாஸம், அங்க ந்யாஸம் என்பவை மூலம் மலநீக்கமும், தத்துவ விளக்கமும் குறித்து நிகழ்வதாகும்.. இவ்வாறு, பிற கிரியைகளும், மந்திரம், பாவனை என்பவையோடு இணைந்து காணும்போது “சன்மார்க்கம்” எனப்படும் ஞான நெறியோடு ஒத்து, அதற்கு நிமித்தமாக இருத்தல் சிந்தனைக்குரியது..
இனி, வைணவ மார்க்கத்தில் முத்தி அடைதல் குறித்து கூறப்பட்டுள்ளவை பற்றி பார்ப்போம்..
மோட்சத்தை அடைய விரும்புகின்ற ஒவ்வொரு ஆன்மாவும், அறிந்து கொள்ள வேண்டிய மந்திரங்கள் மூன்று.. அவை, “திருமந்திரம்” “த்வயம்” மற்றும் “சரம ஸ்லோகம்” என்ற வரிசையில் அமைந்திருக்கும்..
வேதாந்த தேசிகரால், காஞ்சிபுரத்தில் அருளிச் செய்யப்பட்ட “ஸ்ரீ ரகசிய பதவி” எனும் அருமையான நூலில் மேற்கூறப்பட்ட மூன்று மந்திரங்களின் பொருளை எடுத்துச் சொல்லி வழிகாட்டுகிறது.. இவை “தத்துவம், ஹிதம் மற்றும் புருஷார்த்தம்” ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக தெரிவிக்கின்றன.. முதலில், திருமந்திரத்தின் அமைப்பை பார்ப்போம்..
“ஓம் நமோ நாராயணா” என்பதே அந்த எட்டெழுத்து திருமந்திரம்.. இதில் ‘ஓம்’ என்பது ‘அ’ ‘உ’ ‘ம் ‘ஆகிய மூன்று எழுத்துக்களை கொண்ட பிரணவ மந்திரமாகும்.. என்றும் பிராட்டியை பிரியாத எம்பெருமானை குறிப்பது.. மேலும் ,இது எல்லா வஸ்துக்களுக்கும் காரணமாகவும், அவைகளை காப்பதாகவும் காட்டுகிறது.. இந்த ‘அ’ காரம் வேற்றுமை உருபின் மேல் ஏறி எம்பெருமானோடு ஜீவனுக்குள்ள பந்தத்தை தெரிவிக்கிறது..
நடு எழுத்தான ‘உ’ என்பது ஜீவனான ‘ஆத்மா’. எம்பெருமானை தவிர, வேறு எந்த ஒருவருக்கும் அடிமை அல்ல என்பதனை குறிக்கிறது..
மூன்றாம் எழுத்தான ‘ம’என்பது ஜீவன்.. எம்பெருமானால் காக்கப்படுகிறது என்பதனையும், அவனே ஞானம், ஆனந்தம், இவற்றின் வடிவமாக உள்ளவன் என்பதனையும் குறிக்கிறது..
இரண்டாம் பதமான “நம”என்பதன் பொருள் என்னவென்றால்,” நான் சுதந்திரமானவன் அல்ல”.. நான் பகவானின் சொத்து.. எம்பெருமானின் அடியார்க்கும் அடியேன் என்பது, வெளிப்படையான பொருள்.. சுருங்கச் சொன்னால் பெருமாளின் திருவடிகளில் “சரணாகதி செய்கிறேன்” என்பதுதான் பொருள்..
இந்த திருமந்திரத்தின் இறுதிப் பகுதியான “நாராயணாய” என்பதன் பொருளினைப் பார்ப்போம்..
நாரங்களுக்கு அயனமாக இருப்பவன்.. அதாவது, உயிருள்ளவை ,உயிரற்றவை ஆகிய அத்தனை பொருட்களுக்கும் இருப்பிடமாக இருப்பவன்.. நாரங்களை, தனக்கு அயனமாக உடையவன்.. அதாவது சேதன, அசேதனங்களை இடமாக கொண்டவர்.. அவர், எல்லா பொருட்களிலும் இருக்கின்றார்.. அவர் இல்லாத இடமே இல்லை.. இதுவரையில் திருமந்திரத்தை பற்றி பார்த்தோம்.. இனி” த்வய” மந்திரத்தின் பொருளை அறியலாம்..
“த்வயம்” என்பது தத்துவம், ஹிதம் மற்றும் புருஷார்த்தம் ஆகிய மூன்றின் பொருளை விரிவாக குறிப்பிடுகிறது.. “த்வயம் “இரண்டு பகுதிகளாக உள்ளது ..உடற்பகுதி தனி வாக்கியமாக பிரபத்தி ஆகிற(உணரக் கூடிய) உபாயத்தை சொல்கிறது.. பிற்பகுதி மோட்சம் எனும் பயணத்தைக் குறிக்கிறது.. ஒவ்வொரு பகுதியிலும், மூன்று மூன்று பதங்கள் உள்ளன..
“ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய நம:”
மேற்சொன்னவற்றில்’ “ஸ்ரீமன் நாராயண சரணௌ”என்பது, பெரிய பிராட்டியுடன் பிரியாமல் கூடியிருந்து ,அடைவதற்கு எளியவனாக இருப்பவரும், தாழ்ந்தவர்களுடன் கலந்து பழகுபவனும், ஆகிய நாராயணனின் திருவடிகளை பற்றுதலே நமக்கு துணையாக நிற்கிறது என்பது பொருள்..
அடுத்து, அதன் ஒரு பகுதியான”ஸ்ரீமதே நாராயணாய நமஹ”..இதில் “ஸ்ரீமதே”என்ற சொல்லுக்கு பிராட்டியை விட்டு என்றும் பிரியாதவன் என்று பொருள்..முற்பகுதியில், சரணடைவதற்கு உபாயமாக நின்றவனே ஜீவன் செய்யும் கைங்கரியத்தை ஏற்றுக்கொள்கிறார்..
அடுத்து” நாராயண” என்பதன் பொருள் என்ன என்றால், எல்லைகளற்ற, இனிமை உடைய, எல்லோருக்கும் அன்பான எம்பெருமான்..”த்வயத்தின்” முழுப் பொருள் என்னவென்றால் பெரிய பிராட்டியை க்ஷணமும் பிரியாத நாராயணனின் திருவடிகளில் கைங்கரியம் செய்வதற்காக சரணடைகின்றேன் என்பதாகும்..
அடுத்ததாக, மோட்சத்தை அடையும் மார்க்கத்தின் மூன்றாவது பகுதியான சரம ஸ்லோகத்தை பார்க்கலாம்..
திருமந்திரமும்,த்வயமும் சரணாகதி எனும் உபாயத்தை வெளிப்படுத்த இந்த சரம ஸ்லோகம் “அதை நீ செய்” என்று கட்டளையிடுகிறது..
“ஸர்வ தர்மாந் பரீத்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ ஸர்வ பாபோப்யோ மோக்ஷஸ்யாமி மாஸீஸ”
முதல் வரியில் சொல்லப்பட்டுள்ள பகுதிக்கு,” எல்லா தர்மங்களையும் விட்டு என் ஒருவனையே உபாயமாக அடைவாயாக” என்று பொருள்.. இங்கு தர்மம் என்று குறிப்பிடுவது இல்லற தர்மத்தின் பாச தளைகளை குறிப்பிடுகிறது..
பிற்பகுதியில் உள்ள வரியில் “என்னை உணர்ந்த, உன்னைப் பார்க்கும் அத்தனை பொறுப்புகளையும் ஏற்று கொண்ட நான்—–உன்னை மழைக்காக ஏங்கி இருக்கும் சாதகப் பறவை போல பகவானின் அருளைப் பெற காத்திருக்கும் சேதனனே(ஆத்மாவே) உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன் ‘வருந்தாதே”என்பதாகும்..
இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தினை ஆராய்ந்து பார்க்கும்போது, த்வயத்தின் முற்பகுதி, சரம ஸ்லோகத்தின் முற்பகுதிக்கும், அதனுடைய பிற்பகுதி, இதனுடைய பிற்பகுதிக்கும், பொருத்தமாக பொருள் தருவதனை பார்க்க முடிகிறது..
இந்து சமயத்தின் இரண்டு பெரும் பிரிவுகளாக சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரண்டிலுமே, ஆனந்த மார்க்கமான முக்தி நிலையை அடைவதற்கு சில நியதிகளையும் நியமங்களையும் வகுத்துள்ளன.. சைவ சமயத்தில் வகுத்திருந்த நியதிகளைப் பற்றி இக்கட்டுரையின் முன்பகுதியில் சொல்லியிருந்தேன்.. “சிவதீக்ஷை” யில் நீராதாரம், சாதாரம்என இருவகைப்படும்.. இறைவனே நேரில் வந்து தீட்சை அளிப்பது “நிராதாரம்” எனப்படும்.. இவ்வாறு தீட்சை பெற்றவர்கள் தேவார ஆசிரியர்கள் மூவரும் ஆவர்.. “சாதார தீட்சை” என்பது திருநோக்கு, ஸ்பரிசம், உரை, பாவனை ,சாஸ்திரம், யோகம் மற்றும் ஔத்தரி என்பவையாகும்.. இவை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்..
சைவ சமயத்தில் சமய வழிபாடு “நித்தியம், நைமித்திகம், காமியம்” என்று மூன்றாக வகைப்படுத்தப்படும்.. நித்தியம் என்பது அன்றாட பூஜை.. நைமித்திகம் என்பது சிறப்பான நாட்களில் பூஜை..காமியம் என்பது, பயன் கருதி குறிக்கோளுடன் செய்வது..இவை அனைத்தையும் சிறந்த ஆசிரியர்கள் மூலம் அறிய பெற்று, அதன்படி நடப்பவர்கள், “சிவ வேதியர்”.திருக்கோயில்களில் பரார்த்த வழிபாடு செய்வதற்கு உரியவர்கள் என்று சைவ ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது..
வைணவ சமயத்தை பொறுத்தமட்டில் ஆச்சாரிய சம்பந்தமே எம்பெருமானை அடைய உரிய வழியாக கருதப்படுகிறது.. மோக்ஷம் அடைவதற்கு உரிய வழிகளில் இறுதியானது ஆச்சாரிய அபிமானம்.. அதாவது,” குருபக்தி”. ஆச்சாரியன் ஒருவரே தமது சீடர்களுக்கு “பஞ்ச ஸம்ஸ்காரம்” செய்து வைப்பார்.. அதில் ஒன்றுதான் பெருமாளுடைய சங்கு சக்கரம் போன்ற திவ்ய ஆயுத இலச்சினைகளை(முத்திரைகளை) சீடனுடைய தோளில் பொறிப்பது.. இந்த பஞ்ச சம்ஸ்காரங்களாவன:-

ஸ்தாபம்:- தோளில் சங்கு, சக்கர முத்திரைகளை பதித்தல்..
புண்ட்ரம்:- திருமண்காப்பையும், ஸ்ரீ சூரணத்தையும் உடலில் 12 இடங்களில் இட்டுக் கொள்ளுதல்..
நாமம்:- அடியேன், ராமானுஜ தாசன் போன்ற தாஸ்ய நாமத்தை ஏற்றல்..
மந்திரம்:- திருமந்திரங்கள் மூன்றையும் ஆச்சாரியன் மூலமாக ஏற்றல்..
இஜ்யை:-வழிபாட்டு முறைகளை அறிந்து கொள்ளுதல்..
இந்து சமயத்தின் இரு பெரும் பிரிவுகளாக சைவம், வைணவம் ஆகியனவற்றில் பரம்பொருளை அடைய, தம் தமது கொள்கைகளின் அடிப்படையில் நியதிகள் ஏற்படுத்தியுள்ளன..
மார்க்கங்கள் வேறானாலும்,அடையும் நிலை ஒன்று தான்.. அதுவே “பரம்பொருள் “..அந்த மார்க்கம் ஆனந்த மார்க்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..
(நிறைவடைகிறது)