கி.மு……..கி.பி(பதிவு அத்தியாயம் 23

சென்ற பதிவில் குருவம்சம் “க்ஷேமகன்” என்ற அரசனுடன் வீழ்ச்சி அடைந்ததாக  குறிப்பிட்டு, அதன் பின்னர்” மகாஜனபதங்கள்” எனப்படும் “குடியேற்ற முறை” வடநாட்டில் நிலவியதாக குறிப்பிட்டு இருந்தேன்.. அந்த மகா ஜனபதங்கள் என்னென்ன? என்று இந்த பதிவில் சில குறிப்புகளை தருகின்றேன்..

ஜனபதங்கள்” அல்லது “குடியேற்றங்கள்” என அழைக்கப்படும் விவரம், பண்டைய நூல்கள் “அங்குத்தர நிக்காய” என்னும் பௌத்த நூலிலும்,” பகவதி சூத்திர” எனும் சமண நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது..இக் குடியேற்றங்கள், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ளன.. “மகாஜனபதங்கள்” என்பது சமஸ்கிருதச் சொல் ஆகும்.. இதன் பொருள் “பெரும் குடியேற்றங்கள்”. மகாஜனபதங்கள் பற்றி தெரிந்து கொண்டால், அதன் அடிப்படையில் எழுச்சி கண்ட நாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.. ஜனபதங்கள் என்பது கிமு 1200 ஆண்டு முதல் கிமு 600 வரை வட இந்தியாவில் இருந்த குடியரசுகள் அல்லது முடியரசுகள்ஆகும்.. ‘ஜனம்’ என்பதற்கு’ பெரும் சமூகக் கூட்டம்’ என்று பொருள்.. அதன் தலைவரை ‘பதி’ என்பர்.. அதுவே பின்னாளில் “ஜனாதிபதி “என வழங்கப்பட்டது.. பாணினியின் சமஸ்கிருத இலக்கண நூலான “அஷ்டாத்தியிலும்” இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் ஆகியவற்றில், 22 ஜனபத ராஜ்யங்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளன.. அவைகளில் குறிப்பிடத்தக்கவை, குரு நாடு, பாஞ்சாலம்,விதேகம், மற்றும் கோசலம் ஆகும்.. ஜன பதங்களுக்கு பிந்தியவை மகாஜனபதங்கள் ஆகும்..

மகாஜனபதம்

இந்த அகண்ட பாரதத்தின், வட மேற்கில் உள்ள காந்தாரம் முதல் கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையில் மொத்தம் 16 ஜனபதங்கள் இருந்தன.. அவைகள் பற்றி கீழே காண்போம்:-

1) அங்கம்

மகாபாரதத்தில் குறிப்பிட்ட அங்கதேசம், தற்போதைய பீகாரில் உள்ள மாவட்டங்களான பகல்பூர், பங்கா, பூர்ணியா, மங்கர், அதிகார், ஜமுய், ஆகியவற்றையும் ஜார்க்கண்டில் உள்ள தியோகர், கொட்டா, சாகேப்கஞ்ச் ஆகிய மாவட்டங்களும் இதில் அடங்கும்.. பிற்காலத்தில், வங்காளத்தின் சில பகுதிகளும், இத்துடன் இணைக்கப்பட்ட அங்கத்தின் தலைநகர் “சம்பா” என்றும் “மாலினி” என்றும் அழைக்கப்பட்டது.. இந்நகரம் வணிகர்களால் “சுவர்ண பூமி” என்றும் அழைக்கப்பட்டது.அந்த அளவுக்கு வணிகம் செழித்து செல்வம் கொழித்து இருந்துள்ளது..அதனால் தான் என்னவோ, கொடை வள்ளல் “கர்ணன்” அள்ள அள்ள குறையாமல் தானம் அளித்து வந்துள்ளார்.. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் சீனத் துறவியான ” ஃபக்கான்“என்பவர் தனது யாத்திரையை குறிப்பில் சம்பாவில் பல பௌத்த கோயில்கள் இருந்தன எனக் குறிப்பிட்டுள்ளார்.. மகாபாரத குறிப்பின்படி, “அங்கம்” எனும் பெயர், அதனைத் தோற்றுவித்த இளவரசர் “அங்கன்” என்பவர் பெயரால் வழங்கப்பட்டது.. ராமாயணத்தில், பரமேஸ்வரன், காமதேவனை எரித்து அவனின் உடல் பாகங்கள் (அங்கங்கள்) சிதறிய இடமே இதுவென்று குறிப்பிடப்பட்டுள்ளது.. புராண நூல்களில் அங்கம், வங்கம், கலிங்கம், விதர்ப்பம்,விந்தியம் போன்ற நாடுகளை “பூர்வ தக்ஷின” பிரிவுகளாக கூறப்பட்டுள்ளது..

புராண நூல்களில் அங்கத்தின் மன்னர் என்று “தத்தா ரத்தனை”குறிப்பிடுகிறது.. சமண குறிப்புகளிலும், ஹரிவம்சம் என்னும் நூலிலும், ” தாதிவாகனன்” என்பவனை அங்கனின் மகனாக குறிப்பிடுகிறது.. ஒரு காலத்தில், பலமிக்க அங்கதேசம், வளம் குன்றிய மகதத்தை வெற்றி கொண்டு இணைத்துக் கொண்டது.. ஆனால், பின்னர் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் “பிம்பிசாரன்” மகத ராஜ்யத்தை ஸ்தாபித்த போது அங்கதேசத்தை வென்றான்..

2).கோசலம்

ராமாயணத்தில் குறிப்பிடும் “கோசலநாடு “ஒரு வளமிக்க நாடாக,கி.மு.. ஆறாம் நூற்றாண்டில் திகழ்ந்துள்ளது.. இதன் தலைநகரம் அயோத்தி.. இந்நாடு இஷ்வாகு வழித்தோன்றல்களான “ஸ்ரீ ராமர்” மற்றும் அவரது வாரிசுகளால் ஆளப்பட்டு வந்துள்ளது.. இன்றைய இந்தியாவில், உத்திரப்பிரதேசத்தில் உள்ள ‘அவாத்’ எனும் பகுதியில் உள்ளது.. பிற்காலத்தில் மகதத்துடன் ஏற்பட்ட தொடர்ச்சியான போர்களினால் பலவீனப்பட்டு, கி.மு.நான்காம் நூற்றாண்டில், மகதத்துடன் இணைந்துள்ளது.. அதன் பின்பு மௌரியர் ஆட்சிக்கு உட்பட்டது..

3) காசி

“காசி ராச்சியம்” புராண கால நகரம் ஆகும்..இதன் தலைநகர் “காசிபுரம்” என்பது ஆகும்.. ராமாயணத்தில் தசரதனின் மூன்றாவது மனைவியான சுமித்திரை காசி ராஜ்யத்தை சேர்ந்தவர்.. மகாபாரத காலத்தில், காசி ராச்சியம், தெற்கு  கோசலையின் ஒரு பகுதியாக இருந்துள்ளது..

4) மகதம்

மகத நாடு, கங்கைக் கரையின் தெற்கே அமைந்துள்ளது.. இதில், தற்போதைய பீகாரின் பகுதி, கிழக்கு உத்தரப் பிரதேசம், வங்காளம் மற்றும் மத்திய பிரதேசத்தின் பகுதிகளையும் உள்ளடக்கியது.. பாகவத புராணம் மற்றும் மகாபாரதத்தில், மகத நாட்டின் புகழ்பெற்ற அரசனாக “ஜராசந்தனை” குறிக்கிறது.. மதுராவின் மன்னரும் தமது மருமகனுமான “கம்சனைக்” கொன்ற “ஸ்ரீ கிருஷ்ணர்” மீது தீராப் பகை கொண்டவன்.. பின்னர், ஜராசந்தனை, பீமன் உதவியுடன் மற்போரில் ஸ்ரீகிருஷ்ணர் கொன்று, அதனால் சிறைபிடிக்கப்பட்ட 86 மன்னர்களையும், இளவரசர்களையும் மீட்டனர்..

5) வஜ்ஜி அல்லது விரிஜ்ஜி நாடு

இதன் தலைநகரம் “வைசாலி” ஆகும்.. மகாவீரரும்,  கௌதம புத்தரும், இந்நாட்டிற்கு பல முறை விஜயம் செய்துள்ளனர்.. வஜ்ஜி நாட்டை 8 அரசகுலத்தினர் ஆண்டுள்ளனர்.. இவர்களில் சிறப்பு மிக்கவர்கள் “வஜ்ஜிகள், லிச்சாவிகள், விதேகர்ககள் மற்றும் ஜனத்திரிகர்கள்” ஆவர்..

6) மல்லம்

இந்த நாடு, மகத நாட்டுக்கு மேலே உள்ள சிறிய நாடாகும்.. மகாபாரதத்தில் இப்பகுதியை “மல்ல ராஷ்டிரம்”என்று கூறப்பட்டுள்ளது.. பிற்காலத்தில், இதுவும் மகதத்துடன் இணைந்தது..

7) சேதி

சேதிநாடு, விந்திய மலையின் வடகிழக்கு பாகத்தில் உற்பத்தியாகும் ‘சோனா’ நதிக்கரை வரை பரவியிருந்த பகுதியாகும்.. மத்திய இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் “புந்தெல்கண்ட்” பகுதி “சேதிநாடு” ஆகும்.. சேதி நாட்டை ஆண்ட அவர்களில் குறிப்பிடத்தக்கவர்..”சிசுபாலன்” ஆவார்..இவர் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறவி பகையாளி ஆவார்.. தருமரின் ராஜசூய யாகத்தில் கலந்து கொண்ட இவர் ஸ்ரீகிருஷ்ணரை நூறுமுறை வசைபாடிய குற்றத்திற்காக, ஸ்ரீகிருஷ்ணர் சக்கராயுதத்தால் இவரை கொன்றார்.. குருச்சேத்திரப் போரில், இவரது மகன் “திருஷ்டகேது”பாண்டவர் அணி சார்பாக நின்று போரிட்டான்.. இறுதியில் துரோணரால் கொல்லப்பட்டார்.. இவரது சகோதரியை மணந்து கொண்டார்..

8) வத்சம்

வத்ச நாடு, கங்கை மற்றும் யமுனை ஆற்றின் அருகில் இருந்தது.. அதன் தலைநகர் “கௌசாம்பி“.. தற்போது, அலகாபாத்திற்கு தென்மேற்கே அமைந்துள்ளது.. காசி மன்னன் “வத்சன்” என்பவரின் பெயரால் இந்நாடு அழைக்கப்படுகிறது.. இதன் தலைநகரமான கௌசாம்பியை அமைத்தவர்.. சேதி நாட்டின் இளவரசனான “குஷன் அல்லது குசாம்பன்” என்று ராமாயணமும், மகாபாரதமும் குறிப்பிடுகின்றது.. அஸ்தினாபுரம் கங்கையில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர், பரத மன்னன்” நிகேசு” என்பவன் அஸ்தினாபுரத்தை விட்டு நீங்கி கௌசாம்பியில் குடியேறினார் என புராணங்கள் குறிப்பிடுகின்றன.. இவன், ஜனமேஜயனின் முப்பாட்டன் பிள்ளையாகும்..

9) குரு

குரு நாடு,தற்கால” தில்லி, ஹரியானா, உத்தர கான்ட் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் தோவால் பிரதேசம் முதல் கோசாம்பி” வரை பரவியிருந்தது.. சந்திர குல மன்னர்” நகுஷன்” யயாதியின் கடைசி மகன் ‘புரு’ என்பவர் ஆவார்.. புருவின் 25 தலைமுறைகளுக்கு பின்னர் பிறந்தவர் ‘குரு’..இவரின் வழித்தோன்றல்களே “கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள்”..யயாதியின் மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்களே” யது” குலத்தினர்.. யது குலத்தின் ஒரு கிளையான ” வ்ருஷ்ணி” குலத்தில் பிறந்தவர்களே கிருஷ்ணன்,சுபத்திரை மற்றும் பலராமன் ஆவர்..குரு நாட்டின்தலைநகரம் ‘ஹஸ்தினாபுரம் ‘ஆகும்.. இந்நாடு கிமு 850 முதல் வீழ்ச்சியை நோக்கி சென்று கிமு 500ல் மறைந்தது..

10) பாஞ்சாலம்

பாஞ்சால நாடு, கங்கைச் சமவெளியில் அமைந்த நாடு.. தற்கால இந்தியாவின், தெற்கு உத்தரகாண்ட் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பகுதிகளை உள்ளடக்கியது.. மகாபாரதத்தில் குறிப்பிடும் ‘துருபத மன்னன்’ இந்நாட்டு அரசனாகும்.. இவரது மகள்கள் “சிகண்டி மற்றும் திரவுபதி “ஆகியோர், இது தவிர இவருக்கு “த்ருஷ்ட்யத்ம்னன்” என்ற மகனும் இருந்தார்..

11) மத்சய நாடு அல்லது விராட நாடு

பிந்தைய வேத கால நாடான “மத்சய நாடு” தற்கால ராஜஸ்தானின் வடகிழக்கு பகுதிகளை கொண்டது.. இதன் மன்னர் “விராடன்” மகாபாரதத்தில் பாண்டவர்களின் வனவாசம் அடுத்த அஞ்ஞாத வாசம் (தலைமறைவு வாசம்)நிகழ்ந்த இடம் அளித்த அவர் இந்த மன்னரே ஆவார்.. இவரது மகள் “உத்தரையை” பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் மகன் “அபிமன்யு” மணந்தார்..குருச்சேத்திரப் போரில் விராடனும் அவரது மகன் உத்தரனும் பாண்டவர்கள் சார்பாக போரிட்டனர்..

12) சூர சேனம்

சௌரசேனம் அல்லது சூரசேன நாடு தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும் பௌத்த சமய நூலான அங்குத்தர நியாயம்எனும் நூலில் ராமாயண காலத்தில் கிமு 1000 இருந்த நாடு இது எனவும் பின்னர் கிமு 700 இந்நாடு வலிமை மிக்க நாடாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது மகாபாரதத்தின் படி சூரசேனன் தற்கால மதுராவையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளாக இருந்து அதனை யாதவர்கள் ஆண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது

13) அஸ்மகம்

இந்த நாடு, விந்திய மலைத் தொடருக்கு தெற்கில் கோதாவரி ஆற்றுக்கும், மஞ்சிரா ஆற்றுக்கும்:இடைப்பட்ட பகுதியில் உள்ளது.. இது தற்கால இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், அதிலாபாத் மாவட்டம் மற்றும் மகாராஷ்டிரத்தில் நாந்தேட் மாவட்டம் மற்றும் யவத்மான் மாவட்டம் ஆகிய பகுதிகளை கொண்டது.. இதனை ஆண்ட அரசர்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை..

14) அவந்தி

தற்கால “மால்வா” பகுதியே ‘அவந்தி நாடு’ஆகும்.. புராணங்களின்படி, மகிழ்மதி மற்றும் உஜ்ஜெயின் நகரங்களை தலைநகரங்களாக கொண்டு “ஹேஹேயர்கள்”ஆண்டு வந்துள்ளனர்..

15) காந்தாரம்

பரத கண்டத்தின் வட மேற்கே அமைந்த பகுதி காந்தாரம் ஆகும்.. தற்கால பாகிஸ்தான் நாட்டின் புருஷ புரம் (பெஷாவர்) முதல் சுவாத் சமவெளி மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் மாகாணம் மற்றும் கந்தகார் மாகாணம் ஆகிய பகுதிகளை கொண்டது.. காந்தார நாட்டின் மன்னன் “சுபலன்” அவரது மகன் ‘சகுனி மற்றும் மகள் காந்தாரி’ ஆகியோர், மகாபாரத இதிகாசத்தில் பெரும் பெயர் பெற்றவர்கள்..

இந்த நாடு, காந்தார தேசத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.. தற்போதைய ஆப்கானிஸ்தானே, முந்தைய நாட்களில் காம்போஜம் என வழங்கப்பட்டு உள்ளது.. இந்த நாட்டினர், குதிரை வளர்ப்பு கலையில் சிறந்தவர்கள் என்பதால் “அஸ்வகர்கள்” என்று அழைக்கப்பட்டனர்..

16) காம்போஜம்

இதுவரை மகாஜனபதங்கள் என்னென்ன? என்பது பற்றி சிறுகுறிப்பு தங்களுக்கு அளித்துள்ளேன்.. இனி வரும் பகுதிகளில், வட மாகாணத்தை ஆண்ட “நந்த வம்சம் மற்றும் மௌரிய வம்சம்” ஆகியவை பற்றி சிறு சிறு குறிப்புகளாக அளித்து, இன்னும் இரண்டு அல்லது மூன்று பகுதிகளில் இந்த தொடரை நிறைவு செய்கிறேன்..

மீண்டும் சந்திப்போம்….

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: