சென்ற பதிவில், உபநிஷத்துக்கள் பற்றி விளக்கங்களை அளித்து, அவற்றில், “ஈசாவாஸ்ய உபநிடதம் கேன உபநிடதம் மற்றும் கடோபநிடதம்” ஆகியவை பற்றி விளக்கமாகப் பார்த்தோம்.. இன்றைய பகுதியில், அடுத்த மூன்று உபநிஷத்துக்கள் பற்றி பார்ப்போம்..
ஐதரேய உபநிஷத்து

“ஐதரேய உபநிஷத்து” ரிக் வேதத்தில் அமைந்துள்ளது.. இந்த உபநிஷத்திற்கும், ஸ்ரீ ஆதிசங்கரர் மற்றும் மத்வாச்சாரியார் ஆகியோர் விளக்க உரை எழுதியுள்ளனர்.. இதுவே மிகவும் பழமையான உபநிஷத் ஆகும்..
இந்த உபநிஷத், ஐதரேயர் என்ற முனிவர் மூலமாக வெளிப்பட்டதனால் “ஐதரேய உபநிஷத்” என்ற பெயர் வரலாயிற்று..” இதரா” எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்ணின் மகனாக பிறந்தவர் என்ற காரணத்தால்,” மகிதாசு ஐதரேயர்” எனப் பெயராயிற்று.. ஐதரேய பிராமணத்தின் ரிஷியும் இவரே.
மற்ற உபநிஷத்துக்கள் போல் அல்லாமல், இந்த உபநிஷத், பத்தி பத்தியாக உள்ளது.. அதனால், ஸ்ரீ ஆதிசங்கரர், இந்த உபநிஷத்தை, அத்தியாயங்களாக பிரித்து, முதல் அத்தியாயத்தில் மூன்று பகுதிகளும், இரண்டாம் அத்தியாயத்தில் ஒரு பகுதியும், மூன்றாம் அத்தியாயத்தில் ஒரு பகுதியாகவும் பிரித்து அமைத்துள்ளார்.. ஆதிசங்கரர் இந்த உபநிஷத்திற்கு மட்டும் நீண்ட முகவுரை எழுதியுள்ளார்.. “ஞான யோகம் மற்றும் சந்நியாசம் “குறித்து தனது முகவுரையில் விரிவாக விளக்கியுள்ளார்.. மேலும், இந்த உபநிஷத்தில் “பிரக்ஞானம் பிரம்மம்” “ஆத்மாவை இதம்”எனும் இரண்டு மகா வாக்கியங்கள் அமைந்துள்ளன..
ரிக்வேதத்தின் சாந்தி மந்திரமே, ஐதரேய உபநிஷத்திற்கும் அமைந்துள்ளது.. “ஓம் வாங்மே மனஸி எனத் துவங்கி……….. அவது மாமவது வக்தா மவது வக்தாரம்“என்று முடியும் இந்த சாந்தி மந்திரம் இதன் பொருள்:-
“எனது வாக்கு மனதில் நிலை பெறட்டும்.. மனம் வாக்கில் நிலை பெறட்டும்..ஒளிமயமான பரம்பொருளே! நீ ,என்னுள் ஒளிர்வாய் ஆக! மனமே, வாக்கே, நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வேதங்களின் உண்மையை எனக்கு அருள்வீர்களாக..! என்னால் கேட்கப்படுகின்ற அவை, என்னை விட்டு விலகாது இருக்கட்டும்! நான் கற்றவற்றை, பகலும் இரவும் சிந்திப்பேனாக! நான், உலகியல் உண்மைகளை அறிவேனாக! பிரம்மத்தைப் பற்றிய உண்மையை அறிவேனாக.?. அந்த இறைவன்என்னை காக்கட்டும்! எனது குருவையும் காக்கட்டும் எனக்கும் குருவுக்கும் காக்கட்டும்! ஆரோக்கியத்தை தரவேண்டும்! சீடனாகிய எனக்கு, வேதத்தை நன்கு கேட்கும் சக்தியும், குருவுக்கு அதனை நன்கு கற்றுத் தர சக்தியும், அருள வேண்டும்! ஓம்! சாந்தி: சாந்தி:சாந்தி:!!”
வேதாந்த சாத்திரங்கள் கேட்கும் போது நமக்கு வரும் தடைகளான சூழ்நிலைகளில் இருந்து வரும் தடை ,இயற்கையில் இருந்து வரும் தடை, நம்மிடமிருந்து நமக்கே வரும் தடை ,ஆகிய மூன்று தடைகளையும் அமைதி படுத்துவதன் மூலம், நம்மை நாமே காத்துக் கொள்வதற்கு, இறைவனிடம் வேண்டுவது, இந்த சாந்தி மந்திரத்தின் உட்பொருள்..
இறைவன் எந்த ஒரு உதவியும் இன்றி, தன்னிடமிருந்த சக்தியால், இந்த உலகை படைத்தார்.. படைத்த எல்லாவற்றுக்குள்ளும், அவர் ஊடுருவி இருந்தார்..உடல், உயிர், மனம், பிராணன்,ஆன்மா ஆகியவைகளின் தொகுதியே மனிதன்.. அவன் செய்யும் நல்வினை, தீர்வினைப் பயன்களுக்கு ஏற்ப உடல்களை மாற்றி செல்வது ஓர் உயிரின் பயணம்..உயிர் பழைய உடலை விடுவது மரணம்..புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு.. உடல், தாயிடம் இருந்து கிடைக்கிறது..உயிர், தந்தையின் வழியாக வருகிறது.. இதன் பிறகு, ஆன்மா கருவுக்குள் புகுந்து கொள்கிறது.. ஒரு பெண் கருவை சுமப்பது முதல் குழந்தை பிறக்கும் வரை நடைபெறும் நிகழ்வுகள் யாவும் விரிவாக இந்த உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளன..
பின்பு ஆத்ம தத்துவம் விளக்கப்படுகிறது..
நாம் யாரால் பார்க்கிறோமோ, கேட்கிறோமோ, மணங்களை முகர்கிறோமோ, இனிப்பு-கசப்பு என்று, எதை எதை உணர்கின்றோமோ,அவரே ஆத்மா..உலகின் இயக்கங்கள் கதிரவனால் நடைபெறுகிறது..ஆனால், கதிரவன், எதிலும் நேரிடையாக ஈடுபடுவதில்லை..அவனுடைய முன்னிலையில் தான் எல்லாம் நடைபெறுகின்றது..அதுபோல ஆத்மா என்பது ஒரு சாட்சியே.. ஆத்மா அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும், எல்லாமாக விளங்குவது அதுவே.. அந்த ஆத்மாவே, புத்தியாகவும், மனமாகவும் விளங்குகிறது.. உணர்வு,ஆளும் தன்மை, உலக அறிவு,பகுத்தறிவு, அறிவுக்கூர்மை, மனோதிடம், சிந்தனை, ஆற்றல், மனத்தெளிவு, மனக்கலக்கம், நினைவு, உறுதியான புத்தி, தீர்மானம், பிராணசக்தி, ஆசை, இன்ப நுகர்ச்சி ,என்பவை ஆத்மாவின் பல பெயர்கள்.. உடலியக்கம், மன இயக்கம் இரண்டும் அதுவே..
இறுதியாக, “பிரக்ஞானம் பிரம்ம” என்ற மகா வாக்கியத்தின் மூலம், இந்த பிரக்ஞானமே உண்மையில் ஆத்மா அல்லது பிரம்மம்..ஆத்மா, ஜீவன் இரண்டும் பிரம்மமாக உள்ளது.. ஆத்மாவே அனைத்தையும் படைக்கும் தலைவனான இறைவன்.. பூமி, காற்று, ஆகாயம்,நீர், நெருப்பு, ஆகிய பஞ்ச பூதங்களும் ஆத்மாவே.. சிறிய உயிரினங்களும் அதுவே.. விதைகளும் அதுவே..முட்டையில் தோன்றுபவையும் அதுவே.. கருப்பையில் தோன்றுபவையும் அதுவே..விதைகளிலிருந்து முளைப்பதும் அதுவே.. அசையும் பொருள், அசையாப் பொருள், பறப்பவை எல்லாம் அந்த ஆத்மாவே.. அனைத்தும் அந்த ஆத்மாவால் வழி நடத்தப் படுகின்றன.. பிரபஞ்சமே ஆத்மாவினால் வழிநடத்தப்படுகிறது.. ஆத்மாவே அனைத்திற்கும் காரணம்.. அந்த ஆத்மாவே இறைவன் ஆகும்.. அவர்தான் பரமாத்மா..
இந்த உபநிஷதத்தில் தான் சந்தியாவந்தன மந்திரம் உள்ளது.. சூரிய பகவானை தினமும் போற்றி வழிபடும் “கௌஷீதகி” முனிவர், பகலில் மற்றும் மாலையில் சூரிய பகவானை தினமும் வழிபடுவார்.
தைத்ரீய உபநிஷத்

இந்த உபநிஷத் கிருஷ்ண யஜுர்வேதத்தில் அமைந்துள்ளது.. இந்த உபநிஷத் 31 மந்திரங்களை கொண்டது..மொத்தம் மூன்று அத்தியாயங்கள் உள்ளன.. அத்தியாயங்கள் “வல்லிகள்” எனப்படும்.. வல்லிகள் பல பகுதிகளை கொண்டது.. பகுதிகளுக்கு அனுவாகம் என்று பெயர்.. இந்த உபநிஷத்திற்கும், ஸ்ரீ ஆதிசங்கரர் மற்றும் மத்வாச்சாரியார் விளக்க உரை எழுதியுள்ளனர்..
இதன் சாந்தி மந்திரத்தின் விளக்கம்:-
“மித்திரர், வருணதேவர், அர்யமா தேவர், இந்திர தேவர்,பிரகஸ்பதி தேவர், நீண்ட கால்கள் உடைய விஷ்ணு தேவர், எங்களுக்கு மங்களத்தை கொடுப்பவர்களாக இருக்கட்டும்! நேரில் காண கூடிய பிரம்மம் ஆகவும், அறிவு வடிவமாகவும், சத்ய வடிவமாகவும், உள்ள இரண்ய கர்ப்ப தேவருக்கு எங்கள் வணக்கங்கள் உரித்தாகட்டும்! அந்த இரண்ய கர்ப்ப தத்துவம் என்னையும் என் குருவையும் காப்பாற்றட்டும்! ஓம்! சாந்தி: சாந்தி: சாந்தி:!!”
இந்த உபநிஷதத்தின் சாரமாக கீழ்கண்டவைகள் உள்ளன:-
முதல் வல்லியில்
24 தேவதைகளை தியானம் அல்லது உபாசனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.. இறைவனை, ஓம்கார ரூபமாய் வர்ணித்து, ஓம்காரத்திடம் வேண்டுதல் விடுக்கப்படுகிறது.. ஆரோக்கியமான உடல், நல்வாக்கு, ஞாபகசக்தி, குருபரம்பரரையைக் காக்க நல்ல சீடர்கள் வேண்டப்பட்டு,இறுதியில் இறைவனுடன் ஒன்றாக கலந்து விடவேண்டும் என்று வேண்டப்படுகிறது.. ஓம்கார உபாசனம்,சம்ஹிதா உபாசனம், வ்யாக்ருதி உபாசனம், இரண்யகர்பன் உபாசனம், பாங்காத்த உபாசனம், விளக்கப்படுகிறது..
இரண்டாவது வல்லியில்
பிரம்மத்தை விளக்குகிறது.. எது சத்தியம் ஆகவும், ஞானமாகவும், எல்லையற்றதாகவும், இருக்கிறதோ, அதுவே பிரம்மம்.. அந்த பிரம்மத்தை, மனதுக்குள் அறிய வேண்டும்..அந்த பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மம் ஆகவே இருந்து, அனைத்தையும் அடைகிறான்.. பிரம்மத்தை “அத்தியாரோபம் அபவாத” நியாயம் தத்துவம் மூலமாக விளக்கப்படுகிறது..
பிரபஞ்சமும், ஜீவராசிகளும், பிரம்மத்திலிருந்து தோன்றியது என்று பிரம்மத்தை காட்டி, இந்த படைப்பை காரியமாக காட்டுவது, “அத்யாரோபம்” என்பதாகும்.. பிறகு, காரியமான இந்த உலகம் காரணத்தில் இருந்து வேறாக இல்லை என்று காரியத்தை நீக்குவது “அபவாதம்” ஆகும்.. ஒரு ஜீவனின் அனாத்மாவாக இருக்கின்ற உடல், ஐந்து கோசங்கள் ஆக பிரிக்கப் படுகிறது..அவை 1) அன்னமய கோசம் 2) பிராணமய கோசம் 3) மனோமய கோசம் 4) விஞ்ஞானமய கோசம் 5) ஆனந்தமய கோசம்.ஒவ்வொரு கோசத்தையும் நீக்கும் பொழுது, அந்த கோசத்துடன் இந்த உலகமும் சேர்ந்து நீக்கப்படுகிறது.. உதாரணமாக அன்னமய கோசமான இந்த ஜட உடல், ஆத்மா அல்ல என்று அன்னமய கோசத்தை நீக்கும் பொழுது, இந்த ஜட உலகமும் நீக்கப்படுகிறது..இந்த விதமாக 5 கோசங்களும் நீக்கப்படும் பொழுது அனைத்துப் படைப்புகளும் உண்மையல்ல என்று உணர்த்தப்பட்டு, ஆனந்த வடிவமாகவும் ஆத்மாவும் உள்ள பிரம்ம தத்துவம் விளக்கப்படுகிறது..
ஈஸ்வரனே, மாயையின் துணை கொண்டு இந்த படைப்பிற்கு உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் விளக்கப்படுகிறது.. பிரம்மம் அறியப்படாத பொழுது, பயத்திற்கும், அறியப்படும் பொழுது, அபயத்திற்கும் இருப்பிடமாகவும், விளங்குகிறது.. இறுதியில் ஞானி பிரம்மத்தை அடைகிறான்.. ஆனால் அஞ்ஞானியோ, பிரம்மத்தை அடைவதில்லை.. இந்த விசாரணைக்கு “ஆனந்த மீமாம்சை”என்று பெயர்..
மூன்றாவது வல்லியில்
அன்னதானம் வலியுறுத்தப்பட்டு, உணவை நாம் எவ்விதம் கொடுக்கிறோமோ, அவ்விதமே நமக்கும் கிடைக்கிறது என்ற நியதி கூறப்படுகிறது.. இறுதியாக, ஜீவ பிரம்ம ஐக்கியம் கூறி, இந்த ஆத்ம ஞானம் அடைந்தவன், ஆனந்தத்தில் களிக்கிறான் என்பதுடன் இந்த உபநிஷத் முடிவடைகிறது..
பிரச்ன உபநிஷத்

“பிரச்ன”என்கின்ற சமஸ்கிருத சொல்லுக்கு “கேள்வி” என்று பொருளாகும்.. இந்த உபநிஷத் அதர்வண வேதத்தை சார்ந்தது.. அறிவை அடைய விரும்பும் 6 பேர்கள், பிப்பிலாத முனிவரை அணுகி ஆறு கேள்விகள் கேட்டனர்.. எனவே இந்த உபநிஷத்திற்கு “பிரச்ன உபநிஷத்” என்று பெயர் வழங்கலாயிற்று.. இறை உணர்வில் நிலைபெற்ற 6 மாணவர்களான,” சுகேசன், சத்யகாமன், கார்க்கியன், கௌசல்யன், பார்க்கவன் மற்றும் கபந்தி” ஆகியோர் வேள்விக்கான விறகுகளுடன், உலக உற்பத்தி, மனிதனை இயக்கும் சக்திகள், பிராணன் எவ்வாறு செயல்படுகிறது? ஓங்கார தியானம்? ஆன்மா எங்கு உள்ளது? என்று அறிய, பிப்பலாத முனிவரை அணுகி கேட்ட கேள்விகளால் இந்த உபநிஷத் ஆறு அத்தியாயங்களாக உள்ளது.. இந்த உபநிஷத் பிரம்ம (ஆத்ம வித்யா) மற்றும் ஓம்கார தியானத்தை பற்றியும் விரிவாக கூறுகிறது..
அதர்வண வேதத்தில் இந்த உபநிஷத் இருப்பதனால், அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரமே இந்த உபநிஷத்திற்கும் பொருந்துகிறது..
“பத்ரம் கர்ணேபி ச்ருணுயாம தேவா:………” எனத் தொடங்கும்சாந்தி மந்திரத்தின் பொருள்:-
” தேவர்களே! செவிகளால் நல்லதை கேட்போமாக! கண்களால் நல்லதை பார்ப்போமாக! உறுதியான உறுப்புகளுடன், வேதங்களால் உங்களை நாங்கள் புகழ்ந்து கொண்டு, எவ்வளவு ஆயுள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோ, அதை அனுபவிப்போமாக! ஓங்கிய புகழ் அடைந்த இந்திரன், எங்களுக்கு நன்மை அருளட்டும்! அனைத்தையும் அறிகின்ற சூரிய தேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும்! பல லட்சம் மைல்கள் தடையின்றி செல்லும் கருட தேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும்! பேரறிவுடைய பிரகஸ்பதி எங்களுக்கு நன்மையை அருளட்டும்!! ஓம்! சாந்தி: சாந்தி: சாந்தி:!!(இங்கு சாந்தி என்ற சொல்லுக்கு தடைகள் நீங்கட்டும்என்று பொருள் இயற்கை சூழ்நிலை உடல் முதலிய மூன்று இடங்களில் இருந்து நமக்கு வரும் தடைகள் அமைதி அடைய வேண்டும், அதாவது நீங்க வேண்டும் என்று மூன்று முறை கூறப்படுகிறது)..
அந்த ஆறு கேள்விகள் என்னென்ன? அவற்றுக்கான பதில்கள் என்ன?என்பதனைப் பற்றி பார்ப்போம்..
முதல் கேள்வியும் அதற்கான பதிலும்:-
உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின?
பதில்: உயிரினங்களை படைக்க கடவுள் விரும்பினார்.. அதற்காகதவம் செய்தார்.. அதன்பின், வானத்தையும் பிராணனையும் படைத்து, இந்த அனைத்து உலகங்களையும் அதனில் பொருத்தினார்..உயிர்களை உற்பத்தி செய்வதற்காக, காற்று, நெருப்பு, நீர், பூமி ஆகியவற்றைப் படைத்தார்..
2) மனிதனை இயக்குபவர்கள் யார்? யார்?
பதில்: வானம், காற்று, நெருப்பு, நீர், பூமி, பேச்சு, மனம், பார்வை, கேட்கும் திறன், ஆகிய தேவதைகளே மனிதனை இயக்குகிறது..
3) பிராணன் எவ்வாறு செயல்படுகிறது?
பதில்: பிராணன் ஆன்மாவிலிருந்து தோன்றுகிறது.. மனிதனும், அவனுடைய நிழல் போல, ஆன்மாவில், பிராணன் பரவியுள்ளது.. மனதின் செயல் பாடுகளால் அது இந்த உடலில் வருகிறது..
4) இந்தக் கேள்வியில் ஐந்து துணைக்கேள்விகள் உள்ளன..
மனிதன் எத்தனை நிலைகளில் இருக்கின்றான்? அதன் தன்மைகள் என்ன?
பதில்: ஒரு மனிதன் மூன்று நிலைகளில் வாழ்கின்றான்.. 1. உறக்க நிலை. 2. விழிப்பு நிலை 3. கனவு நிலை..
1. உறக்க நிலையில், மனிதனின் புலன்கள் அனைத்தும் மனதில் ஒடுங்கி விடுகிறது..அப்போது, அவன் கேட்பதில்லை பார்ப்பதில்லை ,முகர்வதில்லை, உணர்வதில்லை,சுவைப்பதில்லை ,பேசுவதில்லை, மகிழ்வது இல்லை ,.ஆனால் உறக்க நிலையில், பிராண சக்தி ஆகிய மூச்சுக்காற்று மட்டும் விழித்து கொண்டு இருக்கின்றது..
2. கனவு நிலையில், ஒரு மனிதன் தன் பெருமையை தானே அனுபவிக்கின்றான்.. விழிப்பு நிலையில் பார்த்தவைகள், கேட்டவைகள், அனுபவித்தவைகளை, கனவு நிலையில், சில நேரங்களில் அனுபவிக்கிறான்.. கனவு நிலையில், காண்கின்ற மனிதர்களையும், மற்றவைகளையும், உண்மையில் இல்லை.. மனமே அனைத்துமாக மாறி, மீண்டும் அவற்றை அனுபவிக்கிறது..
3 உறக்க நிலையில் இன்பத்தை அனுபவிப்பது யார் எனில், ஒளியால் ஆக்கிரமிக்கப்படுகின்ற மனமே, இந்த இன்பத்தை அனுபவிக்கிறது..
4. ஒளியால் அடக்கப்படுகின்ற மனம் என்பது என்ன? என்பதற்கு, உறக்க நிலையில், புலன்கள், மனம் ,ஆழ்மனம் ஆகியவைகள் ஒடுங்கி விடுவதால், இங்கே வெளி உலக அனுபவங்கள் மற்றும் மனவுலக அனுபவங்களான கனவுகளும் இல்லை.. மேலும், புத்தி, சித்தம், கூட ஒடுங்கி விடுகிறது..ஆனால், நான் என்ற உணர்வு மட்டுமே விழித்து இருக்கிறது..ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்ததும், “ஆனந்தமாக உறங்கினேன்” என்கிறான்.. இங்கு, மனம் உணர்வுத் திரளில், உணர்வு குவியலில், ஒடுங்கி விடுகிறது.. என்று பொருள்..
5. அனைத்திற்கும் ஆதாரமாக எவ்வாறு செயல்படுகிறது? என்ற கேள்விக்கு பிப்பலாத முனிவர் கூறுகிறார்:
கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், அறிவு, சித்தம், ‘ நான்’ என்ற உணர்வு, பிராணன் ஆகிய அனைத்தும் ஆன்மாவில் அடங்கி விடுகிறது..
6. ஐந்தாவது கேள்வியை சத்யகாமன் என்ற மாணவன், ஓங்காரத்தின் பெருமை மற்றும் ஓங்கார மந்திரத்தின் ஆழ்ந்து தியானிப்பவன் அடையும் நிலை பற்றி கேட்கிறான்..
பதில்: இறைவனை குறிக்கும் ஒரு சொல் இருக்குமானால், அது ‘ஓம்’ என்ற ஒலியே என்று பதஞ்சலி முனிவர் குறிப்பிடுகிறார்..இறைவனை உருவ வடிவில் தியானிப்பவன், சாதாரண நிலையில் இருப்பவன்.. உயர் நிலையில் இருப்பவன், இறைவனை உருவம் அற்ற நிலையில் தியானிப்பவன்.. ஓங்கார மந்திரத்தின் ‘அ” உ” ம’ என்ற எழுத்துக்களின் சேர்க்கையால் உருவானது.. இதுதான் முதன் முதலாக படைக்கப்பட்ட மந்திரம்.. இந்த மந்திரத்தின் விரிவே “காயத்ரி மந்திரம்” . ஓம்கார மந்திரத்தை தியானிப்பதால், உணர்வில் ஒளி பெறுகிறார்.. மனம் பலம் பெறுகிறது.. இறுதியாக பிரம்மத்தில் ஐக்கியம் அடைகிறான்..
7. ஆறாவதாக, பரத்வாஜரின் மகன் சுகேசன், பிப்பலாத முனிவரிடம் ஆத்மாவைப் பற்றி கேட்கிறான்.. அதற்கு அவர் “ஆத்மா என்பது பிரம்மத்தின் பிரதி பிம்பமாக நம் இருதய குகையில் உள்ளது.. ஆத்மாவிலிருந்து உடலில் கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம்,புத்தி, சித்தம்,அகங்காரம், பிராணன், உயிர் என்ற 16 அம்சங்கள் தோன்றின.. இந்த 16 அம்சங்களால் உருவான ஜட உடல் அழிந்தாலும், ஆத்மா அழிவதில்லை.. எனவே ஆத்மாவை அறிந்து மரணத்தை வெல்லலாம் என்று கூறுகிறார்.”

அடுத்த பதிவில் முண்டக உபநிஷத் மாண்டூக்கிய உபநிஷத் மற்றும் சாந்தோக்ய உபநிஷத் ஆகியவை பற்றி பார்க்கலாம்..
மீண்டும் சந்திப்போம்……