திரு மரு மார்பன்

ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தில் குரு பரம்பரை என்பது மிகவும் விசேஷமானது..பெரிய பெருமாள், பிராட்டி, என்று ஆரம்பித்து வழிவழியாக நாதமுனிகள்,ஆளவந்தார், பகவத் ராமானுஜர் என்று வளர்ந்து, மணவாள மாமுனிகள் உடன் நிறைவு பெறுகிறது.. மேற்படி குருபரம்பரையில், ஸ்ரீ பகவத் ராமானுஜரின் அத்யந்த சீடர், திரு மருமார்பன் எனப்படும் ஸ்ரீவத்ஸாங்கர்.. இவர், பெருமாளின் மார்பில் உள்ள ஸ்ரீ வத்ஸம் எனும் மருவின் அம்சமாக அவதரித்தவர்..

காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமம்” கூரம்..” அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்த்து அதற்கு “கூரநாடு”என்று அழைக்கப்பட்டது.. இந்த கூர நாட்டினைஆட்சி செய்தவர் அனந்தன் என்பவர்..இவருக்கும், இவரது மனைவி பெருந்தேவி நாயகிக்கும் திருக்குமரராய் கலியுக வருடம் 4180ல், சௌமிய வருடம், தை மாதம், அஸ்தம் நட்சத்திரத்தில், அவதாரம் செய்தவர் ஸ்ரீ வத்ஸாங்கர்.

இவர் பல சாஸ்திரங்களையும் கற்றறிந்தார்.. இவருக்கு திருமணம் செய்து வைக்க, இவரது பெற்றோர்கள் முயன்றபோது, காஞ்சியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்து கொண்டிருந்த, திருக்கச்சி நம்பிகளின் அபிமானத்தைப் பெற்று, வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து வந்தார்..இதனால், இவரது பெற்றோர்கள் தான் ஆட்சி செய்த கூர நாட்டு பதவியை இவரிடம் ஒப்படைத்துவிட்டு திருப்பதி சென்று விட்டனர்..

அரசனாகிய பின்னர், ஒரு நாள், நள்ளிரவில் நகர சோதனை மேற்கொண்டபோது, ஓர் அந்தணர் வீட்டில், பலத்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.. அதனை இவர் மறைவில் நின்று கேட்டார்.. அந்த அந்தணர் குடும்பத்தில், அவரது ஒரே மகள் ஆண்டாள் என்பவள், மணம் முடிக்கும் வயதில் இருப்பதையும், ஆனால், ஜோதிடர்களின் கருத்துப்படி, அவளை மணப்பவர் மரணிப்பார், என்பதனால், அவளுக்கு திருமணம் ஆகாமலேயே இருந்தது..இதன் காரணமாக அந்த அந்தணர், ஊர் பழிக்கு அஞ்சி, அவளைக் கொன்றுவிட உத்தேசித்து இருப்பதை அறிந்தார்..

மறுநாள், அந்த அந்தண பெற்றோரை அவைக்கு அழைத்து, அப்பெண்ணை தாமே திருமணம் செய்து கொள்வதாகவும், இருந்த போதிலும், தங்கள் இடையே தாம்பத்திய உறவு இருக்காது என்றும் கூறி ஆண்டாளை மணம் முடித்தார்.. ஆயினும் பிரம்மச்சரியத்தை தொடர்ந்தார்..அரசுப் பதவியும், அளவில்லா செல்வமும், இருந்தபோதிலும், ஒரு துறவியைப் போலவே வாழ்ந்தார்.. ஏழை, எளியோர்களுக்கு எல்லாம் பொன்னும் பொருட்களும் வாரி வழங்கினார்..தினமும் இவரது அரண்மனைக் கதவுகள், காஞ்சி வரதராஜப் பெருமானின் அர்த்தஜாம பூஜை மணியோசை கேட்ட பின்புதான் சாத்தப்படும்..

ஒரு நாள், தனக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்துவந்த திருக்கச்சி நம்பிகளிடம், வரதராஜப் பெருமாள், ஸ்ரீ வத்ஸாங்கரின் அரண்மனை கதவு சாத்தப்படும் ஒலி கேட்டு “அது என்ன சத்தம்?”என்று நம்பிகளிடம் கேட்க, அவர் “பெருமாளுக்கு அர்த்தஜாம பூஜை முடிந்த பின்னரே, அவரது அரண்மனை கதவு சாத்தப்படும்.. அது அதுவரை வறியோர் களுக்கு அன்னதானம் இடப்படும்” என்று தெரிவித்தார்.. இதனை அறிந்த பெருமாள் மிகவும் ஆச்சரியப்பட்டார்.. இந்த விவரத்தை நம்பிகள் ஸ்ரீ வத்ஸாங்கரிடம் தெரிவிக்க, அவர் மேலும் தனது செல்வங்களை அற வழியில் செலவிட்டார்..

பின்னர், திருக்கச்சி நம்பிகளின் மூலமாக பகவத் ராமானுஜரின் கைங்கரியங்களை கேள்விப்பட்டு, அவரிடம் சீடராக சேர்ந்தார்.. இவர் கூரத்தில் பல கைங்கர்யங்கள் செய்து வந்ததால் “ஸ்ரீ வத்ஸாங்கர்” என்பதை கூரத்தாழ்வார் என்று அழைக்கப்பட்டார்.. கூரத்தாழ்வார், பகவத் ராமானுஜரை விட 8 வயது பெரியவர்..இருந்தபோதிலும், ராமானுஜரிடம் மிகுந்த பக்தி செலுத்தி, அவரது முதன்மைச் சீடராக இருந்து வந்தார்..

“மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்சமுக் குறும்பாம்

குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்

பழியைக் கடந்து மிஇராமானுசன் புகழ் பாடி அல்லா

வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தம் அன்றே

இவ்வாறு ராமானுஜ நூற்றந்தாதி யில் சொல்லப்பட்டுள்ளது..

இந்த ராமானுஜ நூற்றந்தாதியை இயற்றியவர் திருவரங்கத்து அமுதனார் எனப்படும் கூரத்தாழ்வாரின் மாணவர்களுள் ஒருவர் ஆவார்..

கூரத்தாழ்வாருக்கு வியாச பட்டர், பராசர பட்டர் என்று இரண்டு குமாரர்கள் உண்டு.. இவர்களில் பராசரபட்டர், பிற்காலத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ விஷ்ணுஸகஸ்ர நாமத்திற்கு இன்றும் புகழும் படியான ஓர் உரை எழுதியுள்ளார்.அது “பகவத் குண தர்ப்பணம்.” என்பதாகும்..

திருவரங்கத்தில் உள்ள பகவத் ராமானுஜரின் சீடர் ஆகும் பொருட்டு, ஒரு நாள் தன் மனைவியை அழைத்துக் கொண்டு, திருவரங்கம் செல்லும் வழியில், காட்டில் கள்ளர்கள் பற்றிய அச்சம் வர மனையாளை நோக்கி “மடியில் கனமிருந்தால் அன்றோ வழியில் பயம்; ஏதாவது வைத்திருக்கிறாயா?’ என்று கேட்டார்.. அதற்கு அவர் மனைவி “தாங்கள், சிறு வயது முதலே உண்பதற்கு பயன்படுத்திய தங்க வட்டிலை தங்களுக்காக கொண்டு வந்திருப்பதாக” கூறினார்.. கூரத்தாழ்வார் அதனை வாங்கி விட்டெறிந்து விட்டார்..

திருவரங்கத்தில் யாசகம் பெற்று வாழ்ந்த கூரத்தாழ்வார் தம்பதியர், ஒரு நாள், உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்க, அவரது மனைவி ஆண்டாள், அரங்கனிடம் வேண்ட, அரங்கநாதன், கோயில் ஊழியர்கள் மூலம் உணவு தந்து அருளினாராம்..

ராமானுஜரின் வைணவ சமய பரப்புதலைப் பொறுத்துக் கொள்ளாத மதியிழந்த உறையூர்ச் சோழன், நாலூரான் என்னும் அமைச்சரின் தந்திரத்தால் ராமானுஜரை கைது செய்ய உத்தரவிட்டான்.. இதை அறிந்த கூரத்தாழ்வார், தன் குருவைப் போல வேடம் தரித்துக் கொண்டு, அரசனிடம் சென்று தாம்தான் ராமானுஜர் என்று தெரிவிக்க, முடிவில் அவரது கண்களை தோண்டும் படியாக அரசன் ஆணையிட்டான்.. ஆனால் கூரத்தாழ்வாரோ தாமாகவே தமது கண்களைத் தோண்டி எடுத்து விட்டார்.. இவ்வாறு 12 ஆண்டுகள் இதே நிலையில் திருமாலிருஞ்சோலை மலையில் வாழ்ந்து வந்தார்..

பிற்காலத்தில் இதை அறிந்த ராமானுஜர் வரதராஜ பெருமாளிடம் வேண்ட கூரத்தாழ்வார் கண்பார்வை மீண்டும் வந்தது..

கூரத்தாழ்வார், ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவம், சுந்தர பாஹு ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், வைகுண்ட ஸ்தவம், ஸ்ரீ ஸ்தவம், தாடி பஞ்சகம் மற்றும் பிரார்த்தன பஞ்சகம் என ஏழு வடமொழி நூல்களை இவர் இயற்றியுள்ளார்.. அவர் கண்பார்வை இல்லாத காலத்தில் இயற்றப்பட்ட ஸ்தவம், சுந்தர பாஹூ ஸ்தவம்..” ஸ்தவம்” என்றால் துதி என்று தமிழில் பொருள்..

பெருமாளை வேண்டும் முன், தாயாரின் கருணையும், கடாக்ஷமும் தேவை..எனவே தாயாரினை துதி செய்ய ஸ்ரீஸ்தவம் வகை செய்கிறது..

“ஸ்வஸ்தி ஸ்ரீர்திசதாத் அசேஷ ஜகதாம்
ஸர்கோபஸர்க்க ஸ்திதி தீ:

ஸ்வர்க்கம் துர்கதிமா பவர்க்கிக பதம்

ஸர்வஞ்ச குர்வன் ஹரி:!

யஸ்யா வீக்ஷ்ய முகம் ததீங்கிகித பராதீனோ

விதத்தேகிலம் கிரீடேயம் கலு பார்ட் தாசஸ்ய ரஸதா

ஸ்யாதை கரஸ்யாத்தயா!!

இவ்வாறு துவங்கும் ஸ்ரீ ஸ்தவம் 11 ஸ்லோகங்களை கொண்டது..

இந்த முதல் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டது யாதென்றால், பகவான் ஹரி நாராயணன், படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று பணிகளையும் செய்யும்போது, பிராட்டியின் அழகான முகக்குறிப்பு என்ற இணக்கத்தின் காட்சியிலேயே இவைகளை செய்கிறார்.. இத்தகைய சக்தியுடைய, எல்லா காலங்களிலும், இடங்களிலும் அகலகில்லேன் இறையும் என்று “ஸ்ரியப்பதி” பகவானுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற விஷ்ணு பத்தினியான பிராட்டியே! மிகுந்த பக்தியும் ஞானமும் அளித்து என்னை ரக்ஷிப்பாயாக!!”

கூரத்தாழ்வாரின் உதவியினால் பகவத் ராமானுஜர் தன் குருவாகிய ஆளவந்தாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்களை நிறைவேற்றினார்.. அன்னமிட்டும், அதோடு நில்லாது ராமானுஜருக்காகவும் வைஷ்ணவத்திற்காகவும் தன் இரு கண்களையும் இழந்தார்..

திருமங்கையாழ்வாரின் பாடல்களில் பெரிய திருமொழி க்கு இவர் தனியன் பாடியுள்ளார்..

ஆசார்ய கைங்கர்யத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த இவர், தன்னுடைய 123ஆம் வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.. வருத்தமுற்ற ராமானுஜ ஆச்சாரியாரிடம், “ஆசாரியனை வரவேற்கவே, முன்னரே திருநாடு செல்வதாக” முகமன் கூறி சென்றார்.

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள கூரம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் கூரத்தாழ்வார் தனி சன்னதி உள்ளது..

இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று இந்த திருக்கோயிலுக்கு நான் சென்றிருந்தேன் திவ்ய தரிசனம் கிடைத்தது..

“லக்ஷ்மி நாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்

அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்”

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: