துருவனின் கதை

“குழந்தைகளே! வரிசையாக வந்து நில்லுங்க.. நான், ஒவ்வொருத்தருக்கும், சனிடைசர் தரேன்.. கையை தொடச்சிக்குங்க.. எல்லோரும் அவங்க இடத்துல போய், தள்ளி தள்ளி, ஒக்காந்துக்கங்க,, நான் வந்துட்டேன்”
“குழந்தைகளே!! போன வாரம், எனக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு.. அதனால, உங்கள பாக்க முடியல..இந்த வாரம், உங்களுக்கு புதுசா, ஒரு கதையோடு ஆரம்பிக்கலாம்..”
“ஒரு காலத்துல, உத்தானபாதன், அப்படினு, ஒரு ராஜா இருந்தான்.. அவனுக்கு சுனிதி, சுருச்சி அப்படி என்று இரண்டு வைஃப்.. சுனிதிக்கு, “துருவன்” என்ற ஒரு பையன்.. சுருச்சிக்கு, “உத்தமன்” அப்படின்னு ஒரு பையன்.. இதிலென்ன? அப்படின்னா, உத்தமன், அவனோட அப்பா, உத்தானபாதன் மடியில, எப்போதும் உட்கார்ந்து இருப்பான்.. அவன் துருவனை, அவங்க அப்பா மடியிலே உக்கார விடமாட்டான்.. சுருச்சியும்,உத்தமனுக்குதான் சப்போர்ட் செய்வாள்.. அப்படித்தான்.. இதனால துருவன், ரொம்ப வருத்தப்பட்டு, அழுதுகிட்டு, அவன் அம்மா சுனீதி கிட்ட போயி, நடந்ததை சொன்னான்.. அவள், அவனை, சமாதனம் பண்ணி, “நாம போன பிறவியில் ஏதோ பாவம் பண்ணி இருக்கோம்.. அதனால தான் நமக்கு இந்த நிலைமை” அப்படின்னு சொன்னா.. அதுக்கு துருவன்” இப்ப நாம என்ன செய்யலாம்?” அப்படின்னு கேட்டான்.. அதுக்கு அவ” நீ, சாமி கிட்ட போய் வேண்டிக்க” அப்படின்னு சொன்னா.. “காட்டில் போய் தவம் பண்ணி, சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டா ,அவர் உனக்கு நல்லது செய்வார்” அப்படீன்னு சொன்னா..
“துருவனும், அவன் அம்மா சொன்னதை கேட்டு, காட்டிற்கு தவம் செய்ய போனான்.. அப்போ அவனுக்கு வயது ஐந்து.காட்டில், உள்ள முனிவர்கள் எல்லோரும், அவனைப் பார்த்து” நீ, எதற்காக இங்கே வந்தாய் ?”என்று கேட்டார்கள்.. அதற்கு, அவன் “நான் தவம் செய்யப் போகிறேன்.. எனக்கு நீங்கள் வழி காட்டுங்கள்” என்று கேட்டான்.. அவர்கள் எல்லோரும் “நீ ரொம்ப சின்ன பையன்..உனக்கு தவம் எல்லாம் வேண்டாம்.. நீ போய் உங்க வீட்டுல, அப்பா அம்மா கூட சந்தோஷமா இரு” அப்படின்னு சொன்னாங்க.. ஆனா, துருவன் அத கேக்கல.. பிடிவாதமா” நான் தவம் செய்யப் போறேன்” அப்படினு சொல்லிட்டு இருந்தான்.. கடைசியில், ரிஷிகள் எல்லாம் அவனுக்கு ” விஷ்ணுவை நோக்கி தவம் பண்ணு.. நாங்க மந்திரம் சொல்லித் தர்றோம்” அப்படின்னு சொன்னாங்க.. அதே மாதிரி அவங்க மந்திரம் சொல்லிக் கொடுத்தாங்க..
“துருவன் தவம் செய்ய ஆரம்பிச்சான்.

பல வருஷம், விடாம விஷ்ணுவை தியானம் பண்ணி, தவம் செஞ்சான்.. தேவர்களும், அசுரர்களும், அவன் தவத்தை கலைக்க, எவ்வளவோ முயற்சி பண்ணாங்க ..ஆனால் அவன் தன் முயற்சிய கை விடல.. தவம் செஞ்சுகிட்டே இருந்தான்..”
“இந்த மாதிரி, பல வருஷம் கழிச்சு, ஒருநாள் விஷ்ணு அவனுக்கு முன்னாடி வந்தார்
..

வந்து,” துருவா! உனக்கு என்ன வேணும்? எதுக்காக என்ன பார்த்து தவம் பண்ண?” அப்படின்னு கேட்டார்..”
“அவன், தனக்கு முன்னாடி பெருமாளே வந்துட்டதனால, அவனுக்கு வேற எதுவும் கேட்க தோணலை..”ஹே! பகவானே! எனக்கு வேறெதுவும் வேண்டாம்.. உன்ன பாத்துட்டேன்.. அதுவே போதும்” அப்படின்னு சொன்னான்..”
“ஆனா, மகாவிஷ்ணு, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. நீ என்னை நோக்கி, பல வருஷம் தவம் பண்ணி இருக்கே.. அதனால, நான் ஏதாவது உனக்கு வரம் கொடுக்கணும்.. நீ என்ன வேணும்னு கேளு?” அப்படின்னு மறுபடியும் சொன்னார்..”
“துருவனுக்கு தன்னோட அப்பா மடிமேல் உட்கார வேண்டும் என்கிற ஆசை எல்லாம் போய் விட்டது.. அவனுக்கு என்ன கேட்கறது.. அப்படின்னு யோசிச்சு, “எனக்கு யாருக்கும் கிடைக்காத ஒரு இடம் வேண்டும்” என்று வேண்டினான்..
“விஷ்ணுவோ, சந்தோஷப்பட்டு அவனுக்கு ஒரு உலகமே கொடுத்தார்.. அவனை ஒரு நட்சத்திரம்(star) ஆக்கினார்..

அதுக்கு பேரு துருவ நட்சத்திரம்(Polaris) அப்படீன்னு பேரு.. அந்த நட்சத்திரம், நட்சத்திர மண்டலத்தில(galaxy) இருக்கு.. கடல்ல, கப்பல்ல, போறவங்களுக்கு, டைரக்க்ஷன் தெரியணும்னா ,அந்த நட்சத்திரத்தைப் பார்த்துத் தான் போவாங்க.. ஏன்னா? அவங்க எந்த திசையில் இருக்காங்களோ, அதற்கு ஒரு நேர் வட திசையில் இந்த நட்சத்திரம் தெரியும்.. பழங்காலத்தில், இந்த “மேக்னடிக் காம்பஸ்” எல்லாம் கிடையாது.. அதனால, இந்த துருவ நட்சத்திரம் தான் அவங்களுக்கு திசையை காட்டுற ஒரு நட்சத்திரமா இருக்கு..”
“நாம, இப்போ சினிமாவுல “சூப்பர் ஸ்டார்” அப்படின்னு யார சொல்றோம்?”
“ரஜினிகாந்த்”
“அதே மாதிரி, “துருவ நட்சத்திரம்” எல்லா நட்சத்திரங்களுக்கும், ஒரு சூப்பர் ஸ்டார்.. இந்த கதையிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது?”
“சூப்பர் ஸ்டார் துருவன்”
“அது மட்டும் இல்ல.. நாம, நம்ம லைஃப்ல, ஒரு குறிக்கோளோடு முயற்சி செஞ்சா, நமக்கு எல்லாம் கிடைக்கும்.. நீங்களும் நல்லா படிச்சு.. நல்ல உத்தியோகம் பார்த்து, நல்ல நிலைமைக்கு வரலாம்.. எதற்கும் முயற்சி பண்ணுங்களானா,கண்டிப்பா, துருவன் மாதிரி, ஒரு நல்ல ஸ்டார் ஆகலாம்.. என்ன? செய்வீங்களா? சரி! இன்றைய கதை அவ்வளவுதான்.. நீங்க போயி, படுத்து நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. அடுத்த வாரம், வேற ஒரு கதையோடு, நாம மீட் பண்ணலாம்.. ஓகே! குட் நைட்!!”
“குட்நைட் தாத்தா!!”