
இந்த திருக்கோயிலுக்கு நான் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்று இருந்தேன்.. அப்போது, உள்ளே சில மராமத்து வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.. தரைகள் கொத்தப்பட்டு, கற்கள் பதிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது..
இந்தக் கோயில், மேட்டுப்பாளையம்- கோவை இருப்புப் பாதையின் இடையே உள்ள, பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து, மேற்கே 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்தலம்.. தார் ரோடு, மலை வரை உள்ளது.. தரையில் இருந்து நான்கு கிலோமீட்டர்.. இம்மலைக்கு கீழிருந்து மேல் செல்ல அமாவாசை அன்று ஜீப் வசதி உள்ளது..

இந்த கோயிலை அடைந்தவுடன், ராஜகோபுரம் முதலில் நம்மை வரவேற்கிறது..அதற்கு பிறகு, அர்த்த மண்டபத்தில் சக்கரத்தாழ்வாரும்,யோக நரசிம்மரும் ஒருங்கே ஒரு சன்னதியில் காட்சி தருகின்றனர்.. அதற்கு அடுத்து, மகா மண்டபத்தில், ஊஞ்சலில் பள்ளி கொண்ட கோலத்தில், அரங்கநாதன் உற்சவ மூர்த்தியாக காட்சி தருகிறார்.. அவருடன் செங்கோதை மற்றும் பூங்கோதை தாயார்கள் வீற்றிருக்கின்றனர்..

அர்த்த மண்டபத்தில் இருந்து கொண்டே,கருவறையில் எழுந்தருளியுள்ள ரங்கநாதரை வழிபடலாம்..அரங்கநாதர் என்ற பெயரைக் கேள்விப் பட்டதும், நாம் பெருமாள் சயன திருக்கோலத்தில் தான் இருப்பார் என்று யூகிப்பது தவறு.. இந்த திருத்தலத்தில், பெருமாள் நாலரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.. அலங்காரப் பிரியர் என்பதனால் மலர் மாலைகள் குவிந்து காணப்படுகிறது.. நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கி திருமுக மண்டலம்.. சுயம்பு மூர்த்தியாக வெளிப்பட்டதாக, ஸ்தல புராணங்கள் கூறுகின்றன..
மூலவருக்கு, வடக்குப் பகுதியில், பூங்கோதைத் தாயாரும் தென்பகுதியில் செங்கோதைத் தாயாரும் தனித்தனி சன்னதியில் நின்றபடி அருள்புரிகின்றனர்.. கோவிலின் தென்புறத்தில், தேவியரோடு, பரவாசுதேவன் தனிச் சன்னதி கொண்டுள்ளார்.. அதற்கு முன்புறம்,பன்னிரு ஆழ்வார்கள் கோயில் கொண்டுள்ளனர்.. கோயிலின் பின்புறம் தும்பிக்கை ஆழ்வார், ராமானுஜர்,காளியண்ணன் சுவாமி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.. மண்டபத்தை ஒட்டி ஆஞ்சநேயர், கோரிக்கைமாலைகள் சாற்றியபடி காட்சி தருகிறார்..கோவிலின் தல விருட்சம் காரை மரம்..
நான் சென்றிருந்த நேரம், மதியம் சுமார் ஒரு மணி இருக்கலாம்.. அந்த நேரத்தில் தரிசனம் முடித்து வெளியே வரும் போது பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தனர்…நானும் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கிக் கொண்டேன்.. அப்போது, அங்கே அமர்ந்திருந்த ஒரு பெரியவர் நான் “எங்கே இருந்து வருகிறேன்?” என்று கேட்டார்.. நான் “சென்னையிலிருந்து “என்று சொன்னேன்.. அவர் “இந்தக் கோயில் தங்களுக்கு எப்படி தெரிந்தது?” என்று கேட்டார்.. நான் அவருக்கு” என்னிடத்தில் வந்தாரை வாழவைக்கும் வைணவ தலங்கள் என்று ஒரு அன்பர் திரு கே சாய்குமார் என்பவர் எழுதிய புத்தகம் உள்ளது.. அதில் 234 வைணவத் தலங்களிலன் பூரண வழிகாட்டியாக உள்ளது.. அதில் குறிப்பிட்டிருந்தது, தங்களது கோவில் பற்றிய விவரம்” என்று தெரிவித்தேன்.. அவர் அந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, விவரங்கள் குறித்து கொண்டு, என்னிடத்தில் ஒரு கோரிக்கை வைத்தார்.. “சென்னையிலிருந்து இவ்வளவு தூரம் வந்து இருக்கிறீர்கள்.. நாங்கள் மதியம் இங்கே இடப்படும் அன்ன பிரசாதத்தை சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் “என்று ..”எனது மனைவி சற்று நோய்வாய்ப்பட்டவர்கள் நடந்து வருவது சிரமம்” என்று சொன்னேன் ..அதற்கு அவர் “அவர்களுக்கு, நாங்கள் இங்கேயே சாப்பாடு கொடுக்கிறோம்..தாங்கள் அங்கே அன்னதானக் கூடத்திற்கு வந்து சாப்பிட வேண்டும்” என்று அன்புக் கோரிக்கை வைத்தார்.. நானும் தட்டாமல் எனது கார் டிரைவருடன் அன்னதானக் கூடத்திற்கு சென்றேன்..

அங்கே சுமார் 300 முதல் 400 வரை மக்கள் அமர்ந்திருந்தனர்.. எங்களுக்கு, ஒரு பகுதியை தந்து அமர்ந்து கொள்ளச் சொன்னார்கள்.. நான் அமர்ந்து கொண்டேன்.. அப்போது ஒரு அன்பர்,” ஐயா தங்களை தர்மகர்த்தா அழைக்கின்றார்” என்று சொல்ல நான் சென்றேன்.. அந்த கூடத்தில், பெருமாளுடைய திருவுருவச் சிலையை வைத்து விளக்கேற்றி, தூபங்கள் ஏற்றப்பட்டு, அவருக்கு முன்பாக அன்னதானம் பிரசாதம் நைவேத்தியத்திற்காக வைக்கப்பட்டு இருந்தது.. நான் அருகில் சென்றதும் எனக்கு மாலை ஒன்றை அணிவித்து என்னைக் கவுரவப்படுத்தினார்கள்.. அதன்பின்பு பூசை முடித்து, பிரசாதம் வழங்கப்பட்டது..நானும் அரங்கனின் கருணையை நினைத்து பிரசாதத்தை மனமார ஸ்வீகரித்தேன்..எங்கிருந்தோ சென்ற எனக்கு, அந்த அரங்கன் இப்படி ஒரு வாய்ப்பினையும், கௌரவத்தையும் அளிப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.. ஒரு இனிமையான அனுபவம்.. இனி தலவரலாறு காண்போம்..
சூத மகரிஷி நைமிசாரண்யத்தில், அத்திரி உள்ளிட்ட ரிஷிகளுக்கு “க்ஷீரவனம்” என்னும் இத்தல பெருமையை உணர்த்தியதாகவும், இத்தலத்து பத்ம தீர்த்தத்தில் நீராடி, துர்த்தமன் அம்பை மற்றும் க்ருதாஸூ ஆகியோர் சாபம் நீங்கப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.. மூலவர் சுயம்பு..சுமார் நான்கரை மணி நேர மலையேற்றத்தில் உள்ள “மேல்முடி ரங்கநாதர் தலம்” சில மைல் தூரத்தில் உள்ளது.. அந்த தலம் இப்பெருமானின் சிரசு என்றால் இது வயிற்றுப் பகுதி என்றும், காரமடை ரங்கநாதர் கோவில் திருவடி பகுதியாகவும், விளங்குவதாக ஐதீகம்.. மாடு மேய்ப்பவன் ஒருவனின் மாடு, தினமும், இப்பெருமான் மீது பால் சொரிய, கௌண்டன்ய கோத்திரத்தில் வந்த காளிதாசர் என்கிற ஊர் பெரியவரின் அறிவுரைப்படி, பர்ணசாலை அமைத்து தினமும் அபிஷேகம் செய்ய, இந்த சுயம்பு பெருமாள் வெளிப்பட்டார்.. இருளர்கள் என்னும் ஆதிவாசிகள், கட்டிய கோவில்..அவர்கள், இந்த திருப்பணிக்கு உபயோகித்த கைவண்டி இன்றும் கோயிலில் உள்ளது..மணல் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, கிடைக்கும் இடத்தை ,பெருமாளே காட்டியதாக குறிப்பு உள்ளது.. இக்கோயிலுக்கான உற்சவரும் பெருமாளாலாயே குறிப்பிடப்பட்டு, கீழ் திருப்பதியில் குளக்கரையில் முகத் தழும்புகள்( அனந்தாழ்வாரால்பெருமாளின் முகவாய்க் கட்டையில் ஏற்பட்டது.. அது பச்சை கற்பூரத்தை அலங்கரிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே) திருமண் இட்டு,இருக்கும் நபரிடம் பெற்றுக்கொள்ளுமாறு பணித்தார்.. அவ்வாறு, கோயிலுக்கு உற்சவரும் அமையப் பெற்றதாக வரலாறு.. தெப்பக்குளம் தீர்த்தம் உள்ளது..

கோயிலின் தரிசன நேரம் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை..
வாசக அன்பர்களே நாங்கள் கோவை செல்ல நேரிட்டால் இந்த திருக்கோயில் கோயிலுக்கு ஒரு முறை கண்டிப்பாக தரிசனம் செய்து அரங்கனின் அன்பும் ஆசியும் பெறுவீர்களாக..
Dear Readers
This is the temple of Lord Ranganathan in Palamalai, near Coimbatore.. This is in Periya naiken palayam on the Coimbatore Mettupalayam road.. It’s in the hills and tar road is available upto the temple.
Lord Ranganathan is in standing position.. The deities of Thayars of Sengothai and Poongothai are located on the both sides of the shrine.. other than that, deities of Ramanuja, Azhwars, Hanuman are located.. The Sthala viruksham is Karai tree.. There’s a temple pond..
Readers, if you happen to visit Coimbatore, please make a visit to this temple and have the blessings of Lord Ranganathan..