சைவ சமய மார்கம்
வீடுபேறு எனும் சொல்லில் குறிப்பிடும் வீடு,என்ற சொல்லுக்கு, பொருள் “விடுதலை” என்பதாகும்..அதாவது, “பாசப்பற்றை விடுதல்”.. பற்று உள்ள வரையில், ஒருவருக்கு பிறவியும், பிறவியால் வரும் துன்பங்களும், நீங்காது..ஆகவே, சிவனைப் பற்றி கொண்டால், வீடுபேறு அடையலாம்..

பாசப் பற்று விடுதற்கு, முறையான கடவுள் வழிபாடு, தவம் செய்தல் வேண்டும்.. கடவுள் வழிபாடு இரண்டு வகைப்படும்.. ஒன்று பொது வழிபாடு, மற்றொன்று சிறப்பு வழிபாடு.. பொது வழிபாட்டில், இல்லறம், துறவறம் என்ற இரு மார்க்கமாக வீடுபேறு அடைய இயலும்.. அன்பு, அருள் இவைகளை அடிப்படையாகக் கொண்டு நிகழத் தக்கது.. கொல்லாமை, வாய்மை, கல்லாமை, பிறன்மனை நோக்காமை, இரக்கம், வஞ்சனை இன்மை, பொறையுடைமை, மனம் கலங்காமை, அளவறிந்து உண்ணுதல், உள்ளத் தூய்மை, எனும், இந்தப் பத்தும் ஒழுக்கத்தில் சிறந்தவைகள் ஆகும்.. இது இயமம் என்று குறிப்பிடப்படும்..
தவம்:-
மனம் ஒன்றி இருத்தல், கடவுள் கொள்கை, பொருளை நல்ல வழியில் ஈட்டி, அதனை நல்ல வழியில் செலவு செய்தல், தன்னில் உயர்ந்தோரை வழிபடுதல், உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களை கேட்டல், பிறப்பு, செல்வம், செருக்கில்லாமை, பகுத்து உணர்தல், இறைவன் திருப்பெயரை எண்ணும் விரதம், எனப்படும் இந்த பத்தும் நியமம் என்று வகைப்படுத்தப்படும்.. இவ்விரண்டும், யோக நிலைக்கு ஆதாரங்களாகும்..இவை பொது வழிபாட்டில் அடங்கும்..
சிறப்பு வழிபாடு என்பது, இறைவனை உணர்ந்து, அவனைச் சார்தலால், அவனிடத்தில் உள்ள அருள் குணங்களை, நம்மிடத்து மேம்பட்டு விளங்குமாறு செய்யும் ஒழுக்கமாகும்..இவை, சரியை, கிரியை, யோகம், மற்றும் ஞானம் என்று நால்வகைப்படும்.. முதல்வன் எனப்படும் ஈசன், அருவம், அருவுருவம், உருவம், என மூன்று வகைப்படும்.. பொருளில், உள்ள மூன்றிலும், முதற்கண் ஒரு வடிவம் ஒன்றினையே பொருளென்று உணர்ந்து குலத்தொழில் அளவில் செய்வதே” சரியை”எனப்படும்.. சந்தியாவந்தனம், நமச்சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் எண்ணுதல், கோயில் மற்றும் சிவனடியார்களுக்கு தொண்டு செய்தல் இதில் அடங்கும்..
மேற்கூறிய தொண்டு நெறியைப் பயின்று சிவபூஜை, சிவதன்மம் என்னும் பெயரால் செய்யப்படும் காரியங்களை,”கிரியை” எனப்படும்.. சிவபூஜைக்கு முன் அங்கமாக பூதசுத்தி, தானசுத்தி, திரவிய சுத்தி, மந்திரசுத்தி, இலிங்க சுத்தி எனும் ஐவகை சுத்திகள் உள்ளன..இந்த வழிபாட்டில், மந்திரம், கிரியை, பாவனை என்பவை முறையே, வாய், கை, சிந்தை என்பவற்றால் கருத்தூன்றி செய்வது.. இந்த பூசை முதலில் மனதளவில் செய்து, பின்னர் புறத்தே உள்ள சிவலிங்கத்தை பூஜை செய்வது.. பூஜா என்பதன் பொருள் பூ- பூர்யந்த (நிறைகின்றன) ஜா-ஜாயன்தே(தோன்றுகிறது). அதாவது துன்பத்திற்கு ஆழமான கன்மம் எல்லாம் பூர்த்தியாகி, வியக்திக்குக் காரணமான ஞானம் தோன்றுகிறது.. இந்நிலை இறைவனுக்கு மைந்தர் போன்ற நிலை..
அடுத்தது யோகம்.. கிரியையில் நின்றார்க்கு நிகழும் பக்குவ முதிர்ச்சியால் நாத விந்துக்களாகிய சோதி வடிவான பொருளை காண்பர்.. முன்னால் கூறப்பட்ட உருவம், அருவுருவம், எனப்படும் வடிவங்களை, வழிபடுவதற்கு, என உணர்ந்து வழிபடும் நிலையே யோக நிலை எனப்படும்..
ஐம்புலன்களை அடக்கி, உயிர்ப்பை, சுழுமுனையில் செலுத்துதல்..அதனால், மூலாதாரத்தில் விளங்கும் அசபா சக்தியை நிலைத்திருக்க செய்தல்.. தான் உடல் பற்று நீங்கி, பேரொளியாகிய சிவஜோதி, கண்டு, அது தானாக பாவித்தல், என்னும் இயல்பினை உடையது யோகமாகும்..

இயமம், நியமம், இருக்கை(ஆசனம்), வளிநிலை(பிராணாயாமம்) தொகைநிலை (பிரத்தியாகாரம்) பொறைநிலை(தாரணை) நினைத்தல் (தியானம்) அதுவாதல் (சமாதி) எனும் எட்டும் யோக அங்கங்கள் ஆகும்.. இந்த எட்டும், அணிமா, மகிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம், கரிமா எனப்படும் அஷ்ட்டமா சித்திகள் ஆகும்.. இந்த நெறி இறைவனுடன் தோழமை நெறி எனப்படும்..
மேற்கூறியபடி, சரியை, கிரியை, யோகங்களை பயின்றவர்களுக்கு, இறைவனை உள்ளவாறு உணரும் வியாபக உணர்வு, ஞானம் எனப்படும்.. இதன் உண்மை இயல்புகள், கேட்டல்,சிந்தித்தல்,தெளிதல், மற்றும் நிஷ்டை எனப்படும்..இந்த நான்கு நிலைகளை கடந்து, பரம்பொருளான ஈசனை அடைதலே, சைவ சமயத்தில் சிறந்த மார்க்கமாக கருதப்படுகிறது..

இந்த மார்கங்களுக்கு சில நியதிகள் உள்ளன.. அவை என்னென்ன என்பது பற்றியும் வைணவ சமயத்தில் முக்தியடைய சொல்லப்படும் மார்க்கம் என்ன? அதன் நியதிகள் என்னென்ன என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்