எண்ணத்தின் விரிவாக்கம் எண்திசையும் அது நோக்கும்
திண்ணமான எண்ணமது தீர்க்கமான முடிவு தரும்
வண்ணமிகு எண்ணத்தை வார்த்தைகள் வடிவமைக்கும்
உண்மையிது உரைத்திட்டேன் மறுப்பதற்கு வாய்ப்பில்லை
கவியின் எண்ணத்தில் தையலவள் தான் அமர்ந்தாள்
தெவிட்டாத தீஞ்சுவையில் தேமதுர தமிழினிலே
உவட்டாத உணர்வு கொண்டு ஊண் உறக்கம் தான் மறந்து
தவித்திட்ட தம் மனதில் தோன்றியதோ ஒரு கவிதை
அனல் வீசும் கண்கள் இருக்க ஆயுதங்கள் தேவையில்லை
தணல் போன்ற வெம்மையினில் தவத்திடுதா உன் மனமும்
புனல் போன்ற புன்சிரிப்பு புதையுண்டு போனதேன்?
கனவிலும் நான் மறவேன் காரிகையே கருணை செய்
ஏட்டினில் படித்தவற்றை எடுத்தியம்ப நான் இல்லை
காட்டில் வழி தவறிய கன்று போல என் நிலை
மீட்பு நடவடிக்கை மேற்கொள்வாய் என் கண்ணே
கேட்டவை நான் தருவேன் நீட்டு உன் பட்டியலை
பட்டியலின் நீளம் பல காத தூரம் செல்லும் அன்பரே
தட்டாமல் நீர் அதனை தந்திடுவீரோ என்னிடத்தில்
பட்டியலைப் பார்த்ததுமே பலமெல்லாம் போனதுவே
தட்டாமாலையாய் தலை சுற்றி வீழ்ந்தனனே!!