பச்சை பசுமை நிறைந்த அக்மார்க் தஞ்சாவூர் மாவட்ட கிராமம் திருவாலம்பொழில்.. குடமுருட்டி ஆற்றின் நீர் பாசனம்,அதன் கரையோர கிராமங்களில் உள்ள நிலங்களை செழுமைப்படுத்தி இருந்தது.. கதிரேசன் தனது டிராக்டரில், தனது பத்து ஏக்கர் வயலில், உழுது முடிக்கும் நேரம் வரப்பிலிருந்து ஒரு குரல்..

“கதிரு!! தம்பி கதிரு!!”
டிராக்டரை நிறுத்தி விட்டு, திரும்பிப் பார்த்தால் கண்டியூர் மஸ்தான் பாய்..
டிராக்டரை அவர் நின்றிருந்த பக்கம் ஓட்டினான் கதிரேசன்.. அதனை விட்டு, இறங்கிக்கொண்டே,” அடடே!! வாங்க! மஸ்தான் பாய் !எப்போது சவுதியிலிருந்து வந்தீங்க? நம்ம அபுபக்கர், பாத்திமா, எல்லாரும் நல்லா இருக்காங்களா?”
மஸ்தான் பாய் கண்டியூரில் தென்னந்தோப்பு, வாழைத் தோட்டம் எல்லாம் வைத்திருப்பவர்.. தனது ஒரே மகன் அபூ பக்கர், சவுதியில் வேலை கிடைத்து, அங்கு சம்பாதித்துக் கொண்டிருந்தான்.. திருமணமாகி, ஒரு ஐந்து வயது குழந்தைக்கு தகப்பன் ஆகி இருந்தான்.. மஸ்தான் பாயும், அவரது மனைவி மட்டும், இங்கே தனியே தோட்டம் ,துரவு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..
” இன்ஷா அல்லாஹ்!!அல்லாரும் நல்லா இருக்காங்க பா..நான் வந்து ரெண்டு நாளாச்சுப்பா.? எங்கே வந்தன்னிலேருந்து வேல இருந்துச்சு.. ஊரைவிட்டு, ஒன்றரை வருஷம் ஆச்சா? எல்லாம் சரிப்படுத்தணும், நம்ம தோப்பிலே இருக்கிற தென்னையை ,பூச்சி பிடிச்சிடுச்சுப் போல.. சரியா காய்க்க மாட்டேங்குது.. சலீம் வேற சொல்லிகிட்டே இருந்தான்.. நான் சவுதியில் இருந்தப்பவே, போன் மேல போன் போட்டு சொல்லுவான்.. எங்கே நான் வர்றது? புறப்பட்டா ஏன் வாப்பா? இப்ப புறப்படறீங்க? ரம்ஜான் கழிச்சு போங்க, பக்ரீத் கழிச்சிப் போங்க, அப்படின்னு மவன் தள்ளிபோடுவான்.. இந்த முறை அவன் தடுத்தும் கேக்கல
புறப்பட்டு ஓடியாந்துட்டேன்.. நம்ம ஊர் நம்ம ஊரு தான்பா.. மக்க மனுசால பாத்துக்கிட்டு இருக்கறது ரொம்பவே மனசுக்கு சந்தோஷமா இருக்குது.. அவர் விடாமல் ஒரு சொற்பொழிவே செஞ்சிட்டார்..
அதற்குள், கதிரேசன் அங்கே வெட்டிப் போட்டிருந்த இளநீரில் ஒன்றை எடுத்து மஸ்தான் பாயிடம் நீட்டி, ஒன்றைத் தானும் குடிக்க ஆரம்பித்தான்..
கதிரேசனின் அப்பா முருகையன், வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.. அவனது தாயார், காளியம்மாள், சில வருசங்களுக்கு முன்னாலதான் மரணித்திருந்தாள்.. கதிரேசனின் அக்கா பத்மாவதியும், மாமன் கண்ணப்பனும், ஒரு பஸ் ஆக்ஸிடெண்டில் இறந்து போய் பல வருஷம் ஆகிறது.. அவங்க இறக்கும் போது, அவங்களது ஒன்றரை வயது மகள் குழலி என்கின்ற பூங்குழலியை விட்டு விட்டுப் போய்டாங்க.. அதிலேருந்து அந்த குழந்தையை, காளியம்மாளும்,முருகையனும் சீராட்டிப் பாராட்டி வளர்த்தாங்க..அப்போ கதிரேசனுக்கு ஒரு பத்து, பன்னிரண்டு வயசு இருக்கலாம்.. அவனும் தன் பங்கிற்கு குழலிய தூக்கிக்கிட்டு திருவாலம்பொழில் முழுசும் சுற்றுவான்.. குழலி வளர்ந்து, பெரியவள் ஆகிட்டாள்.. அவளது மஞ்சள் நீராட்டு விழாவோடு,பாட்டி காளியம்மாள் காலமாகி விட்டால் அதன்பின்னர் தாத்தன் முருகையனும் மாமன் கதிரேசனும் தான் அவளை கவனித்துக் கொண்டனர்
“ஆமாம் கதிரு!! எப்ப கடை திறப்ப?” மஸ்தான் பாய் கேட்டார்..
கதிரேசனுக்கு, கண்டியூரிலும், திருவையாற்றிலும் ஒவ்வொரு உரக் கடை இருந்தது.. சில வருடங்களுக்கு முன்னால், தஞ்சையில் மிலிட்டரிக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு முருகையன் எவ்வளவு சொல்லியும், மிலிட்டரியில் அவன் சேர்ந்தான்.. காஷ்மீரில் தீவிரவாதிகள் வச்சிருந்த கண்ணி வெடியால், தனது வலது காலை இழந்தான்.. அதனால் மிலிட்டரி லிருந்து திரும்ப வந்துட்டான்.. மிலிட்டரியில் சம்பாதிச்ச பணம், இழப்பீடு, இவற்றை வைத்துக் கொண்டு, இரண்டு உரக் கடைகளைத் திறந்தான்..வியாபாரம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது.. கண்டியூர் கடையை இவனும், திருவையாறு கடையை செந்தலையில் உள்ள அவனது பெரியப்பா நடராஜனின் மகன் குமரேசனும், பார்த்துக் கொள்கிறார்கள்..அவ்வப்போது, திருவையாற்றிற்கு சென்று முருகையனும் இவனும் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்வர்.. குமரேசனும் நல்லவன் தான்.. அவன் விசுவாசத்துடன் நடந்துகொள்வான்.. கதிரேசனை விட சிறியவன்..அதனால், “அண்ணே !அண்ணே” என்று கதிரேசனிடம் பாசமாக இருந்தான்.. அவன்தான் தஞ்சாவூர் போய் உரம் மற்றும் பூச்சி மருந்துகளை கொள்முதல் செய்து வருவான்..
“கதிரு!! நம்ம தென்னைக்கு ஏதாவது வழி சொல்லப்பா!”
“சரி பாய்! ஒரு 12 மணி வாக்குல நீங்க கடை பக்கம் வாங்க..நானும், ஆத்துல குளிச்சிட்டு, வீட்டுப் பக்கம் போய், ஏதாச்சும் கஞ்சி இருந்தா குடிச்சிட்டு, வந்து கடை திறக்கிறேன்” என்றான்..
“அது சரி கதிரு!! நீ இப்படியே எவ்வளவு நாள் இருக்க போறே? ஒரு கல்யாணம் பண்ணி, காலாகாலத்துல வாரிசு பெத்தா தானே, முருகையன் வம்சம் தழைக்கும்”
“அட போங்க பாய்!! நானா கல்யாணம் வேண்டாங்கிறேன்? திருக்காட்டுப்பள்ளியில் ஒரு பொண்ண பாத்தேன்; கருப்பூர்ல ஒன்னு; கும்பகோணத்துல ;இப்படி பாத்துட்டுதான் இருக்கேன்..ஆனா எதுவுமே ஒர்க்கவுட் ஆகல.. ஒருவேளை, என்னோட இந்த ஊனம் ஒரு தடையா இருக்கோ என்னவோ?”
“அட போப்பா! உனக்கென்ன ஏதாச்சும் ஆக்சிடெண்ட்லயா கால் போச்சு ? நம்ம நாட்டுக்காக போராடி தானப்பா கால் போச்சு..!”
“அது உங்களுக்கு தெரியுது.. ஆனா பொண்ணுக்கும், பொண்ண பெத்தவங்களுக்கும் அது தெரியலையே? மிலிடரியிலிருந்து நல்லபடியா ரிடயர் ஆகி வந்து இருந்தா, கௌரதையா இருந்திருக்கும்.. இப்போ ஒரு கால் போய் வந்து இருக்கேன்.. கட்டைக்காலு கதிரேசன் அப்படின்னு அடமொழியா வேற சொல்றாங்க.. யாராச்சும் மிலிட்டரி கதிரேசன், அப்படின்னோ இல்ல, உரக்கடை கதிரேசன் அப்படியெல்லாம் சொல்றதில்லை” கதிரேசன் விரக்தியுடன் சிரித்தான்..
“அட! ஜனங்க கிடக்கிறாங்கப்பா விடுப்பா! அவிங்க என்னைக்கு நல்லது பேசியிருக்காங்க? புறம் பேசறதே தொழிலு…அது சரி! நம்ம குழலி என்ன பண்ணுது? கல்யாணம் காட்சி ஏதும் இல்லையா?”
“ஒங்களுக்கு தெரியாமலா பாய்?அது, தஞ்சாவூர்ல டீச்சர் ட்ரைனிங் எடுக்குது..”

அப்பப்ப,கல்யாண பேச்சை எடுத்தா, சண்டைக்கு வருது.. அப்படி இப்படி, ரெண்டு பையனுங்க வந்து பார்த்தாங்க.. அவங்கள இது தனியாக் கூட்டிட்டு போயி என்ன சொல்லிச்சு தெரியல அவனுங்க இவள வேண்டாம்னு சொல்லிட்டாங்க..
“எதனாச்சும் லவ் மேட்டர் இருக்கு தான்னு கேட்டியா?’
“எல்லாம் கேட்டாச்சு பாய்! அப்படி ஒன்னும் இல்ல.? ஆனா மாப்பிள்ளைங்க வந்தா, இவளை ஏன் வேண்டாங்கறாங்க அப்படின்னு தெரியல… இன்னைக்கு சாயந்திரம் கூட திருச்சியிலிருந்து ஒரு பையன் வரான் குழலியை பார்க்க.. அது வாச்சும் தகையுதா, பார்ப்போம்..சரி பாய்! நீங்க வீட்டுக்கு போயிட்டு 12 மணிக்கு கடைக்கு வாங்க.. நான் குளிக்க போறேன்”
மஸ்தான் பாய், இவர்களது குடும்ப நண்பர்.. முருகையனும், அவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.. கண்டியூரில் இருந்து திருவாலம்பொழில் ஒரு ஐந்து ஆறு கிலோமீட்டர் இருக்கும்.. இருவரும் கண்டியூர் பள்ளியில் படித்தார்கள்..
அன்று மாலை, கதிரேசன் கடையை மூடி விட்டு, வீட்டிற்கு, வந்தான்.. சிறிது நேரத்தில் குழலியும் தஞ்சாவூரில் இருந்து வந்து விட்டாள்.. திருச்சியிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் சொன்ன நேரத்திற்கு வந்து விட்டனர்.. குழலியும் வழக்கம் போல, தன்னை அழகுபடுத்திக் கொண்டு அவர்கள் முன்னால் நின்றாள்..

அவர்களுக்குப் பெண்ணை பிடித்து விட்டது.. ஆனால் குழலி, எப்போதும் போல், பிள்ளையிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னாள்.. கிணற்றடியில், இருவரும் பேசினர்..பின்னர், திரும்ப வந்து,அந்த பிள்ளை, “எங்களுக்கு பெண் பிடித்து இருக்கிறது.. ஆனால், இந்த கல்யாணம் வேண்டாம்” என்றான்..
“ஏன்?” கோரசாக கேள்வி..
“உங்க வீட்டுப் பெண், என்னிடம் தனியாக அழைத்துப் போய், சில விவரங்கள் சொன்னாள்.. அதை ஏற்றுக் கொள்ளும் படியாக இருந்தது..அதனால்தான்..” என்றான்..
“அப்படி அவள் என்ன சொன்னாள்?”
“அதை, உங்க வீட்டு பெண்ணிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள் அவர்கள்..
“குழலி….. குழலி” கதிரேசன் குரலில் சற்று கடுமை இருந்தது..
“என்ன மாமா?”

“வந்தவங்க கிட்ட என்ன சொன்ன?”
“எனக்கு யாரைப் பிடிச்சு இருக்கோ,அவங்களதான் கட்டிப்பேன் அப்படின்னு சொன்னேன்”
“யாரையாச்சும் லவ் பண்றியா? சொல்லு!! அவன் யாரு? எந்த ஊரு? அவன் என்ன செய்கிறான்?’
“மாமா! கோபப்படாதே! நான் யாரையும் லவ் பண்ணல”
“பொய் சொல்லாதே!!அவன் யாராக இருந்தாலும் அவனை பத்தி சொல்லு”
“ஏன்மா அவன் என்ன ஜாதி” இது தாத்தா..
“அப்பா ஜாதியைப் பத்தி எல்லாம் இல்ல குழலிக்கு பிடிச்சிருந்து, அவன் நல்லவனாக இருந்து, இவளை கண் கலங்காம பார்த்துக்கிட்டா, போதும்..சொல்லுமா! அவன் யாரு? பஸ்ல பார்த்தியா, தஞ்சாவூர் பெரியகோவிலில பார்த்தியா, எங்க படிச்சிருக்காங்க? என்ன வேலை? சொல்லுமா! நான் அவங்க வீட்ல போய் பேசுறேன்”
“மாமா! நான் திரும்பவும் சொல்றேன், நான் யாரையும் லவ் பண்ணல, ஆனா ஒருத்தர கட்டிக்கணும்னு ஆசைப்படுறேன்..அவரு,ரொம்ப நல்லவரு,நீ சொன்ன மாதிரி என்ன கண் கலங்காம கடைசி வரைக்கும் காப்பாற்றுவார், அப்படின்னு எனக்கு உறுதியாகத் தெரியும்”
“அது சரிம்மா! அவர் யாரு?”
“அவரும் நல்லவர்தான்.. குடும்பம் நல்ல குடும்பம் தான்..படிச்சுட்டு, கொஞ்ச நாள் வேலை பார்த்துட்டு, இப்ப விவசாயம் பண்ணிட்டு இருக்காரு, சொந்தமா கடை வைத்திருக்கிறார்”
“என்னமா கடை? எங்க கடை? தஞ்சாவூரலயா?”
“இல்ல மாமா..கண்டியூரில் ஒண்ணு, திருவையாற்றில் ஒண்ணு உரக்கடை”
“அது யாரு மா?:கண்டியூர்ல எனக்கு தெரியாம உரக்கடை?”
“அட என்ன மாமா? இன்னுமா புரியல? நீ தான் மாமா”
“ஏய்!!என்ன உளர்ற?”
“உளறல!! உண்மையத்தான் சொன்னேன்.. சின்ன வயசுல, என்ன விட்டுட்டு பெத்தவங்க போயிட்டாங்க.. நீங்க எல்லாரும் என்னை எப்படி பாத்துட்டீங்க? உங்கள விட்டுட்டு எப்படி மாமா?”
“அதுக்கு பரிகாரம் செய்யறியா?”
“அதுக்கு ஒண்ணும் இல்ல, நானும் கல்யாணம் கட்டி போயிட்டா, உன்னையும் தாத்தனையும் யாரு பார்த்துப்பாங்க? தாத்தனுக்கும் வயசாகுது!! அதோட உனக்கு என்ன குறை?”
“குறையா? ஊர் முழுக்கத் தெரியும்.. அதனாலதான், மிலிட்டரி கதிரேசனுனோ, உரக்கடை கதிரேசனுனோ, சொல்லாம, கட்டக்கால்கதிரேசன், அப்படின்னு சொல்றாங்க”
“மாமா! அவங்க என்ன வேணா சொல்லிட்டு போகட்டும்.. எனக்கு நீதான் வேணும்..நமக்குள்ள ஒண்ணும் வயசு வித்தியாசம் பெருசா இல்ல, அதுவும் இல்லாம, நான் உனக்கு முறை பொண்ணு தானே?”
“ஏன்? நம்ம குமரேசனும் முறைதானே? என்ன விட சின்னவன், அவன கட்டிக்கறது தானே?”
“மாமா!!நான் யாரை கட்டணங்கறது என்னோட விருப்பம்.. நான், உன்னைத் தான் கட்டுவேன்.. உன்ன கட்டிகிட்டு, உன்கிட்ட, ஒரு புள்ளையை பெத்து, வளர்த்து, அவன நீ விட்டுட்டு வந்த மிலிட்டரி வேலையை முழுசா செய்ய வெப்பன்.. இது என் ஆசை”
“கதிரேசன் கண்களில் நீர் சுரந்தது..முருகையனும் “ஏம்பா? குழலி சொல்றதும் ஞாயாயமாத்தான் படுது.. இவ்வளவு நாள் நாம ஏன் இதை யோசிக்கல.. சரி! சட்டுபுட்டுன்னு உன் முடிவ சொல்லு”
“மாமா! என்ன சொல்றது? நான் தான் சொல்லிட்டேனே! ஏதாச்சும் மாட்டேன், கீட்டேன்னு, சொன்னாருன்னா, குடமுருட்டில குதிச்சி, தற்கொலை பண்ணிக்குவேன்”
கதிரேசன் சிரித்துக்கொண்டே, “குடமுருட்டில நீ தலை குப்புற விழுந்தாலும், கணுக்காலளவு தண்ணி தான் போகுது” என்றான்
“அப்ப, நான் கல்லணைக்கு போய் குதிச்சிப்புடுவேன்,ஆமா!”
“நீ ஒன்னும் எங்கேயும் குதிக்க வேண்டாம்! ஒன்னையே கட்டிக்கிடறேன்”
“அப்படி சொல்லுடா தம்பி”
“சரி சரி! மாமா! நான் உள்ளாறப் போயி சமைக்கிறேன்”
“என்னது? சமைக்கறயா?” கதிரேசனும் தாத்தா முருகையனும் சேர்ந்து அலறினார்கள்.
“ஏன்? எனக்கு பாட்டி சமையல் சொல்லிக் கொடுத்திருக்காங்க”
“பின்னே! ஏன் இவ்வளவு நாளா சமைக்கல?”
“உங்க சமையலே ருசியா இருந்துச்சு.. எதுக்கு நான் ரிஸ்க் எடுக்கணும்?”
“அடிப்பாவி”
“சரி தம்பி.. நாளை காலையில திருவையாறு போயி, ஜோசியனை பார்த்து நாள் குறிச்சிடறேன்”
“அப்பா! அது படிப்ப முடிக்கட்டும்பா”
“எல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டு படிப்பேன்”
“ஒரு முடிவோடதான் இருக்க” கதிரேசன்
“அட பார்ரா! இந்த குட்டியை, உன்ன விட மாட்டேங்குது”
அந்த இரவு அவர்களின் வாழ்க்கையை இனிமையாக்கியது..