
என் உரை
சில நாட்களுக்கு முன்பு, காலையில், நான் எழுந்தபோது, “ஹரி என்ற பேரரவம்”என்ற சொற்றொடர், என் காதில், மனதில், மீண்டும் மீண்டும், ஒலிக்கலாயிற்று.. அதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.. மனதில் எழுந்த எழுச்சியா?புரியவில்லை!! நான் தினமும், சுவாமி சன்னதியில், திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை சொல்வேன்.. ஆனால் திருப்பாவையில், ஆறாவது பாசுரமான “புள்ளும் சிலம்பின காண்” என்ற பாசுரத்தில் 7 ஆவது வரியில் “அரி என்ற பேரரவம்”என்ற சொற்றொடர் வருகிறது.. நான், எல்லா பாசுரங்களையும் சொல்லும் போது, இந்த ஒரு பாசுரம்,அதிலும், குறிப்பாக, இந்த சொற்றொடர் எனக்கு மனதில் தோன்ற வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி என்னுள் எழுந்தது.. இந்த பாசுரத்தில் “பேரரவம்”என்றவார்த்தை இரண்டு இடங்களில் வருகிறது.. வெள்ளை விளி சங்கின் பேரரவம் என்று ஒரு இடத்தில் வருகிறது.. புள்கள், அதாவது பறவையினங்கள், பொழுது புலர்ந்து விட்டது என்பதனை, நமக்கு, நமது சிலம்பொலி போன்ற குரலினால் உணர்த்துகிறது..அதனைத் தொடர்ந்து, சங்கின் பேரரவம் கேட்கிறது.. அது பெருமாளின் சங்கத்தில் இருந்து வெளிப்படும் நாத ஒலி.. பொதுவாகவே, சங்கினை, நாம் காதில் வைத்துக்கொண்டு கேட்டால், அதில் “ஓம்” என்ற ஒலி நமக்கு கேட்கும்.. அது போல, வெள்ளை விளிசங்கில் காற்று புகுந்து, நாதத்தினை எழுப்பி, நம்மையெல்லாம், துயில் எழ வைக்கிறது.. அந்த சங்கின் ஒலி கேட்டு, முனிவர்களும், யோகிகளும்,” ஹரி:”என்று சொல்லிக்கொண்டே, துயில் எழுகிறார்கள்.. அவர்கள் கூட்டாக, “ஹரி:”என்று சொல்வதனால் அது பேரரவமாக கேட்கிறது..
சரி! இந்த ” ஹரி” என்ற சொல், என் மனதில் பட்டதன் நோக்கம் என்ன? ஒரு வேளை, “ஹரி” என்ற சொல்லினை வைத்து தொடர் எழுதலாம் என்ற எண்ணமா? அவ்வாறாயின்,” ஹரி” என்றஒரு சொல்லை மட்டும் வைத்து ஒரு தொடர் எப்படி எழுத முடியும்? என்ற அச்சமும் கூடவே எழுந்தது.. ஆனால், அதற்குள்ளேயே ஒரு தெளிவு பிறந்தது..” ஹரி” என்பவர் யார்? பரம்பொருள்…..!! அவருக்கு ஆயிரம் நாமங்கள் உள்ளன.. அவரது திவ்ய நாமங்களில் தெரிந்தவற்றை பற்றி எழுதலாம்..அவரது திவ்ய மங்கள ஸ்வரூபத்தை பற்றி எழுதலாம்.. அவரது திவ்ய லீலைகள் பற்றி எழுதலாம்.. அவரது திவ்ய தேசங்களை பற்றி எழுதலாம்.. அவரது திவ்ய அவதாரங்களைப் பற்றி எழுதலாம்..

இப்படி எழுதலாம்……. எழுதலாம், என்றால், ஒரு தொடர் என்ன? ஓராயிரம் தொடர் கூட எழுத முடியும்.. ஆயினும், எனது மனம் வேகப் படும் அளவிற்கு, தொடர் அமைய வேண்டும் என்ற அச்சமும் கூடவே தோன்றுகிறது..
“ஆதி அந்தம் இல்லாத பெருமான்” அவர்.. அவருக்கு முன்னுரையும் முடிவுரையும் தேவையில்லை.. அதனால் தான், என்னுரையாக மேலே சொன்னவற்றை தங்களுக்கு தெரிவித்தேன்..
எனது முகநூல் நண்பர்கள் வட்டத்தில், ஆன்றோர், அறிவில் சிறந்தவர், ஆன்மீக வல்லுநர்கள், மற்றும் பெரியோர்கள் என்று அனைவரும் இருப்பர்.. எனவே, எனது சிரம் தாழ்த்தி, கரம் குவித்து, வேண்டி தங்களின் ஆசிகளுடன் இந்தத் தொடரை துவக்குகிறேன்.. நான், எழுதுவதில், குற்றம் குறைகள் ஏதும் இருந்தால், ஆன்மீகப் பாதையில் நடக்க முயலும் இந்த மழலையின் தடுமாற்ற நடை என்பதாகக் அதனைக் கொண்டு, என்னை மன்னித்து, என்னை கை தூக்கிவிட்டு, சரியான பாதையில் தொடர ஆசிகளையும் ஆதரவினையும் அளிக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்..
“ஹரி” என்பவர் யார்? இவர் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர்.. விஷ்ணு சகஸ்ரநாமத்தில், விஷ்ணுவின், ஆயிரம் திருநாமங்களில் 656வது பெயராக இந்தத் திருநாமம் உள்ளது.. அந்த எண்களின் கூட்டுத்தொகை 8… அஷ்டாக்ஷர மந்திரமான “ஓம் நமோ நாராயணா” என்பதனை இது குறிக்கின்றது..

“ஹரி” என்ற சமஸ்கிருத வார்த்தைக்குப் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தை குறிப்பதாக உள்ளது.. ஹரி மற்றும் ஹரன் என்ற சொற்களுக்கு, அபகரிப்பவன் என்ற பொருளும் உண்டு.. அதாவது, நம்மையெல்லாம் உழலச் செய்யும் இந்த வாழ்க்கை என்னும் பாவக் கடலில் இருந்து,நம்மை அபகரித்து, தம்மிடத்தில் சேர்த்துக்கொள்பவர் என்று பொருள்.. இந்து சமய நூல்களான பாகவத புராணம், மகாபாரதம், பகவத் கீதை மற்றும் சில புராணங்களில் “ஹரி” என்ற பெயருக்கு இன்னும் வேறு பன்னிரு திருநாமங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.. அவை 1)கோவிந்தன் 2) கேசவன் 3)வாசுதேவன் 4)தாமோதரன் 5)மதுசூதனன் 6) அச்சுதன் 7)மாதவன் 8) ரிஷிகேசன் 9)ஜனார்தனன் 10)நாராயணன் 11)பத்மநாதன் 12)ஸ்ரீதரன்..
ஆங்கிலத்தில்” ஹரி” என்பதனை, HARI என்று குறிப்பிடுகிறோம்.. அந்த எழுத்துக்களை சற்று விரிவாக்கம் செய்து பாருங்கள்..!! H–heavenly (தெய்வீகமான), A–absolute (முற்றிலும்),R–rare (அபூர்வமான) I–immortal (அழியாதவர்).. அதாவது தெய்வீகமான, முற்றிலும் அபூர்வமான,அழியாத, பரம்பொருள் என்று அர்த்தப்படுகிறது..
இதிகாச புராணங்களில் “ஹரி வம்சத்தில்” ஹரியின் வழித்தோன்றல்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.. விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு ,விளக்கவுரை எழுதிய ஸ்ரீ ஆதிசங்கரர் “ “ஹர்” என்ற வினைச் சொல்லுக்கு, விஷ்ணுவின் திருவடியை பற்றுதல், அடைதல் என்ற பொருளில் குறிப்பிட்டுள்ளார்..
வைணவ மரபில், ஹரி என்பதற்கு அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை அளிப்பவர் என விளக்கப் பட்டுள்ளது.. ஹரி எனப்படும் விஷ்ணு, பிறப்பு, இறப்பு எனும் வாழ்க்கை துயரத்தில் இருந்தும் பிறவிச் சுழற்சியிலிருந்தும் நமக்கு விடுதலை அளிப்பவர்..
கௌடிய வைணவ மரபில்,ஹரி என்ற பெயர், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவைக் குறிக்கும்..
சீக்கிய மதத்தில் ஹரி எனப்படும் “ஹர்” என்ற சொல் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.. சீக்கிய குருமார்கள் 6 7 மற்றும் 8வது குருமார்களின் பெயர்கள் “ஹர் கோவிந்த்”,” ஹரி ராய்” மற்றும் “ஹரி கிருஷ்ண சாஹிப்” என்று உள்ளது.. சீக்கியர்களின் முதன்மை கோயிலுக்கு “ஹர்மந்திர் சாஹிப்” என்பது பெயராகும்..
சீக்கியர்களின் பதினோராவது குருவாக போற்றப்படும் “குரு கிரந்த் சாகிப்” நூலில் ஹரி என்ற பெயர் 8500 முறை குறிப்பிடப்பட்டுள்ளது..
அடுத்த பதிவில் சந்திப்போம்…
Good work
LikeLike