சென்ற பதிவில் உபநிடதங்கள் பற்றி சில குறிப்புகளை தந்து, அவற்றின் விவரங்களை தெரிந்த வரையில் பதிவு செய்வதாக சொல்லி இருந்தேன்.. அவைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்..

உபநிடதங்கள் பல உண்டு..அவற்றில் ஆதி சங்கரர் கூறிய உபநிடதங்களை பதினெண் உபநிடதங்கள் என்று கூறுவர்.. அவை பற்றி சில குறிப்புகளை கீழே காணலாம்..
1) ஈசா வாஸ்ய உபநிடதம்

இந்த உபநிடதம், சுக்ல யஜுர் வேதத்தில் அமைந்துள்ளது.. இந்த உலகங்கள் அனைத்தும், ஈஸ்வரனால் நிரப்பப் பெற்று உள்ளது என்று துவங்குவதால், அதாவது, “ஈசாவாஸ்ய இதம் சர்வம்” என்பதனால் இந்த உபநிடதம், ஈசாவாஸ்ய உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது.. இந்த உபநிடதம், 18 மந்திரங்களை மட்டுமே கொண்டுள்ளது.. சிறிய உபநிடதம்.. இந்த உபநிடதத்திற்கு, ஸ்ரீ ஆதிசங்கரர் மற்றும் மத்வாச்சாரியார் விளக்கவுரை எழுதியுள்ளார்கள்..
உபநிடதத்தின் சாந்தி மந்திரம், மற்றும் அதன் விளக்கமும்..
“பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே!
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூரணமேவாசிஷ்யதே!
ஓம் சாந்தி: சாந்தி :சாந்தி:”
ஈஸ்வரன் பூரண வடிவானவர்.. ஜீவனும் பூரண வடிவானவன்.. பூரணமான ஈஸ்வரனிடம் இருந்து பூரணமான ஜீவன் தோன்றியுள்ளார்.. பூரணமான ஜீவனுடைய, பூரண வடிவத்தை எடுத்து விட்டால், எஞ்சி இருப்பது பூரணம் மட்டுமே.. ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
இந்த உபநிஷத்தின் மையக்கருத்து..
அனைத்து உயிரினங்களும், அண்டங்களும் இறைவனால் நிரப்பப்பட்டுள்ளது.. தியாகத்தால் தன்னை காத்துக்கொள்ள வேண்டும்.. யாருடைய பொருள்களையும் கைப்பற்ற ஆசை கொள்ளக்கூடாது.. எல்லா உயிரினங்களின் ஆத்ம தத்துவத்தை பார்க்கின்றவனக்கு மயக்கம் இல்லை; துயரமில்லை.. வேதத்தில் கூறப்பட்ட கர்ம யோகத்தில் மட்டும் பற்று உள்ளவர்களுக்கு பலனாக சொர்க்கலோகம், பித்ரு லோகம் கிடைக்கிறது. வேதத்தில் கூறப்பட்ட பக்தி யோகத்தில் மட்டும் பற்று உள்ளவர் களுக்கு, அதைவிட சற்று மேலான உலகங்கள் கிடைக்கின்றன.. கர்ம யோகத்துடன், பக்தி யோகத்தையும் சேர்ந்து செய்பவர்களுக்கு பிரம்மலோகம் கிடைக்கிறது.. மேற்படி உலகங்கள் நிலையற்றதாக இருந்தபோதிலும், துயரம் மிக்க வாழ்வில் அடையப்படும் உயர்ந்த பலனாக் கருதப்படுகிறது.. கர்ம யோகம் மற்றும் பக்தியோகத்துடன் மெய்ப்பொருள் அறிவான ஞான யோகம் என்ற வேதாந்தத்தை, தகுதியான குருவின் மூலம் கேட்டு அறிந்து கொண்டவன், பிறப்பு, இறப்பு இல்லாத மேலான பெருவாழ்வான விதேக முக்தி அடைவது உறுதி..
கர்ம யோகம்
கர்ம யோகம் என்பது கர்மம்+யோகம் என்ற சொற்களின் சேர்க்கை.. உடல், மனம் மற்றும் வாக்கால் செய்யும் செயல்களே, கர்மம் எனப்படும்.. யோகம் என்பதற்கு சாதனை என்று பொருள்.. ஒரு செயலை, பெரும் செயலாக செய்யும்போது, அச்செயல், மனதில் விருப்பு-வெறுப்புகளைக் கொடுத்து துயரத்தில் பந்தப்படுத்தி, மனதை பளுவாக்குகிறது.. அதே செயலை கர்மயோக சாதனையாக நினைத்து செய்யும் போது மனதில் ஏற்படும் விருப்பு- வெறுப்புகளை நீக்கி மனதில் அமைதி உண்டாகிறது..
கர்மம்,எதிர்மறை விளைவை உண்டாக்கும்.. ஆனால், கர்மயோகம் செய்வதால், எதிர்மறை விளைவு உண்டாகாது.. கர்மத்தை முழுமையாக செய்தால்தான் பலன் உண்டு.. பாதியில் நின்ற கர்மங்களுக்கு பலனில்லை..மேலும், கர்மத்தில் முழு பலன் கிடைக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்க முடியாது.. ஆனால், கர்ம யோகத்தால் செய்யப்படும் செயல்களுக்கு, செய்த அளவுக்காவது பலன் கிடைக்கும்.. செய்த கர்மங்களுக்கு பலன் உறுதியாகக் கிடைக்கும் என்று கர்ம காண்டத்தில் உறுதி அளிக்கப்படவில்லை.. கர்மயோகம் செய்வதால், மனம் தூய்மை உண்டாகும்..அந்த மனத்தூய்மை, மோட்சம் கிடைக்க காரணமாகிறது..
நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்களைப் பற்றிய விசாரணை செய்யும் போது, எப்படிப்பட்ட பாவனையுடன்( attitude)செயல் செய்பவனாக இருக்க வேண்டும் என்ற விசாரண;, செயலின் பலனை அனுபவிக்கும் போது, அதனை எவ்வாறு அனுபவிக்க போகின்றவனாக(போக்தா)இருக்கவேண்டும் என்னும் விசாரணை; இந்த இரண்டும் கர்மயோகத்தின் தத்துவங்களின் விசாரணை எனக் கருதப்படுகிறது..
கர்ம யோகம் குறித்து பகவத் கீதையில் 4 கருத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன
1) செயல் செய்ய கர்த்தாவுக்கு அதாவது செயல் செய்பவனுக்கு உரிமை உண்டு..
2) செயல் செய்து முடித்தபின், செயலின் பலனில் கர்த்தாவுக்கு, அதாவது செயல் செய்தவனுக்கு, உரிமை இல்லை..
3) நம் செயலின் பயன், எதன் அடிப்படையில் எனில், செயலை எப்படிப்பட்ட நோக்கத்துடன், அதாவது சங்கல்பத்துடன், (உள்ளுணர்வுடன்) செய்தோம் என்பதை பொறுத்து பலன் கிடைக்கிறது..
4) ஒருவன் செயல் செய்யாமல் இருக்கும் மனம், சோம்பல், சோர்வு மற்றும் தோல்வியினால் வரக்கூடாது..ஆனால், வைராக்கியத்தின் மூலம் மட்டுமே வரவேண்டும்.. அவன்தான் கர்மயோகி..
இந்த கர்மங்கள்,நான்கு வகை ஆசிரமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன..
1) பிரம்மச்சரிய ஆசிரமங்கள்
கர்மங்கள் அதாவது கடமைகள்.. இதில் வேத சாஸ்திரங்களை படித்தல், குரு சேவை மற்றும் பிக்ஷை எடுத்து வாழ்தல்..
2) இல்லற ஆசிரம தர்மங்கள்
இதில் பொருளீட்டல், தானம் செய்தல், விருந்தோம்பல், யாகம் மற்றும் யக்ஞம் செய்தல்..இந்த தர்மத்தில் சேர்ந்ததாகும்..
3) வானப்பிரஸ்த ஆசிரமம்
கர்மங்கள், அதாவது காட்டிற்குச் சென்று, தன் மனைவியுடனோ அல்லது தனியாகவோ, காட்டில் வசித்து, ஜெபம், தவம் இயற்றல், தியானம் செய்தல் மற்றும் பிக்ஷை எடுத்து வாழ்தல் இந்தக் கர்மத்தில் அடங்கும்..
4) சந்நியாச ஆசிரமம்
கர்மங்கள், தியானம், ஜெபம், வேதாந்த சாத்திரங்கள் அறிதல், பிக்ஷை எடுத்து வாழ்தல், வேண்டிய ஆத்ம தியானம் செய்தல் இந்த கர்மத்தின் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது..
இந்த விவரங்களை, ஏன் இப்போது இவ்வளவு விரிவாக சொல்கிறேன் என்றால், பின்வரும் பகுதிகளில் இவை பற்றிச் சொல்லும்போது, ஒவ்வொன்றும் என்னென்ன என்பதை வாசகர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லப்பட்டது..
கேன உபநிடதம்

இந்த உபநிஷத், சாம வேதத்தில் அமைந்துள்ளது..இது “கேன” எனத் துவங்குவதால்” கேன உபநிடதம்” என்று பெயராயிற்று.. “கேன” என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள், “கேள்வி” என்பது ஆகும்.. இந்த உபநிஷத், கேள்வியுடன் துவங்குகிறது.. இதில், 35 மந்திரங்களுடன், நான்கு பகுதிகளாகப் கொண்டது.. இந்த உபதேசத்திற்கு ஆதிசங்கரர் மற்றும் மத்வாச்சாரியார் ஆகிய மகான்கள் விளக்க உரை அளித்துள்ளார்கள்
சாந்தி மந்திர விளக்கம்
எனது உடல் உறுப்புகள், ஆற்றல் பெறட்டும்.. வாக்கு, பிராணன், கண், செவி மற்றும் அனைத்து உடல் உறுப்புகளும், ஆற்றல் பெறட்டும்.. உபநிடதங்களால் அறியப்படும் பிரம்மம், அனைத்துமாக உள்ளது.. நான் பிரம்மத்தை மறுக்காமல் இருப்பேனாக..பிரம்மம் என்னை மறுக்காமல் இருப்பாராக.. அந்த ஆத்மாவை அறியும் வழியில், முழு ஈடுபாடுடைய என்னிடத்தில், உபநிடதங்களில் கூறப்படும் தகுதிகள் எவையோ, அவைகள் அனைத்தும் என்னிடத்தில் இருக்கட்டும்.. ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: இந்த இடத்தில் பிரம்மம் என்று குறிப்பிடுவது நான்முகனை அல்ல, பரம்பொருளை..
இந்த உபநிஷத்தின் சாரம் என்னவென்றால், உடல் எப்படி ஜடமோ, அதுபோல மாற்றத்தை அடைந்து கொண்டிருக்கும் மனமும் ஜடம் என உணர்ந்து, இவற்றுக்கு வேறான மாறாத நிலையான மெய்ப்பொருள் உள்ளதா? என்று சீடன் கேட்பதானக் கேள்வியுடன், இந்த உபநிஷத் துவங்குகிறது..
அதற்கு குரு பதிலளிக்கிறார்; என்னவென்று?
எந்த பொருளை வாக்கு, மனம், கண்கள் முதலியவைகளை விளக்காதோ, ஆனால், எந்த மெய்ப்பொருள் மனம், பொருள், வாக்கு முதலியவைகளாக இருக்கின்றதோ, அந்த மெய்ப்பொருள் ஆன பிரம்ம தத்துவத்தை அறிந்து கொள் என்றும், ஜீவனும், பரமாத்மாவும் ஒன்றே என்ற அரிய தத்துவத்தை கூறி, இதுவரை நீ எவற்றை வழிபட்டு வந்தாயோ, அவை அனைத்தும் உனக்கு உதவிய படிகளே தவிர, மெய்ப் பொருள் அல்ல என்று உபதேசம் செய்கிறார்..
குருவின் அறிவுரையை புரிந்துகொண்ட சிஷ்யன், தான் பிரம்மத்தை அறிந்து கொண்டதாகவும், அதே நேரத்தில் அறியவும் இல்லை என்றும், இதை யார் உணர்கிறார்களோ, அவர்களே உண்மையை உணர்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.. பிரம்ம தத்துவத்தை ஒரு பொருளாக அறியவில்லை.. அந்த மெய்ப்பொருள் “தானே” என்றும் உணர்ந்துள்ளேன் என்பதாக கூறுகிறான்..
பிரம்மத்தை ஒரு பொருளாக அறிந்தவர்கள், உண்மையில் பிரம்மத்தை அறிய வில்லை.. பிரம்மத்தை பொருளாக அறியாதவர்கள், பிரம்மத்தை அறிகிறார்கள்.. எல்லா ஜீவராசிகளுக்கும், அறியாதவர்கள் இந்த பிரம்மத்தை அறிந்து, அகங்காரம், மமகாரம் ஆகியவற்றில் இருந்து விலகி, மேலான ஜீவ முக்தி நிலையை அடைகிறார்கள்.. புலனடக்கம், கர்ம யோகம், வாய்மை ஆகிய வழிகள் மூலமாக பிரம்ம ஞானத்தை அடையலாம்.. மேலும், இந்த ஞானத்தின் பலனாக, ஒருவன் மேலான ஜீவ முக்தி மற்றும் விதேக முக்தியை அடைகிறான்..
ஜீவ முக்தி என்பது கர்மயோகம், பக்தியோகம் ஆகியவற்றில் தேர்ந்தபின், ஞான யோக வாழ்வில், மனம், எதிலும் சமத்துவ நிலை அடைந்து, உயிருடன் இருக்கும்போதே, மனநிறைவுடன் வாழ்வதே, ஜீவ முக்தி என்ற ஒரு பெரு நிலையை அடைவதாக கருதப்படுகிறது..
விதேக முக்தி என்பது, ஞான யோகத்தின் மூலம்,தமஸ், ரஜஸ் மற்றும் சாத்வீகம் எ முக்குணங்களை கடந்த ஜீவன் முக்தன், ஆத்ம ஞானத்தில் நிலைபெற்று, பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவது விதேக முக்தி என்பது. இந்த விதேக முக்தி ஒருவர் அடைந்தால், இறந்த பின்பு அவருக்கு மறுபிறவி என்பது கிடையாது
கடோபநிடதம்

இந்த உபநிஷத், கிருஷ்ண யஜுர்வேதத்தில் அமைந்துள்ளது.. இதற்கும், ஸ்ரீஆதிசங்கரர் மற்றும் மத்வாச்சாரியார் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.. இந்த உபநிஷத் 119 மந்திரங்களை கொண்டது.. இரண்டு அத்தியாயங்களாகவும், ஒவ்வொரு அத்தியாயமும், மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கே பகுதிகளை வல்லிகள் என்று அழைக்கப்படுகிறது.. இந்த உபநிஷத், கதை வடிவில் அமைந்து உள்ளதால், கடோபநிஷத் என்று கூறப்படுகிறது..
இந்த உபநிஷத் சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தமது சீடர்களிடம், “உபநிஷத்துக்களில், இதைப் போல அவ்வளவு அழகியது வேறு ஏதும் இல்லை; நீங்கள், எல்லோரும் அதனை மனப்பாடம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.. வெறுமனே படிப்பதால், என்ன பயன்? அதில் வரும் நசிகேதனின் நம்பிக்கை, தைரியம், விவேகம், உணவு ,முதலியவற்றை வாழ்வில் கடைபிடிக்க முயற்சி செய்” என்று கூறியுள்ளார்..
சாந்தி மந்திரமும் அதன் விளக்கமும்
“ஸ ஹ நாவவது! ஸஹநௌ புநக்து!ஸஹ வீர்யம் கரவாவஹை!
தேஜஸவிநாவதீதமஸ்து மா வித்விஷாவஹை!!
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:”
அந்த இறைவன், குரு, சீடர்கள் ஆகிய எங்கள் இருவரையும் காப்பாற்றட்டும். அந்த இறைவன், எங்கள் இருவரையும் எங்களுக்குரிய முயற்சியையும், நாங்கள் இருவரும் சேர்ந்து செய்ய காப்பாற்றட்டும்..எங்கள் கல்வி, ஒளி மிகுந்ததாக இருக்கட்டும்.. நாங்கள் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருப்போமாக.. ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
இந்த உபநிஷதத்தின் மையக் கருத்தாக, நசிகேதனுக்கு எமன்,ஆத்ம தத்துவத்தை கூறிய விவரத்தையும் மற்றும் மற்ற உபநிஷத்துக்கள் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்