
துக்கமென்ன? துயரமென்ன? நான் வந்தபின்
ஏக்கம் என்ன? உன் நோக்கம்தான் என்ன?
அக்கம்பக்கம் பலர் அகலாமல் பார்க்கின்றனர்!
தர்க்கம் வேண்டாம்! கண்ணே தாழ்திறவாய்!!
துக்கப் பட்டதும், துயரப்பட்டதும், நான் அன்றி வேறு எவரோ?
அக்கம்பக்கத்தினர் வாய்க்கு,அவல் ஆகிப் போனது என் துயர்!!
ஏக்கம் தீர்க்க வருவாய், என ஏங்கினேன் பல நாள் நீ வரும்..
மார்க்கம் பார்த்து பார்த்து, மருளடைந்தன என்கண்கள்!!
கன்னல் மொழி பேசும் காரிகையே! என் கண்ணே!
சொல்ல சொல் தவறேன்! இந்தச் சுந்தரன்!
மின்னலென இவண் வந்தேன்! மிகை அல்ல என் சொல்!!
இன்னல் தீர்க்க நான் உள்ளேன்! இயல்பாய் நீ இருப்பாய்!!
மின்னலென வந்தீர்! மின்சாரம் போல் சென்றிடுவீர்!?
தன்னிலை விளக்கம் வேண்டேன்! தம்முடைய சொல் யாவும்!
கன்னலென நீர் சொன்னாலும் கசந்திடுதே எனக்கு!!
பன்னிரு மாதங்களாய் பார்த்ததிலேன், நின் அருகை!
திரவியம் தேட, திரைகடலோடி, தெம்புடன் வந்தேன்!
கரையாதோ, நின் மனம், கண்மணியே! பொன்மணியே!!
வரவை எதிர்நோக்கி காத்திருந்த என் பைங்கிளியே!!
திறவாயோ திருக்கதவை,தெருவில் நான் நிற்கின்றேன்!!
தாள்திறந்தேன்,, இம்முறை, நீர் தயை கோரி வேண்டியதால்!
நாள் பார்த்து, கோள் பார்த்து, நான் உனக்கு மாலை இட்டேன்!!
தேளாய் கொட்டிடுவேன், ஏதும் தீங்கு நினைப்பிருந்தால்…
தாள் தருவேன், மண ரத்து கோரி, மனம் மாற வைக்காதீர்!!
நின் கருணை! என் சொல்வேன்? நித்தமும் நான் உன் சேவகன்!
என் நிலை! என்செய்வேன்? எஜமானே நீர் வந்து…
கன்னியவள் கருத்தில் ஊற, செப்பிடுவீர் என் பணி திறனை
தன்னிலை விளக்கம் தர தயை கூற வைப்பாயே!!
சொன்ன சொல் தவறாத சுந்தரரே!! இந்நிலை தான்,
என் நாளும் மாறாது என்று, என்மேல் ஆணையிடும்!!
அன்னமும், அருஞ்சுவையும், அனைத்து நாளும் உண்டு!! நான்
நன்நெல் விதை பழுதாகாது, நாளும்ம் நீர் பார்த்திடுவீர்!!
சத்தியம் செய்வேன்! என் கண்ணே !சாத்திரமும் நான்சொல்வேன்!!
நித்தியமும் நின் உடனே, நிலையாக நான் இருப்பேன்!!
பத்தியமாய், பக்குவமாய்,பார்த்திடுவேன் பாவையே! உந்தன்
சக்தியை அறிந்தேன் , சகதியில் நான் உழல மாட்டேன்..
இது போதும் எனக்கு,இனி நீ மாறிலேன் என்றால்!!
எதுவாகிலும் ஏற்பேன்!! என்னவரை என்றும்..
மது உண்ண நான் வேண்டேன்!! நாளும் உன்னை..
புதுமண மாப்பிள்ளையாய், பொழுதும் நான் காண்பேன்..