
நமி நந்தி அடிகள் என்பவர் அந்தணர் குலத்தில் பண்டைய சோழ நாட்டிலுள்ள ஏமப்பேரூர் என்று கூறப்படும் ஊரில் வைகாசி மாதம் பூச நட்சத்திரத்தில் பிறந்தார்.. அந்த ஏமப்பேரூர், தற்காலத்தில் திருநெய்ப்பேர் என்று வழங்கப்படுகிறது..இவர் இரவும் பகலும் பாராமல், சிவபெருமானை பூஜித்து மகிழும் ஒழுக்கமுடையவர்.. தினம்தோறும், திருவாரூர் சென்று அங்குள்ள ஆரூர் பெருமானை போற்றி வருவார்.. ஒருநாள், திருவாரூர் திருக்கோயிலுக்கு வழிபடச் சென்றார்.. வழிபட்ட மகிழ்ச்சியில் எழுந்த அன்பினாலே, கோயில் தொண்டுகள் பலவும் செய்து கொண்டிருந்தார்.. அப்பொழுது, அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற எண்ணம் அவருள் மேலோங்கியது. ஆனால்,அந்த நேரம் அது மாலைக்காலம் ஆகிவிட்டது.. அதன் பிறகு, தம் ஊருக்கு சென்று எண்ணெய்கொண்டு வர முடியாது..ஆகவே, திருவாரூர் ஊரிலேயே ஒரு வீட்டிற்குச் சென்று, “விளக்கிற்கு எண்ணெய் வேண்டும்” என வேண்டினார்..

அவர் சென்ற வீடு ஒரு சமணர் வீடு.. அங்குள்ள சமணர்கள், நமிநந்தியடிகளை நோக்கி, “கையிலேயே ஒளியை வைத்துவிளங்கும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தேவையற்றது.. நெய் இங்கு இல்லை; விளக்கு எரிக்க வேண்டும் என்றால் நீரை உபயோகித்து எரித்துக் கொள்ளுங்கள்” என்று கேலி பேசினர்..
அவர்களது கேலிப் பேச்சினை தாங்காது,அடிகள் கோயிலுக்கு சென்று பெருமானின் முன் விழுந்து வணங்கினார்.. தனக்கு ஏற்பட்ட அவமானத்தை சொல்லிப் புலம்பினார்.. உடனே “நமிநந்தி உனது கவலை ஒழிக இங்கே அருகில் உள்ள குளத்தில் நீரை எடுத்து வந்து விளக்கை ஏற்றுக” என்று ஒரு அசரீரி ஆகாயத்தில் கேட்டது.. அது கேட்டு, மகிழ்ந்த அடிகள் அவர்கள், “இறைவன் அருளே இதுவாம்”என்று எண்ணி, குளத்தின் நடுவே சென்று, “நமசிவாய” என்று சொல்லி, நீரை அள்ளிக்கொண்டு, கரையேறி, கோயிலை அடைந்தார்.. உலகத்து மக்கள் எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம், அகலில் திரியிட்டு, நீர் வார்த்து, விளக்கேற்றினார்..அந்த விளக்கு சுடர் விட்டு எரிந்தது.. அதனைக் கண்டு, கோயில் முழுவதுமே அவ்வாறு விளக்கேற்றினார்.. அந்த சிறு விளக்குகள் பல விடியும் அளவுக்கு எரிதற்கு நீரால் நிரப்பினார்..
இவ்வாறு,இவர், தினம் தினம், ஆரூர்பெருமானுக்கு நீரால் திருவிளக்கு ஏற்றி, தம்முடைய ஊராகிய ஏமப்பேர் ஊருக்கு சென்று, சிவபூஜை முடித்து ,திரு அமுது செய்து, துயில் கொள்ளும் வழக்கம் உடையவராய் இருந்தார். இவரது செய்கையால் சமணர்கள் கலக்கமடைந்து திருவாரூரை விட்டு சென்றனர்.. திருவாரூர் திருநீற்றின் பெருமை பெற்று விளங்கியது..

சோழ மன்னன், ஆரூர் பெருமானுக்கு அறக்கொடைகள் பல அளித்து, அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த, நமிநந்தியடிகளைத் தலைவராக நியமித்தார்.. திருவாரூர் பெருமான், பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்புற செய்வதற்கு நமிநந்தியடிகள் உறுதுணையாக இருந்தார்.? பெருமான், ஒருமுறை பங்குனி உத்திரப் பெருவிழா நாட்களில் மணலி என்ற ஊருக்கு எழுந்தருளினார்.. எல்லாக் குலத்து மக்களும், இறைவனுடன் தரிசித்துச் சென்றனர்.. நமிநந்தியடிகளும், அவர்கள் உடனே சென்று ,திருவோலக்கம் கண்டு மகிழ்ந்தார்.. இறைவன் திருக்கோயிலுக்கு திரும்ப மாலைப் பொழுது ஆயிற்று.. நமிநந்தியடிகள் நள்ளிருளில், தமது ஊரை அடைந்து, வீட்டினுள் உள்ளே செல்லாமல்,வெளியில் இருந்த திண்ணையிலேயே, படுத்து உறங்கினார்.. அப்பொழுது, அவர் மனைவியார் வந்து அவரை எழுப்பி,” வீட்டின் உள்ளே வந்து, சிவ அர்ச்சனையைச் செய்த பின்னர், படுத்து உறங்கலாம் “என்று கூறினார் .”அதுகேட்ட நமிநந்தியடிகள், “இன்றைய தினம், ஆரூர்ப் பெருமான் திருமணலிக்கு எழுந்தருளினார்.. அப்போது நானும் உடன் சென்று சேவித்தேன்.. அந்தக் கூட்டத்தில் எல்லா ஜாதியாரும் இருந்தமையால் தீட்டு உண்டாயிற்று.. அதனால், நீராடிய பின்னரே, மனைக்குள் வரவேண்டும்.. குளிப்பதற்கு தண்ணீர் கொண்டு வா “என்று சொல்ல, மனைவியாரும் விரைந்து சென்றார்.. அதற்கிடையில், நமிநந்தியடிகளுக்கு சிறிது உறக்கம் வந்தது..அப்பொழுது, பெருமான் கனவில் தோன்றி “அன்பனே!.திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள்..அதை நீ காண்பாய்” என்று சொல்லி மறைந்தார்.. உறக்கம் விழித்த நமிநந்தி அடிகள், தாம் அடியார்களுக்குக் இடையே சாதி வேறுபாடு நினைந்தது தவறு என்று உணர்ந்து எழுந்த படியே வீட்டின் உள்ளே சென்று சிவபூஜை முடித்து,மனைவியருக்கு நிகழ்ந்ததைக் கூறினார்..
பொழுது விடிந்தபின், திருவாரூருக்கு சென்றார்..அப்பொழுது, திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோரும் சிவரூபம் பெற்றவர்களாக தோன்றக் கண்டார்.. “அடியேன்! செய்த பிழை பொறுத்தருள வேண்டும்” என்று ஆரூர் பெருமானை இறைஞ்சிப் போற்றினார்.. நமிநந்தியடிகள், பிறகு திருவாரூரிலே குடிபுகுந்து, நம்முடைய திருத்தொண்டுகளை செய்து கொண்டிருந்தார்.. இவ்வாறு சிவனடியார்களுக்கு வேண்டுவன எல்லாம் நெறியாக நெடுங்காலம் செய்திருந்து திருநாவுக்கரசரால் தொண்டர்களுக்கு ஆணி என சிறப்பிக்கப் பெற்ற திருவாரூர்ப் பெருமான் திருவடி நிழலை அடைந்தார்..
இவர் நமிநந்தியடிகள் நாயனார் என்ற பெயர் பெற்று 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்ந்தார்..
“அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
நமிநந்தி அடிகள் பிறந்த ஏமப்பேர் எனப்படும் திருநெய்ப்பேர் என்ற தலம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது..இங்கு உமாமகேஸ்வரி உடனுறை வன்மீக நாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது.. இந்த கோயில், 18ம் நூற்றாண்டை சேர்ந்தது.. தற்போது, பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.. இக்கோயிலில், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் தினமும் ஒரு வேளை மட்டும் பூஜை நடக்கிறது..திருநெய்ப்பேர் திருவாரூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..
வாசக அன்பர்கள், திருவாரூர் செல்ல நேரிட்டால் இந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யுமாறும், இவ்வாறு பூஜைக்கு வகை இல்லாத கோயில்களை தத்தெடுத்து, மூன்று கால பூஜையும் நடைபெற ஆவன செய்தால் அந்தப் பெருமான் தங்களுக்கு அனைத்து விதமான நல்லன எல்லாம் தருவான்..
நமச்சிவாய வாழ்க!!!! நாதன் தாள் வாழ்க!!!!!