இந்து மதம் இணையில்லா இனிய மதம் ( பதிவு அத்தியாயம் 7)

சென்ற பதிவில் நான் உப வேதங்கள் பற்றி கூறிவிட்டு அடுத்து உபநிஷத்துக்கள் பற்றி விவரிப்பதாக தெரிவித்திருந்தேன்.. தற்போது அந்த உபநிஷத்துக்கள் பற்றி நான் அறிந்ததில் தெரிவிக்கின்றேன்..

உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்கள், பண்டைய இந்திய தத்துவ இலக்கியங்கள் ஆகும்.. இவை, இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.. வேதங்களில், இவை இறுதியாக வந்ததனால் இதனை வேதாந்தம் எனவும் கூறுவர்..

உபநிஷத்துக்கள் என்பதன் பொருள் என்ன?

இந்த வார்த்தையில் மூன்று வேர்ச்சொற்கள் உள்ளன” உப, நி, ஸத்” ஆகியன.. சொற்கள் புணரும்போது ஸத் என்பது ஷத் ஆகிற்று..

“உப “என்ற சொல்லிற்கு குருவை பயபக்தியுடன் அண்டி அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்பதைக் குறிக்கிறது..

“நி “என்ற சொல்லால் புத்தியின் மூலம் ஏற்படும் ஐயங்கள் அகலும்படி, மனதில் காலம் காலமாக ஊறியிருக்கும் பற்பல எண்ண ஓட்டங்களின் பாதிப்பு இல்லாமலும் உபதேசத்தை வாங்கிக் கொள்வதை குறிக்கின்றது..

“ஸத் “என்ற சொல்லினால், அந்த உபதேசத்தின் பயனான அஞ்ஞான அழிவும், பிரம்மத்தின் ஞானம் ஏற்படுவதையும் குறிக்கிறது..

நான்கு வேதங்களுக்கும் சாகைகள் என்று பெயருள்ள பல கிளைகள் உள்ளன.. அவைகளில் பல தற்காலத்தில் காணப்படவில்லை.. ஒவ்வொரு வேத சாகைக்கும் முடிவில் ஒரு உபநிஷத்து இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது.. பற்பல சாகைகள் இன்று இல்லாமல் போனாலும்,நூற்றுக்கும் மேற்பட்ட உபநிஷத்துக்கள் கிடைத்துள்ளன.. வேதங்களில் உள்ள சடங்குகள் பற்றிய விபரங்களும், அவற்றில் எங்கும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் தெய்வம்- அசுரர்கள் இடையே ஏற்பட்ட பரிமாறுதல்களும், இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்புடையதாக உள்ளதா? இல்லையா? என்ற தர்க்கத்தை புறம் தள்ளி விட்டு, வேதப் பொருளை ஆழத்தை அறிய முயலவேண்டும்..

உபநிஷத்துக்களில் சில மிகச் சிறியவை; சில சற்று அளவுக்குப் பெரியவை..சில உரைநடையிலும், சில செய்யுள் நடையிலும் உள்ளன.

இவ்வுலகம் எப்படித் தோன்றியது..ஆனால், எல்லாமே ஆன்மிக அனுபவங்களையும், வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகளையும், அனுபவிக்கும் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?பிறப்பும் இறப்பும் என்ன? ஏன் நிகழ்கின்றன? இதன்அடிப்படை உண்மை யாது? அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டானால், அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா?? ஏன் தோன்றியது? மறுபிறப்பின் தத்துவம் என்ன? நன்மையும் தீமையும் மனிதனைப் பொறுத்ததா?அல்லது அவைகளுக்கு என்று தனித்துவம் உண்டா? அறிவு, என்பது மனதின் மன ஓட்டங்களை போல் ஒன்றுதானா அல்லது அறிவு, நன்மை தீமைகளைத் தாண்டிய ஒரு அடிப்படை உண்மையா? இவைகளையும் இன்னும் இவற்றைப் போலுள்ள பல ஆழமான தலையாய பிரச்சினைகளையும், சலிக்காமல் பாரபட்சமில்லாமல், அலசிப் பார்க்கும் இலக்கியம் தான் உபநிஷத்துக்கள்.. மேலும் எதையும் ஒரே முடிந்த முடிவாகச் சொல்லிவிடாமல், கேள்விகளை எழுப்புவதும்,கேள்விகளில் உள்ள வித்தை பொதியும், மாற்றுத் தத்துவங்களையும் வெளிக் கொணரும்,பிரச்சினைகள் பற்றி ஆன்மிகவாதிகள் தமது சொந்த அனுபவத்தை கொண்டு என்ன சொல்கிறார்கள், என்று அவர்களின் வாயாலேயே சொல்ல வைப்பதும் உபநிஷத்துகளின் முத்திரை நடை என்று பார்க்கப்படுகிறது.. இதனால் உலகின் எண்ணச்செறிவுகளில் உபநிஷத்துக்கள் ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டியது என்பது கற்று உணர்ந்த ஆன்றோர்கள் யாவரின் முடிவு ஆகும்..

வேதப்பொருள் மூன்று வகைப்படும்.. அவை கர்ம காண்டம் ஞான காண்டம் மற்றும் உபாசன காண்டம். இவற்றுள் ஞான காண்டம் என்பதுதான் உபநிஷத் எனப்படுவது.. ஆன்மாவைப் பரம் பொருள் அருகே உய்ப்பது ஆகும்.. அதாவது வேதத்தின் உட் பொருள் என்றும் இதனை கொள்ளலாம்.. உபநிஷத்துக்கள் மொத்தம் 108 இருப்பதாக முக்தகோபநிஷத்தில் ராமபிரான், ஆஞ்சனேயருக்கு சொல்வதாக இவைகள் உள்ளன. இந்த நூற்று எட்டில், 10 உபநிஷத்துக்கள் மிக முக்கியமானவை.., மற்றும் மிகப் பழமையானவை என்றும் கருதப்படுகிறது..

முப்பெரும் ஆச்சாரியர்களான, ஸ்ரீஆதி சங்கரர், ஸ்ரீ பகவத் ராமானுஜர் ,ஸ்ரீமத்வர் ஆகியோர்களை தவிர, நீலகண்ட சிவாசாரியார் ஆகிய நான்கு சமய ஆச்சாரியர்கள் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் மற்றும் சித்தாந்தம் என்னும் கொள்கைகளை ஒட்டி மேற்கூறிய பத்து முக்கிய உபநிஷத்துக்கள் விரிவுரை எழுதியுள்ளனர்.. இது தவிர உபநிஷத் பிரம்மேந்திரர் (18-வது நூற்றாண்டு) என்று பெயருள்ள துறவி ஒருவர் 108 உபநிஷத்துக்களுக்கும் உரை எழுதியுள்ளார்..

108 உபநிஷத்துக்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன.. அவை:-

10 முக்கிய உபநிஷத்துக்கள்

1 ஈசா வாஸ்ய உபநிடதம்( சுக்ல யஜுர்வேதம், வாஜசனேய சாகை)

2. கேன உபநிடதம் ( சாம வேதம் -தலவகார சாகை)

3.கடோபநிடதம்( கிருஷ்ண யஜுர் வேதம்- தைத்திரிய சாகை)

4. பிரச்ன உபநிடதம் ( அதர்வண வேதம்)

5. முண்டக உபநிடதம் (அதர்வண வேதம்)

6 மாண்டூக்கிய உபநிடதம் (அதர்வண வேதம்)

7. ஐதரேய உபநிடதம் (ரிக் வேதம் -ஐதரேய சாகை)

8. தைத்திரீய உபநிடதம் (கிருஷ்ண யஜுர் வேதம்- தைத்திரிய சாகை)

9. பிரகதாரண்ய உபநிடதம் (சுக்ல யஜுர் வேதம்-கண்வ சாகை, மாத்யந்தின சாகை)

10. சாந்தோக்யம் (சாமவேதம்- கௌதம சாகை)

கீழ்க்கண்ட உபநிடதங்கள் பரவலாக உபயோகத்தில் இல்லாமல் உள்ளதாக கருதப்படுகிறது.. அவை:-

24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்

20 யோக உபநிடதங்கள்

17 சன்னியாச உபநிடதங்கள்

14 வைணவ உபநிடதங்கள்

14 சைவ உபநிடதங்கள்

9 சாக்த உபநிடதங்கள்

இவைகளில் 10 ரிக் வேதத்தைச் சார்ந்தவை;32 கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்தவை;19 சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்தவை; 16 சாம வேதத்தைச் சார்ந்தவை; 31 அதர்வண வேதத்தைச் சார்ந்தவை..

முக்கிய பத்து உபநிஷத்துக்களில் தவிர,இதர 98 இல் முன் இடத்தில் வைத்து பேசப்படுபவைகளாக இருப்பவை இவைகளே:-

1 சுவேதாச்வதரம், 2 கௌஷீதகீயம், 3 நரசிம்ம பூர்வ தாபனீயம்,4 மகோபநிஷத், 5 கலிசந்தரணம், 6 கைவல்யம் ,7 மைத்ராயணீயம்..

இந்த உபநிடதங்கள் காலங்களின் அடிப்படையில் நான்காக பிரிக்கப்படுகின்றன.. இவை மொத்தம் 112 இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றன.. ஆனால், அதிகமானவை இவைகளில் பிற்காலங்களில் உபநிடதங்கள் என்று உருவாக்கி கொள்ளப்பட்டவை என்றும் கருதப்படுகிறது.. இருப்பினும், இவற்றில் பதின்மூன்று உபநிடதங்கள் உண்மையானவை என்று கொள்ளலாம்.. அவைகளை பழங்கால உபநிடதங்கள், இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள், மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள், மற்றும் நான்காம் காலகட்ட உபநிடதங்கள் என்று பிரிக்கலாம்..

பழங்கால உபநிடதங்கள்

இந்த உபநிடதங்கள் மூன்றாகும்… இவை கிமு 700 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது.ஹ அவைகள் 1 ஈசா, 2 சாந்தோக்யம், 3 பிரகதாரண்யம்…

இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள்

இவை கிமு 600 முதல் 500 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த இரண்டுஉபநிடதங்கள்; 1 ஐதரேயம், 2 தைத்திரியம்..

மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள்

கிமு 500 முதல் 400 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் இருந்த கீழ்க்கண்ட ஐந்து உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன.. 1.பிரச்னம் 2. கேனம் 3. கடம் 4. முண்டகம் 5. மாண்டூக்யம்..

நான்காம் காலகட்ட உபநிடதங்கள்

கிமு 200 முதல் 100 வரை உள்ள இடைப்பட்ட ஆண்டுகளில் காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் நான்காம் காலகட்ட உபநிடதங்கள் கருதப் படுகின்றன.. அவை 1 கவுஷீதகி 2. மைத்ரி 3. சுவேதாசுவதரம்..

இனி உபநிஷத்துக்களின் விவரங்களைத் தெரிந்த வரையில்,அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்..

அடுத்த பதிவில் சந்திப்போம்…

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: