பண்டைய சோழ நாட்டில் சாத்த மங்கை எனும் ஊரில், அந்தணர் குலத்தில் திருநீலநக்கர் என்பவர் பிறந்தார்.. இவர் வேதத்தினை நன்கு கற்று அறிந்தவர்.. சிவபெருமானையும்,அவரது சிவனடியார்களையும், மிகவும் போற்றுபவர்.. அதனால், நாள்தோறும் சிவாகம விதிப்படி, சிவபூஜை செய்யும் பணியை செய்து வந்தார்..
இவ்வாறு செய்து கொண்டிருந்த நாளில், ஒரு நாள், திருவாதிரை நட்சத்திரம் கூடிய நன்னாளில், சிவ பூஜையை முடித்துக்கொண்டு, சாத்த மங்கையில் உள்ள அயவந்தி என்னும் இடத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை அர்சிக்க விரும்பினார்.. பூஜைக்கு வேண்டிய பொருட்களை, தன் மனைவியாக எடுத்துக்கொண்டு வர, ஈசரை முறைப்படி பூஜித்து, இறைவன் திருமுன் ஐந்தெழுத்து மந்திரமான, “நமசிவாய” என்பதனை ஓதினார்..அப்போது, சிலந்தி ஒன்று, அயவந்தி ஈசன், திருமேனியில் விழுந்தது.. அது கண்ட நீலநக்கரின் மனைவி, விரைந்து சென்று அதனை போக்க வாயால் ஊதி உமிழ்ந்துவிட்டார்..

நீலநக்கர் இச்செயலை கண்டு, “தன் கண்ணை மறைத்து, அறிவில்லாமல் இவ்வாறு செய்தது ஏன்?” என்று கோபித்துக் கொண்டார்..அவரது மனைவி, மறுமொழியாக “சிலந்தி, சிவலிங்கத்தின் மேல் விழுந்ததால், அதனை ஊதித் தள்ளினேன்”என்று இயம்பினார்.. “சிவலிங்கத்தின் மேல் விழுந்த சிலந்தியை வேறொரு வகையால் விலக்காமல் எச்சிலால் சிவனை அசிங்கப் படுத்தி விட்டாய்” என்று கோபித்துக் கொண்டு, “இனி உன்னோடு வாழ மாட்டேன்” என்று சொல்லி, அவரை விட்டு சென்றுவிட்டார்.. அவரின் மனைவி, அது கேட்டு அஞ்சி, ஒரு பக்கம் ஒதுங்கினார்.. நீலநக்கர் பூஜையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பினார்.. அவரது மனைவி அவர் உடன் வீடு செல்ல பயந்து ஆலயத்தில் தங்கினார்.. அன்றிரவு, நீலநக்கர் தூங்கும்போது ,அயவந்தி பெருமான், அவரது கனவில் தோன்றி “தம் திரு மேனி யை காட்டி, உன் மனைவி ஊதி உமிழ்ந்த இந்த இடம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் சிலந்தியால் கொப்புளம் ஏற்பட்டது”என்று அருளினார்.. நீலநக்கர் வணங்கி எழுந்து,ஆடிப்பாடி ,இறைவனது திருவருளை வியந்து, மனம் உருகினார்..விடிந்ததும், ஆலயத்திற்கு சென்று, இறைவனை இறைஞ்சினார் அங்கே ஒரு தூணில் சாய்ந்து கொண்டு இருந்த உறக்கமில்லா தன் மனைவியையும் உடன் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினார்..
அதன் பின்னர் ஒரு நாள், இவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வரும் நாளில், திருஞானசம்பந்தர் தமது அடியார் கூட்டத்தோடு, பல திருத்தலங்களை தரிசித்து விட்டு, திருச்சாத்தமங்கையை நோக்கி புறப்பட்டார்.. திருஞான சம்பந்தருடன், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், அவருடைய மனைவியார் ஆகிய மதங்க சூளாமணி அம்மையாரும், வந்து கொண்டிருந்தனர்.. திருநீலநக்கர் அவர்களை மேளதாளத்துடன் நண்பர்கள் புடைசூழ ஊரின் எல்லையிலேயே பூரண கும்ப மரியாதையுடன், வரவேற்று தமது திருமாளிகைக்கு அழைத்து வந்தார்.. திருஞானசம்பந்தருக்கும் அவரது கூட்டத்தாருக்கும் அமுது செய்வித்தார்.. இரவு தனது திருமாளிகையிலேயே தூங்கவும் ஏற்பாடு செய்தார்.. சம்பந்தர் தம் உடன் வந்திருக்கும் பாணருக்கும், அவரது வாழ்க்கைத் துணைக்கும், அன்றிரவு அங்கேயே தங்க இடம் கேட்க,திருநீலநக்கர் அவர்களையும், அங்கு தங்க அனுமதித்தார்..
ஞானசம்பந்தர் அயவந்தி அண்ணலை பணிந்து பாடிய திருப்பதிகத்தில் திருநீலநக்கரை உயர்த்தி அவரது தொண்டினைசா சிறப்பித்துக் கூறியுள்ளார்.. திருநீலநக்கர் நாயனார் பட்டத்துடன், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக திகழ்ந்தார்.

அதன்பிறகு, திருஞானசம்பந்தர் புறப்பட, அவருடனேயே தானும் வருவதாக தெரிவித்தார்.. ஆனால், ஞானசம்பந்தர் “நீவீர் இங்கேயே இருந்து,அயவந்தி நாதருக்கு தொண்டு செய்யும்” என்று பணித்தார்.. பின்னர் ஒருநாள், பெருமாணல்லூர் என்னுமிடத்தில் ஞானசம்பந்தரின் திருமணத்தை கண்டு களிக்க திருநீலநக்கநாயனார் சென்றார்.. அங்கே, திருமணம் முடிந்து ஞான சம்பந்தர் தமது மனைவி மற்றும் தமது அடியார்களுடன் கோயிலுள் புகுந்து ,சிவ ஜோதியுடன் கலக்கும் போது ,திருநீலநக்க நாயனாரும் அவருடனேயே சிவனுடன் கலந்தார்..
திருச்சாத்தமங்கை உடனுறை ஈசனின் பெயர் அயவந்தீஸ்வரர் மற்றொரு பெயர் பிரம்மபுரீஸ்வரர்.. அம்பாளின் பெயர் மலர் கண்ணமை மற்றும் உபய புஷ்ப விலோசினி.!
தலமரம் கொன்றை.. தீர்த்தம், கோயிலுக்கு முன்புள்ள தீர்த்தம்.. இதன் மேல் பாதி சந்திர தீர்த்தம் என்றும் கீழ் பாதி சூரிய தீர்த்தம் என்றும் கூறப்படுகிறது.. இத்திருக்கோயிலை வழிபட்டோர் பிரம்மன், திருநீலநக்கர், திருஞான சம்பந்தர் ஆகியோர் ஆவர்..
திருக்கோயில் அமைவிடம்: நன்னிலம்- திருப்புகலூர் திருமருகல்- நாகூர் சாலையில் அமைந்துள்ளது..திருமருகல் தாண்டியவுடன் நாகூர் செல்லும் சாலையில் ஒருகிலோ மீட்டர் சென்ற உடன் கோயில் உள்ளது.. சியாத்தமங்கை என்ற வழிகாட்டி உள்ளது.. அவ்விடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், இந்த தலம் உள்ளது.. திருப்புகலூர் ஊரில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..

இந்த ஊருக்கு சாத்தமங்கை என்றும், கோயிலுக்கு அயவந்தி என்றும் பெயர்.. திருச்சாத்தமங்கையில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசெட்டாங்குடி, திருப்புகலூர், ராமநாதீஸ்வரம் ,ஆகிய மற்ற சிவ தலங்களையும் தரிசிக்கலாம்.. இவ்வாலயம், தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்,மாலை 5 மணி முதல் இரவு ஏழரை மணி வரையிலும் திறந்திருக்கும்..

இந்தத் தலம் திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலம் ஆகும்..
சுயம்பு மூர்த்தியான இந்த அயவந்தீஸ்வரர் திருநீலநக்கரின் மனைவி ஊதி உமிழ்ந்த பகுதி அல்லாத மற்ற திருமேனி முழுவதும் கொப்புளத்துடன் காட்சி தருகிறார்…இவைகளே இத்தலத்தின் சிறப்பாகும்.. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் தம்பதிகளையும், மனமொத்த தம்பதியர் ஆக மாற்றும் சக்தி படைத்தது இந்த தலம் என்று கூறப்படுகிறது..
வாசக அன்பர்களே தாங்கள் அப்பகுதிக்கு பயணப்பட நேரிடும்போது, அவசியம் இந்த தலத்தினை தரிசித்து, அயவந்தீஸ்வரரின் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
“நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க”