சென்ற பதிவில் நப்பின்னையின் பெயர், வட இந்திய காவியங்களில் இடம்பெறவில்லை என்றும், அங்கு கண்ணனின் காதலியாக சித்தரிக்கப்படுபவள், இராதை மட்டுமே ,என்று சொல்லி இருந்தேன்..கண்ணனுக்கு தமிழ்நாட்டோடு ஒரு நீங்காத தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே, இந்த நப்பின்னை எனும் கதாபாத்திரம் என்றும் சிலர் கூறுவர்..
ஆனால், நப்பின்னை வரலாறு, சங்க காலம் தொட்டு வழங்கி வருகின்றது. நப்பின்னை என்பது தனித்தமிழ் பெயர்.. அவளை உபகேசி என்று வடமொழி கற்ற தமிழ் கவிஞர் நல்கூர் வேள்வியார், திருவள்ளுவமாலையில் குறிப்பிடுகின்றார்..
ராதை
ராதை என்பவள், ராதிகா, ராதா ராணி, ராதிகா ராணி என்றும் அழைக்கப்பட்டாள்.. பாகவத புராணம் மற்றும் கீதகோவிந்தத் திலும் ராதை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.. இன்றைய, கௌடிய வைஷ்ணவ மத சாஸ்திரத்தில், அதன் அங்கமான சைதன்ய மகாபிரபு ,ராதையை ஒரு பெண் தெய்வமாக கருதுகிறார்..பிரம்ம வைவர்த்த புராணம், சரக சம்ஹிதா மற்றும் பிரைஹாட் கௌதம தந்திரம், போன்ற நூல்களில் கிருஷ்ணர் ராதையின் உறவு பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.. நிம்பர்க்கர் என்னும் அறிஞர், தென்இந்தியாவில் கோதாவரி நதிக்கரையில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார்.. இவர், பின்னர் மதுராவிற்கு அருகே உள்ள பிரஜா என்ற இடத்தில் வாழ்ந்தார்..இவரது பக்தி நெறியை சேர்ந்தோர், ராதா கிருஷ்ணர் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.. இவரும் சரணாகதி நெறியை வலியுறுத்தினார்.. மகாபாரதம், பாகவத புராணம் மற்றும் பிரம்ம வைவர்த்த புராணம் போன்றவற்றில், கிருஷ்ணர் விருந்தாவனம் கிராமத்தில் கோபியர்கள் என்று அழைக்கப்பட்ட இடையர் இன பெண்களுடனேயே அதிகம் நேரம் செலவழித்தார் என்று கூறப்படுகிறது..

மகாபாரதத்தில், ஸ்ரீகிருஷ்ணர் குழந்தை பருவ நிகழ்ச்சிகளை பற்றி விரிவாக ஏதும் கூறவில்லை.. பாகவத புராணத்திலும்,ராதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை..ஆனால்,அந்த நூலின் பத்தாவது அத்தியாயத்தில், கிருஷ்ணர் இளைஞனாக வளர்ந்து வந்த சமயத்தில் கோபியர்களில் ஒருவருடன் அதிக நட்பு கொண்டு விளையாடியதாக மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.. பாகவத புராணத்தின்படி கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு சென்ற போது அவருக்கு 10 வயது என்றும் கூறப்பட்டுள்ளது.. அவரது தோழி, ராதாவிற்கும் ஏறக்குறைய பத்து வயது அல்லது அதற்கும் குறைவாகவே இருந்திருக்கலாம்.. பின்னர் வெளிவந்த ஜெயதேவர் எழுதிய கீதகோவிந்தத்தில் ராதையை பற்றி குறிப்பிடுகிறார்..
மகாபாரதத்தில் கிருஷ்ணனின் பங்கு
குருகுலத்தின், குரு நாட்டினைச் சேர்ந்த பாண்டவர்களுடன் கிருஷ்ணர் நல்லுறவை வளர்த்துக் கொண்டதால், யாதவர்களின் அரசியல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.. மகாபாரதத்தில், கிருஷ்ணன், பலராமன் முதன்முறையாக திரௌபதியின் சுயம்வரத்தில் தான், பாண்டவர்களை அடையாளம் காணுகின்றனர்.. பாண்டவர்களில் ஒருவரான பீமனின் துணையுடன் மகத நாட்டின்அரசனான ஜராசந்தனை கிருஷ்ணர் கொன்றார்.. குருச்சேத்திரப் போரில் கௌரவர்களை வீழ்த்த அரசியல் மற்றும் போர் தந்திரங்களை கற்றுக் கொடுத்தார்.. மேலும், அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபதேசம் செய்தார்..

அர்ஜுனனுக்கு தமது தங்கை சுபத்திரை திருமணம் செய்து வைத்தார்.. பின்னர் தமது மனைவி ஜாம்பவதியின் மகனாக சாம்பனுக்கு, துரியோதனனின் மகள் இலக்கணையை மணம் செய்வித்தார்..இதன் காரணமாக யதுகுலம், குருகுலத்துடனான தமது உறவை, மேலும் பலப்படுத்திக் கொண்டது.. கிருஷ்ணரின் தங்கை சுபத்திரையை மற்றும் அர்ஜுனின் மகனுமான அபிமன்யு குருச்சேத்திரப் போரில் இறந்து விட, அவனது வழித்தோன்றல்களான பரீட்சித்து மற்றும் ஜனமேஜயன்ஆகியோர் குரு நாட்டின் அரியணை ஏற வழிவகுத்தார்..
கிருஷ்ணரின் முடிவு
ஸ்ரீகிருஷ்ணர், உபமன்யு முனிவரிடம் நமக்கு புத்திரபாக்கியம் வேண்ட ,அவர் கிருஷ்ணரை, சிவபெருமானை நோக்கி தவம் செய்ய அறிவுரை வழங்கினார்.. அதன்படி, பாசுபத விரதத்தால் மகிழ்ந்த சிவபெருமான், தமது அம்சமாக ஒரு குழந்தை பிறக்க அருளினார்.. அதன்படி, ஸ்ரீ கிருஷ்ணருக்கும், ஜாம்பவதிக்கும் பிறந்த குழந்தை சாம்பன் என்று அறியப்படுகிறது..
ஸ்ரீகிருஷ்ணர், தமது அவதார நோக்கம் முடிவடைந்த காரணத்தால், பகவானை வைகுண்டம் எழுந்தருள வேண்டும் என்று தேவர்கள் வேண்டினர்.. ஸ்ரீகிருஷ்ணர், பிரபாச பட்டினம் காட்டில், அமர்ந்திருந்த போது, ஒரு வேடன் அவருடைய பாதங்களை மறைவிலிருந்து பார்த்தபோது அவை, ஒரு பறவை போல தோற்றமளிக்க அதனை நோக்கி அம்பு எய்தான்.. அது அவரது பாதங்களில் பட்டவுடன், அவர் இவ்வுலகை விட்டு வைகுண்டம் எழுந்தருளினார்.. இவருக்கு முன்பாக பலராமர், ஜல சமாதி அடைந்தார்..
குருக்ஷேத்திர போருக்கு பின் முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்த பின், ஒரு நாள், சில யாதவ இளைஞர்கள் சாம்பனுக்கு நிறைமாத கர்ப்பிணி பெண் வேடமிட்டு பிரபாச நகரில், தவத்தில் இருந்த சப்தரிஷிகளிடம் அழைத்துச் சென்று, “இந்த கர்ப்பிணி பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும் ?” என்று வேடிக்கையாக கேட்டனர்.. இளைஞர்களின் கபட நாடகத்தை அறிந்த முனிவர்கள்” இவன், உங்கள் யாதவ குலத்தின் இடையே அழிக்கும் இரும்பு உலக்கையை பெற்றெடுக்க போகிறான்” என்று சாபமிட்டனர்.. அவ்வாறே, சாம்பனுக்கு உடனே ஒரு இரும்பு உலக்கை பிறந்தது.. விவரமறிந்த அவர்களின் பாட்டனார் உக்ரசேனன், இரும்பு உலக்கையை பொடிப் பொடியாக அரைத்து கடலில் கரைக்க விட்டார்.. சில காலம் கழித்து, பிரபாச நகரில் கடற்கரையில் ஒதுங்கிய, அந்த உலக்கைத் துகள்கள், மிக உறுதியான நீண்ட கோரை புற்களாக வளர, பின்னொரு நாளில் பிரபாச நகரின் கடற்கரைக்கு சென்ற யாதவர்கள், மதியை மயக்கும் போதையை தரும் மைத்ரேய என்ற மதுவைக் குடித்துவிட்டு, அளவுக்கு மீறியதால், அங்கு வளர்ந்திருந்த கோரைப் புற்களால், ஒருவரை ஒருவர், தாக்கி, சாம்பன் உட்பட, கிருஷ்ணரின் அத்துணை மகன்களும் மற்றும் யாதவர்களும் அழிந்தனர்.. இதன் தொடர்பாக முந்தைய சாபம் ஒன்று புராணங்களில் கூறப்படுகிறது.. குருசேத்திரப் போரில் தமது நூறு மகன்களையும் இழந்த காந்தாரி, தனது மகன்களின் இழப்புக்கு ஸ்ரீ கிருஷ்ணரே காரணம் எனக் கருதி ஆத்திரத்தில் யதுகுலம் முழுவதும் அழிய வேண்டும் என சாபமிட்டாள்.. அதன் பின் விளைவே இந்நிகழ்வாகும் என புராணங்களில் கூறப்படுகிறது..
ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு கிமு 3100 என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்..
ஸ்ரீ கிருஷ்ணர் வைகுண்டம் செல்வதற்கு முன் உத்தவருக்கு உபதேசம் செய்தார்.. உத்தவர், ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தரும், அவரது சிற்றப்பா மகனும் ஆவார்.. உத்தவருக்கு ஸ்ரீகிருஷ்ணர் அளித்தது உத்தவ கீதை என வழங்கப்படுகிறது.. இந்த உத்தவ கீதை பற்றி தனி தொடரை, பின்னர் தங்களுக்கு தனியே தொகுத்து வழங்குகிறேன்..
துவாரகை கடலில் மூழ்குதல்

ஸ்ரீ கிருஷ்ணர் முடிவுக்குப் பின், யது வம்சம் பூண்டோடு அழிந்தது.. ஸ்ரீ கிருஷ்ணரின் 8 மனைவிகளும், உடன்கட்டை ஏறினர்..அதன் பின்னர், துவாரகை நகரம் கடலில் மூழ்கியது.. தொல்பொருள் ஆய்வாளர், எஸ். ஆர்.ராவ் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து தெரிவித்தார்.. 1980இல் துவாரகேஷ் கோயிலின் முன்மண்டபத்தில் அவர் நிகழ்த்திய ஆய்வில் அக்கோயிலுக்கு கீழே இரண்டு அஸ்திவாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன..சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில், மூழ்கிய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அது மகாபாரதத்தில் குறிப்பிடும் துவாரகை நகரை ஒத்துள்ளது.. அங்கே கண்டெடுக்கப்பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன.. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.. துவாரகை கிமு 1500 ல் முழுவதும் கடலால் கொள்ளப் பட்டதாக கருதப்படுகிறது.. தற்போது யாத்ரிகர்கள் கடலுக்கு அடியில் உள்ள அந்த நகரைப் பார்க்க நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
இனி, குருச்சேத்திரப் போர், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள், ஆகியவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..
அடுத்த பதிவில் சந்திப்போம்…