தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்களான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் ஆகிய மூன்று தலைமுறைகளுக்கும் ஆசானாகவும், ஆலோசகராகவும் விளங்கியவர் தஞ்சையைச் சார்ந்த கோவிந்த தீட்சிதர் (கிபி 1515 -1635 )ஆவார்.. இவர் 120 ஆண்டுகள் காலம் வாழ்ந்து, மேற்சொன்ன மூன்று தலைமுறை நாயக்க அரசர்களுக்கும், அமைச்சராக சேவை செய்துள்ளார்.. இவர், பண்டைய தஞ்சை மாவட்டத்தில் பல கோயில்களில் திருப்பணிகள் செய்துள்ளார்.. இவர் ஒரு பெரும் புலவரும் கூட..

இவர் அச்சுதப்ப நாயக்கர் காலத்தில், பட்டீஸ்வரர்த்திற்கு அருகில்,சேவப்ப நாயக்கர் காலம் வரை, சிங்கரசம்பாளையம் என்று பெயர் கொண்டு இருந்த ஊரினை கோவிந்தகுடி என்று மாற்றி, அங்கு திருக்கோயில் ஒன்றை எழுப்பினார்..இவர் தினமும் இந்த ஊரில் இருந்து தஞ்சாவூருக்கு பல்லக்கில் சென்று, அலுவல்களைக் கவனித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது ..பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில், ஆகியவற்றிற்கு திருப்பணிகள் செய்துள்ளார் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.. திருப்பாலைத்துறை கோயில் கோபுரம் , நெல் சேமிப்பு கிடங்கு, கும்பேஸ்வரர் கோயிலில் புதிய சன்னதிகள் ஆகியன இவரால் திருப்பணிகள் செய்து வைக்கப்பட்டவைதள் ஆகும்..
இவர் 1542 இல் ராஜா வேதபாடசாலை என்று ஒரு பள்ளியை நிறுவி, வேதங்கள் மற்றும் அது தொடர்பான பல பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தார்.. இந்த வேத பாடசாலையில் தான் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் கல்வி பயின்றார்..
ஒரு நாட்டின் மன்னன் மற்ற நாடுகளின் மீது படையெடுத்து நாட்டை விரிவு படுத்துவது மட்டிலுமே அரசரின் தர்மம் ஆகாது; மாறாக, அரசர் அறப் பணிகளிலும் தனது கவனத்தை செலுத்த வேண்டும் என்று மூன்று தலைமுறை நாயக மன்னர்களுக்கும் அறிவுரை வழங்கி, அவர்கள் அறப்பணி செய்யத் தூண்டினார்…
அந்தக் காலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இவரை மக்கள் அன்புடன் மரியாதையாகவும் அய்யன், தீட்சிதர் என்று அழைப்பார்கள்..இந்த அய்யன் பெயர் நிலை பெற்று இன்றும் அப்பகுதிகளில் அய்யன் தெரு, ஐயங்குளம அய்யம்பேட்டை, மணக்கால் அய்யம்பேட்டை என்று பெயரிடப்பட்டுள்ளன..
அச்சுதப்ப நாயக்கர் அரசராக இருந்தபோது தீட்சிதருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்டது..தீட்சிதர், அதனை பயன்படுத்தி கும்பகோணம் மகாமக குளத்தில் செப்பனிட்டார்.. குளக்கரையில் படித்துறை ஏற்படுத்தி, நான்கு புறமும் விரிவான படிக்கட்டுகள் கட்டினார்.. குளக்கரையில் உள்ள 16 ஆலயங்களிலும், அவற்றிற்கு விமானங்களையும் அமைத்தார்.. இன்று, நாம் காணுகின்ற மகாமக குளத்தின் அழகுக்கும், கலை நேர்த்திக்கும், சுந்தர அழகில் சொக்கவைக்கும் சுற்று மண்டபங்களில், எழில் தோற்றத்துக்கும் ,கோவிந்த தீட்சிதரே முக்கிய காரணமாக இருந்தார்…
ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருப்பணி செய்து, சேவப்ப நாயக்கர் தலைமையில் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்..
இவர் செய்த தான தர்மங்களை பறைசாற்றும் வகையில் மகாதானபுரம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, திருவெண்காடு ஆகிய ஊர்களில் உள்ள மகா தான தெருக்கள் உள்ளன.. திருவையாறு,தஞ்சாவூர், வெண்ணாற்றங்கரை, திருவலஞ்சுழி, கும்பகோணம், திருவிடை மருதூர் ஆகிய ஊர்களில் உள்ள ஜோடியான விமானங்களை கொண்ட புஷ்ப மண்டபஙகளை கட்டியதும் இவரேயாவார்..
சோழ மன்னர்களுக்கு பிறகு, ஆலய திருப்பணிகளை மேற் கொண்ட மகான் இவரே ஆவார்.. இவரை சிறப்பிக்கும் வகையில் ரகுநாத நாயக்கர் “கோவிந்தய்யா” என்று தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட காசுகளை வெளியிட்டார்..
இவர் இதுமட்டுமல்லாமல், கௌமாரில தரிசனம், சங்கீத சுதா போன்ற நூல்களை இவர் எழுதினார..இவை அவர் இயற்றிய நூல்களில் இவை மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன.. சமஸ்கிருதம் தமிழ் தெலுங்கு போன்ற பலவித மொழிகளில் வித்தகராய் திகழ்ந்தவர்.. இவர் வட மொழியில் இருந்த பஞ்சநதீஸ்வரர் என்கிற நூலினை கிபி 1550 இல் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்..
இவரது நினைவாக அவரது சிலையும், இவரது மனைவி நாகம்மாளின் சிலையும் ஆதி கும்பேசுவரர் கோயில் வைக்கப்பட்டுள்ளது..